செவ்வாய், 9 டிசம்பர், 2025

முகநூல் இற்றைகள் - பேருந்துப் பயணம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மணல் நதி - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சென்ற ஞாயிற்றுக் கிழமை (07-12-2025) ஒரு வேலையாக நான் பிறந்த நகரான நெய்வேலி வரை சென்று வரவேண்டியிருந்தது.  அதிகாலை புறப்பட்டு இரவு வீடு திரும்பும் விதமான பயணம்.  காலை நேரப் பயணத்தில் பார்த்த, கேட்ட விஷயங்களை முகநூலில் நேரடி ஒளிபரப்பு போலவே எழுதிக் கொண்டிருந்தேன்.  அப்படி எழுதிய இடுகைகளின் தொகுப்பு இன்றைக்கு இங்கே வலைப்பூவில், எனக்கான ஒரு சேமிப்பாகவும் முகநூலில் என்னைத் தொடராதவர்கள் படிக்க ஏதுவாகவும் இங்கே….


அதிரும் காலை.....


இன்றோடு (07-12-2025) அப்பா மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இதே நாளில் நான் பிறந்த ஊரான நெய்வேலி நகரில் வேறு ஒரு நிகழ்வு நடைபெறுகிறது என்பதால் சில்லென்ற காலை வேளையில் வீட்டிலிருந்து புறப்பட்டாயிற்று. பேருந்தில் அமர்ந்து கொண்டிருக்கிறேன். ஓட்டுநர் பாட்டை அலறவிட்டு கீழே நின்று கொண்டிருக்கிறார்..... அலறும் அலறலில் சிவனே கீழே வந்து, "மகனே கையாலயம் வரை கேட்கிறது உனது பாடல்.... கொஞ்சம் volume குறையேன்" என்று கேட்கக் கூடும்.


"உனக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல" என்று சொல்லும் விதமாக வலப்பக்க இருக்கைகளில் அமர்ந்து இருக்கும் இரண்டு aunty-கள் அலைபேசியில் விரல் தேய்த்துத் தேய்த்து சத்தமாக ரீல்ஸ் பார்க்கிறார்கள்...... இப்படியான அதிர்வுகளை காதில் கேட்டபடி நான் பேருந்தில் அமர்ந்து இருந்தேன். இதோ இப்போது தான் புறப்பட்டு இருக்கிறது.... அதே அலறல் ஒலியுடன்.....  


Enjoy மகனே..... என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.... வேறு வழி....


தமிழுக்கும் தெலுகுக்கும் போட்டி.....


ஒரு பக்கம் "சொல்லாமலே யார் பார்த்தது" என்று தமிழ் அலற, பின் இருக்கைகளில் ஐந்து பேர்கள் - நான்கு aunty-கள் மற்றும் ஒரு Uncle சுந்தரத் தெலுங்கில் அலறிக் கொண்டு இருக்கிறார்கள்...... நடத்துங்கடா டேய்......  நல்லா வருவீங்க டா......  


ஏறும்போது அவர்களுக்குள் சத்தமாக ஒரு அலசல்..... சிதம்பரம் போக விருத்தாச்சலம் போகலாமா இல்ல வேப்பூர் போகலாமா என.... அம்மா, எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவு எடுங்க..... இந்த பஸ் வேப்பூர் போகாது....  விருத்தாச்சலம் வழி தான் போகும்..... அதனால் உட்காருங்க.... என்று நடத்துநர் அவர்களுக்காக முடிவு எடுத்தார்.


நீ பெரிசா நான் பெரிசா..... மோதிப் பார்ப்போம் வாங்கடா என்று மல்லு கட்டுகிறார்கள்... வெற்றி யாருக்கு என்று தெரிந்து கொள்ள நான் காத்திருக்கிறேன். நீங்களும் காத்திருங்கள்..... எப்படியும் விருத்தாச்சலம் வரை இந்த மோதல் தான்..... 



காலை நேரம்..... பரபரப்பு ஏதுமின்றி தொழுதூர்.....

தமிழே ஜெயித்தது......


உனக்கா எனக்கா என்று பார்த்துவிடுவோம் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும், தெலுங்கின் கையே ஓங்கி இருந்தது. தொழுதூரில் இன்னுமொரு குழு - தமிழ் பெண்மணிகள்....  பேருந்தில் ஏறிய பிறகு அவர்கள் நால்வரும் விராட் கோலி போல அதிரடியாக அடித்து ஆட..... தமிழ் ஜெயித்தது.... தெலுகு குழு அமைதியாகிவிட்டது..... ஹாஹா.... யார் கிட்ட...  தமிழன்டா...... 😀


காசு குடு..... 



கை நீட்டிய மூதாட்டி...

உடம்பில் போட்டு இருக்கும் டாட்டூக்கள் தெரிய கை நீட்டும் திருநங்கை..... பேருந்தில் இருக்கும் சிறுவன் ஒருவன் "அம்மா டாட்டூ போட்டுட்டு இருக்காங்க...." என்று சொல்ல இப்படி கை நீட்டி நம்ம கிட்ட காசு வாங்கிட்டு டாட்டூ போட்டு அலையுது..... என்றார் அச்சிறுவனின் அம்மா.


விருத்தாச்சலம் பேருந்து நிலையத்தில்  ஒரு பக்கம் இப்படி என்றால், மற்றொரு பக்கம், "ஐயா ராசா..... காசு குடு ராசா....." என்று கைநீட்டும் மூதாட்டி..... எத்தனை எத்தனை பேர் இது போல ஆதரவின்றி...... 


விருத்தகிரீஸ்வரர் அந்த மூதாட்டிக்கும் மற்றவர்களுக்கும் நல்ல வழி காண்பிக்கட்டும் என்ற பிரார்த்தனைகள் மனதில்......


வடக்குத்து :


சுமார் நான்கு மணி நேரப் பயணத்தில் வடலூர் வழி வடக்குத்து எனும் இடத்திற்குச் சென்று சேர்ந்து விட்டேன்.  கலந்து கொண்ட நிகழ்விற்குப் பிறகு நான் பிறந்த ஊரான நெய்வேலி செல்ல முடிவு செய்திருந்தேன் - முதல் நாள் தான் அதற்கான அலைபேசி அழைப்புகளும் செய்தேன்.  நெய்வேலி நகரில் கிடைத்த அனுபவங்கள் வேறு ஒரு பகிர்வில் எழுதுகிறேன்.  இப்போதைக்கு பேருந்துப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் மட்டும்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 டிசம்பர் 2025


1 கருத்து:

  1. பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் எப்போதுமே சுவாரஸ்யம்.  சமயங்களில் அப்போது தலைவேதனையாக இருந்தாலும், பின்னர் புன்னகைக்க வைக்கும்!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....