செவ்வாய், 26 அக்டோபர், 2010

பெஜவாடா - விஜயவாடா பயணம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் யாருக்கு பலனளித்ததோ இல்லையோ, பள்ளி செல்லும் சிறார்களுக்கு நல்லதோர் பரிசை அளித்தது – ஆமாம் பள்ளிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை! என் பெண்ணுக்கும் விடுமுறை என்பதால் நானும் அலுவலகத்தில் விடுப்பு வாங்கிக் கொண்டு, சென்ற மாதம் 30-ஆம் தேதி இரவு தமிழ்நாடு விரைவு வண்டியில் விஜயவாடா புறப்பட்டேன்.

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, ஒவ்வொரு பள்ளி விடுமுறைக்கும் அங்கு சென்றிருந்த காரணத்தினால், விஜயவாடா எனக்குப் பிடித்த ஊர். மனைவிக்கும் மகளுக்கும் இவ்வழகிய ஊரினை சுற்றிக் காட்டும் எண்ணத்தினால் மேற்கொண்ட பயணமே இது. நீங்களும் வாருங்களேன், விஜயவாடாவை பார்க்கலாம்!!

நள்ளிரவு 12.45-க்கு தென் இந்தியாவின் மிகப்பெரிய ரெயில் நிலையமான விஜயவாடா சென்றடைந்தோம். அங்கேயே பணி புரியும் குடும்ப நண்பர் சேகர் எங்களுக்காகக் காத்திருந்தார். அவருடன் ரயில் நிலையத்தின் பக்கத்திலேயே இருக்கும் அவருடைய வீட்டுக்கு ஆட்டோவில் சென்றோம்.

நடு இரவு ஆனாலும் பயமில்லாமல் பயணிக்க வசதியாய் காவல் துறையினர் செய்திருந்த ஒரு ஏற்பாடு – பயணியின் பெயர், வேலை செய்யும் இடம், வீட்டு முகவரி, தொலைபேசி எண், ஆட்டோ ஓட்டுனர் பெயர், மற்றும் வண்டி எண் என பல தகவல்களை கேட்டு எழுதிக் கொண்டு அதன் ஒரு நகலை பயணியிடம் கொடுக்கின்றனர். பயணி போய்ச் சேர்ந்த பிறகு அந்த நகலை ஆட்டோ ஓட்டுனரிடம் கொடுத்து விட்டால், அதனைக் கொண்டு போய் காவல் துறையினரிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமாம். நல்லதொரு முயற்சி. நடு இரவு பயணிகளுக்கு பயமில்லாமல் பயணிக்க வசதியாய் இருக்கும்.

தூங்கி எழுந்து காலையில் எல்லோரும் கிருஷ்ணா நதியில் குளிக்க எண்ணியிருந்தோம் – ஆனாலும் ஆசையில் மண் – மழை ரூபத்தில் வந்தது. ஆகையினால் வீட்டிலேயே குளித்து சிற்றுண்டி முடித்து, மழை நின்ற பின் வெளியே கிளம்பினோம்.

விஜயவாடாவின் பிரபல வியாபார ஸ்தலமான பெசண்ட் ரோடில் உள்ள கடைகளைப் பார்த்தபடி [அப்ப ஒண்ணுமே வாங்கலையான்னு கேட்கக் கூடாது, கேட்டா, நான் சொல்ல வந்த விஷயத்தையே மறந்துடுவேன்] வலம் வந்து கொண்டு இருந்தோம். பல வருடங்களுக்குப் பிறகு, பூம்பூம் மாடுகளை பார்க்க முடிந்தது. காளை மாட்டினை அழகாய் அலங்கரித்து ஒவ்வொரு தெருவிலும் பணம் வாங்கிக் கொண்டு இருந்தனர்!. பெசண்ட் ரோடு முடிவதற்குள்ளாகவே மூன்று நான்கு பூம்பூம் மாடுகளைப் பார்த்து விட்டேன். அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளை முதல் முறையாய் கண்ட என் மகளுக்கு அவை அதிசயமாய் இருக்கவே, திரும்பித் திரும்பி பார்த்தபடியே வந்து கொண்டிருந்தாள்.

பெசண்ட் ரோடில் என்னைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு சிலை – தியாகப் பிரம்மம் ஸ்ரீ தியாகராஜருடையது. அவரை அழகான சிலையாக வடிவமைத்து கீழே டிஜிட்டல் கடிகாரத்தினை வைத்திருக்கிறார்கள்! ஏதோ அவர் உண்டு, அவர் பாட்டு உண்டு என பாடிக்கொண்டு இருந்தவரை மணிக்கூண்டாக்கி விட்டார்கள் பாவம்.

விஜயவாடாவில் கிடைக்கும் ஒரு ஸ்பெஷல் இனிப்பு – ”பூத்தரேக்கு” என்பதால் அதை வாங்கிக் கொண்டு வந்தோம். அசட்டுத் தித்திப்பில் இருந்த அந்த இனிப்பு அரிசி மாவு, நெய் ஆகியவை கலந்து செய்வதாம். மேலே பேப்பர் போல இருக்கவே, அதை பிரித்து சாப்பிட வேண்டும் போல என நினைத்தால் பேப்பரே இனிப்பு தானாம். அதை பேப்பர் மாதிரி மடித்து வைத்திருக்கிறார்கள். இது வெளி நாடுகளுக்கெல்லாம் கூட ஏற்றுமதியாகிறதாம். அதன் படம் கீழே கொடுத்துள்ளேன். அட்லீஸ்ட் சாப்பிடுவதாக கற்பனையாவது பண்ணித்தான் பாருங்களேன்.

கிருஷ்ணா நதி அழகாய் ஓடிக்கொண்டு இருக்கும் விஜயவாடா, இந்திரகிலாத்ரி மலையால் சூழப்பட்டு இருக்கும் இந்நகர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அடுத்த இடுகைகளில் உங்களை அழைத்துச் செல்லலாம் என இருக்கிறேன். வருவீர்கள் தானே!

13 கருத்துகள்:

 1. விஜயவாடா இதுவரை போனதில்லை. வாடா என்றழைத்து விஜயவாடா கூடி வருகிறீர்கள். தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. அழகா கையை பிடிச்சி கூட்டிகிட்டு போறீங்க.. வராமலா.. ;-) ;-)

  பதிலளிநீக்கு
 3. கண்டிப்பா வரோம்!!!அழகா கூட்டி போரீங்க....

  -
  கிறுக்கன்

  பதிலளிநீக்கு
 4. நல்ல பகிர்வு. நதியில் ஆணின் பெயரில் அமைந்தது கிருஷ்ணா நதி தான்

  பதிலளிநீக்கு
 5. அப்படியே அந்த ஸ்வீட்டை அனுப்பி வச்சாலும் எப்படியிருக்குன்னு நான் ஒரு பதிவு போடுவேன்...ஹிஹி...விஜயவாடா ஒரு இரவு ஒரு பகல் தங்கியுள்ளேன்... ட்ரெயின் மிஸ் பண்ணியதால்....இப்படியெல்லாம் யாராவது சொல்லியிருந்தா சுத்தி பாத்துட்டே நெக்ஸ்ட் ட்ரெயின் பிடிச்சிருப்பேன். :)

  பதிலளிநீக்கு
 6. நல்ல பகிர்வு... படங்கள் போட்டு இருந்தா நாங்களும் பாத்து ரசிச்சுருப்போமேங்க...

  பதிலளிநீக்கு
 7. பாக்க சோன் பப்டி மாதிரி இருக்கே..
  அது என்ன ஃவெபர் பிஸ்கட் மாதிரி இருக்குமா..

  பதிலளிநீக்கு
 8. நான் இதுவரை போகாத இடங்களில் விஜயவாடாவும் ஒன்று. பத்திரமா கூட்டிட்டுப் போங்க. கையைப் பிடிச்சிட்டு வரோம்.

  இரவு, பாதுகாப்பான பயணம் பாராட்டுதலுக்குரியது. முடிந்தவரை மற்ற நகரக் காவல் துறையும் பின்பற்றலாம்.

  பதிலளிநீக்கு
 9. உங்க ஸ்பெஷாலிட்டியே உறுத்தாத அழகான வர்ணனை.. அந்த இடத்துக்கே அழைச்சுப் போகிற எழுத்து நடை.. தொடருங்கள்.. கூடவே வரோம்..

  பதிலளிநீக்கு
 10. விஜயவாடா இதுவரை போனதில்லை.
  அழகா கூட்டி போரீங்க....

  பதிலளிநீக்கு
 11. @ LK: தொடர்ந்து விடத்தான் ஆசை. :) அலுவலகத்தில் ஆணி கொஞ்சம் அதிகம், விரைவில் அடுத்த பகுதி...

  @ RVS: கையை நல்ல கெட்டியாக பிடிச்சுக்கோங்க, சரியா :))))

  @ கிறுக்கன்: நன்றி நண்பரே, தங்களது முதல் வருகைக்கும், உற்சாகமான வரவேற்பிற்கும்.


  @ உயிரோடை: நன்றி. நல்ல தகவல் - ஆண் பெயரில் ஒரே நதி!

  @ அன்னு: அதுதான் ஸ்வீட் அனுப்பினேனே, வரலையா? அடுத்த வாட்டி, வண்டி மிஸ் பண்ணா பாருங்க, சரியா :)))))

  @ அப்பாவி தங்கமணி: நிறைய படங்கள் இருக்கு, அடுத்த பகுதிகளில் போட்டுடுவோம்....

  @ முத்துலெட்சுமி: இல்லை வெறும் பேப்பர் மாதிரி தான் இருக்கும். உள்ள நெய்யில் கலந்த சக்கரைத் தூள் மாதிரி இருக்கு.... அடுத்த வாட்டி போனா வாங்கிட்டு வரேன், சரியா.

  @ மோகன்குமார்: நன்றி சார். ரொம்ப பிஸியா?

  @ விக்னேஷ்வரி: கண்டிப்பா...

  @ ரிஷபன்: நன்றி சார்.

  @ ஜிஜி: நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 12. சுற்றுலாவில் நடு இரவு என்றாலும் பயமில்லாமல் பயணிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம்.

  ஸ்பெஸல் இனிப்பு பூத்தரேக்கு சாப்பிட்டோம் கற்பனையாய்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....