அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
Poke - 05-12-2025:
முகநூலில் இருக்கும் ஒரு வசதி நட்பு வட்டத்தில் இருக்கும் நபர்களை Poke செய்வது. நீண்ட நாட்கள் நமக்கும் அவருக்கும் முகநூல் வழி தொடர்பு இல்லை எனில் இப்படி poke செய்யலாம். அப்படி ஒருவர் உங்களை Poke செய்தால் உங்களுக்கு ஒரு notification வரும். இது குறித்த ஒரு விளக்கம் கீழே….
A Facebook "poke" is a simple, virtual tap to get someone's attention, say "hi," show interest, or just as a playful, ambiguous gesture, letting them know you're thinking of them without sending a full message. When you poke a friend, they get a notification, and they can poke you back, ignore it, or start a conversation.
இது போன்று சில வசதிகள் இருந்தாலும் பலரும் இதை பயன்படுத்துவது இல்லை என்று தான் நினைக்கிறேன். எனக்கு அப்படி யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் ஒன்று நேரடியாக அவரை அலைபேசியில் அழைத்து பேசிவிடுவேன். இல்லை எனில் WhatsApp வழி ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விடுவேன். இது போன்று poke செய்வதெல்லாம் கிடையாது…..
இன்னும் ஒரு விஷயம். Don't poke me என்ற வாக்கியமும் ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒன்று. நாம் வரிசையில் நிற்கிறோம். நகர முடிந்தால் நகர்ந்து விடுவோம். ஆனால் பொறுமை இல்லாத, நம் பின்னால் நிற்கும் நபர் அவரது விரலால் நம்மை முதுகில் குத்தி/தொட்டு முன்னால் போகச் சொல்வதும் கூட ஆங்கிலத்தில் சொல்வதென்றால் poke தான்…. ஹிந்தியில் கூட उंगली मत करो (Ungli math karo) என்று சொல்வதுண்டு …
அது சரி இன்றைக்கு காலையிலேயே எதற்கு இந்த வியாக்கியானம் என்று தானே கேட்கிறீர்கள்…… சொல்கிறேன்.
நேற்று எனது முகநூல் பக்கத்தில் ஒரு notification…… “Kumar Chandramouli poked you.” என்பது தான் அது சொன்ன விஷயம். குமார் எனது நீண்ட கால நண்பர். இதில் சோகம் என்னவென்றால் அவர் இப்பூவுலகை விட்டு மறைந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்த வருடத்தின் ஜனவரி 2- ஆம் தேதி தான் அவர், அவரது குடும்பத்தினரையும் எங்களையும் கலங்கவிட்டு இறைவனடி சேர்ந்தார். எங்கள் கல்லூரி நண்பர்கள் குழுவில் உள்ள ஒருவருமே அவரை மறக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவரின் கணக்கிலிருந்து வரும் இந்த notification அவரைக் குறித்த எண்ணங்களில் மூழ்கச் செய்தது. அவரது முகநூல் கணக்கை அவரது அம்மாவும் சகோதரியும் இப்போதும் பார்த்து வருகிறார்கள் என்று தெரிந்திருந்தாலும், கொஞ்சம் அதிர்வுகளை ஏற்படுத்தியது….
பொதுவாக யாரேனும் நம்மை poke செய்தால் கோபம் வரும். ஆனால் இந்த poke தந்தது கோபம் அல்ல! நண்பரின் நினைவுகளை, அவர் உடனான எங்களது தொடர்பை மனதில் replay செய்து பார்க்க வைத்தது….. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்….. அது தானே கீதை சொல்வதும்…..
*******
மிளகாய் பஜ்ஜி - 09-12-2025:
சில நாட்கள் முன்னர் எழுதிய முகநூல் இற்றைக்கள் பதிவில் ஶ்ரீரங்கம் போண்டா என்ற தலைப்பில் இங்கே ஒரு இடுகை எழுதியிருந்தேன்......
ஆட்டோ ஒன்றின் முன்னர் ஶ்ரீரங்கம் போண்டா என்று எழுதி அதன் முடிவில் ஒரு வேளை அதன் ஓட்டுநரின் பட்டப்பெயராக இருக்குமோ என்று முடித்திருந்தேன். காலை நடைப்பயிற்சி சமயத்தில் ஆட்டோவை பார்த்ததால் ஓட்டுநரை பார்க்க இயலவில்லை. இந்த காலகட்டத்தில் சில முறை ஆட்டோவை பார்க்க நேரிட்டாலும் ஓட்டுநர் கண்ணில் பட்டதே இல்லை.
இன்றைக்கு மகளை கல்லூரியில் விட்டுவிட்டு அலுவலகம் செல்லலாம் எனச் சென்றபோது, சரியாக அந்த சமயத்தில் ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டு இருந்தார் அதன் ஓட்டுநர். பார்த்ததில் எனக்கு பெரும் ஏமாற்றம். நான் கற்பனை செய்து வைத்தது போல இல்லாமல் ஒல்லியாக இருந்தார்...... போண்டா என நினைத்தது மிளகாய் பஜ்ஜி ஆகிவிட்டது....... Disclaimer: உருவக் கேலி செய்வது எனக்கு அறவே பிடிக்காது......
பிறகு என் இந்தப் பட்டப் பெயர் அவருக்கு என்று யோசித்தபடியே முன்னேற, என்னைக் கடந்து சென்ற ஆட்டோவின் பின்னர் எழுதி இருந்தது இந்த வாக்கியம்..... "மனிதர்களுக்குப் பிரச்சனை இருக்கும் வரை தான் கடவுளுக்கு அர்ச்சனை"! என்னென்னமோ சிந்திக்கிறாங்கப்பா! என்னத்த சொல்ல.....
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
11 டிசம்பர் 2025



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....