அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கடைசியில் - சிவசங்கரி - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
நச்சுன்னு நறுக்குன்னு - 17-12-2025:
காலை நேரங்களில், சமையலறையில் நுழைந்ததும் இல்லத்தரசி செய்யும் வேலை - FM Radio வை ON செய்வது தான். தினம் தினம் RJ-க்கள் வாய் ஓயாமல் பேசுவதையும் பொய்யான விளம்பரங்களையும் அதன் நடுவே ஒலிக்கும் சில பாடல்களை கேட்டுக் கொண்டே தான் வேலை நடக்கிறது. அவர் ரேடியோ கேட்பதால் நானும் கேட்டபடியே, காய்கறி நறுக்கித் தருவது போன்று சில சின்னச் சின்ன வேலைகளை செய்து தருவதும் நடக்கிறது. அப்படி கேட்கும்போது நச்சுன்னு நறுக்குன்னு குட்டி story என்று ஒரு பகுதி வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் ஒரு கதை சொல்கிறார்கள்.
அப்படி கேட்ட ஒரு கதை.....
பள்ளி/கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் தனது அப்பா, அம்மாவிடம் பைக் வாங்கித் தர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். கஷ்டப்படும் அப்பா, கடனை உடனை வாங்கி மகனுக்கு பைக் வாங்கித் தருகிறார். அம்மா பையனிடம் அப்பா கஷ்டப்பட்டு வண்டி வாங்கித் தந்து இருக்கிறார். நல்ல படிச்சு, வேலைக்குப் போய், அப்பா அம்மா கஷ்டத்தை தீர்க்கணும் என்று சொல்ல, பையன் சொல்கிறான் - நான் படிக்கிறது போக மீதி நேரத்துல RAPIDO bike ஓட்டி சம்பாதிக்க போறேன்..... அப்பா வாங்கிய கடனையும் அடைச்சுடுவேன் என்று சொல்ல அம்மா பூரிப்படைகிறார். இது தான் அந்த நச்சுன்னு நறுக்குன்னு குட்டி story.....
படிக்கிற வயதில் படிக்க மட்டும் வேண்டும். சம்பாதிக்கிறேன் என்ற பெயரில் பைக்கில் வலம் வருவது தான் எனக்குத் தெரிந்து நடக்கிறது. எனக்குத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் இப்படி கடன் வாங்கி, rapido ஓட்டுவேன் என்று பைக் வாங்கி சும்மா சுத்தி வருகிறார். உழைக்க வேண்டும் என்ற திட்டம் சரியாக இருந்தாலும் அந்தத் திட்டத்தினை செயல்படுத்துவதில் கோட்டை விட்டு விடுகிறார்கள் என்று தோன்றுகிறது எனக்கு.
இது குறித்த உங்கள் எண்ணம் என்ன என்று சொல்லுங்களேன்....
*******
வாசலிலே மல்லியப்பூ.... - 20-12-2025:
மார்கழி மாதம் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்டன. காலை நேரத்தில் பனியாக இருந்தாலும், பெண்கள் தலையில் ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டு வண்ண வண்ணமாக கோலங்கள் போட்டு வைத்திருக்கிறார்கள். பனிக்காலமாக இருந்தாலும் இப்படி கோலங்கள் போடுவது வழக்கமாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நகரங்களில் இந்த கோலம் போடும் பழக்கம் அருகி வருகிறது. திருச்சியில் கூட பல வீடுகளில் இப்படி கோலம் போடுவதில்லை. இன்னும் சில வருடங்களில் கோலம் போடுவதே மறந்து விடுமோ என்று தோன்றுகிறது.
முன்பெல்லாம் காலை நேரங்களில் கோலம் போடும்போது - இப்போது போல கலர் கோலங்கள் அல்ல - கோல மாவில் போடப்படும் கோலங்கள் தான் என்றாலும், பெரிய கோலம் போட்டு, நடுவில் சாணி உருண்டை ஒன்றை பிடித்து வைத்து அதன் மீது பூசணிப்பூவை வைப்பார்கள். எதற்காக இந்தப் பழக்கம் என்று எதிர் கேள்வி கேட்டதுண்டு.
எந்த வீட்டில் பெண் அல்லது பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாயிலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைக்கப்படுவது வழக்கம் என்று சொன்னதாக நினைவு. ஆனால் எல்லா வீடுகளிலும் பூ வைத்திருந்தார்கள் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. அந்த காலகட்டத்தில் திருமண புரோக்கர், மேட்ரிமோனியல் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. பிள்ளைக்கு பெண் தேடுவோர் எந்த வீட்டு வாசலில் பூசணிப்பூ இருக்கிறதோ அந்த வீட்டில் பெண் திருமணத்திற்கு தயாராக உள்ளார் என்பது அர்த்தம். இதனை குறித்து கொண்டு தைமாதம் திருமணத்திற்கு பெண்பார்க்கும் வைபவத்தை நடத்துவர். பெண் தேடுபவர்களுக்கு எங்கள் வீட்டு பெண் திருமணத்திற்கு ரெடி என்பதை சூசகமாக அறிவிக்கவே வீட்டு வாசலில் பூசணிப்பூ.
பூசணிப்பூ வைப்பதில் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதை இப்போது நினைக்கும்போதும், ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த அர்த்தத்தினை, எதற்காக செய்யப்படுகிறது இப்படியான செயல்கள் என்பதை அடுத்த சந்ததியினருக்கு கடத்த தவறிவிட்டார்கள் என்று தான் எனக்குத் தோன்றும். கேள்வி கேட்டாலே “சும்மா இருடா (டி)” என்று அடக்கி மட்டுமே வைக்கப்பட்டது தான் அதிகம் இல்லையா....
இன்றைய மாலை திருவரங்கத்தின் உத்தர வீதிகளில் உலா வந்தபோது சில வீடுகளில் மட்டுமே கோலம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. எங்கள் வீடு இருக்கும் சாலையில் நிறைய வீடுகளில் கோலம் கண்டு மகிழ்ச்சி. எங்கெங்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் வந்துவிட்டது என்பதால் கோலம் போடவே இடம் இல்லாமல் போய்விட்டது. சிறிய இடத்தில் சின்னதாய் கோலம் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனம் வந்து விட்டது. அல்லது கோலம் போடுவதன் தாத்பரியம் அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்றும் தோன்றியது எனக்கு.
அது சரி, முடிக்கும் முன் சொல்லிவிடேன்.... “வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா” என்று தானே சினிமா பாடல் கேட்டிருக்கிறேன் - நீ என்னடாவென்றால் தலைப்பில் “வாசலில் மல்லியப்பூ” என்று எழுதியிருக்கிறாயே?” என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. வேறொன்றுமில்லை. இன்று ஒரு குடியிருப்பில் உள்ள வீட்டின் கதவுக்கு வெளியே சின்னதாய் கோலம் போட்டு நடுவே மல்லியப்பூ வைத்திருந்தார்கள் - சாணி, பிடித்து வைத்து பூசணி வைப்பதற்கு பதில் இப்படி மல்லிகைப் பூ வைத்திருக்கிறார்கள் போலும்!
கோலம் போடுவது குறித்த உங்கள் சிந்தனைகள் என்ன? சொல்லுங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
23 டிசம்பர் 2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....