திங்கள், 8 நவம்பர், 2010

அமராவதி – அமரலிங்கேஸ்வரர் [பெஜவாடா – விஜயவாடா பயணம் –பகுதி 3]

பெஜவாடா – விஜயவாடா பயணம் -- பகுதி 1 படிக்க இங்கே

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2 படிக்க இங்கே

முதல் இரண்டு பகுதிகளையும் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். ”சென்ற பகுதியில் ஜாங்கிரி தரேன்னு சொன்னீங்களே, எங்க?”ன்னு கேட்கறீங்களா, நிச்சயம் உண்டு. இந்தப் பகுதியை படிச்சுட்டு போகும்போது தர்ரேனே சரியா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.

அமராவதி – அமரலிங்கேஸ்வரர் – புத்த விக்ரகம்:பானக நரசிம்மர் மற்றும் லக்ஷ்மி நரசிம்மரை தரிசித்த பிறகு நாங்கள் சென்ற இடம் ஸ்வர்ணமுகி ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதி நகர். விஜயவாடா நகரிலிருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவிலும், குண்டூர் நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கிறது அமராவதி. முற்காலத்தில் ஸ்வர்ணமுகி ஆற்றின் நீர் தங்கம் போல ஜொலிக்குமாம் – அதனால் தான் ஸ்வர்ணமுகி. ஆனால் அந்தோ பரிதாபம் இப்போது தங்கம் போல ஜொலிக்காமல், தண்ணீர் சுத்தமாய் இல்லாமல், பிளாஸ்டிக் குப்பைகளும், பெட் பாட்டில்களுடன் அழுக்காய் இருக்கிறது. எல்லா நதி-ஆறுகள் போல இங்கேயும் ஜரூராக மணல் திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.
அமராவதி என்ற ஊர் பெயருக்குக் காரணம் ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அமரலிங்கேஸ்வரர் ஆலயம். ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான அமரலிங்கேஸ்வரர் சுமார் 15 அடி உயரமுள்ள லிங்க ரூபமாய் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறார். 50 ரூபாய்க்கு ஆலயத்தின் அலுவலகத்தில் அபிஷேகச் சீட்டும், வெளியே இருக்கும் கடையில் 50 ரூபாய்க்கு அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களும் வாங்கிச் சென்றால், மேல் மாடியிலிருந்து அமரலிங்கேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து வைக்கிறார்கள். திவ்யமாய் 10-15 நிமிடத்திற்கு பொறுமையாக தரிசனம் செய்யலாம். அமரலிங்கேஸ்வரரை தரிசித்து பிறகு சாமுண்டிதேவியையும் தரிசித்து வெளியே வந்து மதிய உணவினை முடித்துக் கொண்டோம்.

அமராவதி நகருக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தின் அருங்காட்சியகம். மௌரியர்களின் காலத்திற்கு முன்பான புத்த விக்ரகங்கள், ஸ்தூபம், நாணயங்கள், போன்ற பல பொருட்களை கண்காட்சியாக வைத்துள்ளனர். வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் திறந்து இருக்கும் இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் 5 ரூபாய். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை.

அருங்காட்சியகத்தின் அருகாமையிலேயே தியானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான புத்தரின் சிலையை வடித்து, தியான மண்டபம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த தியான மண்டபத்திலும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை. புத்தரின் சிலையை வெளியே இருந்தே புகைப்படங்கள் எடுக்கலாம்.சரி இப்ப உங்களுக்காகவே ஜாங்கிரி: அச்சச்சோ நான் ஜாங்கிரி தரேன்னு சொன்னது சாப்பிடற ஜாங்கிரின்னு நீங்க நினைச்சுட்டீங்களா.ஆந்திர மாநிலம் முழுவதுமே எங்கு சென்றாலும், மேலே உள்ளது போல ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல எழுதி வைத்திருக்கிறார்கள். நெடுஞ்சாலைகளில் கூட தூரத்தினைத் தெரியப்படுத்தும் பலகைகளில் ஜாங்கிரி ஜாங்கிரியாகத் தான் சுற்றி வைத்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு இடங்களிலேயே ஆங்கிலத்தில் தகவல் பலகைகளைக் காண முடிந்தது. தெலுங்கு படிக்கத் தெரியாவிட்டால் நமக்குத் திண்டாட்டம் - வாகன ஓட்டியின் தயவில் தான் நாம் செல்ல வேண்டிய இடம் எவ்வளவு தொலைவு என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த ஜாங்கிரியைச் சுவைத்துக் கொண்டு இருங்கள் – விரைவில் அடுத்த பகுதியில் “பந்தர் மிட்டாய்” - யுடன் சந்திக்கிறேன்.

தொடரும்...

21 கருத்துகள்:

 1. பந்தர்னா இந்தியில குரங்கு... குரங்கு மிட்டாயா... ;-) ;-)
  அமராவதி நல்ல பதிவு... நன்றி..

  பதிலளிநீக்கு
 2. @ RVS: பந்தர்னா ஹிந்தியில் குரங்கு தான். ஆனா இது குரங்கு மிட்டாய் இல்லை. :) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி RVS.

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள மோகன் குமார்,

  அமரலிங்கேஸ்வரர் புகைப்படம் தவிர மற்ற எல்லாம் நான் எடுத்தது. உங்களது பாராட்டுக்கு நன்றி.

  வெங்கட் நாகராஜ்

  பதிலளிநீக்கு
 4. ஜாங்கிரி தரேன்னு சொல்லிடு அல்வா குடுத்து இருக்கீங்க

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள LK, அச்சச்சோ ஜாங்கிரி வேணுமா, வேற ஒரு பதிவில் தந்து விடுகிறேன். சரியா :))))

  பதிலளிநீக்கு
 6. [ma]அமரலிங்கேஸ்வரரை இங்கிருந்தே தரிசிக்க வைத்ததுக்கு நன்றி. அருமையான பதிவு.[/ma]

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள லாவண்யா [உயிரோடை] வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  வாங்க ராகவன் சார். ஏதோ என்னால் முடிந்த உதவி.

  பதிலளிநீக்கு
 8. ஜாங்கிரி என்னவோ நல்லாத்தான் இருக்கு.. அதை ஏன் பிச்சுப்போட்டு வெச்சிருக்கீங்க??? :-)))

  பதிலளிநீக்கு
 9. ஓ இந்த ஜாங்கிரியா?

  சாமிகளெல்லாம் இப்ப ப்ரமாண்டத்துக்கு மாறிட்டுவராங்க..:) அடிக்கணக்கில் தான் பேச்சு ..

  பதிலளிநீக்கு
 10. @ அமைதிச்சாரல்: பிச்சா தானே சுலபமா சாப்பிட முடியும்... :))))))

  @ முத்துலெட்சுமி: ஆமாம். இது 15 அடிதான். அடுத்த பதிவுல இன்னும் உயரமான ஒரு சிலை பத்தி சொல்றேன். :)

  பதிலளிநீக்கு
 11. பயணக் குறிப்பெல்லாம் பிரமாதமாத்தான் எழுதறீங்க ... தின்பண்டங்களைக் காட்டி உங்க பெண்ணை மேய்ச்சு கட்டும் அனுபவத்தில் பதிவு தவறாம எங்களையும் சுவை குறையாம படிக்க வெக்கறீங்க வெங்கட். தொடக்கத்திலேயே 'கடைசியில் ஜாங்கிரி தருவேனாம் சரியா' என்றவுடன் நாங்களும் குழந்தையாக மாறி தலையாட்டிக்கொண்டு படிக்கிறோமே... ச்சோ ஸ்வீட்!

  பதிலளிநீக்கு
 12. @ நிலாமகள்: நீங்களும் தவறாம படிச்சு என்னை ஊக்குவித்து கருத்து தெரிவிக்கறீங்க இல்லையா. அதனால நீங்களும் தான் ஸ்வீட். நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 13. ’ஜாங்கிரி’ நல்லாவே இருக்கு, பார்க்க...


  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.
  http://keerthananjali.blogspot.com/

  பதிலளிநீக்கு
 14. உண்மையில் இந்த மாதிரி மொழிப் பிரச்னை அந்த நேரத்தில் திண்டாட்டம்! அப்புறம் காமெடியாவது நமது நகைச்சுவை உணர்வால்.. கலகலப்பாய் போகிறது பயணம்..

  பதிலளிநீக்கு
 15. @@ ஆர். ராமமூர்த்தி: வாங்க சார், பார்க்க நல்லா இருந்ததா ஜாங்கிரி :))))

  @@ ரிஷபன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 16. பிய்த்து போட்ட ஜாங்கிரி போல் எழுத்து நல்ல கற்பனை.

  பதிலளிநீக்கு
 17. @@ மாதேவி: உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....