புதன், 14 செப்டம்பர், 2016

நம்ப முடியாத உண்மைகள்



மரணத்தின் சாலை: உலகத்தின் ஆபத்தான சாலை தென் அமெரிக்காவில் இருக்கும் யூங்காஸ் சாலை – Bolivia-வில் உள்ள கொராய்க்கோ என்ற இடத்திலிருந்து யூங்காஸ் வரை உள்ள 43 மைல் தொலைவினைக் கடக்க, 1930-ஆம் ஆண்டு சிறைச்சாலை கைதிகளைக் கொண்டு அமைக்கப்பட்டது இச்சாலை. 5 மைல் நீளத்திற்கு உயரமாக ஏறும் சாலை, சடாரென்று 1079 அடி கீழே கிடுகிடு பள்ளத்தில் இறங்கும் – எண்ணிப் பார்க்கும்போதே திகிலாக இருக்கிறது! இதைப் போலவே சாலையில் பயணிக்கும்போது மேலிருந்து நீர்வீழ்ச்சியும் சமயத்தில் பாறைகளும் விழும் அபாயமும் உண்டு! உலகில் அதிகமான அபாய எச்சரிக்கைகள் இருப்பதும் இச்சாலையில் தான்!

திருடப்பட்ட பிணங்கள்: வாரணாசி – கங்கையில் மணிகர்ணிகா Gகாட் தான் முக்கியமான Gகாட்.  தினம் தினம் அங்கே தொடர்ந்து மனிதர்களின் இறந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன. அந்தப் பகுதி தவிர, வேறு சில கரைகளிலும் மனித சடலங்கள் எரிக்கப்பட்டு, பாதி எரிந்த நிலையிலேயே கங்கையில் இழுத்துவிட்டு விடுவதும் உண்டு! அப்படி இருக்கும் எரியாத பிணங்களை கைப்பற்றி தலையையும் உடலையும் தனியாக வெட்டி, மண்ணில் புதைத்து, மண்டையோட்டை மட்டும் விற்று விடுவதை தொழிலாகவே செய்து வந்திருக்கிறார் ராம்சிங் எனும் சாமியார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என மாட்டிக் கொண்டார் அந்த சாமியார்!

மனிதகுலத்தின் முதல் பயணம்: இருபது லட்சம் வருடங்களுக்கு முன்னர் மனித இனம் காட்டுக்குள்ளே மிருகங்களுடன் வாழ்ந்தார்கள். எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு மிருகத்தின் மூலம் மரணம் நிகழும் பயத்துடனேயே வாழ்க்கை ஓடியது. என்னதான் மரணம் பற்றிய பயம் இருந்தாலும் இனப்பெருக்கம் மட்டும் தொடர்ந்தபடியே இருந்தது. ஒரு சமயத்தில் அதிகரித்து விட்ட மக்களோடு கூட்டமாக வாழ அதிக இடம் தேவைப்படவே காடுகளை விட்டு வெளியே, கூட்டம் கூட்டமாக கால்நடையாகவே வெளியேறினார்கள் – அதுவே மனிதகுலத்தின் முதல் பயணம். அந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் பல.....

மழை வர மலைப்பாம்பு திருமணம்: நமது ஊரில் மழை வர வேண்டும் என்றால் தவளை, நாய், கழுதை போன்ற உயிரினங்களுக்குத் திருமணம் செய்வது பற்றி தெரியும். கம்போடியாவில் மலைப்பாம்புகளுக்கு திருமணம் செய்து வைப்பார்களாம். அப்படி திருமணம் செய்து வைத்ததும் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்! செம்ரூன் மற்றும் ரொங்பிச் என்ற இரு மலைப்பாம்புகளுக்குத் திருமணம் செய்து அவற்றை ஒரே கூண்டில் அடைத்து வைத்த போது புத்த மத பிக்குகள் திருமணத்திற்கு வந்து மணமக்களுக்கு ஆசி வழங்கினார்களாம் – மொய் கூட எழுதப்பட்டதாம்!

காதல் அல்ல, கட்டிப்பிடி சண்டை: இதுவும் பாம்புகள் பற்றிய செய்தி தான். செய்தித் தாள்களில் அவ்வப்போது இடம் பெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பாம்புகள் பின்னிப் பிணைந்து இருக்கும் படம்.  இரண்டு பாம்புகள் ஒன்றை ஒன்று சுற்றி வந்து “இஸ்என்ற சீறலுடன் ஒன்றின் மீது ஒன்று பாயும். பிறகு ஒன்றையொன்று இறுகிப் பின்னிப் பிணைந்து நிலத்தில் இருந்து செங்குத்தாக எழுந்து நிற்கும். இப்படி ஒரு நாள் முழுவதும் கூட நீடிக்கலாம்! இது ஆண் பாம்பும், பெண்பாம்பும் அல்ல – இரண்டுமே ஆண் பாம்புகள் தான்! இது காதல் அல்ல – சண்டை – எதற்காக? பெண் பாம்பினை அடைவதற்குத் தான்! சண்டையில் தோற்ற பாம்பு சோகத்துடன் விலக வெற்றி பெற்ற பாம்பு – மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருக்கும் பெண் பாம்புடன் உறவு கொள்ளும்!

உறவு முடிந்ததும் பூட்டு: காலம் காலமாக மனிதன் தனக்கு சொந்தமான பெண்ணை வேறு யாரும் கையாண்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறான். சரித்திர காலத்தில் யுத்தத்திற்கும், வேலைக்குப் போகும் காலங்களிலும் தனது துணையை வேறு யாரும் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காக மனிதன் என்னென்னவோ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளான். தனியறையில் அடைப்பது, பெண்ணுறுப்புக்கு பூட்டு போடுவது என்று பலவிதங்களில் இது நடந்துள்ளது. இந்தக் குணம் மனிதனோடு மட்டும் நின்றுவிடவில்லை. கார்ட்டர் எனும் வகைப் பாம்புகள் உறவு முடிந்ததும் பசை போன்ற ஒரு திரவத்தினை பெண்ணுறுப்பில் பாய்ச்சி விடுமாம். அது உடனே இறுகி, குழந்தை பிறந்த பிறகு தான் கீழே விழுமாம்! என்னவொரு திட்டமிடல்....

குளிர்நீரில் சுடுநீர்: கால்கள் சில்லிட்டுப் போகும் அளவிற்கு குளிர் தன்மையுடைய தண்ணீரில் நடக்கும்போதே விரல் பொசுங்கும் அளவிற்கு தண்ணீர் சுட்டால் எப்படி இருக்கும்? ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஷிம்லா, குலூ-மணாலி மற்றும் மணிக்கரன் பகுதிகளில் இப்படிப் பட்ட வென்னீர் ஊற்றுகள் உண்டு. சில்லென்ற தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க, பக்கத்திலேயே கொதிக்கும் வென்னீரும் இருக்க, அதில் சமையல் நடப்பதை நாம் பார்க்க முடியும்.
இப்படி பல நம்ப முடியாத உண்மைகள் இப்புவியில் உண்டு.  அந்த மாதிரி பல விஷயங்களை தினத்தந்தி நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்ததைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள். தினத் தந்தி நாளிதழில் தினம் ஒரு தகவல் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளை, புத்தகமாகவும் வெளியிட்டு இருக்கிறார்கள் தினத்தந்தி நிறுவனத்தினர். இது வரை இரண்டு பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. 

மொத்த பக்கங்கள் – 288, விலை ரூபாய் 150/-. கிடைக்குமிடம்: தினத்தந்தி பதிப்பகம், 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600007.

அதெல்லாம் சொல்லியது மட்டுமல்ல, வேறொரு விஷயமும் இங்கே நிச்சயம் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் நமது வலையுலக நண்பர் எஸ்.பி. செந்தில்குமார்.

படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இப்புத்தகத்தில் உண்டு. புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் அவரது வலைத் தளத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.  மொத்த கட்டுரைகளையும் படிக்கலாமே!

நாளை வேறொரு பதிவில் சந்திக்கலாம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


24 கருத்துகள்:

  1. நண்பர் செந்தில்குமார் அவர்களின் உழைப்பு போற்றுதலுக்கு உரியது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியும் நன்றிகளும் தங்களுக்கு நண்பரே, எனது புத்தகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்தி பலரும் அறிய செய்திருக்கிறீர்கள். தற்போது மூன்றாம் பாதிப்பு வெளிவராயிருக்கிறது என்ற செய்தியையும் தங்களுக்கு அரியத் தருகிறேன்.

    ஆன்லைன் மூலம் புத்தகத்தை வாங்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

    http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

    மீண்டும் நன்றிகள் பல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூடுதல் தகவல்கள் தெரிவித்தமைக்கு நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  3. மூன்றாம் பாதிப்பு என்று தவறுதலாக தட்டச்சு ஆகிவிட்டது. அதனை மூன்றாம் பதிப்பு என்று மாற்றி வாசிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

      நீக்கு
  4. தினம் ஒரு தகவல் - செய்தித் தொகுப்பு அருமை...

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. அவர் இது போன்ற தகவல்களைத்தான் பகிர்கிறார்.
    நல்ல தொகுப்பு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  6. ஒவ்வொரு தகவலும் ஒவ்வொரு விதம் ,நம்ப முடியாத தகவல்கள்தான்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  7. அனைத்துமே நம்ப முடியாத ஆச்சரியமூட்டும்
    தகவல்கள்தான். தொகுத்தவர் நம்மவர்
    என் அறிய கூடுதல் சந்தோஷம்
    அவசியம் வாங்கிப் படித்து விடுவேன்
    சுவாரஸ்யமாக அருமையாக புத்தகத்தை
    அறிமுகம் செய்தமைக்குமனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  8. தினம் ஒரு தகவல் தந்தவர் எஸ்பி செந்தில் குமாரா தகவல்களை தொகுத்துப் புத்தக மாக்கியவர் செந்தில் குமாரா .வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினத்தந்தியே தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  9. நாங்களும் வாசித்துக் கொண்டிருக்கின்றொம்.....அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. முடிந்த போது படியுங்கள்.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. நண்பர் செந்தில்குமார் ஒரு நடமாடும் களஞ்சியம். அவரது எழுத்துகள் நமக்கு வியப்பை ஊட்டுவன. அவரது நூல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  12. அருமையான புத்தகம்! இந்தவருட புத்தக கண்காட்சியில் வாங்கி கொஞ்சம் வாசித்தும் இருக்கிறேன்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....