அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது தேவிபாலா அவர்கள் எழுதிய கல்யாணம் கச்சேரி என்கிற நூல் குறித்து தான். கல்யாணம் என்பது ஆதி காலத்திலிருந்தே பேசு பொருளாக இருக்கும் விஷயமாகவே இருக்கிறது. இப்போதும் அப்படியே. முன்பு கல்யாணம் என்பதில் பிரச்சனைகளை வளர்ப்பது மணமகன் வீட்டினர் என்றால் இப்போது பல திருமணங்கள் முறிவதற்கு மணமகள் வீட்டினரும் காரணமாக இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி கேள்விப்படுகிறோம், தடைபட்ட திருமணங்கள் குறித்து படிக்கிறோம். எத்தனை எத்தனை திருமணங்கள் மணமகளின் தாயார் மற்றும் தந்தையால் நிச்சயத்திற்குப் பிறகு நின்று விடுகிறது, எத்தனை திருமணங்கள் முடிந்த சில நாட்களிலேயே விவாகரத்தை நோக்கி நகர்கிறது என்பதையெல்லாம் நாம் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
அப்படியான இந்தக் கால திருமணம் ஒன்றில் நடக்கும் பிரச்சனைகள், பெண்ணின் திருமணத்திற்கு அவரது அம்மா போடும் கண்டிஷன்கள், படிக்கும்போதே நமக்கு உதறலைத் தருகிறது! அப்பப்பா எத்தனை விதமான கண்டிஷன்கள்… உதாரணத்திற்கு ஒன்று - மாப்பிள்ளை சொந்தமாக தனது சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு என்பதால் அங்கே மாப்பிள்ளையும் பெண்ணும் மட்டுமே இருக்க வேண்டும், மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இருக்கக்கூடாது, சகோதரி வீட்டிற்கு வரவே கூடாது போன்ற எதிர்பார்ப்புகள் படிக்கும்போதே என்னடா இது, இப்படியெல்லாம் கூடவா சொல்வார்கள் என்று வியக்க வைக்கிறது. இப்படியான விஷயங்களை பல திருமண ஏற்பாடுகளில் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்றாலும் படிக்கும்போது, என்னவிதமான அம்மா இவர் என்று தான் அந்த அம்மா மீது வெறுப்பு வருகிறது.
அதுவும் மணப்பெண்ணும், அவரது தந்தையும் ஒத்துக் கொண்டாலும், அம்மா போடும் கண்டிஷன்கள், தனது விருப்பங்கள் மட்டுமே பெரிது என அவர் எடுக்கும் முயற்சிகள், அவரது நடவடிக்கைகள் என அனைத்துமே அவர் மீது வெறுப்பையே உருவாக்கும் விதமாக இருந்தது. பாருங்களேன் எப்படியெல்லாம் கண்டிஷன்கள் போடுகிறார்கள் என்று…
“மாப்பிள்ளை சம்பாதிச்சு கட்டின வீடு கோட்டை மாதிரி இருக்கு! அவளுக்குத்தானே அது சொந்தம்? மத்தவங்க ஏன் அங்கே இருக்கணும்?” (இங்கே மத்தவங்க என்று சொல்வது மாப்பிள்ளையின் பெற்றோர்களை என அறிக…)”
“நான் வச்சிருந்த பதினஞ்சு நிபந்தனைகள்ள ஒண்ணை மிஸ் பண்ணிட்டேன்! அந்த பையன் தகுதி பார்த்து இதை கோட்டை விட்டுடேன்!” “உனக்கு நாத்தனார் கண்டிப்பா கூடாதுன்னு நான் தீர்மானமா இருந்தேன்! ஆனா அவனுக்கு ஒரு அக்கா இருக்கானு சாயங்காலம் தான் பார்த்தேன்! அதனால இந்த வரன் வேண்டாம் பிரகதி!” இப்படிச் சொல்வது மணமகனும் மணமகளும் சந்தித்து, பேசி ஓகே சொல்லி, பரிசுகளை பரிமாறிக்கொண்ட பிறகு!
“நீ எங்கே போனாலும் மகா ராணியா இருக்கணும்! நீ வச்சது தான் சட்டமா இருக்கணும்! ஓக்கே, நாளைக்கு காலைல அவங்க பேசட்டும் முதல்ல! அப்புறமா சந்திப்பு எங்கேனு முடிவு செய்யலாம்! நல்ல பெண் வேணும்னா பிள்ளை வீட்டார் தான் தேடி வரணும்! அவங்க தான் முன் காலை எடுத்து வைக்கணும்!”
“நம்ம பொண்ணு அங்கே வாழப்போறா! நரேன் இவளுக்குப் புருஷணாகப் போறான்! அந்த வீட்ல என் மகள் தான் ராணியா இருக்கணும்! ஒரு நாத்தானார் கையை ஓங்கவிட்டு எல்லாத்துக்கும் இவ தலையாட்டினா, காலம் முழுக்க அந்த வீட்ல அவ கொடிதான் பறக்கும்!”
இத்தனை நிபந்தனைகளுக்குப் பிறகும் பிரகதிக்கும் நரேனுக்கும் திருமணம் நடக்கிறது. பிரகதியின் அம்மா திட்டமிட்டு பல சங்கடங்களை உருவாக்கினாலும் திருமணம் நடக்கிறது. அதற்குப் பிறகும் அவர் பல சூழ்ச்சிகளைச் செய்து குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்துகிறார். அதன் பிறகு அந்த பிரச்சனைகளை பிரகதி, நரேன் குடும்பத்தினர் எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் தேவி பாலா. முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்ள, இந்த நூலை அச்சுப்புத்தகமாகவோ கிண்டில் பதிப்பாகவோ படிக்கலாம். Kindle Unlimited கணக்கு இருந்தால் இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து படிக்கலாம். புஸ்தகாவில் கணக்கு இருந்தால் அங்கேயும் இந்த நூலினை வாசிக்க முடியும். கல்யாணம் என்பது ஒரு நாள் கூத்தல்ல, வாழ்க்கை என்பதைச் சொல்லும் இந்த நூலை நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
29 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....