திங்கள், 8 டிசம்பர், 2025

மணல் நதி - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அப்பா - ஓடிய ஒரு வருடம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



சென்ற திங்கள் கிழமை அன்று உங்களுடன் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களது கிருஷ்ண தாசி எனும் அச்சு நூல் குறித்த எனது வாசிப்பனுபவம் ஒன்றினை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இந்த வாரம், நான் ஒரு காலத்தில் அதிக அளவில் படித்த எழுத்தாளரான பாலகுமாரன் அவர்களின் நூல் - இந்த முறை இணைய வழியில் படித்த நூல் ஒன்றினைக் குறித்தும், அதனை வாசித்தபோது கிடைத்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  எனக்கு பாலகுமாரன் அவர்களின் எழுத்தை அறிமுகம் செய்தது தில்லியில் நான் வசித்த ஒரு அறையிலிருந்த நண்பர் - பாலாஜி அவர்கள்.  போட்டிப் போட்டுக் கொண்டு அவரின் எழுத்துகளை இருவரும் படித்திருக்கிறோம்.  படித்ததோடு மட்டுமல்லாது அதில் வரும் கதைகள் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் நிறைய பேசியிருக்கிறோம்.


இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருக்க முடியுமா என்று பாலகுமாரன் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்து ஆச்சரியத்துடன் பேசியிருக்கிறோம்.  சில கதாபாத்திரங்களும், சில வாக்கியங்களும் இப்போது வரை மறக்கவில்லை. அப்படி ஒரு ஈடுபாடு இருந்தது அவரது நூல்களைப் படிப்பதில்.  கொஞ்சம் கொஞ்சமாக அவரது நூல்களைப் படிப்பதில் இருந்த ஆர்வம் குறைந்தது ஒரு காலத்தில்.  ஆனாலும் அவ்வப்போது அவரது நூல்களைப் படிப்பதில் விருப்பம் இருக்கிறது. சமீபத்தில் படித்த அவரது நூல் ஒன்று தான் மணல் நதி. வித்தியாசமான பெயர் என்பதாலேயே படிக்கத் தோன்றியது.  முதல் அத்தியாயமே எனக்குப் பிடித்த பயணம் குறித்த தகவல்களுடன் தொடங்கியது என்பதிலேயே கதையின் மீதான ஈர்ப்பை அதிகரித்தது.  சென்னையிலிருந்து குழுவினராக பேருந்து ஒன்றில் காசி, கயா, அலஹாபாத் நோக்கிச் செல்கிறார்கள். அந்தக் குழுவில் இருந்தவர்களை வைத்தே கதையை நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர்.  


கதையில் வரும் இடங்கள் அனைத்திற்கும் நானும் சென்றிருக்கிறேன் என்பதால் கதையில் ஈடுபாடு இன்னும் அதிகமாகவே இருந்தது என்பதை இங்கே சொல்ல வேண்டும்.  அதிலும் காசிக்குச் சென்று அங்கேயே சில நாட்கள் தங்கியதில் கிடைத்த அனுபவங்கள் இன்னும் பசுமையாக மனதில் இருக்க, கதையை ஆர்வத்துடனேயே படித்தேன்.  தில்லியின் கோடையைப் பற்றி எழுதியிருந்த பத்தி, அதில் இருக்கும் உண்மையை அனுபவித்திருக்கும் எனக்கு சரியாகவே புரிந்தது.  உங்களுக்கும் புரியும் விதமாக அந்தப் பகுதியை அப்படியே கீழே தந்திருக்கிறேன். 


வாங்க, நம்மூர் வெயில்ல நனைஞ்சவரே வாங்க, எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறது தப்பு. உங்களுக்கு டிகிரில சொன்னாப் புரியுது.  நம்மூர்ல மிஞ்சி மிஞ்சிப் போனா நாற்பது, நாற்பத்தி ஒண்ணு.  நாலு மணியாச்சுன்னா மெட்ராஸ் கடல் காத்து திரும்பும். ஆறு மணிக்கு ஒரு செம்பு தண்ணி ஊத்தினோம்னா சிலுசிலுன்னு இருக்கும்.  ராத்திரி ரெண்டு மணிக்கு பூமி குளிர்ந்து போயிடும். போர்த்திக்கிட்டுத் தூங்கலாம்.  டெல்லி அப்படியில்ல, பகல் எரியும். ராத்திரி சுடும்.  சுவரு, கட்டில், சொம்பு, தட்டு, பாத்திரம், டபரா எல்லாம் சுடும்.  ராத்திரி ஏழரை மணி வரைக்கும் வெளிச்சம் இருக்கும். காலை நாலரை மணிக்கு பொல பொலன்னு விடிஞ்சுடும். ஆறுமணிக்கு வெயில் தாக்கும். பதினொன்னுலேர்ந்து அஞ்சரை வரைக்கும் பேசக்கூட முடியாது. அத்தனை வெயில்.


இந்த விஷயங்கள் அனைத்தையும் முப்பத்தி ஐந்து வருடம் அனுபவித்திருக்கிறேன் என்பதால் இதன் தாக்கம் தெரியும். நீண்ட தூர பயணம் செல்லும் போது நமக்கு உடன் வரும் முகம் தெரியா, முன் பின் தெரியாத நபர்கள் சரியாக அமைந்து விட்டால் நல்லது. அப்படியில்லையெனில் திண்டாட்டம் தான்.  ஒரு பயணத்தில் இருக்கும் சிரமங்கள், அவர்கள் சென்றதன் நோக்கம், காசி, கயா, அலஹாபாத் போன்ற இடங்களில் செய்யப்படும் விஷயங்கள் என பலவும் படித்துக் கொண்டே வரும்போது எனக்கு அந்தந்த இடங்களில் கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வந்த வண்ணம் இருந்தது.  அந்த இடங்களில் செய்யப்படும் காரியங்களுக்கான தாத்பரியம் குறித்தும் ஆங்காங்கே சொல்லிச் சென்றது சிறப்பு.  பல விஷயங்கள் நம்மில் பலருக்கும் புரிவதே இல்லை.  உதாரணத்திற்கு அலஹாபாத் நகரில் வேணி தானம் எதற்குச் செய்கிறார்கள் என்பதே பலருக்கும் தெரியாது.  ஆனாலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.  


இறந்த பின்னர் கடக்கும் வைதரணி நதி குறித்த பேச்சுக்குப் பிறகு உறங்கச் செல்லும் கதாபாத்திரம் யோசிக்கும் விதமாக எழுதப்பட்டிருக்கும் வரிகள் நிச்சயம் படிக்கும் வாசகர்களையும் யோசிக்க வைக்கும்.  காசியில் கிடைக்கப்போகும் அனுபவங்கள் என படிக்கப் படிக்க, எனக்குக் கிடைத்த அனுபவங்கள் மனதில் வந்தன என்று சொன்னால் மிகையாகாது.  ஹரிஷ்சந்திர Gகாட் குறித்து படிக்கும்போது அந்தக் காட்சிகள் கண்முன்னே தோன்றி மறைந்தன.  மொழி தெரியாமல் வட இந்தியா சென்று கஷ்டப்படுவது குறித்த பகுதி எனது அனுபவங்களையும் யோசிக்க வைத்தது.  மொழி குறித்த ஒரு பகுதி கீழே…


தமிழ்நாடு தாண்டினா உங்க இங்க்லீஷ் வேவாது.  இந்திதான்.  எல்லா இடத்துலயும் இந்தி தான். ஆந்திராவுல ரிக்‌ஷாக்காரன் கூட இந்தி பேசுவான். கன்னடக்காரன் கஷ்டப்பட்டு கத்துக்கிட்டான்.  மலையாளி பாடமா வச்சு படிக்கிறான். நாமதான் வுட்டுட்டோம்.  இந்தி ஒழிகன்னு ஓச்சுட்டோம்.  இந்திய விட்டது தப்பு. பெரிய தப்பு. பாடமா வேணாம். பேசப் பழகியிருக்கலாம். பேசப் பழகற பாஷைக்கு பரீட்சை இல்லை, மார்க் இல்லைன்னு பள்ளிக்கூடத்துல வச்சிருக்கலாம், பசங்க ஜாலியா படிச்சுருப்பாங்க! ஸ்டேஷன் போய் இறங்கி வழி கேளுங்க. அப்ப தெரியும் ஹிந்தி தெரியாத குறை.  டிப்டாப்பா டிரஸ் போட்டிருப்பான், வில் யூ ஸ்பீக் இங்க்லீஷ்னு கேட்டுப் பாருங்க. நைன்னுட்டு போயிடுவான்.


காசியில், அலஹாபாத்தில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் குறித்தும் நான் இங்கே சொல்லிப் போகலாம்.  ஆனாலும் பாலகுமாரன் எழுத்தின் வழி நீங்கள் படித்தால் இன்னும் அதிகம் ரசிக்கலாம்.  படித்துப் பாருங்களேன்.  எனக்கு இந்த நூலினை அனுப்பித் தந்த விஜி அவர்களுக்கு நன்றி.  நீங்கள் படிக்க விரும்பினால் படிக்கலாமே.  பாலகுமாரன் அவர்களின் எழுத்தில் பல வரிகளை நான் அடிக்கோடிட்டு வைப்பதுண்டு. அப்படி இந்தப் புத்தகத்தில் அடிக்கோடு இடலாம் என்று தோன்றிய ஒரு வாக்கியம்…


அனுபவங்களை நோக்கிப் போகாது, வந்தது அனைத்தும் அனுபவமாகவே மனம் ஏற்பின் சிக்கல் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அனுபவம்.  நம்மைத் தாண்டித் தாண்டி அனுபவம் போகும்போது நாம் போக வேண்டியது எதற்கு?


நிச்சயம் உங்கள் சிந்தனைகளையும் இது போன்ற வரிகள் தூண்டிச் செல்லும்.  படித்துப் பாருங்களேன்.  அமேசான் தளம் வழியேயும், பனுவல் தளம் வழியேயும் மணல் நதி அச்சு நூலையும் (விலை ரூபாய் 105/-) நீங்கள் வாங்க முடியும் என்ற தகவலும் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

8 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....