எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 16, 2016

காசிரங்கா – வனத்தின் வெளியே – ரிசார்ட் அனுபவங்கள்ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 36

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....

 

வனத்தின் அருகே அழகிய வீடு...

ஜீப் சஃபாரியில் யானை துரத்திய அனுபவத்திற்குப் பிறகும் பல மிருகங்களைக் கண்டு ரசித்து, மிஹிமுக் நுழைவாயில் வழியே வெளியே வந்தோம். வரும் வழியெங்கும் பசுமையான வயல்கள். வயல்களின் நடுவே அழகிய வீடுகள். இங்கே வீடுகள் கட்டுவது பற்றி சில தகவல்களையும் சொல்வது தகுந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். வீட்டின் கூரைகள், அரசு தரும் கூரைகள் அல்லது மானியத்தில் வாங்கப்பட்ட கூரைகள் தான். சுவர்கள், கதவுகள் ஆகியவை மூங்கில் தான் பிரதானம்.  மூங்கில் கம்புகள், மூங்கில் தட்டிகள் ஆகியவற்றை வைத்து தான் வீடு கட்டுகிறார்கள். மூங்கில் தட்டிகளால் சுற்றுச் சுவர்கள் எழுப்பி வெளிப்புறம் உட்புறம் என இரண்டு பக்கங்களிலும் மூங்கில் தட்டிகள் மீது மண்ணால் பூசி விடுகிறார்கள். தரைகளும் மண் தரைகள் தான்.  பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் கட்டி இருக்கிறார்கள்.  உள்ளுக்குள் அப்படி ஒரு குளிர்ச்சி!


பச்சைப் பசேலென வயல் வெளிகள்....

காலை உணவு எடுத்துக் கொண்ட அதே சாலையோர சிறிய உணவகத்தில் தேநீர் அருந்துவதற்காக வண்டியை நிறுத்தினோம். கூடவே இங்கே வந்து சென்ற நினைவிற்காக சில பொருட்களை வாங்க உடன் வந்திருந்த நண்பர்கள் விரும்பினார்கள். உணவகத்தின் வெளியே நிறைய நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகளும் உண்டு – சிறிய காண்டாமிருகம், வனக் காட்சிகள், மூங்கிலால் செய்யப்பட்ட பரிசுப் பொருட்கள் என பலவும் அங்கே விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.


கடையில் இருந்த முதியவர் – தேநீர் தயாரித்தவர் இவரல்ல!
அவரைப் புகைப்படம் எடுக்க இயலவில்லை!

தேநீர் கேட்டுக் காத்திருந்தோம். கடையில் இருந்த மூத்த உழைப்பாளி ஒருவர் தான் தேநீர் தயாரித்து அனைவருக்கும் கொண்டு வந்து கொடுத்தார். இந்த வயதிலும் உழைக்கும் அவரை வாழ்த்தினோம்....  இவர் வயது வரை நாமெல்லாம் உழைத்துக் கொண்டிருப்போமா என்பது சந்தேகமே என்று எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம்.  தேநீருக்கான பணத்தினை உணவக உரிமையாளரிடம் கொடுத்ததோடு, அந்த முதியவருக்கும் கொஞ்சம் பணம் கொடுத்தோம் – மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நல்லதே நடக்கட்டும் என்ற வார்த்தைகளும் சொன்னார்.


அழகிய மூங்கில் தட்டுகள்....

தேநீர் அருந்திய பிறகு வெளியே இருக்கும் கடைகளில் நினைவுப் பொருட்களை வாங்கச் சென்றோம். அங்கே நிறைய பொருட்கள் இருக்கவே, எதை வாங்குவது, எதை விடுவது என்ற குழப்பம் எனக்குள். மூங்கில் தட்டுகள், மரத்தினால் ஆன காண்டாமிருகம், சாவிக்கொத்துகள் என பலவும் இருந்தன. நண்பர்கள் ஆளுக்கொரு காண்டாமிருகம் வாங்கினார்கள் – அதனால் சில தொல்லைகளும் வந்தது! என்ன தொல்லை? ஒவ்வொரு முறை விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் செய்யும்போது கொம்பு ஏதோ கத்தி போல இருக்க, அதை வெளியே எடுத்துக் காண்பிக்க வேண்டியிருந்தது!


Tobacco Kills…. But who cares!

உணவகத்தின் வெளியே ஒரு பான் கடை – சுறுசுறுப்பாக பான் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார் அந்த கடையின் உரிமையாளர். வெற்றிலைகளை எடுத்து அதில் கத்தா என அழைக்கப்படும் ஒரு திரவத்தினைத் தடவி, சுண்ணாம்பு, புகையிலை, ஜர்தா, என் விதம் விதமாய் நிரப்பி, சாதா பான், மீட்டா பான், ஜர்தா பான் என தயாரித்துக் கொண்டிருந்தார்.  அங்கே வைத்திருந்த ஒரு டப்பாவில் “Tobacco Kills” என்று எழுதி இருந்தது! But Who cares! பலரும் பான் வாங்கிச் சுவைப்பதோடு, தெருவெங்கும் வெற்றிலைச் சாற்றினைத் துப்பியபடியே இருந்தார்கள். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும், இந்த வெற்றிலை/பான்/புகையிலை போடும் வழக்கம் உண்டு! இளம்பெண்கள் உட்பட அனைவருமே பயன்படுத்துகிறார்கள்.


தங்கும் விடுதியின் வெளியே...

அங்கிருந்து ஓட்டுனர் ராய் ஜி உடன், எங்கள் தங்குமிடம் சென்று சேர்ந்தோம். அங்கே சென்றால் தண்ணீர் வரவில்லை, தொட்டிகளும் காலியாகி இருந்தன! மோட்டார் போடச் சொல்ல, அதுவும் காலையில் ரிப்பேர் என்று சொன்னார்கள்! நாங்களோ அதிகாலை வனத்திற்குள் பயணிக்க வேண்டியிருந்ததால், வனத்திற்குள் சென்று வந்து குளிக்க எண்ணியிருந்தோம். ரிசார்ட் பணியாளர்களிடம் தண்ணீர் வேண்டும் என்று சொல்ல, அவர்கள் பக்கத்து ரிசார்ட்டில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து, சில பக்கெட்டுகள் – ஆளுக்கு ஒன்று வீதம் கொடுத்தார்கள்! காக்காய் குளியல் தான்!


தங்கும் விடுதியின் எதிர் வீடு...

ஒவ்வொருவராய் பக்கெட் தண்ணீரில் குளித்து வர, மற்றவர்கள் ரிசார்ட் வாயிலில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து வனப்பயணம் பற்றியும் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். ஓட்டுனர் ராய் அப்போது வந்து சேர, எதிரே இருந்த ஒரு மண்/மூங்கில் வீட்டினைப் பார்க்க முடியுமா எனக் கேட்டோம். அவரும் வாருங்கள் என எங்களை அழைத்துச் சென்றார். அங்கே சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண்மணியும், அவரது மகன், மகள் ஆகியோரும் வெளியே வந்தார்கள். வீடு பார்க்க வேண்டும் எனச் சொல்ல, வெளியிலிருந்தே பாருங்கள் என்று சொல்லி விட்டார்கள்! அவர்களையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் ரிசார்ட் திரும்பினோம்!


எதிர் வீட்டுச் சிறுவன்...

மதியம் தான் ஆகிறது.  பன்னிரெண்டு மணிக்கு எங்களின் அடுத்த இலக்கை நோக்கிய பயணத்தினைத் துவங்க வேண்டும். ஊரிலிருந்தே ஏற்பாடு செய்த வாகனம் வர வேண்டும் என்பதற்காகத் தான் காத்திருந்தோம். வாகனத்தில் வந்தவருக்கு ரிசார்ட் வரும் வழி தெரியாது என்பதால் அவர் அழைத்தபோது ரிசார்ட் ஊழியரிடம் அலைபேசியைக் கொடுத்து அவர் சொன்ன வழியில் வாகனத்துடன் வாகன ஓட்டியும் இன்னும் ஒருவரும் வந்து சேர்ந்தார்கள். இந்த வாகனம் தான் இன்னும் நான்கு/ஐந்து நாட்களுக்கு எங்களுடன் இருக்கப் போகிறது! எங்களை அடுத்த இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்லப் போகிறது.


வாகனத்தின் அருகே நண்பர் சுரேஷ்...

நாம் ஏழு சகோதரிகளில் அடுத்த சகோதரி மாநிலத்திற்குச் செல்லப் போகிறோம். அது எந்த மாநிலம், அங்கே செல்லத் தேவையான அனுமதி உண்டா, அங்கே என்னென்ன இடங்களுக்குச் சென்றோம், அங்கே கிடைத்த அனுபவங்கள் என்ன ஆகியவற்றை வரும் பதிவுகளில் சொல்கிறேன். அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


28 comments:

 1. தொட்ருங்கள் ஐயா
  காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. இயற்கையான சூழ்நிலையில் தங்கும் வீடு ,பார்க்கவே குளு குளுவென்று இருக்கிறதே !அடுத்த சகோதரியை காண ஆவலாய் இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 3. 'நல்லாருக்கு உங்கள் பயணம். தொடர்கிறோம். வெத்தலைல என்ன தடவி வச்சிருக்கு? பிரௌனா இருக்கு? நினைவுப்பொருட்கள் கடையைப் படமெடுத்துப்போட விட்டுட்டீங்களே!

  ReplyDelete
  Replies
  1. கத்தா மற்றும் சுண்ணாம்பு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 4. நமது ஊர்களிலும் மூங்கிலின் பயன்பாடுகள் மிகுந்தே இருந்தது -
  மூங்கில் வனங்கள் அழிக்கப்படும் வரை!..

  நானும் பயணிப்பது போன்ற உணர்வு..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. அலுப்பு தெரியாமல் உங்களுடன் வருகிறோம். தொடர்ந்து வருவோம். புதுப்புது இடங்கள், நிகழ்வுகள், செய்திகள், புகைப்படங்கள், வர்ணனைகள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. மூங்கில் தட்டுகள் அழகாக இருக்கின்றது தொடர்கிறேன் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 7. ரெசார்டின் முன்புறம் இருந்த வீடும் நீங்கள் கூறியபடி இருந்ததா. பாராட்டுகள் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். அப்படியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. தொடர்ந்து படிக்கின்றேன், கருத்துக்கள் இடத்தான் முடிவதில்லை.அனைத்துமே சுவாரஷ்யமாய் இருக்கின்றது.தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து படிப்பது அறிந்து மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 9. அழகான பயண அனுபவம்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 10. எதிர்பார்ப்புடன் நாங்களும்
  தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. சுவையாகச் செல்கிறது பயணக் குறிப்புகள்! வாழ்த்துக்கள்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. புகைப்படங்களும் விளக்கமும் அருமை..பயணங்கள் தொடர வாழ்த்துகள்!
  அங்கும் காக்கா குளியலா??

  ReplyDelete
  Replies
  1. அங்கே மட்டும் தான் காக்கா குளியல்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 13. படங்கள் அழகு...
  அந்தப் பையன் அழகு....
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 14. தொடர்கின்றோம் சுவாரஸ்யங்கள் பல நிறைந்த தங்கள் பயணத்தை ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....