செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மரண அடி – அடை மழை – கந்த்ராஜ் எலுமிச்சை

முகப் புத்தகத்தில் நான் – 9

மரண அடி – 30 ஜூலை 2016சென்ற வார சனிக்கிழமை, அலுவலகத்திலிருந்து தில்ஷாத் கார்டன் சென்றிருந்தேன். மெட்ரோவிலிருந்து இறங்கி தில்ஷாத் காலனி செல்ல வேண்டும். சற்றே தொலைவு என்றாலும் பெரும்பாலும் நடந்தே செல்வது வழக்கம். ஆனாலும் அன்று ஏனோ ஒரு சோம்பேறித்தனம் – கொஞ்சம் அலுப்பும்! ரிக்‌ஷாவில் ஏறிக்கொண்டு செல்ல வேண்டிய இடத்தினைச் சொல்ல, பதினைந்து ரூபாய் வேண்டும் என்றார். பத்து ரூபாய் தான் என்றாலும் பேரம் பேசாது ஏறிக்கொண்டேன்.

வழியே தில்ஷாத் கார்டன் பகுதியின் சுடுகாடு வரும். பலமுறை அங்கே சென்றிருக்கிறேன் – மேலே சென்றவர்களை கொண்டு சென்றிருக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்..... அதன் எதிரே வாகன நெரிசல், மக்கள் கூட்டம், கூடவே படார் படார் என சத்தம். சாலையின் இப்புறத்திலிருந்து அந்தப் பக்கம் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. நான் சென்ற ரிக்‌ஷாவும் நின்றது. இப்புறத்திலிருந்து அப்புறம் பலரும் ஓடி என்ன நடக்கிறது எனப் பார்க்கிறார்கள்.

ரிக்‌ஷாவில் அமர்ந்தபடியே என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பு எனக்குள்ளும்...... என்னைப் போலவே பலருக்கும் இந்தத் துடிப்பு – சாலையில் ஏதாவது கூட்டம் எனில் என்ன நடந்தது எனத் தெரிந்து கொள்ளும் ஒரு குறுகுறுப்பு அனைவருக்கும் உண்டல்லவா!

படார் படார் என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது. நடுநடுவே மக்கள் தலைகளுக்கு மேலே ஒரு மூங்கில் மேலே சென்று கீழே இறங்குவது தெரிகிறது – அந்த மூங்கில் அடித்து அடித்து உருமாறி இருக்கிறது – சில செதில்கள் ஒவ்வொரு முறையும் பறப்பதையும் பார்க்க முடிந்தது. ஆனால் அடிப்பது யார், அடிக்கப்படுவது எது என்ற ஒன்றும் புலப்படவில்லை. பேருந்துகளின் ஹாரன் ஓசையில் வேறு எதுவும் கேட்கவில்லை.

இந்தப் பக்க வாகனங்கள் கொஞ்சம் நகர நான் சென்ற ரிக்‌ஷா முன்னேறியது – பக்கத்தில் எதிர்புறத்திலிருந்து நடந்து வந்த ஒருவர் சொல்லிக் கொண்டு செல்கிறார் – ஏதோ சண்டை – ஈமக்கடன்களுக்கு மூங்கில் பாடை விற்கும் கடையிலிருந்து ஒரு மூங்கில் எடுத்து ஒரு ஆளை அடி அடி என இன்னுமொரு ஆள் அடித்துக் கொண்டிருக்கிறான் – அடிபடும் ஆள் சாலையில் கிடக்கிறான் – யாரும் தடுக்கவோ, உதவி செய்யவோ வரவில்லை என்று சொன்னபடிச் செல்கிறார். இத்தனைக்கும் சண்டை நடக்கும் சாலையில் அத்தனை கூட்டம்....  அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்.....

யாருக்கும் அங்கே சென்று அடிப்பவனைத் தடுப்பதற்கோ, அடிவாங்குபவனைக் காப்பாற்றுவதற்கோ மனதில்லை – அவரவர்களுக்கு அவரவர் வேலை...... எனக்கு மனது அடித்துக் கொண்டாலும், ஏனோ ரிக்‌ஷாவிலிருந்து இறங்கிச் சென்று அடிபடுபவரைக் காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றவில்லை.

எதிர்புறத்தில் சுடுகாடு – சற்று அருகிலேயே காவல் நிலையமும் உண்டு. அடிவாங்கிய மனிதன் யாரோ, அடித்தவன் எதற்கு அடித்தானோ என்ற எண்ணங்களுடன் நானும் ரிக்‌ஷாவில் பயணித்தேன். என்றாலும், ஒவ்வொரு அடியும் மரண அடியாக இறங்கியது இன்னமும் நினைவில்......  எதுவும் செய்யாத எனது நிலையும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது....

அடை மழை – 31 ஜூலை 2016கடந்த சில நாட்களாக தில்லி மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் அடை மழை. தில்லியை அடுத்த குருகிராம் [பழைய குர்காவ்ன் – சமீபத்தில் பேர் மாற்றம் செய்யப்பட்டது!] நெடுஞ்சாலைகளில் வெள்ளம். நீண்ட வாகன நெரிசல் – பல வாகனங்களில் பெட்ரோல் தீர்ந்துவிட, அங்கங்கே நிறுத்தி விட்டு நடந்தே சென்றார்கள் – லாரிகளை நிறுத்தி அதன் மேல் ஓட்டுனரும், உதவியாளரும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள் – எப்படியும் வாகன நெரிசல் தீர அதிக நேரம் எடுக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம்.

தில்லி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தொடர் மழை பெய்துவிட்டாலே சாலைகளில் நீர்த்தேக்கமும், வாகன நெரிசலும் ஏற்படுவது மிகச் சாதாரணமாக நடப்பது.  வருமுன் காப்போம் என்பது தெரியாத மக்கள் நாங்கள். குப்பைகளை சாலைகளில் போட்டுவிட்டு கடந்தபடியே இருப்போம். அவை அனைத்தும் சாலை ஓர சாக்கடைகளில் சேர்ந்து அடைத்துக்கொள்ள மழைக்காலத்திற்கு முன் பேருக்கு சுத்தம் செய்வார்கள். குப்பைகளை எடுத்து சாலை ஓரத்தில் போட்டுச் செல்ல, சில பல நாட்களுக்குப் பிறகு அவற்றை எடுத்துச் செல்ல வாகனம் வரும்! அதற்குள் அடிக்கும் காற்றிலும், மழை வந்துவிட்டாலும், எல்லா குப்பைகளும் மீண்டும் சாலை ஓரத்தில் இருக்கும் சாக்கடைப் பாதைகளை அடைத்துக்கொள்ள சாலைகள் வெள்ளகாடுகளாக காட்சி அளிக்கும்!

பெங்களூரு சாலைகளில் வெள்ளி அன்று நதி நீர் உள்ளே வர, பலர் மீன் பிடித்துக் கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது! தில்லியிலும் அப்படி நடக்க வாய்ப்பில்லை – யமுனை நதியில் இருந்த மீன்கள் அனைத்தும் அதில் கலக்கும் நச்சு காரணமாக இறந்திருக்கும்! யமுனா கருப்பாக அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது!

இந்தியாவின் பல மாநிலங்களில் அடை மழை – பல இடங்களில் ஆறுகளும், நதிகளும் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன – அவற்றின் பாதையில் கட்டப்பட்ட வீடுகளையும், கட்டிடங்களையும் இடித்து அடித்துச் செல்லுகிறது – உத்திராகண்ட் மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல சுற்றுலாப் பயணிகள் மலைச்சரிவுகள் காரணமாக ஆங்காங்கே மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் ஒருவரின் உறவினர் கூட கடந்த இரண்டு நாட்களாக பத்ரிநாத் செல்லும் பாதையில் ஒரே இடத்தில் மாட்டிக்கொண்டு நின்று கொண்டிருக்கிறார்.

சென்ற வியாழன் அன்று மாலையில் நனைந்தபடியே வீட்டிற்கு நடந்து வந்தேன். மழையில் நனைவது பிடித்த விஷயம் என்று முன்னரே ஒரு முறை எழுதி இருக்கிறேன்.....  என்னதான் மழை பிடித்தாலும் தொடர்ந்து மழை பெய்து சாலைகள் நதியாக மாறினால் கொஞ்சம் கஷ்டம் தான் இல்லையா!
  
கந்த்ராஜ் எலுமிச்சை - 1 ஆகஸ்ட் 2016இரண்டு நாட்களுக்கு முன்னர் அலுவலகத்திலிருந்து திரும்புகையில் பெங்காலி நண்பரிடமிருந்து அழைப்பு – அவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி இருந்ததை நினைவு படுத்தினார். சரி சென்று வரலாம் என அங்கே சென்ற போது ஒரு பெரிய அளவு எலுமிச்சம் பழம் பார்க்க முடிந்தது. நாம் பார்த்திருக்கும் எலுமிச்சம்பழங்களை விட சற்றே பெரியது, கொஞ்சம் நீள வாக்கிலும் இருந்தது. வித்தியாசமாக இருக்கவே நண்பரிடம் விசாரித்தேன்.

அது வங்க தேசத்தில் கிடைக்கும் ஒரு எலுமிச்சை எனவும், அதீதமான வாசனை உடையது என்றும் சொல்லி, அதன் பெயரையும் சொன்னார் – கந்த்ராஜ் எலுமிச்சை – வாசனையின் ராஜா! கையில் எடுத்து முகர்ந்து பார்க்கச் சொல்ல, ஆமாம் நண்பர்களே, அப்படி ஒரு அசாதியான வாசம். அதை அரிசி சாதத்தில் சில சொட்டுகள் பிழிந்து சாப்பிட ரொம்பவே சுவையாக இருக்கும் என்று சொன்னார்கள்.

பல மருத்துவ குணங்களையும் கொண்டதாம் இந்த கந்த்ராஜ் எலுமிச்சை. ரத்தத்தினை சுத்திகரிக்கும் குணம் கொண்டது என்றும், ஜலதோஷம், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து குணம் அளிக்கும் என்றும் அந்த எலுமிச்சையின் குணங்களைச் சொல்லிக் கொண்டிருக்க, நானும் அவ்வப்போது அதை முகர்ந்து கொண்டே இருந்தேன்.  கொல்கத்தாவிலிருந்து சமீபத்தில் அவர் வீட்டிற்கு வந்தவர் ஒரே ஒரு கந்த்ராஜ் எலுமிச்சையைக் கொடுத்துச் சென்றதைச் சொன்னார்.

அவர் மனைவியிடம் அந்த ஒற்றை எலுமிச்சையை பாதியாக்கி எனக்கும் தரும்படி வங்க மொழியில் சொல்ல, நான் மறுத்துவிட்டு வந்தேன்.  அவர்களுக்குக் கிடைத்ததே ஒன்று, அதிலும் பாதியை வாங்கிக் கொண்டு வர மனம் ஒப்பவில்லை. அடுத்த முறை கிடைத்தால் கொடுங்கள் போதும் என்று சொல்லி விட்டேன்.....

இந்த எலுமிச்சை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கேள்விப்பட்டிருந்தால் சொல்லுங்களேன்...

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

18 கருத்துகள்:

 1. யாருக்கும் அங்கே சென்று அடிப்பவனைத் தடுப்பதற்கோ, அடிவாங்குபவனைக் காப்பாற்றுவதற்கோ மனதில்லை

  உண்மைதான் ஐயா இந்த அவசர யுகத்தில் இப்படித்தான்நடக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. 1) அந்த மாதிரியான கொடூரங்களையெல்லாம் சந்தித்ததில்லை..

  2) அங்கு இங்கு என்று எந்த மூலையிலும் இதே தான்.. சரியாகும் என்று நம்புவதற்கில்லை.

  3) கந்த்ராஜ் லிம்பு - என்று இங்கே வங்கதேசிகள் புகழக் கேட்டிருக்கின்றேன்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. அருமையான பகிர்வு. எல்லா விஷயங்களும் படிக்க நன்றாக உள்ளன. ஆனால் அந்த மரண அடியை நினைத்து மனது உறுத்துகிறத. பல சமயங்களில் நா ம் helpless people ஆக இருக்கிறோம். வங்க தேசத்தின் எலுமிச்சை ரொம்ப சுவாரஸ்யம்
  விஜயராகவன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 5. மனிதம் செத்துக்கொண்டே இருக்கின்றது ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. மூன்றும் அருமை...
  கந்தராஜ் எலுமிச்சையா என்று தெரியவில்லை... ஆனால் இங்கு இதே போல பெரிய சைஸ் எலுமிச்சைகள் விற்கிறார்கள்... இனி கடைக்குப் போகும்போது நுகர்ந்து பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 7. மூங்கிலால் அடியா கொடுமையாக இருக்கிறதே..பயங்கரமாக வலிக்குமே. மூங்கில் பிரம்பால் அடித்தால் அவ்வளவுதான்...பழைய காலத்தில் ஆசிரியர்கள் இதை வைத்துத்தான் அடிப்பதுண்டு...

  சென்னையைப் போலத்தன் எல்லா நகரங்களும் போல மழைக்காலத்தில் ஒரு நாட்டின் தலைநகரம் எப்படி இருக்கிறது??!!

  கந்த்ராஜ் எலுமிச்சை ....கொழுமிச்சை போல இருக்கிறதே..கொழுமிச்சையோ..?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 8. அதியமான் ஔவைக்கு நெல்லிக் கனி கொடுத்ததைப் போல் உமக்குக் கிடைக்கைருந்த எலுமிச்சைக் கனியை ஏன் வேண்டாம் என்றீர்கள் பாதி என்பதாலேயா அடி உதைகளை நாம் பார்த்து நகருவோம் தடுத்து நிறுத்த மன உறுதி இல்லை. தடுத்தால் தர்ம அடி நமக்கும் விழலாம் என்னும்பயமோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாதி என்பதால் அல்ல, அவர்களிடம் இருப்பதே ஒன்று என்பதால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 9. மரண அடி கலங்க வைக்கிறது! மழை அதிகமானால் உபத்திரவம்தான்! தமிழகத்தில் இந்த மாதிரி பெரிய எலுமிச்சை பார்த்து இருக்கிறேன்! அதன் பெயர் தற்போது நினைவில் இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....