அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் - Poke - மிளகாய் பஜ்ஜி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சில தினங்களுக்கு முன்னர் நெய்வேலி நகரம் சென்றபோது பேருந்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருந்தேன். நான் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்வினை முடித்து நண்பர்களுடன் ஒரு உலா செல்வதாகத் திட்டம். அதற்கென முதல் நாள் இரவு தான் சில கல்லூரி தோழமைகளுடன் பேசியிருந்தேன். ஒருவர் கோவையில் இருக்க மூன்று பேர் மட்டும் பார்க்க முடியும் என்று தெரிந்தது. காலை பேருந்தில் பயணிக்கும்போதே மதியம் 12 மணிக்கு மேலே சந்திக்கலாம் என்று திட்டம் உருவானது. நான் கலந்து கொண்ட நிகழ்வில் மதிய உணவு சாப்பிடும்போதே நண்பர் தனது நான்கு சக்கர வாகனத்தில் மற்ற இரண்டு தோழிகளுடன் வந்து சேர்ந்தார். அவர்களுக்கும் கொஞ்சம் பாயசம் தந்து அங்கிருந்து புறப்பட்டோம். சில மாதங்கள் முன்னர் எங்கள் கல்லூரியில் உடன் படித்த குமார் சந்திரமௌலி அவர்களை நாங்கள் காலனின் பாசக்கயிற்றுக்கு இழந்திருந்தோம். நேற்று பகிர்ந்த பதிவில் குறிப்பிட்ட குமார் இவரே தான். நண்பர்கள் அந்த தினத்தில் சென்று வந்தார்கள் என்றாலும் இன்றைக்கு மீண்டும் அவரது இல்லத்திற்குச் சென்று வரலாம் என திட்டம் இருந்தது.
ஐம்பத்தி ஐந்து வயது வரை பார்த்துப் பார்த்து வளர்த்த மகனை இழப்பது என்பது ஒரு தாய்க்கு மிகவும் கொடுமையான சோகம். எப்போது தமிழகம் வந்தாலும், முடிந்த வரை அவரை சந்திப்பது வழக்கம். சில சமயம் அவரது வீட்டில் சந்திப்போம். அதனால் அவரது அம்மா, சகோதரர் என அனைவருமே எனக்கு நல்ல பழக்கம். எங்களைப் பார்த்ததும் அம்மாவிற்கு அப்படி ஒரு அழுகை. எப்படி அவரை சமாதானம் செய்வது! அவரின் வாயிலிருந்து உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் மகனைப் பற்றியதாகவே இருந்தது. பார்த்துப் பார்த்து திட்டமிட்டு கட்டிய வீட்டின் கிரஹப் ப்ரவேசத்திற்கு முன்னதாகவே நண்பர் இப்பூவுலகை விட்டு விலகினான். விழாவிற்கு வருபவர்களுக்காகத் தர வேண்டிய பரிசுப்பொருளைக் கூட வாங்கி வைத்திருந்தார் நண்பர். வீட்ட்லிருந்து நாங்கள் புறப்பட்டபோது அந்தப் பரிசை எங்களுக்கும் வழங்கினார். என்ன சொல்ல! எங்களுக்கு நண்பரின் இழப்பு… ஆனால் அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரது இல்லத்திலேயே சுமார் இரண்டு மணி நேரமாவது இருந்திருப்போம். அடுத்தடுத்து சில வேலைகள் இருந்தாலும் அங்கேயே நீண்ட நேரம் இருந்தோம். அவர்களுக்கும் எங்களது வருகை சிறிதளவேனும் மன நிம்மதியைத் தந்திருந்தால் நிம்மதி தான். நிறைய விஷயங்களை நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். எனது பதிவுகள், இல்லத்தரசியின் பதிவுகள் என அனைத்தையும் முகநூலில் நண்பரது கணக்கைப் பயன்படுத்தி உடனுக்குடன் படித்து விடுவார்கள். அதனைக் குறித்து பேசியதோடு, நண்பர் அவை பற்றியெல்லாம் அம்மாவுடன் பேசியதும், படித்துக் காண்பித்ததும் என பல விஷயங்கள் பேசினோம். மற்ற நண்பர்களும் குமார் உடனான அவர்களது நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். எத்தனை பேசினாலும் அவரைப் பற்றி பேசுவதற்கு விஷயங்கள் உண்டு. கல்லூரியிலிருந்து நாங்கள் வெளியே வந்து 35 வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் இன்றளவும் எங்கள் கல்லூரி தோழமைகளில் சுமார் 30 பேர் குழுவில் இருப்பதும், அவர்களில் பலர் இன்னும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கும் முழுமுதல் காரணம் நண்பர் குமார் என்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்.
Poke செய்தது குறித்து கூட பேசினோம். பேசப் பேச அவர் குறித்த விஷயங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. அம்மா அனைவருக்கும் காஃபி தயாரித்து பாசத்துடன் கொடுத்தார். சாப்பிட்டுப் போங்களேன் என்று கேட்க, அப்போது தான் சாப்பிட்டு வந்தோம் என்று சொன்னோம். பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். முடிந்த போதெல்லாம் வருகிறோம் என்று உள்ளூர் நண்பர்கள் சொல்ல, நானும் இந்தப் பக்கம் வரும்போது வருகிறேன் என்று சொன்னேன். எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று நண்பர்கள் சொல்ல, கண்களில் கண்ணீருடன் அனுப்பி வைத்தார் அம்மாவும், நண்பரின் உடன்பிறப்புகளும். அங்கிருந்து புறப்பட்டிருந்தாலும் எங்கள் நால்வரின் நினைவுகளும் பேச்சுகளும் நண்பரின் நல்ல குணம் மற்றும் அவரது குடும்பத்தினரின் சோகம்/வேதனை குறித்தே இருந்தது. சில நிகழ்வுகள் நம்மால் மறக்க முடிவதே இல்லை - சில இழப்புகளும் அப்படியே - நம்மை அவற்றிலிருந்து மீள வழியே தெரியாமல் வைத்துவிடுகிறது.
நெய்வேலி நகரில் அடுத்து நான் செய்தது என்ன என்பதை அடுத்து வரும் பதிவொன்றில் எழுதுகின்றேன். அது வரை காத்திருங்கள் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
12 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....