வெள்ளி, 16 செப்டம்பர், 2016

கோர்சம் கோரா திருவிழா – ஓர் பயணம்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 49

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


சுத்தமான தண்ணீர் – பார்க்கும்போதே பொங்கும் மகிழ்ச்சி....

தவாங்க் நகருக்கு வந்து தங்குமிடத்தில் நல்ல உறக்கம் – பயண அலுப்பில் இரவு முழுவதும் உணர்வே இல்லாத தூக்கம் – விடியலில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற நினைவுடன் தூங்கி விட்டோம்.  முதல் நாள் இரவு இங்கி பிங்கி பாங்கி கொண்டாடியவர்களும் எழுந்து விட்டார்கள். தங்குமிட உணவுக்கூடத்திலிருந்து அறைக்குத் தேநீர்/கட்டஞ்சாய் வர, குளிருக்கு இதமாய் இருந்தது. மார்ச் மாதம் என்றாலும் நல்ல குளிர் தெரிந்தது. பொதுவாக ஆறு மாதங்களுக்கு மேல் இங்கே குளிர் தான்!


இடையிடையே நீர்வீழ்ச்சி....


பாதையோரத்தில் வீடு....


தவாங்க் நகரில் இருக்கும் மலையாள நண்பர் ஜார்ஜ், முதல் நாள் இரவே, அவ்விடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ZEMITHONG எனும் இடம் பற்றியும் அங்கே அச்சமயத்தில் நடந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களின் திருவிழா பற்றியும் சொல்லி, அங்கே சென்று வாருங்கள் – நல்லதொரு இடம், நல்ல அனுபவம் கிடைக்கும் என்று சொல்ல, அங்கே செல்வதற்காக அனைவரும் தயாரானோம். அனைவரும் தயாரான பிறகு உணவுக் கூடத்திற்குச் சென்று காலை உணவு சாப்பிட்டோம் – பராட்டா/சப்பாத்தி/ப்ரெட் என ஒரு Buffet.


Tawang – Zemithang வரைபடம்...
இணையத்திலிருந்து....


பாதை அமைக்கும் பணியில்...

சாப்பிட்டு முடித்தபின்னர் தவாங்க் நகரிலிருந்து ZEMITHONG நோக்கிப் புறப்பட்டோம்.  தவாங்க் நகரிலிருந்து வெளியே வந்த பிறகு சாலைகள் மிகவும் மோசமாகவே இருந்தது. மலைகளை வெட்டி பாதைகள்/இரும்புப் பாலங்கள் அமைத்து இருந்தார்கள் – பெரும்பாலும் மண் சாலைகள் தான் – சாலைக்கு ஒரு புறத்தில் கீழே நோக்கினால் ஒரு நதி சலசலவென ஓடிக்கொண்டிருக்கிறது. பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளையும் காண முடிந்தது. சாலையில் பயணிக்கும்போது புழுதி மட்டும் பறக்காமல் இருந்திருந்தால் மிகவும் ரசித்துப் பயணிக்க முடியும். 


பயணித்த பாதை....


மலைப்பாதை – ஒரு தொலைநோக்குப் பார்வை....

பயணித்தபடியே புகைப்படங்கள் எடுத்தோம் – எந்த இடத்திலும் வண்டியை நிறுத்தினால் எதிரே வரும் வாகனம் இடித்து விடும் அபாயம் இருந்தது. சற்றே அகலமான பாதை இருந்தால் அங்கே நிறுத்தி சில புகைப்படங்கள் எடுத்தோம் – என்றாலும் பாதையில் எந்தவித பக்கவாட்டுத் தடுப்பும் இல்லாததால் ஓரத்தில் சென்று நிற்பதே ஒரு வித கிலியை உண்டாக்கியது. ஓரிரு இடங்களிலிருந்து பார்க்கும்போது மலையும் மலையின் மேலே வளைவு நெளிவான சாலைகளும் பார்ப்பதற்கு ஏதோ மலைப்பாம்பு படுத்திருப்பது போலத் தோற்றம் அளித்தது!


ஆறு – இன்னுமொரு கோணத்தில்....


சாலையோரத்தில் புகைப்படம் எடுக்க நின்றபோது....

என்னதான் பாதை மோசமானதாக இருந்தாலும், பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறும், சுத்தமான, கலங்கலில்லாத தண்ணீரும், அந்த ஆற்றுப் படுகையில் கிடக்கும் பெரிய பெரிய கூழாங்கற்களும், ஆங்காங்கே மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் நீர்வீழ்ச்சிகளும், நிலவிய அமைதியும் மிகவும் பிடித்திருந்தது. பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, ஓட்டுனர் ஷம்புவிடம் நாங்கள் சொன்ன ஒரு விஷயம் – ஆற்றில் இறங்குவதற்கு ஏதாவது இடம் இருந்தால் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்பது தான்!


ஆபத்தான பாதை....


பாறையை உடைத்து பாதை....

தெரியாத இடம், மலைப்பாதை, கீழ்நோக்கி மலைகளில் எந்தவித பொருட்களும் இல்லாமல் இறங்குவது சற்றே ஆபத்தானது என்பதையும், விலங்குகள்/விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்பதால் அப்படி இறங்குவது சரியல்ல என்பதையும் ஷம்பு சொல்ல, நாங்களும் அதில் இருக்கும் உண்மையை அரைமனதோடு ஒப்புக் கொண்டோம். அந்த ஆற்று நீரில் குளிக்கவும், நீரைக்குடிக்கவும் அத்தனை ஆசை – பார்க்கும்போதே அந்த ஆசையை நிறைவேற்றச் சொல்லி மனது கட்டளையிட்டபடியே இருந்தது!


பாதையில் பார்த்த ஒரு வித்தியாசமான பூ/மொட்டு....


இரும்பினால் பாலங்கள்....

நாங்கள் சென்ற அன்று தான், மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவின் கடைசி நாள் என்பதால் வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தன. இந்தத் திருவிழாவிற்கு அருணாச்சலப் பிரதேசம் மட்டுமல்ல அண்டை நாடான திபெத்-திலிருந்தும் நிறைய மக்கள் வருகிறார்கள். அன்றைய தினம் அவ்விடத்திற்குச் சென்று அங்கே அமைக்கப்பட்டிருக்கும் கோவிலில் [Gorsam Stupa] பிரதக்ஷிணம் வருவதோடு, மதகுருவிடம் [14th Thegtse Rinpoche] ஆசிகளும் பெறுகிறார்கள்.  இப்போதைய மதகுரு - 14th Thegtse Rinpoche மூன்று நாட்களும் உரையாற்றுவதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


வரவேற்பு வளைவுகள்....

சாலைப்பயணத்தில் பல்வேறு காட்சிகளைக் கண்டு ரசித்தபடியே ZEMITHONG அருகே வந்து விட்டோம். சாலையின் பக்கங்களில்  வரிசையாக நிறைய வாகனங்கள் நின்று கொண்டிருக்க, ஷம்பு மற்ற ஓட்டுனர்களிடம் பேசி ஏன் இங்கேயே நிறுத்திவிட்டீர்கள் எனக்கேட்டு பதில் கிடைக்க, ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே இதற்கு மேல் செல்ல முடியாது என்று சொல்லிவிட்டார். என்ன காரணம் என்று கேட்க, தூரத்தில் இருக்கும் புகைமண்டலத்தினைக் காண்பித்து, மலையைக் கொளுத்தி இருக்கிறார்கள் என்றும், இதற்கு மேல் வாகனத்தில் பயணிக்க முடியாது நடந்து தான் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார்!


கோர்சம் ஸ்தூபா...

என்னது, மலையையே கொளுத்தி விட்டார்களா? எரிமலை தெரியும், இது என்ன எரியும் மலை என்ற குழப்பத்துடன் வாகனத்திலிருந்து இறங்கி எங்கள் கேமராக்களுடன் நடக்க ஆரம்பித்தோம்.  எங்களைச் சுற்றிலும் நிறைய மக்களைக் காண முடிந்தது.  அதிகமானவர்கள் அவர்கள் தான் – எங்களைப் போல வெகுசிலரே அந்த பழங்குடியினர் அல்ல! நாங்கள் அங்கே Odd men out! ஏன் மலையைக் கொளுத்தி விட்டார்கள், அவ்விடத்தில் என்னென்ன அனுபவங்கள் கிடைத்தன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி....

20 கருத்துகள்:

 1. பாதைகளே இல்லாத அல்லது இப்போதுதான் பாதை போட்டுக்கொண்டு இருக்கும் இடங்களுக்குக் கூட சென்று வந்திருக்கிறீர்கள். பாதைகளைப் பார்த்தாலே பயமாயிருக்கிறது. இந்தப் பாதையில் ஒரு பயணித்த சிலர் வீடியோ எடுத்துப் போட்டிருக்கிறார்களோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதைகள் பயமுறுத்தும் வகையில் தான் இருந்தன.... சிலர் காணொளிகள் எடுத்து இணையத்தில் பகிர்ந்து இருப்பது நானும் பார்த்தேன்... நாங்கள் எடுக்காததால் இங்கே இணைக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மலைப் பாதைகள் பயத்தை அல்லவா உண்டாக்குகின்றன
  அருமையான அனுபவம் ஐயா
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. நல்ல அனுபவங்களை தந்த பயணம்.
  படங்கள் அருமை.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. நீங்கள் பயணித்தது காரில் அங்கு வரும் மற்றவர் எப்படி வருகிறார்கள் நல்ல அனுபவம்தான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலர் தங்களது சொந்த வாகனங்களிலோ, அல்லது வாடகை வாகனங்களிலோ வருகிறார்கள். மிகவும் குறைந்த அளவு பேருந்துகளும் திருவிழா சமயத்தில் இயங்குகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 7. ஆகா மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறதே உங்களது இந்தப் பகுதிப் பயணம்.......படங்கள் மனதைக் கட்டிப் போட்டுவிட்டன. ஆறும் அந்த வளைந்து செல்லும் மலைப்பாதை படமும்!! அழகு!!! பாதைகள் பயமுறுத்தும்படி இருந்தாலும் செல்ல வேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்துகிறது. ஆற்றைப் பார்த்தவுடன் நீங்கள் குளித்தீர்களா என்று கேட்க நினைத்து உங்கள் பதில் பார்த்ததும் புரிந்துவிட்டது. நானும் அழகான பளிந்து போல ஆற்றைக் கண்டால் இறங்கிவிடுவதுண்டு...மிகவும் ரசித்து பயணிப்பது போல வாசித்தாயிற்று..அடுத்த பகுதிக்குக் காத்திருக்கின்றோம்.

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 8. மலைப்பாதை பார்க்கவே பயமா இருக்கு அண்ணா...
  என்னது மலையைக் கொளுத்திட்டாங்களா?
  அடுத்த பதிவுக்கு ஆவலாய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 9. வந்தாச்சா தில்லிக்கு! இங்கே வரவே இல்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி திரும்பியாச்ச்... வர இயலவில்லை. அடுத்த முறை வரும்போது வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. பதில்கள்
  1. முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....