திங்கள், 1 ஆகஸ்ட், 2016

காசிரங்கா தேசிய பூங்கா – செல்வது எப்படி?

காசிரங்கா தேசிய பூங்கா – செல்வது எப்படி?

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 32

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....கொஹரா நுழைவாயில் அருகே நண்பர்கள்

எங்களை அழைத்துச் சென்ற வாகனம் இருளோவென்று இருந்த கிராமத்துச் சாலைகளில் சென்று சில நிமிடங்களில் காசிரங்கா ரிசார்ட் முன்னர் நின்றது. ரிசார்ட் சிப்பந்திகளில் ஒருவர் வந்து எங்களின் உடைமைகளை எடுத்துச் சென்று இரண்டு அறைகளில் வைத்தார். அங்கே இருந்த மற்றுமொரு சிப்பந்தியிடம், முன்பதிவு விவரங்களையும் மற்ற விவரங்களையும் சொல்லி அடுத்த நாள் வனத்திற்குள் செல்ல வேண்டிய ஏற்பாடுகள் பற்றியும் விசாரித்துக் கொண்டோம்.  இங்கே வருவதற்கு முன்னரே தொலைபேசி மூலம் ரிசார்ட் உரிமையாளரிடம் பேசி வைத்திருந்ததையும் சிப்பந்தியிடம் சொல்லி ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்யும்படிச் சொன்னோம்.

வனத்துள் செல்லத் தயாராய்.....

கூடவே இன்னுமொரு விஷயமும் சொன்னோம்! இரவு உணவினை சீக்கிரம் தயார் செய்து விட வேண்டும் என்பது தான் அது! மதியம் ஒழுங்காகச் சாப்பிடவில்லையே! அவரும் இங்கே 7.30 மணிக்குள் இரவு உணவு தயாராகிவிடும் எனச் சொல்ல, எங்களுக்குத் தேவையானவற்றை – சப்பாத்தி, சில வகை சப்ஜி, ராய்த்தா, மற்றும் அசைவ உணவுகள் – சொல்லி வைத்தோம்.  பயணத்தின் அலுப்பினைப் போக்க அறைக்குச் சென்று குளித்த பிறகு ரிசார்ட் வாசலில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டு அரட்டைக் கச்சேரி நடத்தினோம்.


யானைச் சவாரி செய்ய வசதி......

ஊரே அமைதியாக இருக்கும்போது இந்த மாதிரி இடங்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான். பெரும்பாலான ஊர்களுக்கு இப்படிச் செல்லும்போது இந்த நேரங்களில் தான் வீட்டிற்கு அழைத்துப் பேசுவது வழக்கம். அந்த நாள் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்களை அலைபேசி மூலம் பகிர்ந்து கொள்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பானது தானே.....  அதுவும் பயணம் வந்திருப்பது அனைவரும் ஆண்கள் – அவரவர் இல்லத்திற்கு அழைத்து அன்றைய தினத்தின் நிகழ்வுகளை பேசுவது வழக்கமான ஒன்று – எங்களுக்குள் இதை Reporting Time என கிண்டல் செய்து பேசுவதும் உண்டு!


வனப்பகுதியில் காலைச் சூரியன்.....

சரி சற்றே இயற்கையை ரசித்த படி அமர்ந்திருக்கும் இந்த வேளையில், கொஞ்சம் மேலதிக விவரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்திருக்கிறேன்.  காசிரங்கா தேசிய பூங்கா பற்றிய மேலதிக தகவல்கள் தான். அங்கே செல்ல நினைப்பவர்களுக்குப் பயன்படும் என்ற நல்லெண்ணம் தான் காரணம்.


ஒற்றைக் கொம்பன் மூரி! அதாங்க காண்டாமிருகம்....

காசிரங்கா தேசியப் பூங்கா – அசாம் மாநிலத்தின் நகாவ்ன் மற்றும் GகோலாGகாட் மாவட்டங்களில் அமைந்துள்ளது. பூங்காவின் மொத்த பரப்பளவு 429 சதுர கிலோ மீட்டர்! பிரம்மபுத்திரா, மோரா திப்லு, மோரா தன்சிரி போன்ற நதி/ஆறுகளால் சூழப்பட்ட இந்தப் பூங்காவின் சில பகுதிகள் 40 முதல் 80 மீட்டர் உயரம் வரை இருக்கும் சிறு குன்றுகள். இது இயற்கை தந்த கொடை.  மழைக்காலங்களில் பூங்காவின் பெரும்பகுதி மடைதிறந்து பாயும் பிரம்மபுத்திராவின் தண்ணீரால் சூழப்பட, மிருகங்கள் அனைத்தும் இந்த உயர்வான பகுதிகளுக்குச் சென்று வெள்ள ஆபத்திலிருந்து தப்பித்து விடும்.


யானைச்சாவரி செய்யும் நண்பர்கள்....

எப்போது இங்கே செல்லலாம்?: பூங்கா மழைக்காலங்களில் திறந்திருப்பதில்லை. வருடத்தின் ஏழு மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும் – அதாவது நவம்பர் முதல் மே மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும்.  ஜூன் முதல் செப்டம்பர்/அக்டோபர் வரை பலத்த மழை இருப்பதால் பூங்காவிற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்தப் பூங்காவிற்கு எப்படிச் செல்வது, என்னென்ன வசதிகள் இருக்கிறது எனப் பார்க்கலாம்.....


ஓ...  மானே... மானே.... மானே... உன்னைத்தானே....

விமான வசதி:  காசிரங்காவிற்கு மிக அருகில் இருக்கும் விமான தளம் ஜோர்ஹாட். சுமார் 97 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் காங்க்டாக் நகரங்களிலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.  இல்லை எனில் Gகௌகாத்தி வரை விமானத்தில் வந்து அங்கிருந்து பேருந்து அல்லது ரயிலில் வரலாம்.தன் குட்டியுடன் ஒரு காண்டாமிருகம்....

ரயில் வசதி: காசிரங்கா பூங்காவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ஃபர்காடிங் எனும் ரயில் நிலையம் இருக்கிறது. Gகௌஹாத்தி வரை ரயிலில் வந்து, அங்கிருந்து ஃபர்காடிங் வரை ரயிலில் வர வேண்டும். பிறகு சாலை வழியே காசிரங்காவிற்கு வர வேண்டும்.


சவாரிக்குக் காத்திருக்கும் யானைகள்.....

சாலை வசதிGகௌஹாத்தி/ஜோர்ஹட் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து சாலை வழியே வரலாம்.  தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் சாலையில் வருவதும் ஒரு நல்ல யோசனையே.என்னைப் பார்க்க நீங்களும் வரலாமே.....

தங்கும் வசதிகள்: காசிரங்கா பகுதியில் நிறைய தங்கும் வசதிகள் உண்டு – அசாம் மாநில அரசாங்கமே நடத்தும் தங்கும் விடுதிகள், தனியார் தங்கும் விடுதிகள், ரிசார்ட், என நிறையவே இருக்கிறது. அனைத்திற்கும் தனித்தனி இணைய தளங்களும் உண்டு. நாள் வாடகை ரூபாய் 500 முதல் ரூபாய் 8000 வரை கூட உண்டு - காசுக்கேத்த எள்ளுருண்டை.....


நானும் உங்களுக்காகக் காத்திருக்கேன்... வரணும் சரியா?

வனத்திற்குள் செல்ல என்ன வசதிகள்: எங்கே தங்குகிறீர்களோ அங்கேயே ஏற்பாடு செய்து கொண்டால் நல்லது – உங்களை அவர்களது ஜீப்பில் அழைத்துக் கொண்டு போய் பூங்கா வாசலில் வாங்கவேண்டிய நுழைவுச் சீட்டுகள், யானைச் சவாரி/ஜீப் சஃபாரி ஆகியவற்றுக்கான கட்டணங்கள் என அனைத்தும் அவர்களே ஏற்பாடு செய்து தருவார்கள். அரசுக் கட்டணங்கள் தான். அது தவிர தங்குமிடத்தில் இருந்து சென்று வரவும் கட்டணம் வாங்குவார்கள். ஜீப் சஃபாரி மட்டும் செய்வது சரியல்ல. கண்டிப்பாக யானைச்சவாரி செய்து பார்க்க வேண்டும் – ஏனெனில் வனத்திற்குள் கோரைப்புற்கள் உயரமாக வளர்ந்திருக்கும் பட்சத்தில் ஜீப்பிலிருந்து பார்க்கும்போது மிருகங்கள் உங்களுக்குத் தெரிய வாய்ப்பு குறைவு. ஜீப் மண் சாலைகளில் மட்டும் செல்ல, யானைகள் புற்களுக்குள்ளும் செல்வதால், மிருகங்களை அதிகம் காண வாய்ப்பு கிடைக்கும்.


நாங்க எப்பவும் வரிசையா தான் போவோம்.  நீங்களும் அப்படியே வாங்க.... ஓகேவா?

சரி நண்பர்களே, எப்படிச் செல்ல வேண்டும் என்பதை சொல்லி விட்டேன். இரவு உணவு முடித்துக்கொண்டு உறங்கச் செல்ல வேண்டும். அதிகாலையிலேயே வனத்திற்குள் செல்ல வேண்டும். தயாராகக் காத்திருங்கள்.....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


28 கருத்துகள்:

 1. சுவாரஸ்யமான மற்றும் உபயோகமான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மிகவும் வித்தியாசமான ஓர் இடத்திற்கு, அவசியம் பார்க்க வேண்டிய சூழலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 3. ஆகா... நல்ல பயனுள்ள தகவல்கள்.. நமக்கு வாய்க்கின்றதோ.. இல்லையோ!..
  மற்றவர்க்கு ஆகும் அல்லவா... படங்கள் அனைத்தும் அழகு..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. போயிட்டு வாங்களேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   நீக்கு
 5. reporting time -- நன்று...

  அழகான படங்களுடன் சுவாரசியமான இடம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   நீக்கு
 6. நல்ல இடம், அழகான படங்கள், வாழ்த்துக்கள் சகோ, தொடர்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 7. நல்ல பயணம் நல்ல படங்கள் சகோதரா.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!

   நீக்கு
 8. எனக்கு அதிசயத் தகவல்களாக இருக்கின்றது ஜி
  புகைப்படங்கள் அனைத்தும் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 9. ஒரு பத்தி ரிப்பீட் ஆகிறது. (Reporting time). சரி செய்துவிடுங்கள்.

  அது சரி. உங்கள் பிரயாணத்தை உங்களுடன் வராத துணைவியோடு பகிர்ந்துகொண்டால், அவங்களுக்கு கொஞ்சம் எரிச்சல் வராது (என்னைக் கூட்டிச்செல்லவில்லையே என்று).

  போட்டோக்கள் அருமை. உங்களின் யானைச் சவாரி படத்தைப் போட்டிருக்கலாம். படத்தில் உங்கள் பெயரைப் பார்த்தபின்புதான், இயற்கை எழிலில் காண்டாமிருகத்தைக் குட்டியுடன் பார்த்திருக்கிறீர்கள் என்பது நிச்சயமாயிற்று. அருமையான, அரிதான எக்ஸ்பீரியன்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பத்தி - சரி செய்து விட்டேன். தவறினைச் சுட்டியமைக்கு நன்றி.

   நான் யானைச் சவாரி செய்தது படம் இருக்கிறது - அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதால் வெளியிடவில்லை - வரும் பதிவில் வெளியிடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன் ஜி!

   நீக்கு
 10. விலங்குகளை அவற்றின் இயற்கையான இடங்களில் சூழலில் பார்ப்பது த்ரில்தானே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா. மிகவும் பிடித்த ஒரு விஷயம் அது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. உங்கள் பின்னே நாங்களும் வரிசையாய் வரத் தயாராய் இருக்கிறோம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 12. ஆஹா... படங்கள் கலக்கல்...
  அருமையான பகிர்வு அண்ணா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 13. இதோ நாங்களும் தயார் வெங்கட்ஜி....தகவல்கள் மிகவும் பயனுள்ளது குறித்துக் கொண்டுவிட்டோம்...மிக்க நன்றி ஜி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 14. சிறப்பான தகவல்களுடன் பயணப் பகிர்வு சிறப்பு! படங்கள் அழகு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....