எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 14, 2016

தெருக் காட்சிகள் – புகைப்படங்கள்


புவனேஷ்வர் நகரில் இப்படி நிறைய கடைகள் - ஒரு பானையில் உணவு 


சூரியனார் கோவில், கோனார்க் - பாதையும் கடைகளும், மனிதர்களும்...


ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது எனது வலைப்பூவினை தொடர்ந்து வாசிப்பவர்கள் அறிந்த விஷயம் தான். எனக்குத் தெரிந்த அளவில் புகைப்படங்கள் எடுத்து அதனை என் பதிவுகளுக்குப் பயன்படுத்தி வந்தாலும், எந்த போட்டியிலும், குறிப்பாக புகைப்படங்களுக்கான போட்டிகள் எதிலும், கலந்து கொள்வது இல்லை. என்னை விடச் சிறப்பாக புகைப்படங்கள் எடுப்பவர்கள் இருக்கையில், என்னுடைய புகைப்படங்களை அனுப்பி வைப்பது சரியாக வராது என்ற நினைப்பில் அனுப்புவதில்லை.


பூரி ஜகன்னாத் கோவிலில் படைக்கப்பட்ட அரிசிச் சோறு - பானையோடு பயணிக்கிறது! நான் நடந்தே போயிடறேன்..... என்னை இப்படி கட்டி வச்சு அசையமுடியாம பண்ணிட்டிகளே!

போட்டிகள் அறிவிக்கும் போது அத்தளங்களுக்குச் சென்று, படங்களை பார்த்து, ரசித்து, போட்டியில் பங்கு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லி வருவதோடு சரி. நான் எடுத்த புகைப்படங்களை அனுப்பி வைப்பது வெகு அரிது. ஆனாலும் தலைப்புக்குத் தகுந்த புகைப்படங்கள் நான் எடுத்து இருக்கிறேனா என்று யோசிப்பதும் தேடுவதும் எப்போதும் நடக்கும் விஷயம்.


ஜோத், ஹிமாச்சலப் பிரதேசத்தின் சாலை ஒன்றில்....எங்களைத் தாண்டிப் போகாதே....  அப்புறம் நடக்கறதே வேற!

PiT Photography in Tamil வலைப்பூவில் இந்த மாதத்தின் தலைப்பாக அறிவித்திருப்பது Street Photography”.  எப்போதும் போலவே இந்த தலைப்புக்குத் தகுந்த புகைப்படங்கள் எடுத்திருக்கிறேனா என்று யோசித்தேன்.  பெரும்பாலும் சாலைகளில் வாகனத்தில் பயணிக்கும் போது புகைப்படம் எடுப்பது கொஞ்சம் கடினம்.  நடந்து செல்லும் போது எடுக்கலாம் என்றால் எப்போதும் கையில் கேமரா இருப்பதில்லை – கேமரா வசதி இருக்கும் அலைபேசி சமீபத்தில் தான் வாங்கி இருக்கிறேன் – என்றாலும் எப்போதும் என்னோடு எடுத்துப் போவதில்லை.


சாலையோர கரும்புச் சாறு விற்கும் கடை....

நேற்று கூட அலுவலகம் செல்லும் போது பார்த்த காட்சி – சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக, புது தில்லியின் புது தில்லி மாநகராட்சி ஊழியர்கள் சாலை சந்திப்புகளில் இருக்கும் ரவுண்டானா விளக்குக் கம்பங்களில் இரண்டிரண்டு கொடிகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை எப்படி கம்பங்களில் சேர்த்தார்கள் என்பது தான் அந்த காட்சி – ஒரு JCB வாகனத்தில் மண்ணை அள்ளும் பகுதியில் இரண்டு பேர் நின்று கொள்ள அதை உயரே தூக்கி நிறுத்த, அவர்கள் ஒவ்வொரு கம்பங்களிலும் கொடிகளை வைத்தார்கள்! இதை எழுதுவதை விட புகைப்படமாக எடுத்துக் காண்பித்தால் நன்றாக இருந்திருக்கும்! ஆனாலும் எடுக்க இயலவில்லை!


சாலையோரச் சமையல் கடை - சுடச்சுடத் தயாராகும் Bamboo Chicken....

இரண்டு நாட்கள் முன்னர், வீட்டின் அருகே இருக்கும் ஒரு மருத்துவமனை. உள்ளே பலரும் தங்கள் நோய்க்கு மருந்து வாங்கச் சென்று கொண்டிருந்தார்கள். வெளியே மருத்துவமனை பெயர் எழுதியிருக்கும் பதாகை அருகே ஒரு நான்கு சக்கர வண்டி நின்று கொண்டிருந்தது. அதன் ஓட்டுனர், தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது தில்லியின் பிரபலமான காட்சிகளில் ஒன்றான, காது அழுக்கு எடுக்கும் நபர் ஒருவர் அந்த ஓட்டுனரின் காது அழுக்கை தன்னிடம் இருந்த கம்பியால் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்! இதையும் புகைப்படமாக எடுக்க கைகள் துடித்தாலும், எடுக்க என்னிடம் அலைபேசியோ அல்லது கேமராவோ இல்லை!


திடீரென முளைக்கும் டோல் கேட்டுகள் - விசாகப்பட்டிணம் அருகே....

சில நாட்கள் முன்னர் வீட்டின் அருகே இருக்கும் காய்கறிச் சந்தைக்குச் சென்றபோது அங்கே காய்கறி விற்பவரின் வளர்ப்பு நாய் ஒன்றும், குரங்குக் குட்டி ஒன்றும் இருந்தன.  குரங்குக் குட்டி, நாயின் மேல் ஒயிலாக உட்கார்ந்திருக்க, நாய் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தது. நிச்சயம் இது போன்ற காட்சி வெகு அரிதான ஒன்று தான். இதையும் எடுத்திருக்கலாம் – கேமராவோ அல்லது அலைபேசியோ இருந்திருந்தால்!


பொருட்கள் சுமந்து செல்லத் தயாராக ஒரு உழைப்பாளி...


இப்படி எடுக்காத புகைப்படங்கள் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நமக்குப் பிடித்த, வித்தியாசமான விஷயமாக இருந்தாலும், அக்காட்சியை, தெரியாத மனிதர்களை படம் பிடிப்பதில் சில சிக்கல்கள் உண்டு! புகைப்படக் கருவியோடு இருப்பது ஆணாக இருந்தால் இன்னும் அதிக சிக்கல்கள்! பல முறை புகைப்படம் பிடிக்க மனம் இருந்தாலும், மூளை தடுத்துவிடும்! – “வேண்டாம்லே, வம்புல மாட்டிக்காதே!”  அதன் பிறகு படம் எடுக்காமலேயே வந்ததும் நடந்திருக்கிறது!


ஹிமாச்சலப் பிரதேசத்தின் மலைச்சாலை ஓர ஒற்றயடிப்பாதை ஒன்றில் தண்ணீர் சுமந்து செல்லும் பெண்....

ஆனாலும், இந்த ஞாயிறில் Candid ஆக நான் எடுத்த சில தெருக் காட்சிகளின் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எடுக்கப்பட்ட இடங்களும் கீழே தந்திருக்கிறேன். புகைப்படங்களை ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். படங்கள் பற்றியும், பதிவு பற்றியுமான உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். 


மணிக்கரன் குருத்வாராவிற்குச் செல்லும் சர்தார் இளைஞர்கள்....

ஆகஸ்ட் மாத Pit Photography in Tamil போட்டியில் பங்குபெற விருப்பம் இருப்பவர்கள் அவர்களது தளத்தில் வெளி வந்திருக்கும் இந்தப் பதிவினைப் படிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

40 comments:

 1. அண்ணா, போட்டிக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள்..
  அழகான படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 2. எல்லா படங்களும் அழகாய் உள்ளன.

  டோல் கேட்தான் புரியல. எதுக்கு அதை இப்படி ஜோடிச்சு வச்சிருக்காங்க !! ஏதும் திருவிழாவா ?

  ReplyDelete
  Replies
  1. டோல் கேட் - அந்த இடம் ஒரு பழங்குடியினர் கிராமம். அங்கே பயிரிடத் தொடங்கும் காலத்தில் ஒரு திருவிழா கொண்டாடுவார்கள். அதற்கு பொருள் தேவை.... எனவே சாலையில் 10 - 20 அடிக்கு இப்படி ஒரு டோல் கேட் திடீரென முளைக்கும். தட்டு வைத்திருக்க, அதில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் போட்டால் மட்டுமே மூங்கில் டோல் கேட் திறக்கும்! மேல் விவரங்கள் பிறகு பயணக்கட்டுரையில் எழுதுகிறேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 3. என்னை நானே பார்ப்பதுபோல் இருந்தது. நீங்கள் எழுதியிருக்கும் அத்தனையும் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. சுவையான வண்ணமிகு பதிவு.
  வாழ்த்துக்கள்!
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. நம்மில் பலருக்கும் ஏற்படும் விஷயம் தான் இது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 4. படம் ஒவ்வொன்றும் ஒரு கவிதை ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 5. இந்தியாவின் பல பரிமாணங்களைக் கண்டேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. புகைப்படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றன! அந்த முதல் புகைப்படத்தில் பானையில் என்ன விற்கிறார்கள் என்று எழுதவில்லையே?

  ReplyDelete
  Replies
  1. ஏதோ ஒரு வித உணவு.... பின்னால் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் பாருங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 7. எத்தனையோ எடுக்க நினைக்கிறது நெஞ்சம் ,எடுத்ததெல்லாம் கொஞ்சமோ :)
  பிட் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் :)

  ReplyDelete
  Replies
  1. போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 8. உங்களை போலவே எனக்கும் சில சமயங்களில் போட்டோ எடுக்க பயமாக இருக்கும் . எல்லோரும் கூடி வந்து வடிவேலுவை அடிக்க வருவது மாதிரி வந்துட்டா ....ஆனாலும் எடுத்த போட்டோக்கள் ரொம்பவே நல்ல வந்திருக்கு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 9. முன்புபோல இப்போது புகைப்படம் எடுத்தல் என்பது எளிய காரியம் அன்று. எல்லோரும் ஏன், எதற்கு என்று (ஃபேஸ்புக் பயம்) கேள்வி கேட்கிறார்கள். பல்வேறு சிரமங்களுக்கு இடையில் நீங்கள் எடுத்த புகைப்படங்களை, மிகவும் ரசித்தேன். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். மனிதர்களை புகைப்படம் எடுப்பது சிரமமான வேலை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 10. கண்டறியாத இடங்களையெல்லாம் - காணச் செய்தமைக்கு மகிழ்ச்சி..
  நேரில் காண்பதெல்லாம் எப்போது?...

  அழகான படங்கள்.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. இடங்களை நேரில் காண விரைவில் உங்களுக்கு வாய்ப்பும் நேரமும் அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. தெருக் காட்சிகள் அனைத்தும் அருமை..
  என்ன இன்னும் கொஞ்சம் போட்டோஷாப் பண்ணினால் பிசுக்கும் லைக் ..
  தம +
  ஆனால் போட்டோ ஷாப் கற்றுக் கொள்ள நேரமா இருக்கு ?

  ReplyDelete
  Replies
  1. ஃபோட்டோஷாப் நான் பய்ன்படுத்துவதில்லை. என்னிடம் இல்லை! பெயர் பதிக்க பயன்படுத்துவது ஃபோட்டோஸ்கேப் எனும் மென்பொருள்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 12. பெரும்பாலான புகைப்படங்கள் நன்றாக வந்துள்ளன. ஆனால், பயணம் செய்யும்போது புகைப்பட க்ளிக் பெரும்பாலும் சரியாக வருவது கடினம். அதைப் பற்றிப் படிக்காமலேயே நானும் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

  நான் கையில் கேமரா பெரும்பாலும் வைத்திருப்பேன். பாரிஸில், வீதியிலேயே (ஸ்டேஷனுக்கு நெருங்கிய பகுதி) ரோஜாக்கள் டெம்பொரரி மேஜைக்கடை வைத்து ரெண்டு பேர், நம்மூரைப் போலை, கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தனர். நான் போட்டோ எடுத்ததும் ப்ரெஞ்சில் கன்னா பின்னா என்று கத்த ஆரம்பித்துவிட்டனர். இதுபோல், ஸ்டேஷனில் பிச்சை (பாட்டுப்பாடி) எடுப்பவர்களைப் (லண்டன் போன்றவற்றில்) படம் எடுக்கும்போதும் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 13. நீங்கள் எடுத்திருக்கும் புகைப் படங்கள் நன்றாக இருக்கின்றன என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறது என்று சொல்வதுபோல் இருக்கும் எனக்கு புகைப்படம் எடுப்பதில் இருக்கும் ஆர்வமுள்ள அளவுக்கு விஷய ஞானம் இல்லை. இருந்தாலும் எனக்கு உயிருள்ளவற்றைப் படம் பிடிப்பதே பிடிக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 14. படங்களை ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. படங்கள் அனைத்தும் அருமை ஜி
  இந்தியா வருவதால் இணைய வரவு குறைந்து விட்டது வேலைப்பளு...

  ReplyDelete
  Replies
  1. ஓ இந்தியா வருவது அறிந்து மகிழ்ச்சி. எப்போது? முடிந்தால் சந்திக்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 16. சகோ.. போட்டிக்குக் கண்டிப்பாக அனுப்புங்கள்..
  அழகான படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் உற்சாக வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 17. அனைத்தும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 18. அழகு மிகு படங்கள்! கண்டு களித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 19. புகைப்படங்களனைத்தும் வித்தியாசமாக இருக்கிறதும், வாழ்த்துகள்.
  குறிப்பாக ``திடீரென முளைக்கும் டோல் கேட்டுகள் - விசாகப்பட்டிணம் அருகே'' என்ற புகைப்படத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியம் தான். இப்படி ஐம்பதடிக்கு ஒரு டோல் கேட் முளைத்திருக்கும். ஒவ்வொரு இடத்திலும் ஒரு ரூபாய்/இரண்டு ரூபாய் கொடுத்தால் தான் அங்கே இருக்கும் பெண்கள் கேட்-ஐ திறப்பார்கள்.

   Delete
 20. அரிய காட்சிகளை அழகாகப் படமாக்கியிருக்கிறீர்கள். குறிப்பாக ”பொருட்கள் சுமந்து செல்லத் தயாராக ஒரு உழைப்பாளி...”.

  ‘தலைப்புக்குத் தகுந்த புகைப்படங்கள் நான் எடுத்து இருக்கிறேனா என்று யோசிப்பதும் தேடுவதும்' இதுவும் நல்ல பயிற்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....