சனி, 3 செப்டம்பர், 2016

இயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ்...

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 44

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


பாறையைக் குடைந்து ஒரு பாதை....

சென்ற பகுதியில் ஹோட்டல் சோகீ-இல் மோமோஸ் சாப்பிட்ட பிற்கு பயணத்தினைத் தொடர்ந்தோம். தொடர்ந்து அந்த கரடுமுரடான சாலைகளில் பயணித்து நாங்கள் சென்ற இடம் ஒரு அருமையான இடம் – இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடத்தின் பெயர் சேலா பாஸ்....  கடல் மட்டத்திலிருந்து 13700 அடி உயரத்தில் இருக்கும் ஒரு இடம். சுற்றிலும் மலை...  அந்த மலையை மூடிய பனி....  மலைகளுக்கு நடுவே சேலா ஏரி – அதிலிருக்கும் தண்ணீர் பாதி பனியாகவும், மீதி தண்ணீராகவும் இருக்கும் காட்சி.....  அப்பப்பா... வார்த்தைகளால் சொல்லி விட முடியாத பேரழகு.


சேலா ஏரி....

பேரழகு என்பதைச் சொல்லும்போதே அங்கே இருக்கும் அமைதியையும் சொல்ல வேண்டும். நாங்கள் சென்ற போது அந்தப் பகுதியில் எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை.....  அந்த பனிபடர்ந்த மலைகளையும், ஏரியையும் பார்த்துக் கொண்டு தனிமையில் இருந்து விடலாமா என்று தோன்றுவது நிச்சயம்..... பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.  பனிச் சிகரங்களில் அவ்வப்போது சூரியனின் கிரணங்கள் விழ, பனிமலை வெள்ளிமலையாகக் காட்சி தந்தது.


மேகக்கூட்டத்தில் மலை...

சேலா பாஸ் – மலைகள், மலைகள் எங்கும் மலைகள்.... அதில் இருக்கும் பனி, பனி மூடிய பைன் மரங்கள் என மிகவும் அற்புதமான காட்சி.  எந்த ஒரு சிறப்பான இடத்தினை அடைவதற்கும் மிகவும் சிரமங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை உண்மையாக்கும் விதமாகத்தான் இங்கே வருவதற்கான பாதையும் சிரமங்களைத் தரும் என்றாலும் சென்று அடைந்த பிறகு கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே, அனுபவத்திற்காகவே இந்த மாதிரி இடங்களுக்கு நிச்சயம் பயணிக்க வேண்டும்.


மலையும் சேலா ஏரியும்...


இன்னும் ஒரு படம் – சேலா ஏரி....

நாங்கள் சென்ற மார்ச் மாதத்தின் 19-ஆம் நாளில் இத்தனை அழகாய் பனி மூடிய சிகரங்களையும், சேலா ஏரியையும் பார்க்க முடிந்தது என்றால் அதிகம் பனிப்பொழிவு இருக்கும் சமயங்களான டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இந்த இடம் எவ்வளவு அழகாய் இருக்கும் என சற்றே கற்பனை செய்து உங்கள் மனக்கண்களால் இந்த இடத்தினைப் பாருங்கள்....  ஆஹா என்னவொரு அழகு.
ஆபத்தான மலைப்பாதை....

மிகவும் அழகான இடங்கள் என்றாலும் இவை ஆபத்தான பகுதிகள். அதிகம் பனிப்பொழிவு இருக்கும் சமயங்களில் இங்கே இருக்க முடியாது. ஆகையால் இந்த இடங்களில் எந்த கிராமங்களும் இல்லை. மனிதர்களும் வசிப்பதில்லை – இந்தியாவின் ராணுவ வீரர்களைத் தவிர்த்து!  போம்டிலாவிலிருந்து தவாங் வரும் வழியில் இருக்கும் பல இடங்களில் ராணுவ வீரர்களின் முகாம்களைக் காண முடியும். அந்த முகாம்களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்லும் ராணுவ வாகனங்களையும் பார்க்க முடியும். சீனாவின் அருகே இருப்பதால், இங்கே எப்போதும் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இருந்தபடியே இருக்கும்.


BRO வைத்திருக்கும் ஒரு பதாகை....


சேலா ஏரி – நண்பரின் கைவண்ணத்தில்....


சேலா ஏரியின் அருகே பாதை...

சாலைகளைப் பராமரிப்பதும் BRO என அழைக்கப்படும் Border Roads Organization தான். சாலைகள் போடுவதும், பனிப்பொழிவில் அவை வீணாவதும், அதை மீண்டும் மீண்டும் சரி செய்வதும் என தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள் இந்த BRO நண்பர்கள்.  இவர்கள் இப்படி தொடர்ந்து பராமரிக்காவிட்டால், இந்த அளவு கூட சாலைகள் இருக்காது என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். என்றாவது இப்படி பயணிக்கும் எங்களைப் போன்ற சுற்றுலா பயணிகள், சாலைகள் சரியில்லை என்று குறை சொல்ல நினைத்தாலும், அங்கே இருக்கும் சிரமங்களைப் பார்க்கும்போது இந்த அளவிற்காவது பராமரித்து வைத்திருக்கிறார்களே என்று தோன்றிவிடும்.


முதுகில் குழந்தையோடு பணிக்குச் செல்லும் பெண்கள்....

மார்ச் மாதத்தில் கூட சேலா பாஸ் அருகே சாலைகளில் பல இடங்களில் பனிப் பொழிவு இருந்தது. இந்த மாதிரி பனிப்பொழிவு இருக்கும் சாலைகளில் சாதாரண சக்கரங்கள் உள்ள வண்டிகளில் பயணம் செய்வது கொஞ்சம் கடினமானது.  பனியின் மீது இந்தச் சக்கரங்கள் கொண்ட வாகனங்களில் பயணிக்கும்போது Skid ஆகும் வாய்ப்பு மிக அதிகம்.  இந்தப் பாதையில் பயணிக்கும் வண்டிகள், தங்களது சக்கரங்களுக்கு மேலே இரும்புச் சங்கிலிகளைக் கட்டி வைத்து, பனிப்பொழிந்திருக்கும் சாலைகளைக் கடக்கிறார்கள். இதுவும் ஒரு வித ஜுஹாட் [Jugaad!] அதாவது நம் ஊருக்கே உரித்தான ஒரு சமாளிப்பு!


சேலா பாஸ் அருகே தவாங் வரவேற்பு....


சேலா ஏரி – மற்றொரு கோணத்தில்....

சாதாரண வண்டிகளில் இந்தப் பகுதிகளில் பயணம் செய்வது கொஞ்சம் கடினமான விஷயம் – அதுவும் இந்தப் பகுதிகளில் வாகனம் செலுத்திப் பழக்கம் இல்லாதவர்கள் வந்தால் மிகவும் கடினம். பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வாடகை வண்டிகள் எடுத்து வந்தாலும், அருணாச்சலப் பிரதேச வாசிகள் சின்னச் சின்ன வண்டிகளில் கூட சமாளித்து இங்கே வந்து விடுகிறார்கள்....  தொடர்ந்து இங்கே இருப்பதால் அவர்களுக்குக் கொஞ்சம் பழக்கமாகி இருக்கிறது. மாருதி 800/மாருதி ஆல்டோ போன்ற சின்ன வண்டிகளில் இங்கே பயணிப்பது நல்லதல்ல!


உறைந்து கிடக்கும் சேலா ஏரியும் மலையும்...

சேலா பாஸ், தவாங் நகரின் அருகிலேயே இருக்கிறது. நாம் முதலில் பார்த்த போம்டிலா கடல் மட்டத்திலிருந்து 2217 மீட்டர் என்றால், வழியில் மோமோஸ் சாப்பிட்ட திராங் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து 1479 மீட்டர்.  மீண்டும் தொடர்ந்து மலையேற்றம் – மலைப்பாதையில் பயணித்து தவாங் அருகே சேலா பாஸ் வந்து சேர்ந்தால் அது கடல் மட்டத்திலிருந்து 4170 மீட்டர் அதாவது 13700 அடி உயரத்தில்...  சற்றே கற்பனை செய்து பாருங்கள் அந்தப் பயணத்தினை. நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சில தகவல்களையும் சொல்லி விடுகிறேன்.


சேலா பாஸ் அருகே நாங்கள்....
படம் எடுத்தது ஓட்டுனர் ஷம்பு....


நாந்தேன்...


நண்பர் ப்ரமோத் உடன் நான்....

1962-ஆம் வருடம் நடந்த சீனா – இந்தியா யுத்தம் சமயத்தில் சீன ராணுவத்தினர் பும்லா பாஸ் எல்லையைக் கடந்து இந்த சேலா பாஸ் வரை வந்து விட்டார்கள். அச்சமயத்தில் இந்த சேலா பாஸ் எனும் இடத்தில் பலத்த யுத்தம் நடந்தது. அந்த சமயத்தில் இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள், அவர்களின் இழப்பு என பல விஷயங்களை நாங்கள் கேட்டு அறியவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இடத்திற்கு சேலா பாஸ் என்ற பெயர் வரக் காரணமும் தெரிந்து கொண்டோம்.  அந்த விவரங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

26 கருத்துகள்:

 1. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. //ஆகையால் இந்த இடங்களில் எந்த கிராமங்களும் இல்லை. மனிதர்களும் வசிப்பதில்லை – இந்தியாவின் ராணுவ வீரர்களைத் தவிர்த்து! //

  நெகிழ வைக்கும் வரிகள்.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. Very serene and beautiFULL! Apicture is worth 1000 words. But your words are worth 1000 pictures. Very nice trip and have been following Your trip to land of seven sisters! --- Thiyagarajan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் கருத்துரை என நினைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியாகராஜன் ஜி!

   நீக்கு
 4. சேலா பாஸ் ஏரியின் அழகு ,புத்தம் புது பூமி வேண்டும் என்று பாட வைக்கிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தும் புது பூமி.... பாடுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 6. இராணுவ வீரர்களுக்கு வணக்கம். கஷ்டமான இடத்தில் நாட்டுக்காக இருப்பற்குவாழ்த்துக்கள், வீர வணக்கங்கள்..
  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 7. உங்கள் பயணத்தால
  நாங்களும் இதுபோன்ற
  அரிய இடங்களைக் கண்டு களிக்க முடிந்தது
  மிக்க மகிழ்வளிக்கிறது
  நுழைவு வாயில் சீன கட்டிடக்கலைப் பாணியில் உள்ளதோ ?
  ஆவலுடன் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நுழைவு வாயில் - உண்மை தான். புத்த மதத்தினரும் இந்த மாதிரி கட்டிடக்கலையைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 8. படத்தில் அன்பே வா! எம்.ஜி.ஆர் மாதிரி கலக்குகிறீர்கள்! படங்கள் இயற்கை அழகு கொஞ்சுகிறது! தகவல்கள் சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பே வா எம்.ஜி.ஆர். - ஹாஹா. நல்ல ஜோக்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   நீக்கு
 10. இங்கெல்லாம் சென்று மகிழ பாதை போட்டுக் கொடுக்கும் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷனுக்குப் பாராட்டுகள் சென்று மகிழ்ந்த உங்களுக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   நீக்கு
 12. மிக மிக அழகான இடம் வெங்கட்ஜி! மனதில் அப்படியே பதிந்துவிட்டது. பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும். படங்கள் மிக மிக அழகு. சேலா ஏரியையும் குளிர்காலத்தில் எப்படி இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தேன்...ஆஹா ஸ்விஸ் போல இல்லையா...

  அமெரிக்காவில் கூட பனி படர்ந்த இடங்களுக்குச் செல்வதானால் அதுவும் நம் காரில் செல்வதானாலும் அதற்கென்று சங்கிலிகள் உண்டு...... அதனை டையரில் பொருத்திக் கொண்டு ஓட்டலாம். இங்கும் இருக்கிறது. பல வகைகள் இருக்கின்றன...வண்டிகளைப் பொருத்து மாறுபடும்.

  அருமையான பயணம் தொடர்கின்றோம் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....