வெள்ளி, 19 டிசம்பர், 2025

கதம்பம் - குளிரும் அரங்கம் - விடுப்பில் நான் - அவரும் நானும் - துள்சி கி சட்னி - ப்யாஜ் பராட்டா - சமஸ்க்ருதம் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட நெய்வேலி பயணம் - இது இல்லை எனது வீடு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


குளிரும் அரங்கம்: 


டெல்லியில் இருந்து வரும் போது மழையையும் குளிரையும் இங்க கூட்டிண்டு வந்துட்டீங்களா என்ன?? என்று என்னவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்…:) இத்தனை வருடங்களில் இங்கு இல்லாத சீதோஷ்ணம்! பால்கனியில் துவைத்த துணிகளை உலர்த்தும் போது சிலீரென்று முகத்தில் அடித்த குளிர்காற்றில் டெல்லியின் குளிர்காலத்தை சற்று நினைவூட்டுகிறது! புவி வெப்பமடைதலால் ஏற்படும் பருவநிலை மாற்றம் இது என்று சொல்கிறார்கள்! 


விடுப்பில் நான்:


எழுத்துக்கும் எனக்கும் இடையே சற்று இடைவெளி வந்துவிட்ட உணர்வு! பாடங்கள் வகுப்புகள் என்று நாட்கள் கடந்து சென்றதில் நேரமின்மையால் எதையும் இங்கு எழுதி பகிர்ந்து கொள்ள முடியாத சூழல்! கடந்த ஒரு வாரமாக தான் பரீட்சை முடிந்து விட்ட ஆயாசத்தில் சற்று வீட்டில் பெண்டிங்கில் இருந்த சில வேலைகளை நேரம் எடுத்து நிதானமாக செய்து வருகிறேன்! பரபரப்புக்கு பின் கிடைத்த இந்த விடுப்பும் மனதுக்கும் உடலுக்கும் நன்றாகத் தான் இருக்கிறது..🙂


அவரும் நானும்:


இப்போது முகநூல் மெமரீஸில் நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதிய ‘அவரும் நானும்’ தொடர் வந்து கொண்டிருக்க, அதைப் பார்க்கும் போது மனதில் ஒரு உற்சாகம் உண்டானது! மனதை வருடும் இசையோ, வரிகளோ நம் மனநிலையை மாற்றும் என்பது உண்மை தான்! வாய்ப்புக் கிடைத்தால் மீண்டும் அதைப் போன்ற ஒரு தொடருடன் என்னைப் பிணைத்துக் கொள்ள வேண்டும்!


துள்சி கி சட்னி:


வீட்டில் துளசி (துளசி டீச்சர் மன்னிக்கவும்!) சற்று இருக்கவே அதை வைத்து வழக்கம் போல் கஷாயமாக இல்லாமல் வேறு ஏதாவது செய்யலாமே என இணையத்தில் தேடியதில் கிடைத்தது இந்த ‘துள்சி கி சட்னி’! 


ஒரு கைப்பிடி துளசி இலைகளுடன், சிறிதளவு கொத்தமல்லி, காரத்துக்கு ஒரு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, உப்பு, அரை டீஸ்பூன் சீரகத்தூள், கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், சிறிதளவு நாட்டுச் சர்க்கரை, ஒரு மூடி எலுமிச்சையின் சாறு, எல்லாவற்றையும் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்தால் கிடைப்பது தான் துள்சி கி சட்னி! புளிப்பும் காரமும் இனிப்புமாக சுவையானதொரு கட்டா மீட்டா யம்மி சட்னி!


ப்யாஜ் பராட்டா:





டெல்லியின் குளிர்காலத்தில் விதவிதமான பராட்டா செய்து சுவைப்போம்! அதுபோல் இங்கும் நேற்று இந்த சீதோஷ்ணத்துக்கு ஏற்றாற் போல் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன் மசாலாக்களை சேர்த்து ஸ்டஃபிங் ரெடி செய்து கொண்டேன்! அதை வைத்து செய்த ப்யாஜ் பராட்டா துள்சி கி சட்னியுடன் ஜோராகவே இருந்தது! ஆலு பராட்டாவைப் போலவே இந்த பராட்டாவும் நன்றாகவே இருக்கும்!


******


சமஸ்க்ருதம் - 18-12-2025:


கடந்த ஒரு வாரமாக சமஸ்கிருத தேர்வை எழுதிய ஆயாசத்துடன் இருந்தேன் என்றால் இந்த வாரம் எழுதிய தேர்வின் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது மனது! 2024 மே மாதத்தில் எதேச்சையாகத் துவங்கிய சமஸ்கிருத பயணத்தில்  ஆறுமாதத்துக்கு ஒரு தேர்வாக இதுவரை மூன்று தேர்வுகளை எழுதிவிட்டேன்! 


எங்கள் சென்டரின் பாடத்திட்டத்தில் இப்போது நான் பாதிக் கிணற்றை வெற்றிகரமாக கடந்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் சொல்லிக் கொள்கிறேன்! இன்னும் மூன்று தேர்வுகள் இருக்கின்றன! சமஸ்கிருத மொழி என்னும் மகா சமுத்திரத்தில் அறிந்து கொள்ள ஆயிரம் விஷயங்கள் உள்ளன! அதை துளி துளியாக ரசித்து பருகி வருகிறேன்! 


அன்றாட வாழ்வில் நிகழும் எத்தனையோ விஷயங்களை இப்போது என்னால் சமஸ்கிருதத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகின்றது! ஒவ்வொன்றிற்கும் பொருளோடு அதன் இலக்கண நியதிகளையும் எண்ணிப் பார்க்கிறேன்! பத்தோடு பதினொன்றாக இதுவரை கேட்டுக் கொண்டிருந்த ஆராதனைகளும் மந்திரங்களும் புதிய ஒரு பொருளில் உணர முடிகின்றது!


வைத்ய சாஸ்திரம், பூகோள சாஸ்திரம் துவங்கி இன்றைய  கணினி மொழி வரை இந்த மொழியில் புதைந்திருக்கிறது! ஒரு மொழியாக கற்று அதில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறுவதைக் காட்டிலும் அதில் நாம் கற்றுணர்ந்த விஷயங்களை நம் வாழ்வோடு இணைத்துப் பார்ப்பதில் தான் உண்மையான சுவை இருப்பதாக அறிகிறேன்! அப்படித்தான் நான் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்!


இன்றைய நாளின் இனிமையாக தற்சமயம் நான் படித்துக் கொண்டிருந்த கோர்ஸில் 89% மதிப்பெண்களோடு Distinctionல் தேர்ச்சி பெற்று விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்! நல்லதொரு வழிகாட்டியாக எங்களை வழிநடத்திச் செல்லும் ஆசிரியர்களுக்கு எங்கள் வந்தனங்கள்! தான் மட்டும் கற்றால் போதும் என்று எண்ணாமல் உடன் பயிலும் சக மாணவர்களுக்கும் பயிற்சி கொடுத்து உதவி மனப்பான்மையோடு திகழும் வகுப்புத் தோழிகளுக்கும் என் நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்!


இன்றைய நாள் இனிய நாள்!



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

19 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....