வியாழன், 1 செப்டம்பர், 2016

திராங்கில் மோமோஸ் – மதிய உணவு

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 43

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


போம்டிலாவிலிருந்து தவாங் நோக்கி....
பக்கச் சுவர் இல்லா பாதைகள்....


போம்டிலாவிலிருந்து தவாங் நோக்கி....
ஒருவளைவில் இருந்து எதிர்புற சாலையும் அதில் வரும் வாகனமும்....


சென்ற பகுதியில் போம்டிலாவில் நண்பருக்கு குளிர்கால உடைகள் வாங்கிக் கொண்டது, கடை வீதி, அங்கே கடை வைத்திருந்த மூதாட்டி, அவரைப் படம் பிடிக்க முயன்றது பற்றியெல்லாம் எழுதி இருந்தேன். சிறிது நேரம் அங்கே இருந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டோம்.  அதன் பிறகு அந்த மலைப்பாதையில் வெகு தூரத்திற்கு பயணித்தோம். வழியில் சில சமயங்களில் நிறைய நேரம் எந்த வித வாகனமோ, கிராமங்களோ, மனிதர்களோ சந்திக்கவே இல்லை! மலை, மலை, எங்கும் மலை. அதில் ஒரு பாதை வளைந்து நெளிந்து செல்ல, அந்த பாதையில் எங்கள் வண்டி மட்டும் சென்று கொண்டிருந்தது.


புழுதி நிறைந்த பாதை....

ஓட்டுனர் ஷம்பு, லாவகமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். பெரும்பாலான இடங்களில் பாதை மோசமாகவே இருந்தது. வண்டி செல்லச் செல்ல, பாதையிலிருந்து புழுதிப் புயல் புறப்பட்டது. அதுவும் எதிர் புறத்திலிருந்து ஏதேனும் வண்டி எங்கள் வண்டியைக் கடந்தால் இரண்டு வண்டிக்குள்ளும் புழுதி சேர்ந்து விடும் அளவுக்கு! மலையை ரசித்தபடி இருந்தாலும், இப்படி ஏதேனும் வண்டி எதிரே வந்தால், அனைத்து கண்ணாடி ஜன்னல்களையும் மூடுவது எங்கள் வேலையாக இருந்தது! வண்டி கடந்த பின் மீண்டும் திறப்போம். திறப்பதும், மூடுவதுமே வேலை!


பணிக்குச் செல்லும் ஒரு குடும்பம்....


விளையாடும் குழந்தைகள்....


சாலையில் பணிபுரியும் பெண்கள்....

வழியில் சில சின்னச் சின்ன கிராமங்கள் – அவற்றில் சாலையோரத்தில் மிகச் சில வீடுகள், வீடுகளின் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளும், சாலையில் பணி புரியும் சாலைப் பணியாளர்கள் என்று சிலரையும் சந்திக்க முடிந்தது. குளிர் பிரதேசம் என்பதால் வேலை செய்யும்போதும், விளையாடும்போதும் குளிர் கால உடைகளை அணிந்திருக்கிறார்கள். குழந்தைகள் வாகனங்கள் கடக்கையில் கையை அசைத்து மகிழ்ச்சியோடு நம்மைப் பார்த்து புன்னகை புரிய, பதிலுக்கு நாங்களும் கையசைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம். 


NRC - YAK

இந்தப் பகுதிகளில் YAK என அழைக்கப்படும் கவரி எருதுகள் நிறையவே உண்டு. மலைப்பகுதிகளில் தன்னிச்சையாக திரியும் இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு அரசு நிறுவனமும் நாங்கள் சென்ற வழியில் இருந்தது. National Research Centre – Yak என்ற பெயர் தாங்கி இருக்கும் இந்த இடத்தில் கவரி எருது பற்றிய ஆராய்ச்சி செய்கிறார்கள். இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் இங்கே செல்ல வேண்டுமென்றால் அதற்கான அனுமதிகள் வாங்க வேண்டும். இதையும் ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றினால் நல்ல வரவேற்பு இருக்கலாம். ஆனால்.... :(


சாலையோர வீடுகள்....


பயணித்த பாதையில்....

தொடர்ந்து மலைப்பாதையில், அதுவும் சீரான பாதையாக இல்லாத, மேடு பள்ளங்களோடு இருக்கும் பாதையில் தொடர்ந்து பயணிக்க, வயிறு என்னைக் கொஞ்சம் கவனி என்று கூச்சல் போட ஆரம்பித்து இருந்தது. காலையில் கொஞ்சமாக சாப்பிட்டது. சிங்ஷூ தங்குமிட பணியாளர்கள் மதிய உணவு கட்டித் தருகிறேன் என்று சொன்னபோது வழியில் பார்த்துக் கொள்கிறோம் எனச் சொன்னது நினைவுக்கு வந்தது. வழியில் ஜங்க் எனும் இடத்தில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அருணாச்சலில் வசிக்கும் கேரள நண்பர். ஆனால் அந்த இடம் சென்று சேர இன்னும் அதிக நேரம் பிடிக்கும் என்று ஓட்டுனர் ஷம்பு சொல்ல, வேறு ஏதாவது கிடைக்குமா என்று அவரிடம் கேட்டோம்.


சாலையோர உணவகம்...

வழியில் உணவு என்றால் கிடைப்பது கடினம் என்று சொல்லி, கிழக்கு காமெங் மாவட்டத்தின் திராங் பகுதியில் ஒரு சிறிய கிராமம் – மோகன் காம்ப் என்று அழைக்கும் இடத்தில் சில கடைகள் உண்டு என்றும் அங்கே மோமோஸ், மற்றும் தூக்பா ஆகியவை கிடைக்கும் என்றும் சொன்னார்.  மோமோஸ் கேள்விப்பட்டிருந்தாலும் தூக்பா என்பது கருப்பா சிவப்பா என்று கூட தெரியாது எங்களுக்கு! ஹிந்தியில் தூக் என்றால் எச்சில் என்பது வேறு நினைவுக்கு வந்து கொஞ்சம் படுத்தியது! தூக்பா என்பது சிக்கன் நூடுல்ஸ் சூப்!


மோமோஸ்....

சில நிமிடங்கள் பயணித்த பிறகு அந்த மோகன் காம்ப் எனும் இடமும் வந்தது. அங்கே வழக்கமாக நிறுத்தும் இடம் என்று ஒரு பெண்ணின் கடையில் – ஹோட்டல் சோகீ என்ற உணவகத்தின் முன் நிறுத்தினார். அந்தப் பெண்ணின் வீடும் அது தான். பின் பகுதியில் வீடு, முன்னர் கடையும், உணவகமும்.  ஓட்டுனர் ஷம்பு நேரே வீட்டிற்குள் சென்று விட, நாங்கள் முன்பகுதியில் அமர்ந்து கொண்டோம். அந்தப் பெண்ணிடம், சாப்பிட ஏதாவது குடும்மா என்று கேட்க, வெஜ் மோமோஸ் மட்டுமே இருக்கிறது என்று சொல்ல, அக்குரல் தேவாமிர்தமாக காதில் விழுந்தது. மோமோஸ் பற்றி முன்னரே எனது பக்கத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். அதைப் படிக்க விரும்பினால் இங்கே படிக்கலாம்!


நண்பருடன் உணவகத்தின் வாசலில்...


உணவகத்தின் வாசலில் இருந்த ஒரு சிறுமி....

தில்லியில் மோமோஸ் விற்கும் சாலையோரக் கடைகள் நிறையவே உண்டு என்றாலும், அவ்விடத்திலிருந்து வரும் ஒரு வித வீச்சம் வயிற்றைக் கலக்கும் விதமாக இருக்கும் என்பதால் அந்த நாள் வரை சாப்பிட்டதே இல்லை. இன்று வேறு வழியில்லை. வெஜ் மோமோஸ் தவிர வேறொன்றும் இல்லை – அதுவும் நான்கு ப்ளேட் மட்டுமே இருந்தது. ஒரு ப்ளேட்டில் எட்டு மோமோஸ்! மொத்தம் 32 மோமோஸ் – தொட்டுக்கொள்ள சிவப்பு மிளகாய்ச் சட்னி.  நாங்களோ ஆறு பேர்! பகிர்ந்து உண்டோம். பசி சமயத்தில் ருசி பார்க்காது சாப்பிட்டு முடித்தோம். கொஞ்சம் தேநீரும் குடித்து வயிறு நிரப்பினோம். கள்ளிச்செடிகளும் பூக்களும்....

கடையில் பிஸ்கெட் பாக்கெட், சாக்லேட்டுகள் இருக்க, அவற்றையும் கொஞ்சம் வாங்கி வைத்துக் கொண்டோம். மீண்டும் வழியில் பசித்தால் சாப்பிட வசதியாக இருக்குமே என்று வாங்கி வைத்துக் கொண்டோம். அந்தப் பெண்ணின் கடை/வீடு பற்றி இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். அவர் நிறைய கள்ளிச் செடி வகைகளை தொட்டியில் வளர்க்கிறார். அதில் சில பூக்களும்! மோமோஸ் சூடு செய்யும் வரை சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அருணாச்சல் பிரதேசத்தில் நிறையவே ராணுவ வீரர்களின் நடமாட்டம் உண்டு. இங்கேயும் சில வீரர்கள் தொலைதொடர்புக்காக கம்பிவடம் இழுத்துக் கொண்டிருந்தார்கள்.


உணவகத்தின் அருகே சாலை....

வயிறு கொஞ்சம் நிரம்ப, மனதிலும் மகிழ்ச்சி நிரம்பியது. பயணத்தினைத் தொடர்ந்தோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். மிகவும் அருமையான இடம் அது.... ஆஹா என்ன அருமையான, காணக்கிடைக்காத காட்சி அது......

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

26 கருத்துகள்:

 1. ஏழு சகோதரி மாநிலங்கள் பார்ப்பதற்கு ஒன்று போலவே ...மலைகளும் ,பூக்களும் ,மக்களும் !
  இந்த மாநிலங்களில் சுற்றுலாவை ஊக்கப்படுத்த ,கல்கத்தா வரை விமானப் பயணம் போன்ற சலுகைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு உண்டு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மத்திய அரசு ஊழியர்களுக்கு LTC சலுகைகள் உண்டு என்றாலும் இதைப் பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவு. தில்லியிலிருந்து தவாங் செல்பவர்கள் மிகவும் குறைவு. ஷில்லாங், மிசோரம் போன்ற இடங்களுக்கே அதிகம் செல்வார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 2. இந்த அழகையெல்லாம் எப்போது பார்க்கப் போகின்றோம் என்றிருக்கின்றது..

  அழகான படங்கள்.. நேர்முக வர்ணனை சிறப்பு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் காலம் கைகூடி வரட்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. இடங்களெல்லாம் நல்லா இருக்கு. மோமோஸ் படம்தான், நீங்க ரொம்ப பசியா இருக்கும்போது கண்ணைமூடிட்டு சாப்பிட்ட மாதிரி இருக்கு. மைதாவில பண்றது கெடுதியில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மைதா கெடுதி தான். ஆனாலும் பசி சமயத்தில் எதுவும் தோன்றவில்லை. ஒன்றிரண்டு முறை மட்டுமே இதைச் சாப்பிட வேண்டியிருந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. புழுதி பற்க்கும் வீதிகள்
  பாறை மலைகள் எனப் பார்க்க
  செழுமையற்றப் பகுதியாகத்தான்
  இருக்கும் போலத்தான் இருக்கிறது
  அவர்களுக்கு வாழ்வாதாரம் எதுவாக
  இருக்கச் சாத்தியம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிதாய் அங்கே வாழ்வாதாரம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி!

   நீக்கு
 5. அழகை எல்லாம் தாங்கள் கண்ணாரக் காண
  தங்களால் நாங்களும் காண
  நன்றி ஐயா
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. படங்கள் அழகு! பார்க்கையிலேயே இந்த பகுதிக்கு நாமும் செல்ல மாட்டோமா? என்று ஏங்க வைக்கிறது! தொடர்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 7. மோமோஸ் பார்க்கக் கொழுக்கட்டை போலக் கவர்ச்சியாகத் தெரிகிறது. சுவை எப்படி இருக்குமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவை அப்படி ஒன்றும் நன்றாக இல்லை... :( வேறு வழியில்லாமல் தான் சாப்பிட்டோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. த.ம "சுத்துதே சுத்துதே பூமி... " என்று பாடாத குறையாய் சுற்றிக் கொண்டிருக்கிறது. வாக்கு விழுந்ததும்தான் டேபை மூடுவேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல சமயங்களில் இப்படித்தான் படுத்துகிறது த.ம. !:)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 9. அருமையான புகைப்படங்கள், மோமோஸைச் சுவைத்தது ஞாபகத்திற்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   நீக்கு
 11. ஒவ்வொரு பதிவையும் படிக்கும் போது அங்கெல்லாம் போகவில்லையே எனும் ஏக்கம் அதிகரிக்கிறது உங்கள் எழுத்திலும் புகைப்படங்களிலும் பயணிக்கிறோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏக்கம் தேவையில்லை. நானும் பார்க்காத நிறைய இடங்கள் உண்டு...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 12. புழுதி பறக்கும் சாலை....
  பூக்கள்
  குழந்தைகள்
  மோமோஸ்

  ஆஹா அருமை...
  நாங்களும் பயணித்ததும் போல ஒரு உணர்வு அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 13. மோமோஸ் சாப்பிட்டதுண்டு. நன்றாக இருந்தவையும் உண்டு...இல்லாதவையும் உண்டு. நாங்கள் மணாலியில் ஆப்பிள் கார்னிவல் ஃபெஸ்டிவல் நடந்த போது சென்றிருந்தோம். அப்போது எல்லாமே ஆப்பிள் வைத்துத்தான் செய்திருந்தார்கள் வித விதமான ஆப்பிள் அங்கு மோமோஸ் நன்றாக இருந்தது. ஆனால் தில்லியில் நன்றாக இல்லை. வீட்டில் இதே மோமோஸ் நாம் செய்யும் பூர்ணம் வைத்துச் செய்ததுண்டு...

  அருமையான படங்கள் ஜி. இடங்களைப் பார்க்கும் போது மனம் ஈர்க்கிறது. காட்டுச் செடிகளும் பூக்களும் அழகு. இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்லும் போது தோன்றுவது இம்மக்களுக்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது? எப்படிக் கொண்டு வருகிறார்கள் சமைக்கிறார்கள் அருகில் கடைகள் எதுவுமே இல்லையே....குழந்தைகள் பள்ளிக்கு எப்படிச் செல்ல முடியும்? பள்ளிகள் உண்டா என்றெல்லாம் தோன்றும்.

  அருமையான பயணம் ஜி. தொடர்கின்றோம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆப்பிள் மோமோஸ்... ஹிமாச்சல் பிரதேசத்தில் எல்லாவற்றிலும் ஆப்பிள் - அதுவும் சீசனில் சென்றுவிட்டால் ஆப்பிள் தான் எல்லாவற்றிலும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....