எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, August 8, 2016

காசிரங்கா பூங்காவில் அதிகாலை யானைச் சவாரி


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 33

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....

 
வனத்தின் நுழைவாயில் அருகே ஒரு சிற்றோடை....

வனத்தில் பூக்கள்...


எந்த வனத்திற்குள்ளும் மிருகங்களை, அவற்றின் இயற்கையான சூழலில் காண வேண்டும் என்றால் ஒன்று அதிகாலையிலேயே சென்று விடவேண்டும். அல்லது மாலை வெயில் தாழ்ந்த பிறகு, இருட்டுவதற்குள் செல்ல வேண்டும். அப்போது தான் மிருகங்களைச் சுலபமாகப் பார்க்க முடியும். வெயில் நேரத்தில் மிருகங்கள் அனைத்தும் நிழல் இருக்கும் இடங்களை நாடி அடர்வனத்திற்குள் சென்றுவிடும் என்பதால் சுலபமாகக் காண முடியாது.  அதனால் தான் Jungle Safari பெரும்பாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே ஏற்பாடு செய்வார்கள்.


காலைச் சூரியன் இலைகளுக்கு நடுவே...


வனப்பாதையிலிருந்து வனம்...

நாங்களும் முதல் நாள் இரவு, இரவு உணவை முடித்துக் கொண்டு உறக்கத்தினைத் தழுவினோம். அதிகாலையில் எங்களுக்கான யானைச் சவாரிக்கு கொடுத்த நேரம் காலையின் முதல் சவாரி – அதாவது காலை 5.30 மணிக்கு! அதனால் அதிகாலையிலேயே எழுந்திருந்து கொஹரா கேட் பகுதிக்குச் சென்றோம். எங்கள் தங்குமிடத்திலிருந்து ஜீப்பில் திரு ராய் எனும் அறுபது வயது மதிக்கத்தக்க ஓட்டுனர் வனத்தின் வாயில் வரை அழைத்து வந்தார். யானைச்சவாரிக்கான சீட்டுகளையும் வாங்கிக் கொடுத்து யானைச்சவாரிக்கு அனுப்பி வைத்தார்.


லக்கிமாலாவும் ஷிவாவும்

வாயிலில் இருந்து சிறிது தூரம் நடந்தால் யானைச் சவாரிக்கான மேடை அமைந்திருந்தது. மேடை மேல் நாம் சென்று அதன் பக்கவாட்டில் நின்றிருக்கும் யானை மீது அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து கொள்ள வேண்டும். பக்கத்திற்கு இரண்டு அல்லது மூன்று பேர் முன்னால் யானைப் பாகன் – பெரிய யானைகளின் மீது ஏழு பேர், சிறிய யானைகளாக இருந்தால் ஐந்து அல்லது மூன்று பேர் – யானைப்பாகனையும் சேர்த்து!  எங்களுக்கான யானையும் வந்தது.  நாங்கள் ஏறிக்கொள்ள, யானைப் பாகன் ஷிவா – 15 வயது தான் இருக்கும் அச்சிறுவனுக்கு! யானையைச் செலுத்தினார். 


தூரத்தில் மேய்ச்சலில் இருக்கும் காட்டு எருமைகள்...

யானையின் பெயரும் கேட்டு வைத்துக் கொண்டேன். யானையின் பெயர் லக்கிமாலா! அதற்கு வயது சிறுவனை விட அதிகம் – 18 வயது! எங்களையும் சுமந்தபடி யானை மெதுவாக அடர்வனத்திற்குள் நுழைகிறது. காசிரங்கா பூங்காவில் பலவித மரங்கள், செடிகள், மிருகங்கள் என அனைத்தும் உண்டு. முக்கிய விலங்கு ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகம் என்றாலும், யானைகள், மான்கள், புலிகள், காட்டு எருமைகள், பல்வேறு பறவைகள் என இறைவனின் படைப்புகள் பலவற்றுக்கும் புகலிடம் இந்த வனம்.


யானைப் புற்களுக்கு நடுவே காண்டாமிருகம்...

இங்கே யானைகள் மற்றும் காண்டாமிருகங்களுக்கு உணவான Elephant Grass இங்கே அதிகமாய் வளர்கிறது. சராசரி மனிதனின் உயரத்தினை விட அதிக உயரமாக இந்தப் புற்கள் வளர்ந்து விடும். இவை தான் யானைகள் மற்றும் காண்டாமிருகங்களின் முக்கிய உணவு. பூங்காவினை பார்க்க வந்த மனிதர்களை சுமந்து செல்லும் யானைகள் வளர்ந்திருக்கும் யானைப்பூற்களைப் பறித்துத் தின்றபடியே காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன.


காண்டாமிருகம் - யானைகள் சுற்றி வளைத்திருந்தபோது...

வரிசையாக சென்று கொண்டிருக்கும்போது காண்டாமிருக நடமாட்டம் ஆரம்பிக்கிறது. தனியாக இருக்கும் காண்டாமிருகம் கண்டவுடன் ஐந்து முதல் ஏழு யானைப்பாகர்கள் அதைச் சுற்றி ஒரு வளையமாக யானைகளை நிறுத்தி விடுகிறார்கள். வளையத்திற்குள் காண்டாமிருகம் இருக்க, அது சத்தமில்லாமல் புற்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது – ஒத்தைக்கு ஒத்தையாக இருந்தால் சண்டை போடலாம்! ஆனால் இங்கோ ஒத்தைக்கு – ஏழு! அதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு உணவு உண்டபடி, ஆனால் கவனமாக இருக்கிறது.


என்னைத் தானே பார்க்க வந்தீக!

யானைப்பாகர்கள் சுற்றுலா வந்த மனிதர்களை முன்னரே எச்சரித்து விடுகிறார்கள் – பேசக் கூடாது என்று. தேவையான அளவு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம் – ஆனால் பேச்சு கூடாது! பேசினால் காண்டாமிருகம் தாக்குதல் நடத்தக்கூடும்! இப்படி ஒரு இடத்தில் சில நிமிடங்கள் நின்று புகைப்படங்கள் எடுத்தோம்.  அந்தக் காட்சியை பறவைப் பார்வையாய் புகைப்படம் எடுக்க ஆசை வந்தது! ஆனால் அதற்கு இன்னும் உயரமான இடத்தில் இருக்க வேண்டும் – ஒரு வேளை யானை மீது நின்று கொண்டால் எடுக்கலாம்! அதற்கு வழியில்லை! :)


என்னையும் பார்க்க வந்தீகளா?..

இப்படி நிறைய காண்டாமிருகங்களையும் மான்களையும், புலிகளின் கால் தடங்களையும் பார்த்தபடியே சவாரி செய்து கொண்டிருந்தோம். அற்புதமான ஒரு அனுபவம் அது. காலை நேரம் என்பதால் சூரியனின் கிரணங்கள் அத்தனை அதிக வீரியம் கொண்டு நம்மைச் சுடாது. பல்வேறு பறவைகள், மிருகங்கள் ஆகியவை தங்களது குரல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, யானை மீது அமர்ந்தபடி அவற்றை ரசித்துக் கொண்டே சவாரி செய்து கொண்டிருந்தோம். 


குட்டியுடன் ஒரு காண்டாமிருகம்...


காண்டாமிருகத்தின் குட்டி – ஒரு Close up!...

வழியே ஒரு காண்டாமிருகம் தனது குட்டியுடன் யானைப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. குட்டியில் எல்லாமே அழகு எனச் சொல்வது வழக்கம். காண்டாமிருகத்தின் குட்டியும் வெகு அழகு. அவ்வளவு அழகாய் அம்மா/அப்பாவுடன் காட்டுக்குள் உலவுகிறது! குட்டியுடன் இருக்கும் காண்டாமிருகத்தின் அருகே செல்வது கொஞ்சம் ஆபத்தானது என்பதால் யானைச் சவாரி அழைத்துச் செல்லும் பாகர்கள் அவற்றைச் சுற்றி நிற்பது இல்லை. சற்று இடைவெளி விட்டே நிற்கிறார்கள்.


இதுல நானும் இருக்கேன்!...

சில காட்டு யானைகளையும் பார்க்க முடிந்தது – அந்த யானைகளின் அருகே சவாரிக்கு வரும் யானைகள் – அதாவது பழக்கப்படுத்திய யானைகள் செல்வதில்லை. காட்டு யானைகளுக்கு கோபம் வந்துவிட்டால் இந்த யானைகளை துவம்சம் செய்துவிடும்! அதனால் தூர இருந்தே பார்க்க வேண்டியது தான்! அருகே செல்வது ஆபத்தானது!  காட்டு எருமைகளும் அப்படித்தான் – பார்க்க சாதாரண எருமைகள் போலவே இருந்தாலும் இந்த காட்டு எருமைகள் மூர்க்கமானவை.


குட்டி யானைச் சவாரி...

காட்டுக்குள் இறந்து போகும் விலங்குகளின் சடலங்களை யாரும் அப்புறப்படுத்துவதில்லை. அவை இயற்கையாகவே அழிந்து போக விடுகிறார்கள். அதனால் சில இடங்களில் இறந்த மிருகங்களின் எலும்புக்கூடுகளையும் மண்டை ஓடுகளையும் பார்க்க முடிந்தது. இப்படியாக வனத்திற்குள் தொடர்ந்து பயணித்தோம்.  சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வனத்திற்குள் இருந்திருப்போம். விலங்குகளை அவற்றின் இயற்கையான சூழலில் பார்த்து மகிழ்ச்சியோடு நாங்கள் திரும்ப, யானைகளும் சற்றே ஓய்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனும், சிறு புன்னகையுடனும் வந்து கொண்டிருந்தது.


திரும்பிய பின்னர் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம்...

யானைகள் ஒவ்வொன்றாக பூங்கா நுழைவாயில் அருகே இருக்கும் மேடைக்கு அருகே வந்தன. யானையின் மேலிருந்து மேடைக்கு மேலே இறங்கினோம். யானைகள் வரிசையாக நிற்க, யானைகளுக்கும் யானைப்பாகர்களுக்கும் நன்றி சொல்லி, யானைகளோடு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாய் என்ன அனுபவம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


32 comments:

 1. புகைப்படங்கள் அருமை. ஒரு சந்தேகம். புகைப்படங்களில் உள்ள காண்டாமிருகங்கள் எல்லாம் கொம்பிழந்து காணப்படுகின்றனவே. காரணம் ஏன்?

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ”என்னைத் தானே பார்க்க வந்தீங்க” என்று எழுதியிருப்பதன் மேல் இருக்கும் படத்தில் கொம்பு காணப்படுகிறதே.... சிறிய அளவில் தான் கொம்பு - ஒற்றைக் கொம்பு. மூக்குக்கு மேலே இருக்கும். அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஜி!

   Delete
 2. யானைச்சவாரி மிக சுவாரஸ்யமான அனுபவமாய் இருந்திருக்கும். யானையின் அசைவில் கீழே விழுந்து விடாமல் இருக்க சீட் பெல்ட் போன்றவை ஏதும் கிடையாதா?

  ReplyDelete
  Replies
  1. சீட் பெல்ட்! :) கிடையாது! ஆனால் கம்பித் தடுப்பு உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஆகா மறக்க முடியாத அனுபவம்தான் ஐயா
  வாழ்வில் ஒரு முறையேனும் கானகத்திற்குள் யானை சவாரி செய்திடவேண்டும் என்னும் ஆசை எழுகிறது
  நன்றி ஐயா
  தம+1

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஒரு முறையேனும் கானகத்தினுள் சவாரி செய்து வாருங்கள். அது ஒரு சுகானுபவம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. நானும் தங்களுடன் யானையின் மீதேறி பயணம் செய்ததைப் போலிருந்தது..

  மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. அருமையான சவாரி....நாங்கள் சென்றது எல்லாம் கம்பிவேலி உள்ள வேனிலே...இது போல் ஒருமுறை செல்ல வேண்டும்...


  வழக்கம்போல் அனைத்து படங்களும் அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 6. நல்ல அழகான படங்கள் . நல்ல அனுபவம் இல்லையா காட்டுக்குள் யானை பயணம்?

  ReplyDelete
  Replies
  1. நல்ல அனுபவம் தான் மா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 8. என்ன ஒரு அனுபவம் வெங்கட்ஜி!!! நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்று இருந்தது என்றாலும்....பயணிக்க வேண்டும் என்ற ஆவல் கூடிவிட்டது ஜி. அதுவும் வனத்திற்குள் நேரில் விலங்குகளை அருகாமையில் பார்ப்பது த்ரில்லிங்க் அனுபவம்தான். படங்களும் மிக மிக அழகு.

  இதே அனுபவம், சின்னார் வனத்திலும் ஆனால் யானை மீதல்ல, நாம் பசுமைப்பயணம் என்று வழிகாட்டியுடன் நடந்தே சென்று பார்க்க முடியும். அங்கும் மான் வகைகள், காட்டெருமைக் கூட்டம்,யானைக் கூட்டம், சில குரங்கு வகைகள், பறவை வகைகள் என்று பார்க்க முடிந்தது. நல்ல அனுபவமாக இருந்தது.

  அந்த குட்டிக் காண்டா செம அழகு கொம்பு முளைக்க வில்லை போலும்!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சின்னார் வனம் பற்றிய மேலதிகத் தகவல்களைச் சொல்லுங்களேன்....

   குட்டிக்காண்டாமிருகம் - கொம்பு பற்றிய தகவல்கள் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. வாவ் அனுபவம். எப்பயோ வங்கத்தில் நடந்தமாதிரி, யானைச் சவாரி செய்பவர்கள் மீது, சைடுல இருந்து புலி பாயாம இருந்தாச் சரிதான்.

  இது ஒரு லைஃப் டைம் அனுபவம் என்று சொன்னால் மிகையல்ல.

  ReplyDelete
  Replies
  1. லைஃப்டைம் அனுபவம் - உண்மை தான். வேறு சில வனங்களுக்குள் சென்றிருந்தாலும் இது போன்று யானைச் சவாரி செய்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. யானையின் மீது இருக்கைகள் இல்லாமல் பயணிப்பது சுகமில்லை என்கிறான் என் மகன் திருச்சியில் அய்யப்பன் படம் ஏந்தி யானை மீது சவாரி செய்திருக்கிறான் அவன் நல்ல அனுபவம்தான் மீண்டும் கூறுகிறேன் கொடுத்து வைத்தவர் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. இங்கே இருக்கைகள் உண்டு. ஆனாலும் தொடர்ந்து அமர்ந்திருப்பது கடினம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. ஆஹா புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 13. தங்களின் ரசனையை ஒவ்வொரு பதிவிலும் உன்னிப்பாகக் கவனித்து ரசித்துவருகிறோம். அழகான இடங்கள், பதிவுகள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர் வாசிப்பிற்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. அற்புதம் நண்பரே! இலவசமாக காசிரங்காவில் யானை சவாரி செய்து விலங்குகளை காண வைத்துவிட்டீர்கள்.
  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 15. http://travelthemes.in/wp-content/uploads/2016/05/VBK-RHINO_1408357f.jpg

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் இணைப்பிற்கும் நன்றி ஜெயக்குமார் ஐயா.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....