எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, May 20, 2015

குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 17

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

ஐஸ்க்ரீம் சாப்பிடலாமே!

சாமுண்டா தேவியின் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வர அங்கே இருந்த பக்தர்கள் பலரும் வேறொரு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அங்கே என்ன சன்னதி இருக்கிறது என்று தெரியாமலே நாங்களும் சென்றோம். அங்கு சென்ற பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஒரு சிறிய குகைவாயில் மூன்று அல்லது மூன்றரை அடி தான் இருக்கும். சிறுவர்கள் உள்ளே நுழைவதென்றால் கூட சற்றே குனிந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.

மலைப்பாதையில் இருந்து கோவில் அருகே உள்ள பாலம்

இப்படி இருக்கையில் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உள்ளே செல்ல வேண்டுமானால்உள்ளே சில படிகள் இருக்க, அதில் ஒவ்வொரு படிகளாக உட்கார்ந்து தான் செல்ல வேண்டும். உள்ளே ஒருவர் செல்ல வெளியே ஒருவர் இருக்கும் இடைவெளியில் வெளியே வர வேண்டும். ஒவ்வொருவராகத் தான் உள்ளே செல்ல முடியும். படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து உள்ளே நுழைந்தால், கோவிலில் இரண்டு பூஜாரி அங்கே தரையில், பக்கத்துக்கு ஒருவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


 குகைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லாததால் சென்ற வருடம் அமர்நாத்-ல் உருவான பனி லிங்கம் படம் இங்கே!

கடைசிப் படிக்கட்டின் அருகில் நானும் அமர்ந்து கொண்டு, லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். பெரும்பாலான வட இந்திய கோவில்களில் கடவுள் சிலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமே கடவுள் சிலைக்கும் பூக்களைப் போட்டு தொட்டு வணங்கலாம். இங்கேயும் அப்படியே. சில நிமிடங்கள் இன்னும் அங்கே இருக்கலாம் என்றால் படியில் அமர்ந்திருக்கும் அடுத்தவருக்கு தரிசனம் கிடைப்பது அரிது. அதனால் வெளியே வர ஆயத்தமானேன்.

கோவில் வாசலிலிருந்து சிகரங்களின் ஒரு புகைப்படம்

உள்ளே நுழையும்போது படிக்கட்டுகளில் உட்கார்ந்து உட்கார்ந்து செல்ல முடிந்தாலும் வெளியேறும் போது கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வர வேண்டியிருந்தது. பொதுவாக அடங்காத உடம்பு கூட இங்கே வேறு வழியின்றி கூனிக் குறுகி தான் வெளியேற வேண்டியிருக்கிறது! வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன்! குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும்! தினம் தினம் அப்படி அமர்ந்து சென்று தவழ்ந்து வருவது பழகி இருக்கும் என்பதால் சுலபமாக இருக்கும் போல!

குழாய்க்குள் இருக்கும் ஐஸ்க்ரீம் - கத்தியால் வெட்டி கொடுக்க வேண்டியது தான்!

இப்படி சாமுண்டா தேவி மற்றும் குகைக்குள் இருந்த சிவன் ஆகிய இருவரையும் தரிசித்து, குழுவில் உள்ள அனைவரும் மெதுவாக கோவில் வளாகத்தில் இருக்கும் சிலைகளையும் காட்சிகளையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். பானேர் [பான் கங்கா என்றும் சொல்வதுண்டு!] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும்! பனி உருகி தான் இங்கே தண்ணீர் வர வேண்டும் போல.

இந்த கோவில் அருகிலேயே ஒரு மயானமும் இருக்கிறது என்பதை ஹிமாச்சலப் பிரதேச நண்பர் ஒருவர் சொன்னார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 22 கிராமங்களுக்கும் இங்கே தான் மயானம் என்றும் சிவபெருமான் தான் இங்கே முக்கியமான கடவுள் என்றும் சொன்னார். சிவ பெருமானை இங்கே வழிபடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் இங்கே சிவராத்திரி சமயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வார்கள் என்றும் மேளாக்கள் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல்கள் தந்தார்.

கோவில் சற்றே பெரிய கோவில் என்பதாலும், நவராத்திரி சமயங்களிலும், விழாக் காலங்களிலும் நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் தடுப்புக் கம்பிகள் வைத்து நிறைய தூரத்திற்கு பாதை அமைத்திருக்கிறார்கள். அவற்றின் வழியே வெளியே வந்தோம். கோவில் வளாகத்திற்குள்ளாகவே ஒருவர் ஒரு நீண்ட குழாய் போன்ற அமைப்பில் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருக்க என்னவென்று கேட்டேன்.

இயற்கை முறையில் தயாரிக்கும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, சரி சாப்பிட்டுப் பார்க்கலாம் என தரச் சொன்னேன். ஒரு சிறிய இலையில் கொஞ்சம் எடுத்து வைத்து அதைத் துண்டுகளாகப் போட்டு எடுத்து சாப்பிட இன்னுமொரு இலையையே ஸ்பூனாகச் செய்து கொடுத்தார். பத்து ரூபாய்க்கு சில துண்டுகள்இரண்டு மூன்று இலைகளில் வாங்கி அனைவரும் சுவைத்துப் பார்த்தோம்நன்றாகவே இருந்தது.

ஐஸ்க்ரீம் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க!

இப்படி ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தபோதே அங்கு இன்னுமொரு அனுபவமும், சில புகைப்படங்கள் எடுக்க ஒரு வாய்ப்பும் கிடைத்தது! அப்படி என்ன அனுபவம்? அதைப் புகைப்படம் எடுக்க என்ன கஷ்டப் பட வேண்டியிருந்தது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாமா!  

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

32 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. உங்களால் எனக்கும் தரிசனம் கிடைச்சுக்கிட்டே இருக்கு! நான் குள்ளம் என்றாலும் குண்டு. உருண்டுதான் உள்ளே போகணும் போல!

  குல்ஃபி மாதிரி இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. உட்கார்ந்து உட்கார்ந்து சென்று விடலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. இனிய தரிசனம் செய்வித்து - ஐஸ்கிரீமும் தந்தமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. ஐஸ்க்ரீம் சூப்பர் போல, தங்கள் கண்கள் கண்டதை நாங்கள் காண பதிவில் தொடர்வது அருமை. புகைப்படங்கள் அத்துனையும் அருமை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 5. இட்லி ஐஸ் க்ரீம்! பனி மூடிய சிகரங்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. ஐஸ்க்ரீம் போன்ற ஜில்லென்று ஓர் பதிவு. மிகவும் அருமை. :) பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. குனிந்து சென்று வணங்குவது நமக்கு கடினமாக இருக்கலாம். நான் முன்பே எனது பதிவில் சொன்னதுபோல் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இப்படி குனிந்து செல்வது சுலபமாயிருக்கும்.
  படங்கள் அருமை. இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டுள்ள பனிப்பாகு பார்க்க கேசரி போல் இருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அரசியல்வாதிகளுக்கு, அதுவும் தமிழக அரசியல்வாதிகளுக்கு வெகு சுலபம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. வணக்கம்
  ஐயா
  எங்களையும் அழைத்து சென்றது போல ஒரு உணர்வு... அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 9. ஐஸ்க்ரீம் செய்தது தானே ,அதென்ன இயற்கை:)

  ReplyDelete
  Replies
  1. தயாரித்தது என்றாலும், அதை Deep Freezer-ல் வைக்காமல் பனிக் கட்டிகளுக்குள் புதைத்து வைத்து பதப்படுத்துவார்கள். அதனால் இயற்கை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. திருவண்ணாமலையில் கிரி வலம் வரும் வழியில் ஒரு இடத்தில் இப்படித்தான் குறுகி உள்ளே போய் அப்படியே வெளியே வர வேண்டும்.

  ஐஸ்க்ரீம் கேஸரி மாதிரி இருக்கு. பனி சிகரங்கள் அழகாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 11. வழக்கம் போலவே தங்களது இப்பதிவும் அழகான புகைப்படங்களுடன் அருமையான செய்திகளுடன் இருந்தது. நாங்களும் சில துண்டுகளைச் சாப்பிட்டது போல இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 12. கட்டுரை அருமை சார்... ஐஸ்க்ரீம் பார்க்க அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 13. பதிவு ரொம்ப அருமை. நல்ல வாய்ப்பு உங்களுக்கு. நல்லா உபயோகப் படுத்திக்கிறீங்க.

  பனில, பனிக்குழைவு சாப்பிட நல்லா இருந்ததா? படம் ரொம்ப அருமை. சாப்பிடும் ஆசையை வரவழைத்தது.

  ReplyDelete
  Replies
  1. சாப்பிடவும் நன்றாகவே இருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 14. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 15. லிங்க வடிவில் இறைவனைத் தரிசிக்க வைத்ததில் மிக்க நன்றி வெங்கட் ஜி! (சிவ - குடும்பத்தை வணங்குபவர்கள் நாங்கள் ..) தங்களின் மூலம் பல தலங்களை தரிசிக்க முடிகின்றது....மிக்க மிக்க நன்றி !

  அட இயற்கை ஐஸ்க்ரீம்! சூப்பரா இருக்கும் போல...தங்கள் படத்தைக் கண்டதும்...நாவில் நீர் ஊற ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்....தொடர்கின்றோம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 16. பனிலிங்கம் நேரில் பார்க்கவில்லை எனினும் தங்கள் வர்ணணையில் ரசித்து மகிழ்ந்தேன்! இயற்கை ஐஸ்கிரிம் பார்க்க ஜோராக இருக்கிறது! சுவை எப்படியோ? நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....