எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 18, 2015

சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்

தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 16

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


சென்ற பதிவில் சொன்னது போல, காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன தெரியுமா, காங்க்ரா நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் சாமுண்டாஜி என அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோவில் தான். இக்கோவிலும் சக்தி பீடங்களில் ஒன்று.


சாலையின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து பனிச்சிகரங்கள் இருக்க, அவற்றை ரசித்தபடியே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சாமுண்டா தேவியின் கோவில். சில நிமிடங்கள் பயணித்து கோவிலை வந்தடைந்தோம். கோவிலின் உள்ளே நுழைவதற்குள் கோவில் பற்றிய சில கதைகளைப் பார்க்கலாம்.


சாமுண்டா தேவி, பராசக்தியின் பல அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சக்திகளில் ஒன்று. சண்டா, முண்டா என இரண்டு அரக்கர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க அவர்களை அழிக்க உருவமெடுத்தவர் தான் சாமுண்டா தேவி. சண்டா, முண்டா ஆகிய அரக்கர்களை அழித்தமையால் இவர் சாமுண்டா தேவி என அழைக்கப்பட்டார் என்று ஒரு கதை. இன்னொரு கதையும் உண்டு.அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் பலத்த யுத்தம் நடக்க, அப்போது கௌஷிகி தேவி எனும் தேவியின் புருவத்தில் இருந்து உருவான சண்டிகா சண்டா, முண்டா ஆகிய இருவருடனும் பலத்த யுத்தம் நடத்திய பிறகு யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். பிறகு அந்த இரண்டு அரக்கர்களின் தலையைக் கொய்து கௌஷிகி தேவியின் காலடியில் சமர்ப்பிக்க, மனம் மகிழ்ந்த கௌஷிகி தேவி சண்டிகாவிற்கு சாமுண்டா தேவி என்ற பட்டம் சூட்டியதாகவும் ஒரு கதை.காங்க்ரா மாவட்டத்தின்  பாலம்பூர் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இக்கோவில் [B] பானேர் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. தற்போதைய கோவில் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இருந்த ராஜா ஒருவர் தேவியின் கோவிலை பக்தர்கள் சுலபமாகச் சென்று வழிபடும் இடத்தில் அமைக்க முடிவு செய்து சாமுண்டா தேவியை பிரார்த்திக்க, அவரும் கோவிலில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி அதற்கு அனுமதி அளித்து, இந்த இடத்தில் பூமியில் புதைந்து இருக்கிறேன். என்னை எடுத்து அங்கே கோவில் கட்டலாம் என்று சொல்லிவிட்டார்.ராஜா தனது பரிவாரங்களில் சில வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க, தேவியின் சிலையைக் கண்டெடுத்த அவர்களால் அச்சிலையை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எத்தனை முயன்றும் முடியாமல் போக, ராஜாவும் என்ன செய்வது என்று கவலையில் ஆழ்ந்து விட, சாமுண்டா தேவி மீண்டும் கோவில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி, “அவ்வீரர்கள் என்னை சாதாரணக் கல்லாக நினைத்துக் கொண்டு அப்புறப்படுத்த நினைத்தார்கள். அதனால் தான் அவர்களால் என்னை தூக்க முடியவில்லை” என்று கூறி, காலையில் நதியில் நீராடி தகுந்த மரியாதையோடு என்னை அணுகு!” என்று சொல்லி விட்டார்.அன்னை சொன்னபடியே அனைவரும் செல்ல, ஒரு மனிதராகவே தேவியின் சிலையை எடுத்து வந்து பானேர் நதிக்கரையில் கோவில் அமைத்தார்கள் என்று ஒரு கதை! எத்தனை எத்தனை கதைகள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி கதைகளும், உப கதைகளும் நிறையவே இருக்கின்றன.  என்ன நண்பர்களே கதைகளைப் படித்து ரசித்தீர்களா? வாருங்கள் கோவிலின் உள்ளே பயணிப்போம்.கோவிலின் வாயிலில் இருக்கும் கடைகளில் ஒன்றில் அர்ச்சனைக்கான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கேயே காலணிகளையும் கழற்றி வைத்தோம். சென்ற பதிவில் சொன்னது போலவே அங்கும் கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் கொடுக்க, கைகளை சுத்தம் செய்து கொண்டு கோவிலின் நுழைவாயில் வழியே உள்ளே சென்றோம். சாமுண்டா தேவி பல அரக்கர்களை வென்று அவர்களின் தலைகளைக் கொய்து மாலையாக அணிந்து கொண்டிருந்த மாதிரி இருந்த சிற்பம் பயங்கரமாக இருந்தது!கோவிலின் வாசலில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தபடியே உள்ளே நுழைந்தால் தேவியின் கோவிலுக்குள் வந்த பிறகு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  சாமுண்டா தேவி பொதுவாக சிகப்பு வண்ண வஸ்திரத்தில் அலங்கரிக்கப் பட்டு இருப்பது வழக்கம்.  சாமுண்டா தேவியை மனதார தரிசித்து அனைவருக்கும் நல்லதையே தரட்டும் என வேண்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். பிரகாரத்தில் வலம் வரும்போது அங்கும் வானரங்கள் நிறையவே அமர்ந்திருக்க, அவற்றிடமிருந்து தேவியின் கோவிலில் தந்த பிரசாதங்களைக் காப்பது பெரும் கலையாக இருந்தது! சற்றே மறைவிடத்தில் அமர்ந்து அங்கே தந்த சர்க்கரை உருண்டைகளை சாப்பிட்டு விட்டு, அடுத்த சன்னதியை நோக்கி நகர்ந்தோம்.

அது என்ன சன்னதி, அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமே!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

34 comments:

 1. படித்தேன், ரசித்தேன், தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வெள்ளிப் பனிமலையின் படங்கள் நேரில் பார்ப்பதுபோல் இருக்கின்றன. அருமை! தொடர்கிறேன் அடுத்து கிடைத்த அனுபவம் பற்றி அறிய.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 3. நேரிலேயே பார்த்த உணர்வை உண்டாக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. பல கதைகளை அறிந்தேன்... படங்கள் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. ;நேரில் என்னால் பார்க முடியாத இடங்கள்! தங்கள் பதிவால் பார்கிறேன்! நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 6. ரசித்து வாசித்தோம் வெங்கட்ஜி! படங்கள் மிகவும் அருமை! மனதை ஈர்க்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 7. இந்த எழிலையெல்லாம் - நேரில் காணும் வகை என்றைக்குக் கிடைக்குமோ?..
  அழகிய படங்களுடன் அம்மன் தரிசனம்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. சாமுண்டா தேவி சிறப்பு அறியத்தந்தமைக்கு நன்றி. புகைப்படங்கள் அருமை. அது பாருங்க அவைகளை ஏமாற்றி சர்க்கரை உருண்டைகளை சாப்பிட்டு வந்தது கொஞ்சம் வருத்தம்தான். அவைகளுக்கும் கொடக்கலாமே,,,,,,, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முன்னோர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தோம். ஆனால் அவை தட்டிப் பறிப்பதிலையே குறியாய் இருந்தன!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 9. அருமை! சிவனாரின் ஒரு கை தனியாக தொங்குகிறதே படத்தில் உடைந்து போய் இருக்கிறதா? அப்படியே வடிவமைத்து இருக்கிறார்களா? நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உடைந்து போனது மாதிரி தெரியவில்லை! கம்பிகளில் கட்டி தொங்குகிறது. ஏனென்று தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 10. சாமுண்டாதேவியை ஒத்த ஒரு தேவியைப் பற்றி முன்னர் ஒரு பதிவில் பார்த்த நினைவு. புகைப்படங்கள் அருமை. தொடர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. சிவ சிவா ,சிவனுக்கே இந்த நிலையா :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 12. பயணம் அருமை
  படங்கள் ஜோர்..
  வாவ்..
  தம +

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 13. வழக்கம்போலவே மிகவும் அருமை.நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.புகைப்படங்கள் வெகு நேர்த்தி.எப்போது ஸ்ரீரங்கம் வந்தீர்கள்?நான் இப்போது சென்னையில்.--

  ReplyDelete
  Replies
  1. சென்ற சனிக்கிழமை திருவரங்கம் வந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா...

   Delete
 14. புகைப்படங்கள் ரத்தினம்
  தமிழ் மணம் நவரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 15. நல்ல படங்களோடு புதிய தகவல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி அவர்களே.

   Delete
 16. சிலை வடிக்கிறவர்கள் நல்ல கற்பனை வளத்தோடு செய்கிறார்கள். அந்த இறைவனே இதனைக் கண்ணுறும்போது, பாராட்டுவாரா.. அல்லது நறு நறு என்று பல்லைக் கடிப்பாரா? இதனைச் செய்தவர்கள் இறைவனைக் கண்ணுறும்போது அவர்கள் நினைப்பு என்னவாக இருக்கும்? இடுகை எப்போதும்போல் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. மலைகளில் அத்தனை ஸ்நோ இல்லை போல !

  ReplyDelete
  Replies
  1. நாங்கள் சென்ற சமயத்தில் அத்தனை இல்லை. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் அதிகம் இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....