சனி, 20 டிசம்பர், 2025

காஃபி வித் கிட்டு - 220 - மது - கோஷல் - திரிபுரா - ட்ரெண்ட் - மரங்கொத்தி - ரஜினி மஹான் - தங்கம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : மது


தாய்லாந்து நாட்டின் விளம்பரங்கள் பலவும் நம் கருத்தைக் கவர்பவையாக இருக்கும்.  இதற்கு முன்னரும் இந்தப் பக்கத்தில் இப்படியான விளம்பரங்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் மது அருந்துவதைத் தவிர்க்க பயன்படுத்தப்பட்ட ஒரு விளம்பரத்தினைப் பார்த்தேன்.  தாய் மொழியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப் டைட்டில் உண்டு என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இல்லை.  நம் தமிழகத்தில் எத்தனை விளம்பரங்கள் இப்படிச் செய்தாலும் பயனிருக்காது என்றே தோன்றுகிறது.  அது மட்டுமல்ல, அரசாங்கமே இங்கே மதுவை விற்பதால் மது கேடு தரும் என்பதைச் சொல்லப் போவதில்லை.  எங்கே பார்த்தாலும் மது அரக்கன் தாண்டவம் ஆடுவதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நான் பார்த்து ரசித்த விளம்பரம் உங்கள் பார்வைக்கு.


******



இந்த வாரத்தின் சுற்றுலா ஸ்தலம் :  கோஷல்


ஹிமாச்சலப் பிரதேசத்தில் லஹௌல்-ஸ்பிதி பகுதி குறித்து உங்களில் சிலர் அறிந்திருக்கலாம்.  அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு அழகிய கிராமம் தான் கோஷல்.  மிகவும் அமைதியான, அழகான கிராமம்.  எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று சில நாட்கள் தங்கி, இயற்கை எழிலை ரசித்து வரலாம்.  எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்று கேட்பவர்களுக்காக, அந்தப் பகுதியின் ஒரு சிறு காணொளி உங்கள் பார்வைக்கு.

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : திரிபுரா – வங்க தேச எல்லையில்….


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - திரிபுரா – வங்க தேச எல்லையில்…. - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


அரண்மனை இருக்கும் பகுதியிலேயே கோவில்களும் உண்டு.  உமாமகேஸ்வரி, லக்ஷ்மிநாராயணன், காளி மற்றும் ஜகன்நாத் ஆகிய கடவுளர்களின் கோவில்கள் இங்கே அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் விழாக்காலங்களில் மிகவும் கோலாகலமாக பூஜைகள் நடக்கும் என்று எங்கள் ஓட்டுனர் ஷாந்தனு சொல்லிக் கொண்டிருந்தார்.  நாங்கள் சென்ற சமயத்தில் கோவில் பூட்டியிருக்க, வெளியிலிருந்தே மானசீகமாக ஒரு ஹாய் சொல்லி பிரார்த்தனை செய்தோம்.  புகைப்படமும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


திரிபுரா நகரத்தின் தலைநகரான அகர்தலாவிலேயே பங்களாதேஷ் எல்லை இருக்கிறது. இந்தப் பயணத்தில் ஏற்கனவே சீன எல்லைக்குப் போய் வந்தது பற்றி எழுதி இருக்கிறேன். இப்போது இன்னும் ஒரு நாட்டு எல்லைக்குச் சென்றோம். என்னதான் வெளி நாடுகளுக்குச் செல்ல இன்னும் வாய்ப்பு வரவில்லை என்றாலும் எல்லை வரையாவது சென்று வருவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது! இந்தப் பயணத்தில் இரண்டு எல்லைகளுக்கு பயணித்தோம். அதில் மகிழ்ச்சி தான்!


பஞ்சாப் மாநிலத்தின் வா[g]கா எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் எல்லைக்கும் சென்றதுண்டு.  அங்கே மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க நிகழ்ச்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். அங்கே சென்று அந்த நிகழ்வுகளைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தேச உணர்வு பிரவாகமாக ஊற்றெடுக்கும் என்பது நிச்சயம்.  அதே போல ஒரு நிகழ்வு வங்கதேச எல்லையிலும் தினமும் நடைபெறுகிறது.  ஆனால் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை இந்த தினசரி நிகழ்வு.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் தகவல் : ட்ரெண்ட்



அவ்வப்போது முகநூல், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் ஏதோ ஒரு பாட்டினை ட்ரெண்ட் ஆக மாற்றி விடுகிறார்கள் இந்தக் கால இளைஞர்கள், இளைஞிகள் மட்டுமல்லாது சில முதியவர்களும்! அப்படி சமீபத்தில் ஒரு பாடல் பல காணொளிகளில் கேட்க, பார்க்க கிடைத்தது.  பலரும் அதற்கு நடனம் ஆடுகிறார்கள்.  பாடல் கேட்க நன்றாகவே இருக்கிறது என்றாலும் அந்தப் பாடலுக்கு சிலர் ஆடும் நடனம் கண்டால் “ஏண்டா இந்த சோதனை” என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.  முகநூல்/இன்ஸ்டாகிராம் திறந்தாலே அந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் வித்தியாசமில்லாமல் ஆடித் தள்ளுகிறார்கள்.  இலங்கையைச் சேர்ந்த பாடகரான வாகீசன் ராசய்யா என்பவர் பாடிய பாடல் - வண்ண மயிலேறி எனும் பாடல் தான் இப்போது ட்ரெண்டாம்…. கேட்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி கேட்கலாம். 


Kaakum Vadivel | Official Video Song | Vaaheesan | Dharan Kumar | Kripakarjay J



******


இந்த வாரத்தின் ரசித்த படமும் கவிதையும் :  மரங்கொத்தி



முகநூலில் கவிஞர் மகுடேஸ்வரன் அவர்களது பக்கத்தில் மேலேயுள்ள படத்தினையும் அந்தப் படத்திற்கான அவரது குறுங்கவிதையையும் பார்த்து ரசித்தேன்.  நான் குஜராத் மாநிலத்தில் ராணி கி வாவ் என்கிற இடத்தில் பார்த்த மரங்கொத்தி பறவையும் அங்கே நான் எடுத்த படமும் நினைவுக்கு வந்தது.  படம் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றிய வரிகள் என்ன? படத்திற்கான கவிதை எழுதச் சொன்னால் நீங்கள் என்ன எழுதுவீர்கள்? சொல்லுங்களேன் - பின்னூட்டமாக! படத்திற்கான திரு மகுடேஸ்வரன் அவர்களின் கவிதை இதோ…


மரங்கொத்திப் பறவை 

மட்டும்தான் 

தன் மீச்சிறு கால்களால் 

மரத்தினை 

அணைத்துப் பிடிக்கிறது.


******


வாகனத்தில் வாசகங்கள் - ரஜினி மஹான் :



என்னைக் கடந்து செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை படிப்பதுண்டு.  முன்பெல்லாம், அதாவது தில்லியில் இருந்த வரை ஹிந்தியில் வாசகங்கள் படித்த நான், இப்போது தமிழகத்தில் இருப்பதால் நிறைய தமிழ் வாசகங்களையும், சில ஆங்கில வாசகங்களையும் படிக்கிறேன்.  அப்படிப் படித்த, பார்த்த சில வாசகங்களை முதலில் பார்க்கலாம்.  


ரஜினியின் பிறந்த நாள் அன்று ஆட்டோ பின்னால் நான்கு ரசிகர்கள் சேர்ந்து ஆட்டோ பின்னால் ஒரு ஃப்ளெக்ஸ் வைத்திருந்தார்கள்.  அதில் ரஜினியின் ராகவேந்திரா பட ஸ்டில் போட்டிருக்க, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள்.  அதில் எழுதி இருந்த வாசகம் - “ரஜினி மஹான்”. ஹாஹா…  ரசிப்புத் தன்மை இருக்கலாம் அதற்காக இப்படியா?  சாதாரண மனிதர்களை மஹான் ஆக்கிவிடுகிறார்கள் இந்த ரசிகர்கள்….


இரு சக்கர வாகனம் ஒன்றில் எழுதியிருந்த ஆங்கில வாச்கம் - “I have a hero.  I call him Dad” - ஓட்டிச் சென்றவர் நாற்பதுகளில் இருக்கலாம்.  தனது மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.  அப்பா காசில் வாங்கிய வாகனமோ? 


குட்டியானை என அழைக்கப்படும் வாகனத்தின் பின்னே, கொட்டையெழுத்தில் எழுதியிருந்த வாசகம் ஸ்ரீரங்கத்துச் சிங்கம்!


என்னென்னமோ யோசிக்கிறார்கள்! ஒரு சில வாசகங்கள் கவரும் வண்ணம் இருக்க, சில வாசகங்கள் அப்படி ஒன்றும் நம்மைக் கவர்வதில்லை. பார்த்த வாசகங்களை முடிந்த போதெல்லாம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாரம் இவ்வளவு மட்டும்!


******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - உச்சத்தைத் தொடும் தங்கம் :





அம்மா சொல்வார், என் கல்யாணத்தின் போது ஒரு கிராம் தங்கம் ஏழு - எட்டு ரூபாய் தான் என்று.  எங்கள் கல்யாணத்தின் போது கூட ஒரு கிராம் 450-500 ரூபாய் அளவு தான் இருந்தது.  இப்போது, அதாவது 2025-ஆண்டின் கடைசியில் கன்னா பின்னாவென்று ஏறிக் கிடக்கிறது.  தங்கத்தின் மீதான மோகம் குறையவே இல்லை என்று தான் தோன்றுகிறது.  ஒரு பவுனுக்கு லட்சத்தைத் தொட்டுவிட்ட தங்கத்தினை வாங்க வேண்டும் என்று நினைத்தாலே ஒரு வித வெறுப்பு வருகிறது எனக்கு.  தேவையோ இல்லையோ தங்கத்தினை வாங்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  புதிது புதிதாக முளைக்கும் தங்க மாளிகைகள் அதற்குச் சாட்சியாக இருக்கிறது.  தங்கத்தினை வாங்குவதில் எத்தனை விலை ஏறினால் என்ன என்று, நம் மக்கள் தங்கத்தினை தயக்கம் காட்டாமல் வாங்கித் தள்ளுகிறார்கள்.  நகைக் கடை ஒன்றில் பார்த்த கூட்டம் அதனை சொல்லாமல் சொல்லியது எனக்கு. தங்கம் வாங்குவது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன, பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 

  

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

20 டிசம்பர் 2025


15 கருத்துகள்:

  1. தங்கத்தைப் பற்றி நினைத்தால், குச்சிமிட்டாய் வாங்கும் ரேஞ்சுக்கு எனக்கு இருந்த காலத்தில் வாங்காமலிருந்ததுதான் நினைவுக்கு வருது. மாதம் மூன்று பவுன்கள் (கிராம் அல்ல) சர்வசாதாரணமாக வாங்கியிருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  2. மதுவைத்தவிர்க்கச் சொல்லும் விளம்பரம் சுருக்.  ஆனால் நறுக் சுருக்!

    கோஷல் என்ற பெயரே இனிமைதான் போல..  எனக்கு ஷ்ரேயா கோஷல் குரலும் பிடிக்கும்.  இங்கு இந்த கிராமம் மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. திரிபுரா வங்கதேச எல்லையில் என்னுடைய கமெண்ட் என்னையே புன்னகைக்க வைத்தது! எனக்கு அப்போது தலை சுற்றி இருக்கும் போல!

    காக்கும் வடிவேல் பாடல் பிறகுதான் கேட்க வேண்டும். ஸ்பீக்கர் இன்னும் ஆன் செய்யவில்லை!

    பதிலளிநீக்கு
  4. மகுடேஸ்வரன் கவிதை பொருந்தவில்லை.  மரங்கொத்தி மரத்தை அணைத்து எங்கே பிடிக்கிறது?  நகங்களால்  அழுந்தப்பற்றி,  குத்திக் கிழிப்பதோடு அலகால் கொத்தி சேதப் படுத்தவும் தொடங்குகிறது!

    பதிலளிநீக்கு
  5. மரத்தைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறதோ மரங்கொத்திக்கு   தங்கியிருக்க இன்னும் ஒரு வீடு கட்டவில்லை என்று தோன்றுமோ..  உடனே பாய்ந்து துளை போடத்தொடங்கி விடுகிறது!

    கொத்திக் கொத்தி 
    காயப்படுத்தினாலும்
    மரம்  
    மரங்கொத்திக்கு மனமுவந்து 
    அளிக்கிறது 
    பொதிந்துகொள்ள 
    தன் வயிற்றில் ஒரு இடம்.

    பதிலளிநீக்கு
  6. ஆட்டோக்கள் பின்னால் வாசகம் சில சமயம் மனதைத் தொடும்.  பல சமயம் சிரிக்க வைக்கும்.

    எப்படி இருந்தாலும் இப்போது தங்கம் வாங்க வேண்டிய கட்டாயம்.  என்ன ஸம்ப்ரதாயங்களோ போங்கள்!!

    பதிலளிநீக்கு
  7. குடிப்பழத்தைத் தவிர்க்கச் சொல்லும் விளம்பரம் பாயின்ட்!

    லஹௌல்-ஸ்பிதி பகுதி குறித்து உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். //

    ஜி!!!! ஆமாம் இப்பகுதியே ரொம்ப அழகு. ஸ்பிதி வரை போயிருக்கிறோம். அங்கு தங்கவும் ஆசை இருந்தது ஆனால் போக முடியலை....அப்ப இக்கிராமம் பெயர் பரிச்சயம். வீடியோ பார்க்கிறேன் ஜி. அப்படியாவது மனசை தேத்திக்கலாம் ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கோஷல் காணொளி பார்த்தேன்....சூப்பர் இடம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வங்கதேச எல்லை நன்றாக நினைவிருக்கு ஜி. வாகா போல இங்கும் தினப்படி அந்தச் சம்பிரதாயங்கள் உண்டு என்றும் சொல்லியிருப்பீங்க.....அது நல்ல நினைவில் இருக்கிறது.

    எதற்கும் சென்று பார்த்தேன்...லாரிகள், மக்கள் வருவதும் இங்கு தங்கிவிடாமல் இருக்காங்களான்னு பார்ப்பதும் இதெல்லாம் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

    இப்ப சமீபத்தில் நிறைய வங்கதேச மக்கள் இங்கு சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கிய மக்களை வெளியேற்றுவது நடந்ததே அதுவும் நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கோஷல் என்ற பெயர் எனக்கு ஸ்ரேயா கோஷலை நினைவுபடுத்தும்...என்னமான குரலப்பா அது!!! இப்பவும் கூட...ரொம்ப நல்லா மெயின்டெய்ன் பண்ணறாங்க இயற்கை ஆசிர்வதித்த அந்தக் குரலை!!

    காக்கும் வடிவேல் - பாட்டு கேட்டேன்...நல்லாதான் பாடுகிறார். இடையில் வருவது புரியவில்லை. ராப் போல....

    ஒரிஜினல் பாட்டா இல்லை ரீமிக்ஸா?

    நீங்கள் சொல்லியிருப்பது போல் இப்பலாம் சின்னவங்க பல பாடல்களை அதுவும் பழைய பாடல்களுக்குக் கூட நடனம் ஆடி வைரல்னு ஆக்கிடறாங்க. அதுவும் எப்படி ஒருவர் ஆக்கினால் உடனே பலரும் போடறாங்க?

    இடையில் நடிகர் சித்தார்த் கூட தன் படப் பாடலுக்கு ஒவ்வொரு பெண்ணுடன் ஆடிய காணொளி பார்த்தேன். முழு பாட்டுக்கும் ஆடுவதில்லை ஷார்ட்ஸ் தான் பெரும்பாலும் இப்படியான பாடல்கள்

    இது முழுசா இருக்கு இல்லையா?

    //அந்தப் பாடல் பின்னணியில் ஒலிக்க சிறியவர் முதல் பெரியவர் வரை ஆண், பெண் வித்தியாசமில்லாமல் ஆடித் தள்ளுகிறார்கள். //
    சொல்லாதீங்க....எல்லாருமே இப்ப வீடியோ போடுவதில் இருக்காங்க....அம்மா, மாமியார் என்றும் அவ்ங்களோடு சேர்ந்து ஆடுகிறார்கள் இதில் மூன்று ஜெனரேஷன் என்று பேத்தியும் சேர்த்து அப்படியும் பார்க்க நேரிடுகிறது.

    அம்மா பெண் சேர்ந்து, மாமியாரும் மருமகளும் சேர்ந்து vlog என்று பல போடறாங்க.

    பரவால்ல எல்லாருக்கும் நேரம் இருக்கிறதே என்று நினைத்துக் கொள்வேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மரங்கொத்திப் பறவை படம் சூப்பர்!

    கவிதையில் ஒரு வரி புரியவில்லை. மரங்கொத்தி மட்டும்தான் பற்றிக் கொள்ள முடியுமா? எல்லாப் பறவைகளும்தானே இல்லையா?

    பற்றுதல் கூடாதாம்
    மனிதர்களுக்கான தத்துவம்!
    பற்றிக் கொண்டால்தான்
    எனக்கு வாழ்க்கையே!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. ஆட்டோ பின்னான வாசகங்கள் சில புன்னகைக்க வைக்கும், சில சிந்த்திக்க வைக்கும்...

    ஆனால் இந்தப் படம் மற்றும் வாசகங்கள் crazy people என்று நினைக்க வைத்தது. தங்கள் எதிர்காலம் பற்றிய சிந்தை இல்லாமல்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தங்கம் - கிட்டே வராதே என்று சொல்கிறது. வாங்குவோருக்கு ஆனால் வாங்கும் பழக்கமும் இல்லை, நம் வீட்டில்.

    ஆனால் நீங்க சொல்லியிருப்பது போல் மக்கள் குவிகிறார்கள். எனக்கும் உங்கள் கருத்துதான்,

    விலைவாசி கூடும் போது மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முனைவதால் தங்கம் விலை ஏறிக் கொண்டே போகும் என்று பொருளாதாரத்தில் படித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. விஜயலஷ்மி சென்னை20 டிசம்பர், 2025 அன்று 4:38 PM

    வங்கதேச எல்லை பற்றி படித்தது நினைவு இருக்கிறது கோஷல் கிராம் பற்றி அடிக்கடி படிப்பேன் பார்க்க வேண்டும் என்று ஆவலும் இருக்கிறது ஆட்டோ வாசகங்கள் நானும் பார்ப்பேன்

    பதிலளிநீக்கு
  15. வாசகம் அருமை. . பதிவு அருமை.
    காணொளிகள் பார்த்தேன். வண்ணனமயில் ஏறும் வடிவேலன் பாட்டு கேட்டேன்.
    கோஷல் இயற்கை கொஞ்சும் இடம் தான். சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் தான்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....