திங்கள், 1 நவம்பர், 2010

பெஜவாடா – விஜயவாடா பயணம் – பகுதி 2


பெஜவாடா – விஜயவாடா பதிவின் முதலாம் பகுதியை படிக்க இங்கே சொடுக்கலாமே :-)

விஜயவாடா நகரத்தின் ரயில் நிலையத்தின் இரு புறங்களையும் தனியாக பிரித்து 1 டவுன், 2 டவுன் என்று அழைக்கின்றனர். நாங்கள் இருந்தது 2 டவுன் பகுதியில் இருந்த பூர்ணானந்தம்பேட் பகுதியில். அங்கே ஒரு அழகிய ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. இங்கே ஆஞ்சனேயருக்கு வெற்றிலையால் அர்ச்சனை செய்து, அதை எடுத்து பிரசாதமாக பக்தர்களுக்குக் கொடுத்து விடுகின்றனர். முதல் நாளே அங்கே சென்று தரிசனம் செய்து வந்தோம்.

அடுத்த நாள் விஜயவாடா மற்றும் அதனருகில் இருக்கும் சில கோவில்களுக்கு செல்வதற்கு வசதியாக வண்டியை ஏற்பாடு செய்து வைத்திருந்தார் நண்பர். காலை 07.௦௦ மணிக்குத் தயாராகி வீட்டை விட்டு புறப்பட்டோம். எங்களது முதலாவது நிறுத்தம் கிருஷ்ணா அணைக்கட்டைக் கடந்த பின் வரும் சீதாநகரத்தில் உள்ள ஆஞ்சனேயர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள வேங்கடாசலபதியின் கோவில். பயணம் நல்லபடியாக அமைய பிரார்த்தனை செய்து அங்கிருந்து கிளம்பினோம்.

மங்களகிரி பானக நரசிம்மர் கோவில்:

முற்காலத்தில் “தோதாத்ரி” என்று அழைக்கப்பட்ட மலையே மங்களகிரி மலை. எந்தப்பக்கத்தில் இருந்து பார்த்தாலும் இம்மலையின் தோற்றம் ஒரு யானையைப் போல இருக்கும் என்று சொல்கிறார்கள். முன்பெல்லாம் படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது. இப்போது காரிலேயே மலையின் மேலே செல்ல வழி ஏற்படுத்தி விட்டார்கள்.
ஒரு குகைக்குள் இருக்கும் இந்த கோவிலில் நரசிம்ம மூர்த்தியின் சிலை வடிவம் கிடையாது – பெரியதாய் வாய் திறந்திருக்கும் சிங்கமுகம் தான் மூர்த்தம். நரசிம்மருக்கு பிரசாதமாய் பானகம் – ”பிந்தி” என்று தெலுங்கில் அழைக்கப்படும் குடத்தில் படைக்கிறார்கள். ஒரு சொம்பு பானகத்தினை சிங்கத்தின் அகன்ற வாயினுள் ஊற்றினால் பாதியே உள்ளே செல்லும், மீதி வெளியே வழிந்து விடும் அதிசயம் இன்றைக்கும் நடக்கிறது. தினம் தினம் அவ்வளவு பானகம் அங்கே இருந்தாலும், ஒரு எறும்பைக் கூட பார்க்கமுடிவதில்லை. நாங்களும் ஒரு பிந்தி பானகத்தினை நரசிம்மமூர்த்திக்கு படைத்து, பாதி பானகத்தினை பிரசாதமாக பெற்றோம்.பின்னர், கோவிலின் மேலே இருந்த ராஜலக்ஷ்மி சன்னிதி, அளவில் சிறிய அரங்கநாதர் சன்னிதி, மற்றும் ஆஞ்சனேயர் சன்னிதிகளை வழிபட்டுவிட்டு கீழே இறங்கினோம்.

லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்: நாங்கள் அடுத்து சென்றது மங்களகிரியின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில். மேலே பானக நரசிம்மர் என்றால் மலையின் கீழே, லக்ஷ்மி நரசிம்மர். லக்ஷ்மிதேவியை இடப்பக்கத்தில் அமர்த்தியபடி பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தி என்று இக்கோவிலின் வரலாறு தெரிவிக்கிறது.

கோவிலின் கோபுரம் சிறப்பான முறையில் 153 அடி உயரமாகவும், 49 அடி அகலத்திலும், 11 நிலைகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் உயரமான கோபுரங்கள் அமைக்கும்போது, அதன் அகலமும் அதிகமாக இருக்கும், ஆனால் இங்கே குறைந்த அகலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம்.நாங்கள் சென்ற அன்று, யாரோ ஒரு பக்தர், நரசிம்மமூர்த்திக்கு தங்கத்தில் பற்கள் செய்து அணிவித்திருந்தார். சாதாரண நாட்களில் வெள்ளிப்பற்களுடன் இருக்கும் அவர் அன்று தங்கப் பற்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இங்குள்ள ஒரு மண்டபத்தில் இரண்டு பல்லிகளின் உருவங்கள் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொட்டு வழிபட்டால் பல்லி விழும் தோஷம் போகும் என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்.

தொக்குடு லட்டு:உளுத்த மாவு, பயத்த மாவு கலந்து அதில் ஓமப்பொடியாக செய்து அதனை நன்றாக மிக்ஸியில் பொடி செய்து அதில் நெய், சக்கரைப்பாகு சேர்த்து உருண்டையாகப் பிடித்து செய்யும் தொக்குடு லட்டு ஆந்திராவில் கிடைக்கும் மற்றொரு இனிப்பு வகை. கிலோ ரூ.180- க்குக் கிடைக்கிறது. கர்ப்பமாக இருக்கும் ஆந்திரப் பெண்களுக்குக் கட்டாயமாக இந்த இனிப்பு கொடுப்பார்கள் என்பது கூடுதல் தகவல்!

அடுத்த இடுகையில் உங்களுக்கு ஜாங்கிரி தரப்போகிறேன். தயாராய் இருங்கள். சாப்பிட ரெடியா?

11 கருத்துகள்:

 1. அல்வா தராமல் இருந்தால் சரி... ;-)

  அந்தக் கோபுரம் சூப்பர். அடிபெருத்த கோபுரங்கள் நம்மூர் ரகம். தங்கப் பல் நரசிம்மர் தரிசனம். குட். ;-)

  பதிலளிநீக்கு
 2. தீபாவளி சமயம் சுவீட் போட்டு கலக்குறீங்க. மேலே செல்லுங்கள் தொடர்கிறோம்

  பதிலளிநீக்கு
 3. பானக நரசிம்மர் கேள்விப் பட்டு இருக்கிறேன். கோபுர விஷயம் புதியது,. அல்வாவிற்கு பதில் ஜாங்கிரியா நடக்கட்டும்

  பதிலளிநீக்கு
 4. //பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தி என்று இக்கோவிலின் வரலாறு தெரிவிக்கிறது.//
  நல்ல தகவல்.

  பதிலளிநீக்கு
 5. நல்லதொரு ஆன்மீகப் பயணம்!! சந்தடி சாக்கில் தொக்குடு லட்டு செய்முறை சொல்லி, தீபாவளிக்கு புண்ணியமும் சேர்த்தாச்சா... சுவையான பயணமென்பதன் சான்றாக பதிவுக்குப் பதிவு அந்தந்த ஊரின் சிறப்புப் பதார்த்தமுடன் பரிமாறும் விருந்து ஜோர்தான்...!

  பதிலளிநீக்கு
 6. நான் போகவேண்டும் என திட்டமிட்டு பிறகு கேன்சலாகிப்போன இடம். அழகா விவரிச்சிருக்கீங்க. ஆமாம் மங்களகிரி காட்டன் புடவை, சுடிதார் வகைகள் அங்கே ஃபேமஸாச்சே. தங்கமணி ஏதும் வாங்கலையா??

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. தொக்குடு லாடு பத்தி சொல்லியிருப்பது அருமை. பெண்களின் இடுப்புவலிக்கு நல்ல மருந்து இது

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதிவே படிக்க இனிமை! பானக நரசிம்மர் பற்றி தெரியும். ஆனால் இன்னும் போகவில்லை. உங்கள் பதிவு ஆவலைத் தூண்டியது.

  பதிலளிநீக்கு
 9. தொக்குடு லட்டு நல்லா இருக்கு.

  காஞ்சிப்புரத்திலும் இரண்டு பல்லிகள் இருக்கும் தொட்டு கும்பிட்டால் பாபங்கள் தோஷங்கள் போகும் என்பார்கள்.இங்கு தங்க பல்லி,வெள்ளிபல்லி இருக்கும்.

  அங்கு எப்படி?

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....