செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ஏழாங்கல் – விளையாட்டுப் பாடல்கள் - நினைவுகள்....

மனச் சுரங்கத்திலிருந்து.....

பாட்டு – நம்ம ஊர்ல எல்லாத்துக்கும் ஒரு பாட்டு இருக்கு. நிலத்தில் வேலை செய்பவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என பலரும் தங்களது வேலையின் கடுமையை மறக்க, உற்சாகமாக வேலை செய்ய எதையாவது பாடிக் கொண்டே இருப்பார்கள். வேலைக்கு வேலையும் நடக்கும், மனதும் சந்தோஷமாக இருக்கும்.  பணிச்சுமை தெரியாம இருக்கும். இன்றைக்கும் நமது ஊர்களில் பலர் இட்டுக்கட்டி பாட்டுகள் பாடுவதைக் கேட்கவே சுகமாக இருக்கும். 

அம்மாவுக்கு ஒரு பழக்கம் – வீட்டில் வேலை செய்தபடியே ஏதாவது சினிமா பாடலை - பழைய பாடல் முதல் புதிய பாடல் வரை எதையாவது முணுமுணுத்தபடியே இருப்பார். அவருடைய சின்ன வயதில் இப்படி சினிமா பாட்டு பாடி அப்பா/சித்தியிடம் அடி வாங்கிய அனுபவங்கள் அவருக்கு உண்டு என்று அடிக்கடி சொல்வார்.  எங்களுக்கு நினைவு தெரிந்து, அவர் வேலை செய்யும் போது நிறைய பாடுவதைக் கேட்டு இருக்கிறோம்.  இப்போது பாடுவது குறைந்து விட்டது என்றாலும் எப்போதாவது ஒன்றிரண்டு வரிகள் பாடுவதுண்டு.

எங்களுடைய விடுமுறை நாட்களில் பல்லாங்குழி, தாயம் [5 காய்], 12 காய் வைத்து விளையாடும் ஏரோப்ளேன் தாயம், ஐந்தாங்கல், ஏழாங்கல் என நிறைய விளையாட்டு அம்மா தான் சொல்லிக் கொடுத்தார்கள். இதில் பெரும்பாலனானவை பெண்கள் விளையாடும் விளையாட்டு என்றாலும் வீட்டில் நானும் விளையாடி இருக்கிறேன். ஐந்தாங்கல், ஏழாங்கல் விளையாட்டுகளுக்குத் தகுந்த பாடல்களையும் அம்மா பாடுவார்.  நானும்! சில பாடல்கள் மட்டும் எனக்கு நினைவில் இருக்கிறது.



படம்: இணையத்திலிருந்து...


சிறுவயதில் இந்த ஏழாங்கல் விளையாடுவதற்கென்றே கூழாங்கற்களை பொறுக்கி எடுத்து வைத்திருப்போம். அம்மா, நாங்க மூணு பேர், பக்கத்து வீட்டு ட்ரைவரூட்டம்மா, ஸ்ரீமதி என நிறைய பேர் இந்த விளையாட்டுகளை விளையாடுவோம். விளையாடும் முறை பலருக்கும் தெரிந்திருக்கலாம். ஏழு கல்களையும் கீழே போட்டு, அதில் இருந்து ஒன்றை எடுத்து, மேலே போட்டு அது கீழே வருவதற்குள், கீழே இருக்கும் கற்களை ஒன்றை எடுத்து, மேலிருந்து வருவதைப் பிடிக்க வேண்டும். மீண்டும் கல்லை மேலே போட்டு, இன்னுமொரு கல்லை எடுத்து, மேலிருந்து வருவதைப் பிடிக்க வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக ஆறு கற்களையும் எடுத்து மேலிருந்து வருவதையும் பிடிக்க வேண்டும்.

பிறகு திரும்பவும் ஏழு கற்களையும் கீழே போட்டு, ஒரு கல்லை மேலே போட்டு, கீழே இருக்கும் ஆறு கற்களை, இரண்டிரண்டாக, மூன்று, மூன்றாக, நான்கு-இரண்டாக, ஐந்து-ஒன்று, ஆறு என எடுக்க வேண்டும். இந்த விளையாட்டுக்கு பாட்டும் உண்டு. மேலே போடும் கல் கீழே விழுந்தாலோ, கீழிருக்கும் கற்களை முறைப்படி எடுக்கவில்லை என்றாலோ அவுட். அடுத்தவர்கள் விளையாடுவார்கள்.  இப்படி நேரம் போவது தெரியாமல், நாள் முழுவதும் விளையாடுவார்கள்!

இந்த முறை திருவரங்கம் சென்றபோது, அம்மாவினை அந்தப் பாடல்கள் நினைவில் இருக்கிறதா எனக் கேட்க, நினைவில் இருந்தவரை சொன்னார்.  அதை மொபைலில் சேமித்து வைத்தேன்!

ஒவ்வொன்றாய் கற்கள் எடுக்கும்போது,

“அல்லல்ல, அரசல்ல, நீரோடு, நெத்திக்கொண்டு, பழம் பழுக்க, பலாச்சுளை! என்றும்,

இரண்டு இரண்டு கற்களாக எடுக்கும்போது,

“ஈரிருச்சுக்கோ, பூவைப் பறிச்சுக்கோ, பொட்டிக்குள்ள வச்சுக்கோ!  என்றும்,

மூன்று மூன்றாக எடுக்கும்போது,

“முக்கோட்டு சிக்கோட்டு பாவக்காய், முள்ளில்லாத ஏலக்காய் என்றும்,

நான்கு-இரண்டாக எடுக்கும்போது,

நாங்குத்தி [நான்கு திக்?] ராஜா மலைமேலே, நானும் தோழியும் மெத்தை மேலே என்றும்,

ஐந்து-ஒன்று என எடுக்கும்போது,

ஐவர் அரைக்கும் மஞ்சள், தெய்வம் குளிக்கும் மஞ்சள் என்றும், வரிசையாக பாடல்கள்..... 

அம்மாவைச் சொல்லச் சொல்லி அதை சேமித்து வைத்தேன். ஒலி வடிவில் கேட்கலாமா....




இப்போதெல்லாம் இந்த விளையாட்டுகளை கிராமங்களில் கூட விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. பல்லாங்குழி, தாயம், ஏழாங்கல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை அனைவருமே மறந்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.  இந்த முறை அம்மாவும், எனது மகளும் சேர்ந்து பல்லாங்குழி விளையாடினார்கள். எனக்கும் பார்க்கும்போது கொஞ்சம் ஆசை வந்தது!

இன்றைக்கு குழந்தைகள், வீட்டை விட்டு வெளியே சென்று விளையாடுவதை விடுங்கள் வீட்டில் கூட விளையாடுவதில்லை – விளையாடினாலும் கணினியிலோ, அலைபேசியிலோ, கண்களில் கண்ணாடி அணியும் அளவுக்கு விளையாடுகிறார்கள் – Temple Run, Pokemon Go என்று விதம் விதமாய் ஆட்டம்..... பழமையான விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.

அம்மா காலத்து விளையாட்டும், அதற்கான பாடல்களும், அதன் நினைவுகளையும் “மனச் சுரங்கத்திலிருந்துஎன்ற பகுதியில் சேமித்து வைக்கவும், உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் நினைத்ததால் இங்கேயும் வெளியிட்டேன்....

பதிவு பற்றிய உங்கள் கருத்துகளையும், உங்களுக்கும் இப்படி பாடல்கள் தெரிந்தால் அவற்றையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்

புது தில்லி. 

38 கருத்துகள்:

  1. இன்றைய குழந்தைகள் விளையாட்டு என்பதே என்னவென்று தெரியாமல் வளர்கிறார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. அருமை.. மனச்சுரங்கத்திலிருந்து அழகிய பாடல் வரிகள்..

    ஆனந்தமான மலரும் நினைவுகள்.. இப்படியொரு காலம் மீண்டும் வருமா!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  3. நான் ”அம்மாவின் பொக்கிஷங்கள்” என்று பாண்டி விளையாட்டு பாடல், இன்னும் சில பாடல்கள் போட்ட போது என் அம்மாவும் பாடுவார்கள் போட வேண்டும் என்று பின்னூட்டம் போட்டீர்கள். இவ்வளவு நாள் ஆகி விட்டது. இன்னும் நிறைய அம்மாவின் பாடல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வெங்கட்.

    அம்மாவின் குரல் இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  4. அம்மா குரல் கேட்டு மிக மகிழ்சசி. இன்னும் நான் கல் பொறுக்கவும் நிறுத்தவில்லை. பேரனுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். ஏழாங்கல் விளையாடும் போது இரு பாதங்களையும் சேர்த்து வைத்து விளையாடுவோம் அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். ரயிலில் போகும் போது கூட பர்த்தில் உட்கார்ந்து விளையாடி இருக்கிறோம் மிக மிக நன்றி வெங்கட் அம்மாவுக்கு என் அன்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

      நீக்கு
  6. விளையாடும்போது பாடல் என்பது ஒரு திரைப்படத்தில் பெண்கள் சடுகுடு ஆடும்போது பாடும் பாடல்தான் ( பாட்டின் வரிகள் நினைவில்லை) நினைவுக்கு வருகிறது ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காதுஅதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது என்னும் திரைப்பாடலும் ஞாபகத்துக்கு வருகிறது என் அப்பா வழிப்பாட்டி காலையில் வேலையினூடே ”ஐயனே உம்முடைய அழகான பாதத்தை அர்ச்சித்திருப்பதும் நான் எப்போ” என்று பாடுவதும் இப்போதும் காதுகளில் ரீங்கார மிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  7. இப்பதிவை மனச் சுரங்கத்திலிருந்து வந்த
    வைரம் எனச் சொல்லலாம்
    கிராமத்தில் இதுபோன்ற சூழலில்
    வளர்ந்திருந்தபோதும் கூட
    தற்சமய்ம் எதுவும் நினைவில் இல்லாததும்
    கிராமம் நகரமாகி நரகமாகிப் போனதும்
    அதிக வருத்தம் அளிக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. பழைய நினைவுகளை வெளியே எடுத்த பதிவு இது. நானும் இந்த விளையாட்டுக்களை விளையாடி இருக்கிறேன். ஆனால் பாடல்கள் தெரியாது. இப்போது பாடல்களையும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன். இனி விளையாடும்போது பாடிக்கொண்டே விளையாட வேண்டும்.
    நல்ல பதிவு!அம்மாவின் குரல் இனிமை. எனது நமஸ்காரங்களை அவருக்குச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா பாலாஜி!

      நீக்கு
  11. வெங்கட் ஜி அருமை அருமை! விளையாடியது உண்டு...
    இதே ப்போன்று ஒரு குடம் தண்ணி விட்டு ஒரு பூ பூத்தது....ரெண்டு குடம் தண்ணி விட்டு ரெண்டு பூ பூத்தது....மூணு குடம் தண்ணி விட்டு மூணு பூ பூத்தது என்று இப்படியே தொடரும்...இரு சிறுவர்கள் கைகளைத் தூக்கி சேர்த்துப் பிடித்துக் கொள்ள பந்தல் போன்று...அடிவழியாக ஒருவர் போய் வர வேண்டும்...திடீரென்று கைகளைத் தாழ்த்தி அடியில் செல்பவரை லாக் செய்வது...இதில் பலரும் அடி வழி செல்லலாம் லாக் செய்யப்படுபவர் அவுட்...இப்படி...

    அம்மாங்குத்து, திம்மாங்குத்து, பாட்டிக் குத்து, பேரன் குத்து, பிள்ளையார் குத்து....பிடிச்சுக்கோ குத்து என்று இரு கைகளையும் சேர்த்து விரித்து வைத்து மற்றொருவர் அதற்குள் குத்துவது போல் கையை விட்டு எடுப்பது ...பிடித்து விட்டால் கை விரித்தவருக்குச் சந்தோஷம்..

    என்ன அன்னம் - சோத்தன்னம், என்ன சோறு - பழஞ்சோறு, என்ன பழம் - வாழைப்பழம்
    என்ன வாழை - திரி வாழை, என்ன திரி - விளக்குத்திரி, என்ன விளக்கு - குத்துவிளக்கு
    என்ன குத்து - கும்மாம்குத்து

    இப்படிப் பல..நல்ல நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள் ஜி.....பதிவாக்கியதற்குப் பாராட்டுகள். அம்மாவிற்கு வணக்கங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பகிர்வு உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  12. நானும் எனது மகனும் பல விளையாட்டுகள் விளையாடியிருக்கிறோம்...சில விளையாட்டுகள் சில வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லும்..நான் அதனையும் கூடவே மகனுக்குச் சொல்லிக் கொடுத்து விளையாடியதுண்டு..ரோஷிணிக் குட்டிக்குப் பாட்டியிடமிருந்து கற்க நிறைய இருக்கிறது...அருமை!!!! நன்றி ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. எங்கள் பகுதியில் கல்லாங்காய் என்று சொல்லுவோம்! தங்கைகள் அவர்கள் தோழிகளோடு விளையாடுகையில் ஒன்றிரண்டு முறை கூட சேர்ந்து ஆடியதுண்டு. ஆனால் பாட்டெல்லாம் பாட மாட்டார்கள். நான் அவ்வளவு பெஸ்ட் அல்ல இந்த விளையாட்டில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  14. நல்ல நினைவோடை. இந்த விளையாட்டு நல்லதொரு பயிற்சியாக இரு(ந்திரு)க்கும். அதற்குப் பாடும் பாடல் வரிகளும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. அம்மா பாடுவது நல்லாயிருக்கு...
    நாங்க பாட்டெல்லாம் பாடுவது இல்லை... இதே முறையில்தான் விளையாடுவோம்....
    இதற்கு எங்க பக்கம் சொட்டாங்காய்...

    5.7 கல், கூட்டுச் சொட்டாங்காய்... (நாலு கல்லு சேர்த்தால் ஒரு கூடு), வெட்டுவான்... மேல ஒரு காயை தூக்கிப் போட்டு கீழ இருக்கும் காயை எடுத்து மேலிருந்து வரும் காயை வெட்டிப் பிடிக்க வேண்டும்....
    இப்ப இதெல்லாம் போச்சு... போனில்தான் எல்லாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  16. ஹி ஹி இப்போதும் விளையாடுவதுண்டு. பாடல்கள் தெரிந்தும் பாடாமல் மனதிற்குள்ளேயே வைத்து. இதற்காகவே பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை சேர்த்து வச்சிருக்கேன்.

    இங்கிருக்கும் 'mancala' என்றொரு விளையாட்டுப் பொருளை பல்லாங்குழி மாதிரியே விளையாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

      நீக்கு
  17. அஞ்சாங்கல் ஏழாம் கல் கற்களை விளையாடி முடித்ததும் லாக்கரில் வைக்காத குறையாக அடுத்த நாள் விளையாட்டுக்காக பத்திர படுத்தி வைப்போம் . மலரும் நினைவுகள் . . ஏன் ஜப்பானிய பிளாக்கில் சைக்கிள் டயரை குச்சியால் தள்ளற விளையாட்டு பற்றி எழுதி உள்ளேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலரும் நினைவுகள் - உங்களுக்கும் பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி அபயா அருணா ஜி. சைக்கிள் டயரை குச்சியால் தள்ளும் விளையாட்டு - ஆஹா... அது ஒரு கனாக் காலம்!

      நீக்கு
  18. பதில்கள்
    1. பதிவு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி கௌதமன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. என் பேத்திக்குப் போட்டுக் காண்பித்தேன் உங்கள் அம்மா பாடிய பாடலை. திரும்பத்திரும்ப போடச் சொல்லி கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். காப்பித் தண்ணி அவளுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது
    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... பதிவு உங்களுக்கும் பயனுள்ளதாகவும், உங்கள் பேத்திக்கு பிடித்ததாகவும் இருந்ததில் மகிழ்ச்சி ரஞ்சனிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....