எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, September 19, 2016

தீப்பிடித்து எரிந்த மலை.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 50

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


கோர்சம் ஸ்தூபா...

கோர்சம் ஸ்தூபா [Gorsam Stupa]-விலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே வண்டியை, ஓட்டுனர் ஷம்பு நிறுத்திவிட, நாங்கள் இறங்கி நடக்க ஆரம்பித்தோம் – வண்டியிலேயே செல்லலாமே என்று சொன்னதற்கு தூரத்தில் தெரிந்த புகைமண்டலத்தினைக் காண்பித்தார் என்று சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன்.  நாங்களும் மற்ற பழங்குடி இனத்தவர்களைத் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம். அருகே செல்லச் செல்ல மலையே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது!


தீப்பிடித்து எரிந்த மலை...

மலைகளில் உள்ள காய்ந்த மரங்களும், கீழே விழுந்திருக்கும் சருகுகளும் கொழுந்து விட்டு எரிய, பெரிய கிளைகள் விழ, அவை மலையில் இருந்த கற்கள் மீது பட்டு அவையும் கீழே உருண்டு வீழ்ந்து கொண்டிருந்தன. சூடான கற்களும், மரக்கிளைகளும், கரித்துண்டுகளும் வீழ்வதைப் பார்க்க முடிந்தது. அந்த மலையோரத்திலேயே பாதையும் இருக்க, ஒரு சில இடங்களில் பாதை மீதே சில கற்களும், மரத்துண்டுகளும் வீழ்ந்து கொண்டிருந்தது.


நெருப்பில்லாமல் புகை வருமா?

எரிந்து கொண்டிருக்கும் மலையிலிருந்து வெப்பம் பரவ, அந்த பகுதியே சூடாக இருந்தது. கைகளில் வைத்திருந்த காமிராவுடன் எப்படி பாதையைக் கடப்பது என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தோம். எங்கள் மீதோ, தப்பித்தவறி கேமரா மீதோ கற்கள் விழுந்தால் என்னாவது என்ற யோசனை எங்களுக்கு! தங்களது குழந்தைகளை முதுகில் கட்டியிருந்த பழங்குடிப் பெண்களும், ஆண்களும் அந்தப் பாதையை ஓட்டமாய் ஓடிக் கடக்க, எங்களுக்கும் வேகம் வந்தது. காமிராவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு வேகமாக ஓடினோம்.....


ஓட்டம்......

அப்படி ஓடிய தொலைவு 200 மீட்டருக்கு மேல்! அந்த நேரத்தில் எங்கள் ஓட்டத்திற்கு ஆன நேரத்தினை கணக்கெடுத்திருந்தால், எங்களை ஓட்டப்பந்தயத்தில் ஓட அழைத்திருக்கலாம்! அவ்வளவு வேகம்! ஆபத்தினைக் கடந்து சற்று தொலைவில் நின்றவுடன் முதலில் செய்த வேலை – எங்களுக்கோ, காமிராவுக்கோ சேதம் ஏதும் ஆகியிருக்கிறதா எனப் பார்த்தது தான்!  எப்படித் தீப்பிடித்தது, எங்கிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரும் என்ற யோசனையும் வர, நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.


பிரசங்கம் கேட்கும் மக்கள்.....
பின்புலத்தில் புகைந்து கொண்டிருக்கும் மலை....

மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவுடன், அங்கே இருந்த சில ராணுவ வீரர்கள் எங்களுடன் சம்சாரிக்கத் துவங்கினார்கள்! அவர்களும் கேரளத்தினைச் சேர்ந்தவர்கள்.  Border Roads Organization [BRO] தவிர General Reserve Engineer Force [GREF] என்று அழைக்கப்படும் பிரிவினர்களும் அப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.  சாலைகள் அமைப்பது, பாலங்கள் அமைப்பது என மிகக் கடினமான வேலைகளை அப்பகுதியில் இந்த பிரிவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.  ZEMITHONG பகுதியிலும், எல்லைப் பகுதிகளிலும் இப்படி பல ராணுவ வீரர்களின் பாசறைகள் இருக்கின்றது. திருவிழா சமயத்தில் பழங்குடி மக்களின் வசதிக்காக பல வேலைகளை அவர்கள் செய்து தருகிறார்கள்.


ஊரும் வீடுகளும்.....

அந்த வீரர்களிடம் மலை தீப்பிடித்தது குறித்தும் பேசினோம் – சில பழங்குடி மக்கள் திருவிழா சமயத்தில் இப்படி எரித்து விடுவது உண்டு என்றும் ராணுவ வீரர்கள் தீ பரவுவதை கடுமையான பணி செய்து அணைப்பார்கள் என்றும் சொன்னார் ஒரு வீரர். மலை மீது ஏறி யார் தீ வைக்கிறார் என்பதும் தெரியாமல் யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்றும் சொன்னார். எது எப்படியோ, நீண்ட ரப்பர் குழாய்கள் கொண்டு நீரைப்பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயற்சிகள் எடுப்பது பற்றிச் சொன்னதோடு வேறு ஒரு விஷயமும் சொன்னார்!


ஸ்தூபா – வேறொரு கோணத்தில்.....

அந்த விஷயம் – மதிய உணவு பற்றியது! திருவிழா நடக்கும் இடத்தில் அருணாச்சலப் பிரதேச பாரம்பரிய உணவு தான் கிடைக்கும். அதனை நாம் சாப்பிடுவது கடினம். ராணுவ வீரர்களும் இங்கே உணவுக் கூடங்கள் அமைத்து உணவு விற்பனை செய்கிறார்கள் என்பது தான் அந்த விஷயம்.  திரும்பி வரும்போது அங்கேயே உணவு உண்ண வேண்டும் என்று சொல்லி எங்களை திருவிழாவைப் பார்த்து விட்டு வாருங்கள் என வழி அனுப்பி வைத்தார்கள்.


வித்தியாசமான தொப்பி.....

நாங்களும் விழா நடக்கும் இடத்தினை நோக்கி நடந்தோம்.  வழியெங்கும் மோன்பா என்றழைக்கப்படும் ஒரு பிரிவு அருணாச்சலப் பழங்குடியினர் அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தார்கள். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தலையில் ஒருவித தொப்பி அணிந்திருந்தார்கள் – வித்தியாசமான தொப்பி அது – நான்கு ஐந்து குச்சிகள் மாதிரி நீட்டிக்கொண்டிருக்க மிக வித்தியாசமாக இருந்தது அந்தத் தொப்பி! யாக் என அழைக்கப்படும் மிருகத்தின் முடியிலிருந்து இந்த தொப்பியைத் தயார் செய்கிறார்கள். யாராவது ஒருவரையாவது அத்தொப்பியுடன் புகைப்படம் எடுக்கலாம் என்றால் கேட்காமல் எடுத்து பிரச்சனையில் மாட்டிக் கொள்வோமோ என்ற எண்ணமும் வந்தது.


தொப்பி – வேறொரு கோணத்தில்.....

ஒரு மூதாட்டியும் அவரது கணவரும் அவர்களது பாரம்பரிய உடை-தொப்பியோடு வர, அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என ஹிந்தியில் கேட்க, ஒன்றுமே சொல்லவில்லை.  காமிராவினைக் காட்டி சைகையாலும் கேட்க - சிரித்தபடியே தலையை ஆட்டி மறுத்து விட்டார்கள். வேறு வழியில்லை – தெரியாமல் தான் புகைப்படம் எடுக்க வேண்டும் என நினைத்தபடியே தொடர்ந்து முன்னேறி நாங்கள் திருவிழா நடக்கும் திடலுக்கு வந்து சேர்ந்திருந்தோம்.


பிரசங்கம் கேட்கும் மக்கள்.....

Gorsam Stupa-வின் எதிரே ஒரு பெரிய திடல் – அந்தத் திடலில் அமைத்திருந்த பந்தலில் 14வது Thegtse Rinpoche பிரசங்கம் நிகழ்த்திக் கொண்டிருக்க, அனைத்து பழங்குடியினரும் திடலில் கீழே அமர்ந்து கவனமாக பிரசங்கத்தினைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவர் பேசுவது ஒன்றுமே எங்களுக்குப் புரியவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை! பழங்குடியினர் மொழியும் தெரிந்திருந்தால் என்ன சொல்கிறார் என்று கேட்டிருக்கலாம்! புரியாமல் கேட்டு என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தபடியே முன்னே சென்றோம்.


நம்மைப் பார்க்கும் கண்கள்.....

எங்கள் கண்ணெதிரே பிரம்மாண்டமான Gorsam Stupa தெரிய, அதை நோக்கிச் செல்லும் பாதையில் நடந்தோம். இரண்டு பக்கங்களிலும் மக்கள் கூட்டம், சில கடைகள், தற்காலிக கடைகள் என இருக்க பார்த்தபடியே நடந்தோம்.  பழங்குடியினர் பலரும் எதிரே இருந்த ஸ்தூபத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள்.  ஸ்தூபாவின் அனைத்து பக்கங்களிலும் இரண்டு இரண்டு கண்கள் வரைந்திருக்க, அக்கண்கள் எங்களையே பார்ப்பது போல இருந்தது. அது என்ன, அங்கே என்ன விசேஷம், அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி....

26 comments:

 1. நாங்கள் நேபாளத்தில் கண்கள் வரையபட்ட கோவில்கள் பார்த்தோம்.
  தலை தொப்பி அழகு.

  ReplyDelete
  Replies
  1. திபெத்-திலும் இம்மாதிரி உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 2. அருமையாக இருக்கிறது. தொடர்கிறேன். பழங்குடியினர் ஏன் காடுகளில் தீ வைக்கவேண்டும்? சத்தியமங்கலம் வனப்பகுதியில் அவ்வப்போது இந்தமாதிரி மரங்கள் உரசி தீப்பிடிக்கும். அதுவே, சந்தன மரங்களைத் திருடிவிட்டு, கணக்கு சரிபண்ணுவதற்காக வனத்துறையைச் சேர்ந்தவர்கள் தீ வைத்துவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  14வது ரின்போச்சேவைப் பார்த்தீர்களா? படத்தைக் காணோமே.. அவர் திபெத்திய religious leader.

  மூக்கும் நாக்கும் tuneஆகலைனா, வடகிழக்கில் எங்கேயும் பயணிக்க இயலாது போலிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சந்தன திருட்டு - இங்கே திருட்டு நடக்க வாய்ப்பில்லை..... வனத்துறையினர் செயல் - :(

   14வது ரின்போச்சேவை தூரத்திலிருந்து பார்த்தோம். தெளிவான படங்கள் இல்லை. அதனால் இணைக்கவில்லை.

   மூக்கும் நாக்கும் tune ஆகலைன்னா - :) சரி தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. காடு எரியும் காட்சி.. படங்களைப் பார்க்கும் போதே அதிர்ச்சியாக இருக்கின்றது..

  நேரில் பார்த்த தங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?..

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்க்கும்போது கொஞ்சம் திகில் தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. பயணத்தில் காட்டுத்தீயும் பார்த்தாயிற்று

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 5. காடு எரிதலுடன் புகை மூட்டமும்
  பயமுறுத்துகிறது
  அந்தச் சூழலை புகைப்படமும்
  தங்கள் எழுத்தும் கண் முன் நிறுத்தியது
  அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. இந்த முறை புகைப்படங்கள் அனைத்தும் பிரமிக்க வைக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 7. படத்தைப் பார்த்தால்... புத்த மதத்தை சார்ந்தவர்கல் போலிருக்கிறார்கள் இந்த பழங்குடிகள் !

  ReplyDelete
  Replies
  1. புத்த மதத்தினை தான் இவர்கள் தொடர்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 8. வித்தியாசமான இடம், நிகழ்வு, அருமையான படங்கள். பாராட்டுகள்.
  மலைத்தீ பற்றிய செய்தி வியப்பைத் தந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. பிரமிக்க வைக்கும் படங்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 10. ஹப்பா காட்டுத்தீ...நல்ல அனுபவம் என்று சொல்லுங்கள்...

  ஓ 14வது ரிம்போச்சே!!! இந்த ரிம்போச்சே பற்றிய அடிப்படையில் ஒரு மலயாளப்படம் பெயர் யோதா அது தமிழில் அசோகன் என்று டப் செய்யப்பட்டது நல்ல படம். மோஹன்லால் நடித்தபடம்..

  ஸ்தூபத்தைப் படித்துவிட்டுத்தன் இங்கு வந்தோம்...தொடர்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 11. பயங்கர அனுபவம். நல்ல படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. தொப்பி நல்லாயிருக்கு...
  பிள்ளையார் பட்டியில் ஒரு பிள்ளையார் வரைந்து வைத்திருப்பார்கள். எங்கு நின்று பார்த்தாலும் நம்மைப் பார்ப்பது போல் இருக்கும்... அதே கண்கள் இங்கும்...

  எரியும் மலை படங்கள் அழகு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....