எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, August 18, 2016

அருணாச்சலப் பிரதேசம் – நான்காம் சகோதரி – அனுமதிச்சீட்டுஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 37

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான Drop Down Menu.....


பிரம்மபுத்திரா – ஒரு பார்வை....

எங்களின் அடுத்த இலக்கான அருணாச்சலப் பிரதேசம் நோக்கி அழைத்துச் செல்ல அசாம் மாநிலத்தின் தேஸ்பூரிலிருந்து அலைபேசி மூலமாக, முன்னரே வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். காசிரங்காவிலிருந்து தவாங் வரை சென்று அங்கே பார்க்க வேண்டிய இடங்களை எல்லாம் பார்த்து விட்டு வரும்வரை வண்டி எங்களுடனேயே இருக்கும். ஓட்டுனரும் தான்! திரும்பி வர ஹெலிகாப்டர் கிடைக்காத பட்சத்தில் அதே வண்டியில் தேஸ்பூர் வரை திரும்பிக் கொண்டு விட வேண்டும் என்பது தான் நாங்கள் அந்த வண்டியின் உரிமையாளரோடு பேசிக்கொண்ட டீல்!

நீண்ட பயணம், ஒழுங்கான சாலைகள் இல்லாதது, புதிய இடங்கள், பயணத்தில் சாலையோர உணவகங்கள் இல்லாமை என பல்வேறு அசௌகரியங்கள் இந்தப் பயணத்தில் இருக்கும் என்பது தெரிந்திருந்தாலும், எங்கள் பயணத்தின் முக்கியமான ஒரு இடமாக இந்த தவாங்க் செல்வதை வைத்திருந்தோம். எத்தனை தடங்கல்கள் வந்தாலும் இங்கே சென்றே தீருவது என்ற முடிவில் தான் இருந்தோம்.  இந்த இடத்திற்குக் கடும் குளிர் சமயங்களில் செல்ல முடியாது. மார்ச் மாதம் தான் சரியான சமயமாக இருக்கும் என்பதால் அந்த மாதத்தினைத் தேர்ந்தெடுத்தோம்.


பாலத்தின் வழியே....

இங்கே செல்ல வேண்டும் என்ற திட்டமிட்டவுடன், அதற்கான வேலைகளில் ஈடுபட்டோம். இந்தியாவிற்குள் இருந்தாலும், இந்த மாநிலத்திற்கு, மற்ற மாநிலங்கள் போல பேருந்திலோ, விமானத்திலோ சர்வ சாதாரணமாக சென்று விடமுடியாது.  அதற்கு அனுமதி வாங்க வேண்டும் – நீங்கள் இந்தியராக இருந்தாலும்! அருணாச்சலப் பிரதேசத்தில் குடியிருப்பவர்கள் தவிர அனைவருமே இந்த அனுமதிச் சீட்டைப் பெற்ற பிறகு தான் உள்ளே நுழைய முடியும். அசாம்-அருணாச்சலப் பிரதேச எல்லையிலோ, தில்லியில் இருக்கும் அருணாச்சல மாநிலத்தின் Resident Commissioner அலுவலகத்திலோ இந்த அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும். இந்த அனுமதிச் சீட்டின் பெயர் ILP அதாவது Inner Line Permit!


அசாம் – அருணாச்சல எல்லையில் அறிவிப்பு


நான் தில்லியில் இருப்பதால், தில்லியிலேயே, எனக்கும் மற்ற நான்கு கேரள நண்பர்களுக்கும் சேர்த்து அனுமதிச் சீட்டை வாங்கினேன். அதற்கு ஒரு படிவம் உண்டு. அதில் நமது முகவரி, புகைப்படம் ஆகியவற்றைச் சேர்த்து, எந்த நாட்களில் அங்கே செல்ல வேண்டும் என்ற குறிப்புகளையும் எழுதி, ஒருவருக்கு 100 ரூபாய் கட்டணமும், காலையில் கட்டினால், மாலைக்குள் அல்லது அடுத்த நாளைக்குள் அனுமதிச் சீட்டு கிடைக்கும். அந்த அனுமதிச் சீட்டு அருணாச்சலப் பிரதேசம் செல்வதற்கான பாஸ்போர்ட்! அது இல்லாமல் உள்ளே செல்லவும் முடியாது. மாநிலத்திற்குள் எப்போது கேட்டாலும் காண்பிக்கவும் வேண்டும்!


அசாம் பள்ளிச் சீருடையில் ஒரு பெண்....

இந்த பயண ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்ததால் காசிரங்காவிலிருந்து ஓட்டுனர் டோர்ஜியுடன் [இவர் ஒரு நேபாளி!] அருணாச்சலப் பிரதேசம் நோக்கிய பயணத்தினைத் துவங்கினோம். காசிரங்காவிலிருந்து தேஸ்பூர் வரை அதிவேகமாக ஓட்டிக் கொண்டிருந்தார். நெடுஞ்சாலை என்பதால் அத்தனை வேகம். பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு ஏன் இத்தனை வேகமாக ஓட்டுகிறார் என்ற எண்ணம் வர, அவரிடம் கேட்டோம். இங்கே தான் இத்தனை வேகம், மலைப்பகுதிக்குச் சென்று விட்டால் இத்தனை வேகமாக ஓட்ட முடியாது என்று சொன்னார்.

ஆனாலும் கொஞ்சம் நிதானமாகவே வண்டி ஓட்டச் சொல்லி சில நிமிடங்களுக்குள் பாதையின் குறுக்கே ஒரு நாய் ஓடி வர வந்த வேகத்திற்கு Brake அடித்தால் என்னாவது என அப்படியே அடித்துவிட்டார்.  சில நொடிகளில் ஒரு மரணம். பின்பக்கம் திரும்பிப் பார்க்க எங்களில் யாருக்கும் தைரியமில்லை. ஓட்டுனர் டோர்ஜியும் கொஞ்சம் கலங்கிவிட்டார். அதன் பிறகு சீரான வேகத்தில் வாகனத்தினைச் செலுத்தினார். முன்னரே இப்படி ஓட்டியிருந்தால் ஒரு உயிரிழப்பினைத் தடுத்திருக்கலாம்! வேகம் விவேகமல்ல என்பது எப்போது தான் புரியுமோ......

காசிரங்கா பூங்காவிலிருந்து தவாங், அருணாச்சலப் பிரதேசம் வரை சுமார் 360 கிலோமீட்டர் – என்றாலும், தொடர்ந்து பயணித்தாலும் 12 மணி நேரத்திற்கு மேலே ஆகும் – சாலைகள் அப்படி – பாதிக்கும் மேல் மலைப்பிரதேசம் – மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் பயணிக்க முடியும்.  நாங்கள் புறப்பட்டது மதியம் 1 மணிக்கு. என்பதால் மொத்த தொலைவும் ஒரே நாளில் பயணிக்கப் போவதில்லை. மேலும் இரவு நேரத்தில் இந்த பாதைகளில் பயணிப்பது அவ்வளவு சுலபமல்ல!


தேஸ்பூர் பேருந்து நிலையம்....

தேஸ்பூர் வரை வந்து, அங்கே ஓட்டுனருடன் வந்த நபரை இறக்கி விட்டு, வண்டியின் உரிமையாளரிடம் பேசி, அவருக்குக் கொஞ்சம் முன்பணம் கொடுத்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. அன்று இரவு தங்க வேண்டிய இடத்திற்குச் செல்வதற்கு முன்னர் வழியில் வேறு ஒரு இடமும் பார்த்தோம்.  அந்த இடம் அழகிய பூக்கள் நிறைந்த இடம்! அந்த இடம் என்ன, வழியில் சாப்பிட்ட உணவு, மேலும் சில அனுபவங்கள், எங்களுடன் சேர்ந்து கொண்ட மற்றொரு நண்பர் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


30 comments:

 1. அந்த நாய்............. ப்ச்... :-(

  பள்ளிச்சீருடை அருமை! குளிர்காலத்துக்கு மேலே ஸ்வெட்டர் போட்டுக்குவாங்க போல!

  நிறைய புது இடங்களை உங்க தயவால்தான் பார்க்கிறோம்! இனிய பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. அந்த நாய்..... மறக்க முடியவில்லை....

   உங்கள் மூலம் நானும் பல இடங்களுக்குச் சென்று வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. இந்தியாவின் ஓர் அங்கமான் திகழும் ஓர் மாநிலத்திற்குள் செல்வதற்கு அனுமதிச் சீட்டுத் தேவையா?
  வியாப்பாகவும் அதே சமயம் வேதனையாகவும் இருக்கிறது ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வியப்பு தான் ஐயா. வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் இந்த ILP வாங்க வேண்டும். நாகாலாந்து மாநிலத்திற்கும் உண்டு - சில விதிவிலக்குகள் உண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. பாவம் அந்த நாலுகால். இந்த பாஸ்போர்ட் சமாச்சாரம் தப்பு என்பது மாதிரி எல்லாம் முன்னர் செய்தி வந்த ஞாபகம். சீனாவின் அக்கிரம நடவடிக்கை என்றும் படித்த நினைவு. ஹெலிகாப்டரில் பயணமா? பேஷ்..

  தேஸ்பூர் பஸ்ஸ்டான்ட்டும் வாசல் கடைகளும் நம்மூர் பூந்தமல்லி பாஸ்ட்டாண்டை போலவே இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. நாலுகால் பாவம் தான்.... :(

   அருணாச்சலப் பிரதேசம் - பாஸ்போர்ட் வாங்க வைப்பதிலும் அரசியல் கலப்பிருக்கலாம்.... திரும்புகையில் ஹெலிகாப்டர் பயணம் செய்ய எண்ணம்.....

   பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. பிரம்மபுத்திரா...அழகு...

  highways ல் இவ்வாறு அடிப்பட்ட நாய்களை பார்க்கும் போது...மனம் அங்கேயே நின்று விடும்...ம்ம்...பாவம்..

  ReplyDelete
  Replies
  1. பிரம்மபுத்திரா வெகு அழகு..... நதி/கடல் என எந்த நீர்நிலையைப் பார்த்தாலும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 5. நாங்கள் அருணாச்சலப் பிரதேசம் போனபோது I.L.P. பெறாததால் பஸ்ஸில் இருந்து இறக்கிவிடப்பட்ட அனுபவம் இருக்கிறது. அருமையான பயண அனுபவம்.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. ஓ.... உங்களுக்கு இந்த மோசமான அனுபவம் கிடைத்ததா..... கொஞ்சம் கடினமான விஷயம் தான். ILP இல்லை எனில் தயவு தாட்சண்யம் இல்லாமல் பேருந்தில் இருந்து இறக்கி விடுவார்கள். அதை வாங்கிய பிறகு தான் உள்ளே நுழைய அனுமதி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 6. சீனாவை ஒட்டி இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் செல்ல இந்த ilp பாஸ் வாங்கவேண்டி இருக்கும் என நினைக்கிறேன் !சரிதானா :)

  ReplyDelete
  Replies
  1. வட கிழக்கு மாநிலங்களில் அருணாச்சல் பிரதேசம் தவிர சிலருக்கு நாகாலாந்து செல்லவும் தேவை. மற்ற மாநிலங்களுக்கு அவசியம் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. நேற்றுகூட ஆங்கில இந்து நாளிதழில் ஏழு சகோதரிகள் நாட்டைப் பற்றிய ஒரு பதிவினைக் கண்டேன். வியப்பான செய்திகள், விறுவிறுப்பான நிகழ்வுகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஓ... இந்து நாளிதழில் வந்திருக்கிறதா கட்டுரை... நானும் படிக்க முயல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. நாயை நினைக்கையில் பரிதாபம் ஏற்படுகின்றது! பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட் என்று ஸ்ரீராம் சார் சொல்லியிருக்கும் உதாரணம் சிறப்பு! அசாம் பள்ளி சீருடை அசத்தலாக இருக்கிறது! சுவாரஸ்யமாக இருக்கிறது தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நாய் - பரிதாபம் தான்....

   பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ட்! - :))

   அசாம் பள்ளி சீருடை நன்றாகவே இருக்கிறது. ஒன்பதாம் வகுப்பிலிருந்து இந்த உடை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. இங்கெல்லாம் வாழ்க்கையில் எப்போ போறது.. உங்கள் இடுகையை ஆவலுடன் படித்துவருகிறேன். பள்ளிச்சீருடையே வித்தியாசமாயிருக்கு. சாப்பாட்டுக்கு என்னவெல்லாம் கஷ்டப்பட்டீங்களோ.

  ReplyDelete
  Replies
  1. போக வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள். எனக்கு வாய்ப்பு கிடைத்த போது சென்றேன். பல இடங்களுக்குச் செல்வது குறித்த கனவு எனக்கும் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 10. வணக்கம் சகோதரரே

  சுவாரஸ்யமான விஷயங்கள், உபயோகமான தகவல்களுடன் கூடிய இனிய பயணம். பிரம்மபுத்திராவின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது. ஒரு உயிரின் மதிப்பை உணரும் போது கண்கள் கலங்குகிறது. வேகமான பயணங்களில் இந்த வேதனையான சம்பவங்கள் நடந்து முடிந்து விடுகிறது. இனி தொடரும் பயணத்தில் நானும் பயணிக்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. முந்தைய பகுதிகளையும் முடிந்தால் படித்துப் பாருங்கள். தொடர்ந்து பயணிக்கப்போவது அறிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 11. ஆஹா... வேகத்தின் காரணமாக பாவம் நாய்....

  பள்ளிச் சீருடை அழகு...

  ReplyDelete
  Replies
  1. நாய் - இன்னமும் நினைத்தால் சோகம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 12. அருணாச்சலப் ப்ரதேஷ் நுழைவு பற்றிய புதிய தகவல் அறிய முடிந்தது ஜி. ஆமாம் வேகம் விவேகமல்ல இப்படித்தான் பல உயிர்கள் பலியாகின்றன...

  தொடர்கின்றோம் தங்கள் பயணத்தை...

  ReplyDelete
  Replies
  1. வேகம் விவேகமல்ல... அதைப் புரிந்து கொள்வது தான் பலருக்கும் கசப்பாக இருக்கிறது....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. பிரமம்ம புத்திரா அழகோ அழகு. அட ஹெலிக்காப்டர் பயணமா... உங்கள் பயண அனுபவத்தை அறிய....ஆவல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. வண்டியோட்டிகளுக்குஎன்று நிரந்தர ஐ எல் பி உண்டா. பயணங்கள் இனிமையானவை அனுபவம் தருபவை.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான வண்டியோட்டிகள் அருணாச்சல வாசிகள்.... அசாம் மாநிலத்தவர்களாக இருந்தால் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளும் வசதி உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 15. பிரம்மபுத்திராவைப் பார்ப்பதற்குப் பிரமிப்பாகவுள்ளது. தமிழகத்திலும் ஒரு பிரம்மபுத்திரா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமென்று தோன்றுகிறது. எனக்கும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளுக்குச் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. உங்களுடையப் பயணக் கட்டுரைத் தொகுத்து வாசித்தாலே பெரும்பாலான விவரங்கள் கிடைத்துவிடும். அப்படியொரு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் உங்களைத் தொடர்புகொள்வேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது சென்று வாருங்கள்..... தகவல்கள் வேண்டுமெனில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....