புதன், 31 ஆகஸ்ட், 2016

கண்ணுக்கு மை அழகு – கார்த்திகை தீபம் – கல்லுரல்

முகப் புத்தகத்தில் நான் – 12

கண்ணுக்கு மை அழகு! – 27 ஆகஸ்ட் 2016சமீபத்தில் எனது பெரியம்மாவின் வீட்டிற்குச் சென்றபோது அங்கே மீன் வடிவத்தில் இந்த கண் மை வைக்கும் சிமிழ் பார்த்ததும் அதனை எனது மொபைல் கேமராவில் படம் பிடித்துக் கொண்டேன். இந்த மாதிரி கண் மைச் சிமிழ்கள் இப்போதெல்லாம் யாரும் பயன்படுத்துவது இல்லை. Eyetex கண் மை தான் பலரும் பயன்படுத்துவார்கள்.  அதற்கு முன்னர், எங்கள் அம்மாவின், பாட்டி காலத்தில் இந்த கண்மையை வீட்டிலேயே தயாரிப்பார்களாம். அதற்காகவே கேமரா ரூம் என அழைக்கப்படும் இருட்டறையில் தான் தயாரிப்பார்கள் என்று சொல்வார்கள்!

இப்போதெல்லாம் வீட்டில் தயாரிப்பது இல்லை, Eyetex கண் மையும் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் மாறி பென்சில் வடிவத்தில் வந்து விட்டது! கண் மையே இல்லாத போது கண் மை வைத்துக் கொள்ள பயன்படும் இந்தச் சிமிழ் எங்கே! இந்தப் படத்தினை முக நூலில் பகிர்ந்து “இது என்ன தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்என்று கேட்டபோது பலரும் சரியான விடையைச் சொல்லி விட்டார்கள்....  புன்னகை புரிய வைக்கும் சில பதில்களும் வந்தன!

தமிழர்கள் மட்டுமல்ல, மலையாள நண்பர், ஜார்க்கண்ட் மாநில நண்பர் என இந்தியாவின் வேறு வேறு மூலையிலும் இந்த வடிவில் கண் மைச் சிமிழ் பயன்பட்டிருக்கிறது என்ற தகவலும் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது!

இது என்ன? – 28 ஆகஸ்ட் 2016மேலுள்ள படத்தினைப் பாருங்கள்....  இந்த படத்தினை காலையில் பகிர்ந்து இது என்ன என்று தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.  மாலைக்குள் பல பதில்கள் – பெரும்பாலானவை உணவு சம்பந்தமான பதில்களே! அனைத்தும் ஸ்வாரஸ்யமான பதில்கள் – குமுட்டி, அபிஷேகத் தீர்த்தம் வைக்கும் பாத்திரம், பிரசாதம் வைக்கும் பாத்திரம், வெற்றிலை துப்பும் பாத்திரம், ஹூக்கா, வெந்நீர் போடும் பாத்திரம், தண்ணீர் ஜக், காப்பிக்கொட்டை அரைக்கும் இயந்திரம், காப்பி டிகாக்‌ஷன் ஃபில்டர், மூலிகை Hair Oil குவளை, ஸ்டீமர், Water Heater, தீர்த்தக் குவளை, இட்லி புட்டு ஸ்டீமர், காஞ்சிபுரம் குடலை இட்லி செய்யும் பாத்திரம், கொழுக்கட்டை செய்யும் பாத்திரம் – இப்படி பலப்பல பதில்களை யோசித்து சொன்னார்கள்!

நண்பர் ஒருவர், கூகிளாண்டவரிடம் கூட கேட்டு விட்டாராம், யோவ்வ்...  போய்ய்யா நீ... நானும் கூகுள் முழுசும் தேடிட்டேன்... Titanic கப்பல் கூட கெடச்சுடுச்சு....என்று வெறுத்துப் போய் பதில் எழுதினார்.  மாலை வரை இப்படி பல விதமான சுவையான பதில்கள்..... 

அது சரி, உண்மையா என்னதான்யா அது? அதைச் சொல்லவே மாட்டியா? “விடை எப்ப போடூவீங்க்!என்றும் ஒரு நண்பர் கேட்டிருந்தார்.  விடையை மாலையில் எழுதினேன்.  அந்த விடை இது தான்.....

திருப்பராய்த்துறையில் இருக்கும் பராய்த்துறை நாதர் – பசும்பொன் மயிலாம்பிகை கோவிலில் வைத்திருந்த பொருள் இது. சுமார் 100-150 லிட்டர் எண்ணை பிடிக்கும் அளவில் பெரிய பாத்திரம். கார்த்திகை தீபம் சமயத்தில் இதில் எண்ணை நிரப்பி, அதில் எட்டு/பதினாறு முழ வேட்டியை திரியாகப் பயன்படுத்தி, இதன் பக்கவாட்டில் இருக்கும் துளை வழியே திரி வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்க, அந்த தீபத்தினை ஏற்றுவார்கள். பல மணி நேரம் நின்று எரியும் இந்த விளக்கு!

இந்த மாதிரி பொருட்கள் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வருத்தமான விஷயம்!

கல்லுரல் [ஆட்டுக்கல்] – 30 ஆகஸ்ட் 2016இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவரங்கத்து வீதி ஒன்றில் நடந்து கொண்டிருந்தபோது சாலையோர சாக்கடை அருகில் மாடு ஒன்று நின்று கழுநீர் குடித்துக் கொண்டிருந்தது. எதில் விட்டு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது ஒரு கல்லுரல்....   சற்றே தொலைவு நடந்த பிறகு, மற்றுமொரு வீதியில் ஒரு வீடை இடித்துப் புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் தரையில் பதித்திருந்த கல்லுரலை பெயர்த்து குப்பையோடு குப்பையாக போட்டிருந்தார்கள்.

இந்த இரண்டையும் பார்த்தபோது கொஞ்சம் வருத்தமாகவே இருந்தது. எத்தனை முறை இந்த கல்லுரல் பயன்படுத்தி இட்லி, தோசைக்கு மாவு அரைத்திருப்பார்கள், எத்தனை முறை உலக்கை வைத்து இதில் பொருட்களை இடித்துப் பொடித்திருப்பார்கள். நமது உணவுக்காக இதனை எவ்வளவு பயன்படுத்தி இருந்தாலும், இப்போதெல்லாம் இதைப் பயன்படுத்த யாருமே தயாராக இல்லை....  மின்சாரத்தில் இயங்கும் கிரைண்டர்கள் வந்தபிறகு இந்த கல்லுரல்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்றாலும், இப்படி வீதியில் எறிந்து விட்டதைப் பார்க்கும்போது கொஞ்சம் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. முதலாவது கொஞ்சம் நிம்மதி – ஏதோ ஒன்றுக்குப் பயன்படுத்துகிறார்களே!

இன்னமும் வீட்டில் இந்த மாதிரி கல்லுரல்களைப் பயன்படுத்துபவர்கள் யாரும் உண்டா? இந்தக் கல்லுரலில் அரைத்து இட்லி, தோசை செய்தால் எத்தனை ருசி...... ஒரே ஒருவர் மட்டும் இன்னமும் இந்த மாதிரி கல்லுரலைப் பயன்படுத்துவதாக எழுதி இருந்தார் – அதனால் மகிழ்ச்சி!

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 கருத்துகள்:

 1. அதெல்லாம் கனாக் காலங்களாகி விட்டன..

  கல்லுரலின் நிலையைக் கண்டதும் கண்கள் கலங்கின..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 2. பழையன கழிதலும் புதியன புகுதலும் தானே கால மாற்றம் ?
  திருமணத்தின் போது அம்மி மிதிக்கக் கூட மினி சைஸ் அம்மிதான் இப்போ :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மினி சைஸ் அம்மி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 3. என் நண்பன் அமேரிக்காவுக்கு வந்திருந்த அம்மா விரும்பினாள் என்று ஒரு கல்லுரலை இங்கேயிருந்து எடுத்துப் போய் இருந்தான் அதைச் சுமக்க கூடவே நானும் இருந்தேன் என்பதால் இது ஆதெண்டிக் செய்தி. எங்கள் வீட்டுக் கல்லுரலை மொட்டை மாடியில் போட்டிருக்கிறோம் நானும் கல்லுரலில் மாவாட்டி இருக்கிறேன் என் தாய்க்கு உதவியாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் மாவாட்டியதுண்டு. பொடி இடித்ததுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 4. முக நூலில் நானும் பார்த்தேன். முதல் படத்துக்கு விடை எனக்கே தெரியும். இரண்டாவது படத்துக்கான விடையை இங்குதான் தெரிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. எங்கள் குமரி மாவட்டத்தில் மைலாடி என்ற இடத்தில் இன்னும் நெல் குத்தும் கல்லுரலும், ஆட்டுக்கல் புதியதாக கிடைக்கும். மேலும் ஒரு சிலர் புதிய வீடு கட்டினாலும் ஒரு மூலையில் ஆட்டுரலையும், அம்மிக்கல்லையும் பதிக்கும் வழக்கத்தை விட்டு விடவில்லை.

  (செய்யறதையெல்லாம் செய்துவிட்டு ஆட்டுரல் மாதிரி அசையாம கல்லுளி மங்கனாட்டம் இருக்கிறதப்பாரு என்று இன்றும் அடிக்கடி காதில் விழுகிறதே! (பக்கத்து வீட்டிலிருந்துதான்).


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பக்கத்து வீட்டிலிருந்தா... அது சரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   நீக்கு
 6. கண்மை டப்பா - கலையழகு. இதுமாதிரி நான் நிறைய எவர்சில்வரில் 70களில் பார்த்திருக்கிறேன். இப்போல்லாம் பென்சில் காலம். இரண்டாவது, டீத்தண்ணீர் சூடுபண்ணிவைத்திருக்கும் பாத்திரம் (சரியான பெயர் மறந்துவிட்டது) என்று நினைத்தேன். ஆட்டுக்கல் போய்விட்டதே என்று வருத்தமா? (அப்படி இல்லை என்று நினைக்கிறேன். வருடங்களாக உபயோகத்தில் இருந்த பொருள் உபயோகமற்று வீதியில் வீசும்போது ஏற்படும் வருத்தம் என்றுதான் நான் நினைக்கிறேன்). இன்னும் பல வருடங்களில் வீட்டில் மாவு அரைப்பது என்பதே அபூர்வமாகிவிடும். கடையில் மாவு வாங்கும் வழக்கம் பொதுவாகிவிடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது கெட்டில் என நினைத்தீர்கள் போலும்! கலையழகு கண்மை டப்பா.. எவர்சிலவரிலும், வெள்ளியிலும் பார்த்ததுண்டு.....

   வீதியில் வீசி விட்டார்களே என்ற ஒரு ஆதங்கம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 7. முகநூல் பக்கத்திலும் பார்த்தேன்.

  நானும் கோவில் தினம் கோவில் போகும் போது தூக்கி வெளியில் போட்ட ஆட்டுக்கல்களையும், அவற்றை திருப்பி போட்டு அதை ஆசனமாய் பயன்படுத்திக் கொண்டு இருப்பதையும் முகநூலில் பகிர்ந்து இருந்தேன்.

  திருக்கார்த்திகை விளக்கு அழகு.
  மைகூடு அம்மா வெள்ளியில் மீன் மாதிரி வைத்து இருந்தார்கள், சாந்து சிரட்டை வைத்து இருந்தார்கள். (கொட்டாகச்சி) வெற்றிலை பெட்டி. பாக்குவெட்டி, சுண்ணாம்பு டப்பா, தலை சிக்கு எடுக்க சிணுக்குரி எல்லாம் கல்யாணத்திற்கு வெள்ளியில் கொடுக்க வேண்டும் என் அம்மா காலத்தில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. ஆம் நம்மை விட்டு எத்தனையோ பொருட்கள் நகர்ந்து போய்க் கொண்டு இருக்கின்றன தான்....தம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலவற்றை இழந்து கொண்டு தான் இருக்கிறோம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 9. மிக அருமையான தகவல் வெங்கட்.
  மைச்சிமிழ் வெள்ளியில் இன்னும் சின்னதாக வரும்.
  அந்த முனையை வைத்து அம்மா கண்களின் ஓரத்தில் குருவிவால் நீட்டி விடுவார்கள்.
  அது வீட்டில் மை தயாரிக்கும் காலம்.
  கார்த்திகை தீப விளக்குப் பாத்திரம் மிக அபூர்வம். பார்த்ததே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கார்த்திகை தீப விளக்குப் பாத்திரம் - நானும் இங்கே மட்டுமே பார்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 10. கல்லுரல்களைப் பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவோர் யாருமில்லை ஐயா
  யாருமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. அது புட்டு செய்யும் பாத்திரம் . உதிரிப் புட்டு செய்யும் பாத்திரம் . சின்ன வயதில் பார்த்திருக்கிறேன் சைடு வழியா நீராவி வரும் . அந்த நீராவி வரும் இடத்திற்கு கொஞ்சம் தள்ளி உள்ளங்கையை விளையாண்ட ஞாபகம் உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் படம் பற்றியும், அது என்ன என்பதைப் பற்றியும் பதிவிலேயே பதில் சொல்லி இருக்கிறேன் - கார்த்திகை தீபம் சமயத்தில் கோவில்களில் இதில் விளக்கு ஏற்றுவார்கள் என.... படிக்க விட்டுப் போய்விட்டது என நினைக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 12. அம்மா வீட்டில் அம்மி, ஆட்டாங்கல் (இப்புடிதான் எங்கூருப்பக்கம் சொல்லுவோம்! :)) இரண்டுமே பதித்துதான் வீடு கட்டியிருக்காங்க. இட்லி-தோசைக்கு அரைக்காட்டியும், குழம்புக்கு-சட்னிக்கு அரைப்பதுண்டு. :) இங்கே எல்லாம் கிடைத்தால் சந்தோஷமா வாங்கி வீட்டில் வைச்சுப்பேன், ஊரிலிருந்து எப்படி எடுத்து வரதுன்னு தெரிலையே!!

  மைச்சிமிழும் கார்த்திகை தீபமும் அழகாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் இருந்தால் மார்க்கமுண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி....

   நீக்கு
 13. எங்க வீட்டுல கல்லுரலும் அம்மியும் உண்டு! கரண்ட் கட் ஆகும் சமயம் யூஸ் பண்ணுவாங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. காலமாற்றம் பலதை குப்பையாக வீசிவிட்டது நினைவில் மட்டுமே வாழ்கின்றது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 16. இவை எல்லாம் எங்கள் வீட்டில் இப்போதும் உண்டு...அம்மியில் தான் சிலவற்றிற்கு இப்போதும் அரைப்பதுண்டு.

  கீதா: நான் இருப்பது அடுக்குமாடிக் குடியிருப்பு என்றாலும் சிறிய உரல்கள், கல்சட்டி, பித்தளைப் பாத்திரங்கள் சிறிய அம்மி , மண்பானை என்று உண்டு. படங்களில் பார்ப்பவற்றை அட வீட்டிற்கு எடுத்து வந்துவிடலாமோ என்று தோன்றுகிறது ஜி...அருமை..ஆனால் நாம் நிறைய இழந்துவிட்டோம் தான் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....