செவ்வாய், 30 டிசம்பர், 2025

கதம்பம் - பிருங்கி முனிவர் - Banana Cake - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட கல்யாணம் கச்சேரி - தேவிபாலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


பிருங்கி முனிவர் - 26 டிசம்பர் 2025 : 



ஆன்லைன் வழியே கற்றல் என்பதை சென்ற வருடத்திலிருந்து தான் நான் துவக்கினேன்! அப்போது முதலில் சேர்ந்தது சமஸ்கிருதத்தில் என்றால் இரண்டாவது செளந்தர்ய லஹரியும் பின்பு பகவத் கீதையுமாக மூன்று வகுப்புகள்! பரபரப்பாக மூன்று வகுப்புகளை அட்டெண்ட் செய்து கொண்டிருந்த நாட்கள்! இதில் சமஸ்கிருதத்தைத் தவிர மீதியிரண்டையும் நல்ல முறையில் நிறைவு செய்துவிட்டேன்!


ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட செளந்தர்ய லஹரியில் 100 ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன! அம்பாளின் அழகை வர்ணிக்கும் இந்த ஸ்லோகங்களை அக்ஷர சுத்தத்துடனும் ராகத்துடனும் அழகாக எனக்கு கற்றுத் தந்தவர் சென்னையில் வசிக்கும் ஆசிரியர் திருமதி ஜோதிஸ்ரீ அவர்கள்!


ஆன்லைன் வழியே கற்றதால் என்னால் இவரை நேரில் சந்திக்க வாய்ப்பு அமையாமல் இருந்தது! புதனன்று இவரும் இவரது குழுவினரும் திருவையாறு, திருமயம், புதுக்கோட்டை என்று கோவில்களில் பாராயணம் செய்து விட்டு திருச்சி திருவானைக்காவல் வந்திருப்பதாகத் தெரிய வரவும் தோழி ஒருவருடன் சென்று அவரைப் பார்த்து வந்தேன்!




அங்கே வந்திருந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னை அறிமுகம் செய்து வைத்து, ‘இவா தான் ஆதிலக்ஷ்மி! என்னோட ஸ்டூடண்ட்! இவா ஸ்லோகம் நன்னா சொல்வா! இவா ஒரு பிளாகர்! நிறைய எழுதுவா! அதை வாசிக்கறச்சே நாமே நேர்ல பார்த்த மாதிரி இருக்கும்!’ என்று என்னைப் பற்றி அவர்களிடம் பெருந்தன்மையுடன் பகிர்ந்து கொண்டார்.


அப்படியா! சந்தோஷம்! நீங்க எந்த பேட்ச்? என்று அவர்களும் சற்று நேரம் உரையாட, எல்லோரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்! அன்று அவர்கள் எல்லோரையும் ஒருசேர சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! புதிதாக ஒரு நட்புவட்டம் உருவானது! சிறிது நேரத்தில் அவர்களும் சென்னையை நோக்கி கிளம்ப நாங்களும் அங்கிருந்து கிளம்ப நினைத்து பிரகாரத்தை வலம் வந்தோம்! 


கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது அங்கே ஒரு தூணில் சிற்பமாய் வடிக்கப்பட்டிருந்த மூன்று கால்களுடைய பிருங்கி முனிவரைப் பற்றி உடனிருந்த தோழி என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்! இணையத்தில் தேடியதில் கிடைத்த தகவல் இது!


பிருங்கி முனிவர் அன்றாடம்  சிவனை மட்டுமே வணங்குவார் என்றும் அருகிலிருக்கும் அம்பாளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாராம்! இதனால் கோபம் கொண்ட அம்பாள் சிவபெருமானிடம் தனித்தனியாக இல்லாமல் நாம் ஒன்றாக காட்சித் தருவோம் என்று அர்த்தநாரீசுவரராக காட்சித் தந்தனர்!


வழக்கம் போல் சிவபெருமானை வணங்க வந்த பிருங்கி முனிவருக்கு குழப்பம் ஏற்பட்டு அவர் வண்டாக மாறி சிவபெருமானின் தொப்பிள் கொடியை துளைத்துக் கொண்டு சென்று அவரை மட்டும் வலம் வந்தாராம்! இதனால் சினம் கொண்ட அம்பாள் முனிவரிடமிருந்து சக்தியை எடுக்கவே அவர் மிகவும் தளர்ந்தாராம்!


பக்தனின் பக்தியைக் கண்டு நெகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு மூன்றாவது காலைத் தந்து ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்று அவருக்கு உணர்த்தியதாக சொல்லப்படுகிறது! இதுபோல் அறியப்பட வேண்டிய சிற்பங்கள் இங்கு நிறைய உண்டு! அன்றைய நாளில் பிருங்கி முனிவரைப் பற்றித் தெரிந்து கொண்டு அவரை வணங்கிய பின் அங்கிருந்து கிளம்பினோம்!


******


Banana Cake - 28-12-2025:





ஆதியின் அடுக்களையிலிருந்து!!


அவ்வப்போது ஏதாவது செய்து கொண்டிருந்தாலும் ஏனோ இங்கு அதையெல்லாம் பகிர்ந்து கொள்ளவில்லை! வாட்ஸப் ஸ்டேட்டஸோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்..🙂


Banana Cake!



நேற்றைய முயற்சியாக... கனிந்த வாழைப்பழங்களைக் கொண்டு செய்த கேக் மிகவும் நன்றாகவே வந்திருந்தது..🙂 புகைப்படம் எடுத்ததும் கூகிள் லென்ஸின் வழியே பார்த்ததில் Looks like freshly baked plum cake என்று சொல்லி விட்டது...🙂 வழக்கம் போல் No oven! No egg! No maida! No white sugar! No butter! தயாரிப்பு தான்..🙂


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

30 டிசம்பர் 2025


1 கருத்து:

  1. புதிய நட்புகள், புதிய உறவுகள் புத்துணர்வு அளிக்கட்டும். 'பனானா ப்ளம் கேக்' (!!) சுவையாக இருந்திருக்கும்!!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....