எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, August 9, 2016

நான் சம்பாதிக்கணும்.....

படம்: இணையத்திலிருந்து....

சம்பாதிக்கணும்னு நினைக்கிறது தான் பலருடைய எண்ணமும் தேவையுமாக இருக்கிறது. படித்து, படிப்புக்குத் தகுந்த வேலை தேடி, அப்படி படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காத பட்சத்தில், கிடைத்த வேலையை பார்த்து சம்பாதிப்பதும் அதன் மூலம் வாழ்க்கையை நடத்துவதும் தான் எல்லோருக்கும் குறிக்கோளாக இருக்கிறது.  ஒரு சிலருக்கு மட்டும் இந்த உத்வேகம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. 

எனது அலுவலக நண்பரின் தெரிந்தவர் வீட்டுப் பெண். வயது அப்படி ஒன்றும் அதிகமில்லை. 15 தான். ஒன்பதாவது படித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதற்குள்ளேயே சம்பாதிக்கணும் எனும் வெறி வந்துவிட்டது. அவ்வப்போது பெற்றோர்களிடம், “படிச்சது போதும், எனக்கு வேலைக்குப் போகணும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். பெற்றோர்கள், முதலில் படிப்பு, அதன் பின் தான் வேலை – அதற்குள் சம்பாதிக்க வேண்டிய அவசியம் என்று தொடர்ந்து அறிவுரை சொன்னாலும் அந்தப் பெண்ணின் மனம் கேட்கவில்லை.

சென்ற வாரத்தின் ஒரு பகலில் வீட்டில் அம்மா தூங்கிக் கொண்டிருக்க, ஒரு பையில் கொஞ்சம் உடைகள், அம்மாவின் அலைபேசி, பணம் என தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு கதவைத் திறந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது 15 வயதில் அந்த இளம்பெண் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். ஒரு மணி நேரம் கழித்து அம்மா கண்விழித்துப் பார்க்கையில் வீட்டின் கதவு திறந்திருக்கிறது, மகளைக் காணவில்லை. வீட்டின் அருகே எங்கேயும் போய் இருப்பாரோ எனத் தேட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆன பிறகும் வீடு திரும்பவில்லை.

பதற்றத்தோடு அலுவலகம் சென்றிருக்கும் கணவனை அழைக்கலாம் என அலைபேசியைத் தேடும்போது அதுவும் கிடைக்கவில்லை. அந்த எண்ணுக்கு அழைத்தால் ரிங் போகிறது யாரும் எடுக்கவில்லை. அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு கணவரை வீட்டுக்கு அழைக்க, அவரும் வந்து பெண்ணின் தோழிகள், தெரிந்தவர்கள் என அனைவரையும் விசாரித்து இருக்கிறார்கள். யாருக்கும் அந்தப் பெண் பற்றி தெரியவில்லை. அலைபேசியில் தொடர்ந்து அழைத்தாலும் யாரும் எடுத்துப் பேச வில்லை.

நேரம் ஓடிக்கொண்டே இருக்க, இரவு எட்டுமணிக்கு மேல் காவல்துறையின் உதவியை நாடி இருக்கிறார்கள். அலைபேசி எண்ணை வைத்து பெண்ணின் இருப்பிடத்தினை தெரிந்து கொள்ள முயன்றபோது கடைசியாக கிழக்கு தில்லியின் செல்ஃபோன் Tower ஒன்றின் பகுதியில் இருப்பது தெரிந்திருக்கிறது. இன்னும் இடத்தினைச் சரியாக தெரிந்து கொள்ள அலைபேசியின் IMEI Number இருந்தால் கொடுங்கள் எனக் கேட்க, அவர்களிடத்தில் கைவசம் இல்லை. கிழக்கு தில்லிப் பகுதிக்கு காவல் துறையினருடன் சென்று தேடியதில் பெரியதாக ஒரு க்ளூவும் கிடைக்கவில்லை. இரவு 11.30 மணிக்கு மேல் காவல்துறையினருடன் கூட அந்தப் பகுதியில் இருப்பது நல்லதல்ல! ஏரியா அப்படி!

வீடு திரும்பி, IMEI Number-ஐ தேடுங்கள், காலையில் மீண்டும் முயற்சிக்கலாம் என காவல்துறையினரும் சொல்லி, பெண்ணின் தகவலை எல்லா காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துவிட்டார்கள். தொடர்ந்து அலைபேசியில் அழைப்பதும் நண்பர்களைத் தொடர்பு கொள்வதுமாக இரவு முழுவதும் உறக்கமில்லை.  பதட்டத்தோடு கழிந்தது அந்த முதல் இரவு.  காலை மீண்டும் தேடும் படலம்.  அதற்குள் அந்த அலைபேசி Switch Off செய்யப்பட்டு விட்டது.

காவல்துறையும் கடைசியாக அந்த அலைபேசியிலிருந்து யார் யாருக்கு அழைப்பு போயிருக்கிறது என்பதை வைத்து தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்களும் முயற்சிப்பதை விடவில்லை.  இரண்டு மாதங்கள் முன்பு சென்ற ஊருக்கு அடிக்கடி அலைபேசி மூலம் அழைப்பு போனதைத் தெரிந்து கொண்டு அந்த எண்ணுக்கு அழைக்க அதுவும் Switched Off!

மேலும் சில தகவல்களும் கிடைத்திருக்கிறது. பெண் வேலைக்குப் போகணும், சம்பாதிக்கணும்னு குறிக்கோளாக இருந்ததை வைத்து விசாரணை செய்ய, Call Center-களில் வேலை தேடியது பற்றி தெரிந்திருக்கிறது. 15 வயதில் யார் Call Center-ல் வேலை தருவார் என அந்தப் பெண் யோசிக்க வில்லை. அல்லது அப்பெண்ணின் மனதை யாரோ கெடுத்திருக்கிறார்கள். 

நல்ல வேளையாக மாலையில் ஒரு அலைபேசி அழைப்பு. உத்திரப் பிரதேசத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து.... அழைத்தவர் HR Agency வைத்து நடத்துபவர். அவரிடம் இந்தப் பெண் சென்று Call Center-ல் வேலை வாங்கித் தருமாறு கேட்க, அவர் சாமர்த்தியமாக பெண்ணின் தொடர்பு விவரங்களை வாங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை அவர் அலுவலகத்தில் இருக்க வைத்து, வெளியே வந்து பெண்ணின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார். 

உடனடியாக காவல்துறையினரிடம் செய்தி சொல்லி, அந்த ஊர் காவல்துறை உதவியோடு பெண் எங்கும் சென்றுவிடாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்லி, இவர்களும் அங்கே விரைந்திருக்கிறார்கள். அங்கே சென்று பெண்ணுக்கு புத்திமதி சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். பெண்ணுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றாலும், கிட்டத்தட்ட 24 மணி நேரம் வீட்டை விட்டு விலகி இருந்திருக்கிறார். இந்த நேரத்தில் எதுவும் நடந்திருக்கலாம்.  அதுவும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் தனியே இருப்பது எத்தனை ஆபத்தினை அவருக்கு உண்டாக்கி இருக்கலாம் என்பது அப்பெண்ணிற்கு புரிந்தால் சரி.

வேலை தேடுவதும், சம்பாதிப்பதும் நல்ல குறிக்கோள் தான் – ஆனாலும் பதினைந்து வயதில் சம்பாதிக்க ஆசைப்படுவதும், அதற்காக வீட்டை விட்டு ஓடுவதும் எந்த விதத்தில் சரி என்று புரியவில்லை. இப்போதைய இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் தேவைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பெற்றோர்கள் தரும் பாக்கெட் மணி வெகு குறைவாக இருக்கிறது. அதற்காக எப்படியாவது பணம் வேண்டும் என நினைப்பது சரியல்ல. 

பணத்திற்காக அந்த 15 வயது பெண் இப்படிச் செய்தது, அவரது பெற்றோர்களுக்கு எத்தனை மன வருத்தம் தந்திருக்கும் என்பதை கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே......

பணம் தேவை தான் – அதற்காக இப்படி வீட்டை விட்டு ஓட வேண்டிய அவசியமில்லையே.  எந்த நேரத்தில், வயதில் எதுவெது நடக்க வேண்டுமோ அந்த வயதில், நேரத்தில் நடப்பது தான் சரி என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?

நாளை வேறு ஒரு பதிவில் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

34 comments:

 1. அதிர்ச்சியாகவும் கவலையாகவும்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சிந்திக்காமல் செயல்பட்டு கடைசியில் தங்கள் வாழ்க்கையை மோசமான ஆட்களிடம் கொடுத்து சிரழிந்துவிடுகிறதுதான் நடக்கிறது. ஆண்களுக்கே பாதுகாப்ப்பு இல்லாத இந்நாட்களில் பெண்கள் இப்படி செய்வது நல்லதல்ல

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் மதுரைத் தமிழன். எதுவும் நடக்கலாம் என்பது அப்பெண்ணுக்குப் புரியவேண்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. மனதை கலங்கடிக்கும் நிகழ்ச்சி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. படிக்கும் போதே பதற்றமாக இருந்தது..

  அப்பாவிப் பெண் பத்திரமாக மீட்கப்பட வேண்டுமே!.. - என்று..

  இதுவும் காலத்தின் கோலம் தானா?..

  ReplyDelete
  Replies
  1. காலத்தின் கோலம்... வேறென்ன சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கேட்ட எங்களுக்கும் கஷ்டம் தான் அம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. நல்ல வேளை கெட்ட அனுபவம் ஏதும் இருக்கவில்லை. எங்கோ நல்லவர்களும் இருக்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்...... அந்த நல்ல மனிதர் இல்லாவிட்டால்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. தேவையற்ற தேவை
  அவசியம் என விளம்பரங்களும்
  சுற்றுப்புறமும் செய்கிற அவலத்தால்
  நேருகிற துயரங்கள் இவை

  எதையாவது செய்து இது போன்ற
  மனோபாவங்கள் இளைஞர்களுக்கு
  நேராதவாறு செய்துதான் ஆகவேண்டும்

  சிந்திக்கச் செய்யும் அற்புதமான பகிர்வு

  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற மனோபாவங்கள் ஏற்படாதவாறு செய்து தான் ஆக வேண்டும். அதே தான் ஜி. ஆனால் செய்வது எப்படி என்று தான் யாருக்கும் புரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. இன்றைய நுகர்வு கலாசாரம் சிலரை இப்படி பாடாய் படுத்துகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 9. தங்களுக்கு மட்டுமே நான் போட்ட த ம வாக்கு எளிதாக விழுகிறதே ,மர்மம் என்ன ஜி :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... நான் பதிவினை இணைப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறதே! :) தமிழ்மணம் புரியாத புதிர்!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. நல்லதோர் செய்தி ...
  வகுப்பில் பகிரலாம்.
  ஆனால் நம்பமுடியாத சம்பவம்.
  தம +

  ReplyDelete
  Replies
  1. நம்ப முடியாதது. ஆனால் நடந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 11. எடுத்தோம் , கவிழ்த்தோம் என்று முடிவு எடுஹ்த்திருக்கிறாள் அந்தப் பெண். அவள் பெற்றோருக்கு இனிமேல் எப்பவுமே தங்கள் மகளைப் பற்றிய கவலை இருந்துக் கொண்டே தான் இருக்கும் . பெற்றோரின் நிலை மிகவும் தர்மசங்கடமே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 12. அதிர்ச்சியாகவும் கவலையாகவும்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 13. மீண்டும் வெளியேறாமல் பார்த்துக்கொள்வதில் இப்போது பெற்றோருக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் சுமைதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   Delete
 14. பதற வைத்த சம்பவம். சம்பாதிக்க ஒரு வயதிருக்கிறது, அதற்குள் தனது திறமையை வளர்த்துக்கொள்வதே நல்லது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்.....

   Delete
 15. பெற்றோருக்குப் பொறுப்பு கூடுகிறது. நல்ல காலம் டில்லி போன்ற இடங்களில் இந்தப் பெண்ணிற்கு எந்தக் கெட்ட நிகழ்வும் நிகழாமல் தப்பித்தாளே! நமக்கே இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது என்றால் அப்பெற்றோருக்கு இன்னும் பதட்டமாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 16. இதுவும் அப்பெண்ணிற்கு ஒரு அனுபவமாக இருந்திருக்கும். சில நேரங்களில் கையில் சுட்டால் தான் அது தீ என்பதை உணர முடியும். பெண்ணின் பெற்றோரை நினைத்தால் பாவமாக உள்ளது.

  எனக்கென்னவோ அப்பெண் பெற்றோரிடம் iphone கேட்டிருப்பாள், வாங்கித் தர மறுத்ததால் இந்த முடிவை எடுத்திருப்பாள் என்று தோன்றுகிறது. தைரியம் அவசியம் தான், ஆனால் ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது. இதற்கு சுற்றியிருக்கம் கெட்ட நண்பர்களும் காரணமாக இருக்கக் கூடும். தவறு என்று தெரிந்திருத்தும் செய்தால் என்ன செய்ய? சில பேருக்கு பட்டதான் புத்தி வரும் (இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்), நல்ல வேளை தவறேதும் நிகழவில்லை என்பதில் நிம்மதி.

  ~எந்த நேரத்தில், வயதில் எதுவெது நடக்க வேண்டுமோ அந்த வயதில், நேரத்தில் நடப்பது தான் சரி என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ?~ அருமை, சரியாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 17. அதிர்ச்சியான தகவல் பகிர்வு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....