எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, May 4, 2015

காங்க்டா வஜ்ரேஷ்வரி தேவிதேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 13

தேவ் பூமி ஹிமாச்சல் – பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

 வஜ்ரேஷ்வரி தேவி திருக்கோவில்...
படம்: இணையத்திலிருந்து....


வஜ்ரேஷ்வரி தேவி......

படம்: இணையத்திலிருந்து....


ஒரு வழியாக அனைவரும் தயாராகி விட நண்பர் மனீஷ்-உம் வந்து சேர்ந்தார். கோவிலுக்குச் செல்ல அனைவரும் புறப்பட்டோம். நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் கோவில் வந்து விடும். அதுவும் ஒரு சிறிய சந்து தான் கோவிலுக்குச் செல்லும் பாதை. அதன் இரு மருங்கிலும் கடைகள் – பூஜைக்குத் தேவையான பொருட்கள் மட்டுமின்றி பல விதமான பொருட்களையும் விற்கும் கடைகள். அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலை நோக்கி நடந்தோம்.
 சிறையில் இருக்கும் ஆனைமுகத்தான்!

பாதி வழியிலேயே ஆனைமுகத்தோனுக்கு ஒரு சிறிய கோவில் – சிவப்பு வண்ணத்தில் ஆனைமுகத்தோன் – அவனைச் சிறை வைத்து ஒரு அடைப்பு – அவ்வளவு தான் – “என்னை ஏன் சிறை வைத்தாய்?என்று அவன் யாரிடம் கேட்க முடியும் என்று புரியவில்லை. அவனைத் தொழுது நாங்கள் முன்னேறினோம்.

 கோவில் செல்லும் வழியிலிருந்து தெரியும் தௌலாதார் மலைத்தொடர் - ஒரு காட்சி....

பெரும்பாலான வட இந்தியக் கோவில்களில் காலணிகளை கழற்றி வைக்கவென்று தனியாக இடம் ஏதும் இருப்பதில்லை. கோவில் பாதையில் இருக்கும் அர்ச்சனை தட்டுகள் விற்கும் கடைகளில் விட்டு விடுவார்கள். இங்கே தனியாக ஒரு இடம் இருந்தது. பக்கத்திலேயே கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீரும். இப்படி ஒரு இடத்தில் காலணிகளை வைத்து விட்டு கோவிலை நோக்கி முன்னெறினோம்.  தேவியை தரிசனம் செய்வதற்கு முன்னர் கோவில் பற்றிய சில விவரங்களைப் பார்க்கலாம்.

கோவில் நுழைவாயில் மேற்கூரையில் இருக்கும் ஓவியங்களில் ஒன்று. 

இந்தப் பயணத்தில் ஏற்கனவே மா சிந்த்பூர்ணி, ஜ்வாலாஜி ஆகிய இரண்டு சக்தி பீடங்களைப் பார்த்திருக்கிறோம். இன்று பார்க்கப் போகும் கோவில், பயணத்தில் பார்க்கும் மூன்றாவது சக்தி பீடம். இந்த கோவிலில் சதி தேவியின் இடது மார்பகம் விழுந்ததாக நம்பப் படுகிறது. இங்கே குடிகொண்டிருக்கும் தேவியின் பெயர் வஜ்ரேஷ்வரி தேவி. ஜம்மு வைஷ்ணவதேவி கோவில் போலவே இங்கேயும் தேவியை பிண்டி ரூபத்தில் வழிபடுகிறார்கள்.

 இவருக்கும் சிறை தான்!

காங்க்டா தேவி என்று சொல்லப்படும் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலுக்கு நாகர்கோட் [dh]தாம் என்றும் கோட் காங்க்டா என்றும் பெயர்கள் உண்டு. சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் தான் விழுந்தது என்று சொல்வது போலவே வேறு சில கதைகளும் உண்டு. மஹிஷாசுரனை வதைத்த போது வஜ்ரேஷ்வரி தேவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அப்புண்களை குணப்படுத்த அதன் மேலே வெண்ணை தடவிக் கொண்ட்தாகவும் கதை உண்டு. இப்போழுதும் மகர சங்கராந்தி தினத்தன்று வஜ்ரேஷ்வரி தேவிக்கு வெண்ணைக் காப்பு செய்கிறார்கள்.

 அன்னையைப் பார்த்தபடி நின்றிருக்கும் சிங்கங்கள்.....

மிகவும் பழமையான கோவில் என்றாலும் அன்னிய ஆக்கிரமிப்புகளில் பல முறை அழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இயற்கையின் சீற்றத்தால் விளைந்த அழிவு தான் மிகப் பெரியது. 4 ஏப்ரல் 1905-ஆம் வருடம் காங்க்டா முழுவதும் அப்படி ஒரு குலுக்கல் – ரிக்டர் ஸ்கேலில் 7.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட மிகப் பெரிய அழிவு – 20000 பேருக்கு மேல் உயிரிழக்க, பலத்த காயங்கள் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில்.  இடிபாடுகளில் விழுந்த வீடுகள் எண்ணிலடங்கா. அழிவில் சிக்கியதில் வஜ்ரேஷ்வரி தேவி கோவிலும் ஒன்று.

 சிவபெருமானுக்கு ஒரு சிறிய கோவில்

கோவிலை புதுப்பித்து, இப்போது இருக்கும் கோவில் கட்ட கிட்டத்தட்ட  25 வருடங்கள் ஆகியிருக்கின்றது. கோவிலின் கட்டமைப்பு இந்து, இஸ்லாம், சீக்கிய முறைகள் மூன்றையும் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு. தேவியின் கோவிலில் படைக்கப்படும் பிரசாதங்கள் எப்போதும் மூன்று பகுதிகளாகப் பிரித்து – மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதி, மஹா காளி – ஆகிய மூவருக்கும் படைக்கிறார்கள்.


 அன்னையின் பாதங்கள்....

கோவிலில் நுழைவாயிலேயே இரண்டு பாதங்கள் – அவற்றிற்கு பூஜை செய்து, பூக்களையும் தூவி வைத்திருக்கிறார்கள். வாயிலில் அழகிய ஓவியங்களும் வரைந்திருப்பதைக் கண்டு ரசித்தபடியே உள்ளே நுழைந்தோம். சில ஓவியங்கள் ஆங்காங்கே சிதிலப்பட்டிருப்பதும் காண முடிந்தது. ஒரு சிவன் சிலையும் அங்கே இருந்தது. அவற்றை எல்லாம் பார்த்தபடியே கோவிலுக்குள் நுழைந்தோம். தேவியின் கருவறைக்கு முன்னர் சிங்கங்களின் உருவங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். 

தரம் சீலா.....  

கோவிலில் தேவியின் முன்னர் இருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு – அது தரம் சீலா என்று அழைக்கப்படும் ஒரு செவ்வகக் கல் – அக்கல்லில் பக்தர்கள் அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள். அந்தக் கல்லில் கை வைத்துக் கொண்டு யாரும் பொய் சொல்ல முடியாது என்றும் நம்பிக்கை. விழுப்புரம் அருகே இருக்கும் திருவாமாத்தூர் கோவிலிலும் இப்படி ஒரு வட்டப்பாறை உண்டு. அது பற்றி முன்னரே ஒரு பதிவில் எழுதி இருக்கிறேன் – திருவாமாத்தூர் கொம்பு பெற்ற ஆவினங்கள்.  

 மற்றுமோர் ஓவியம்

தரம் சீலாவினைப் பார்த்து விட்டு வஜ்ரேஷ்வரி தேவியினை தரிசிக்க முன்னேறினோம். தேவியை மனதாரப் பிரார்த்திக்கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். காலை நேரம் என்பதாலும், கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் இன்னும் வராத காரணத்தாலும் சற்று நேரம் நிம்மதியாக தரிசிக்க முடிந்தது. வஜ்ரேஷ்வரி தேவியிடம் அனைவருக்கும் நல்லதே கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.  

 ஓவியங்களில் இன்னுமொன்று....

கோவிலின் உள்ளே பிரகாரத்தில் இன்னும் நிறைய விஷயங்கள் பார்ப்பதற்கு உண்டு. அவை பற்றியும், அங்கே நமது முன்னோர்கள் செய்த வேலை பற்றியும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

40 comments:

 1. //தேவியை மனதாரப் பிரார்த்திக்கொண்டு அங்கேயே நின்றிருந்தேன். வஜ்ரேஷ்வரி தேவியிடம் அனைவருக்கும் நல்லதே கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டேன்..//

  இனிய பதிவு.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பெங்களூரிலும் கடை வாசல் அல்லது சாலையோரத்தில் அமைந்த சின்னஞ்சிறு கோவில்கள் காலையில் பூஜை செய்யப்பட்டதன் அடையாளமாகப் பூக்களுடன் ஆனால் பூட்டுப்போட்டு மூடியே இருப்பதைக் காணலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. பகிர்வுக்கு நன்றிகள் தோழர்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 4. சிறைக்குள் விதாயகர். அதிலும் இரண்டாவது படத்தில் பாவமாய் குனிந்து பார்ப்பது போலிருக்கிறது.

  நிறைய விவரங்களுடன் இந்த வாரப் பதிவு. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. படங்களும் தகவல்களும் அருமை! அதிலும் முக்கியமாக, அந்த பாதங்களும் அதன் மேல் மலர்களும் மிக அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 6. படங்கள் பதிவு விரிவான விளக்கம் அனைத்தும் நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 7. அருமையான பதிவு ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. அருமையான பகிர்வு! நிறைய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. விளக்கவுரையும் படங்களும் அருமை நண்பரே தமிழ் மணம் 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. வணக்கம்
  படங்களுடன் விளக்கம் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.
  த.ம7

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 11. வடஇந்திய கோவில் தரிசனம் ..அருமை அண்ணா ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 12. படங்களும் தகவல்களும் அருமை...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 13. தேவியை நன்கு தரிசனம் செய்தோம். அருமையான புகைப்படங்கள். மனதிற்கு நிறைவாக இருந்தன.
  எனது ஆய்வு பற்றிய பதிவைக்காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. "நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கள் வழியோடி
  புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்! தொல்லுலகில்
  நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லோர்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை!"

  உங்கள் புண்ணியம் கொஞ்சம் எங்களுக்கும் கிடைக்காமலாப் போகும். (ஆமா, தொடர்ந்து புண்ணிய யாத்திரையை படிக்கம்லா)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 15. வஜ்ரேஷ்வரி தேவி கோவிலில் உள்ள ஓவியங்கள் நேரில் பார்ப்பதுபோல் இருக்கிறது தங்களின் கை வண்ணத்தால்! வாழ்த்துக்கள். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. என்ன அழகான ஊர் - மலைகளும் கோவிலுமாக பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 17. இங்கெல்லாம் போனதே இல்லை. நல்ல தகவல்கள். மதுரை மீனாக்ஷி கோயிலிலும் காலணிகளைக் கொடுக்கும் இடத்தில் கை கழுவ நீர் வைத்திருக்கிறார்கள். நாம் காலணியைக் கொடுத்துவிட்டு வந்ததும், அவங்களாவே கைகளில் நீரை ஊற்றுகின்றனர். இங்கே ஶ்ரீரங்கத்தில் ஒவ்வொரு முறையும் தவிப்பாக இருக்கும். உள்ளே வந்து கையைக் கழுவிய பின்னரே நிம்மதியா இருக்கும். :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 18. சிறையில் இருக்கும் ஆனைமுகத்தான்! சிரிப்பை வரவழைக்கிறார். பதிவு அருமையாகவும் அழகாகவும், பல்வேறு புதுப்புது செய்திகளுடனும் தொடர்வதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 19. என்ன அழகான இடம்? மலைகளும், கோயில்களும்....படங்கள் அருமை....விவரணம் உட்பட

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 20. இந்தப் பக்கங்களில் எல்லாம் தேவி வழிபாடுதான் அதிகமா இருக்கு. சாக்தம்!

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஹிமாச்சலில் தான் அதிக சக்தி பீடங்கள் என்று நினைவு. இப்பயணத்திலேயே நான்கு ஷக்தி பீடங்கள் பார்த்தோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....