இந்த வார செய்தி:
இறந்தது மனிதன்
மட்டுமல்ல.... மனிதமும் தான்....
நேற்று
தலைநகர் தில்லியின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த ஒரு விபத்து. இதன் காணொளி CCTV-ல் பதிவு
ஆகியிருக்கிறது. அதை நேற்று முழுவதும் பல ஊடகங்கள் தொடர்ந்து காண்பித்தபடியே
இருந்தார்கள். இரவுப் பணி முடித்து சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு
மனிதன் மீது சிறிய டெம்போ மோதுகிறது. அந்த மனிதன் அடிபட்டு துடித்துக்
கொண்டிருக்கிறார். டெம்போ ஓட்டுனர் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு ஏதாவது ஆகிவிட்டதா
என பார்த்து விட்டு, தலையில் கைவைத்துக் கொண்டு சில நொடிகளில் அங்கிருந்து வண்டியை
எடுத்துக் கொண்டு புறப்பட்டு விடுகிறார். அடிபட்ட மனிதர் துடித்துக் கொண்டே
இருக்கிறார்.
அந்த
மனிதர் துடித்தபடி இருக்க, அவரைத் தாண்டி பல வாகனங்களும் – ஒரு போலீஸ் வாகனம்
உட்பட, சென்று கொண்டிருக்கிறது. ரிக்ஷா
செலுத்தி வந்த ஒருவர் ரிக்ஷாவினை நிறுத்தி, கீழே கிடந்தவரின் அலைபேசியை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து நடையைக் கட்டுகிறார்.
யாருமே அந்த மனிதரைக் கண்டு கொள்ளவே இல்லை. நீண்ட நேரம் கழித்து போலீஸ் வாகனம் வந்து அவரை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது “Brought
Dead “ என மருத்துவமனை சான்றிதழ்
தருகிறது.....
கடந்து
சென்ற பல வாகனங்களில் ஒன்றையாவது நிறுத்தி தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றிருந்தால் அந்த மனிதர் உயிர் பிழைத்திருக்கக் கூடும் – அவருக்காகவே
வீட்டில் காத்திருந்தவர்களின் வாழ்வும் சீராகச் சென்றிருக்கக்கூடும்.... ஆனால் அது
நடக்கவில்லை!
இப்படி
அடிபட்டு கிடப்பவர்களைக் கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்
காவல்துறையினர் கேள்வி கேட்டே படுத்துவார்கள் என்பதாலேயே பலரும் உதவி செய்வதில்லை
என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறை இம்மாதிரி நடக்கும்போதும் மனது
பதறுகிறது....
இந்த வார முகப்புத்தக இற்றை:
அனாதைகள் தினமும் பிறந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்...
நம்முள் இருக்கும் அன்னை தெரசா'வை தான் கொன்றுவிட்டோம்...
இந்த வார விளம்பரம்:
நமக்கு வணக்கம் சொல்லும் எத்தனையோ பேருக்கு பதில்
வணக்கம் சொல்வதைக் கூட விரும்பாதவர்கள் தான் இன்று நிறைய பேர். இந்த காணொளி சொல்லும் விஷயமும் அது தான்.
பாருங்களேன்.
இந்த
வார ட்வீட்:
எல்லாப் பெண்களுக்கும் #மன்மோகன்சிங் மாதிரி அமைதியான
ஒருத்தரைக் கட்டிக்கணும்தான் ஆசை.... ஆனா கிடைக்கிறது என்னவோ #மோதி மாதிரி ஊர்
சுத்தற பையன் தான்!
இந்த வார ஆசை:
சமீபத்தில் சென்ற பயணம் ஒன்றில் எடுத்த படம் இது. இந்தப்
படம் இன்று பார்த்தபோது எனக்குள்ளும் ஆசை.... இன்னிக்கு எப்படியாவது ஸ்டீல் கைப்பிடிகளில்
சறுக்கிட்டு போகணும்! ஆனாலும் வயசும் ”யாராவது
பார்த்துட்டா” எனும் எண்ணமும்
தடுக்கிறதே!.....
இந்த வார குறுஞ்செய்தி:
வாழ்வில் வெற்றி பெற, மற்றவர்கள் உங்களை
விமர்சிக்கும்போது உங்கள் பலங்களை நினைத்துக் கொள்ளுங்கள்..... மற்றவர்கள் உங்களை
புகழும் போது உங்கள் பலவீனங்களை நினைத்துக் கொள்ளுங்கள்.....
இந்த வார ரசித்த பாடல்:
1985-ஆம் வருடம் வெளிவந்த மலையாள படத்திலிருந்து ஒரு
பாடல். ஆனால் இக்காணொளியில் இருப்பது படத்தில்
பாடிய சித்ரா அல்ல.... வேறொருவர். இதுவும்
நன்றாகவே இருக்கிறது. கேளுங்களேன்....
படித்ததில் பிடித்தது:
யூனிஃபார்ம்....
எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிஃபார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிஃபார்ம்
எடுங்கப்பா."
தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல
இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வேனா" கடுப்பானான் மாரி.
"ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ்
எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை.
வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு
நின்றிருந்தான்.
'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்டர் எல்லாம் இறக்கிட்டுப் போறேன். மாரிமாமா வந்தா
சொல்லுங்க. சாயங்காலத்துக்குள்ள, கொடி பேனர்ல்லாம் கட்டச்
சொன்னாரு வட்டச் செயலாளர். இந்தாக்கா, பசைக்காக, சணலுக்காக நூறு ரூபாய் கொடுத்து விட்டாரு. மாமா கைல
கொடுத்திருங்க."
அஞ்சலை பார்த்தாள். பல வண்ணங்களில், பளபளவென்று கொடித் துணிகள். படபடவென்று இரண்டு கொடித்
துணிகளை உருவினாள்.
"தேவி. வா டைலர் கடைக்கு, உனக்கு புது யூனிஃபார்ம் ரெடி" என்று
புறப்பட்டாள்.
-
கதை இணையத்திலிருந்து.... படம் நான் எடுத்ததிலிருந்து....
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
அத்தனையும் அருமையான பதிவு. அதிலும் அந்த முதல் பதிவு. மனதை வேதனைப் படுத்தியது.
பதிலளிநீக்குத ம 2
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.
நீக்குஅனைத்தும் அருமை, ஒரு புல் மீள்ஸ் சாப்பிட்டது போன்ற உணர்வு, வாழ்த்துகள்!
பதிலளிநீக்குநானும் டில்லி சம்பவக் காணொலியைப் பார்த்தேன், அதிர்ச்சியாக இருந்தது. மனிதநேயம் சில நேரங்களில் செத்துவிட்டதாகவே தோன்றுகிறது. பிறருக்குச் சொல்லும் போதனைகள் ஒருபுறமிருக்க, இது போன்ற சம்பவங்கள் நம் கண்முன் நிகழ்ந்தால் நாம் என்ன செய்திருப்போம் என்று பலமுறை எண்ணியுள்ளேன். மனதின் ஏதோ ஒரு மூலையில் இன்னும் ஈரம் இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்த வார விளம்பரம் சிறப்பு, என்னால் முடிந்த வரை நான் பழகும் அனைத்து தரப்பினரிடத்திலும் வணக்கமும் நன்றியும் கூறுவேன். எனது ஐந்து வயது புதல்வனுக்கும் அதையே சொல்லிக் கொடுக்கிறேன்.
இந்த வார ஸ்வீட்டும் ஆசையும் நச்.. அதுவும் மன்மோகன்சிங் நல்ல நகைச்சுவை!!
பாராட்டுகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள் மொழிவர்மன்.
நீக்குசுபாஷ் நகர் சம்பவத்தில் மனம் தடுக்கி விழுந்து விட்டது. காலை அந்தச் சம்பவம் பற்றி படித்ததிலிருந்து மனம் ஏதேதோ எண்ணுகிறது. பாதுகாப்பற்ற உலகில் வந்து மாட்டிக்கொண்ட உணர்வு.
பதிலளிநீக்குஇந்த வார ஆசை சிரிக்க வைத்து மனத்தை சமப்படுத்தியது.
இந்த வார ஆசை - நம்மில் பலருக்கும் உண்டு இல்லையா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
எதைச் சொல்ல எதை விட அத்தனையும் அருமை. ஒவ்வொரு செய்திக்கும்பின்னூட்டமிட்டால் அதுவே நீண்டுவிடும் பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குமனிதம் மறத்துதான் போய்விட்டது! கடைசி கதை! ட்விட் ரசிக்க வைத்தது! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குமனிதம் மரித்துப் போய் விட்டது அண்ணா...
பதிலளிநீக்குகாணொளிகள் அருமை...
கதை சூப்பர்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஅந்தக் காணொளி நேற்றே வந்தது.. காண்பதற்குத் தயக்கமாக இருந்தது.. பரிதாபத்துக்குரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்..
பதிலளிநீக்குஎல்லா ஊடகங்களிலும் அந்தக் காணொளியை மீண்டும் மீண்டும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!