திங்கள், 7 ஏப்ரல், 2014

நைனிதால் – கேள்விக்கென்ன பதில்?ஏரிகள் நகரம் – பகுதி 7

ஏரிகள் நகரம் – பகுதி 01 02 03 04 05 06

ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஆறினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.இந்தப் பதிவில் மேலே ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன். வரிசையாக குளிர்பான குப்பிகளை கட்டித் தொங்க விட்டிருப்பதைப் பார்த்தீர்களா? இது எதற்காக என்று யாருக்காவது தெரிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! அது என்ன என்பதை அடுத்த பதிவில் நான் சொல்வதற்குள்! :)

மேலே சொன்ன கேள்விக்கு வந்த கேள்விகள்/பதில்கள்:

பகவான் ஜி: குளிர் பாட்டில்கள் தாண்டினால் மரணக் குழியில்தான் விழ வேண்டியிருக்கும் இல்லையா ?

திருமதி கீதா சாம்பசிவம்: அந்தப் பக்கம் இருக்கிறவங்களுக்குக் குடிநீரை இப்படித் தொங்க விட்டு அனுப்பறாங்களா, இல்லை ஏதானும் வேண்டுதலா? :))))

ஸ்ரீராம்: பாட்டில்கள் எங்கேயோ பயணம் செய்கின்றன போலும்!

திருமதி இராஜராஜேஸ்வரி: குளிர்பான கம்பெனியின் விளம்பரங்களா அந்த பாட்டில்கள் ?

திருமதி சித்ரா சுந்தர்: hanging garden கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் இது புதுசா இருக்கே. ஒருவேளை Recycle concept ஆக இருக்குமோ. இல்லை ஏதோ மரத்திலிருந்து எண்ணெய் அல்லது திரவம் எடுத்து காயவைக்க வேண்டுமோ!

கேள்விக்கு பதில் கேள்வி கேட்ட/பதில் சொல்ல முயற்சித்த அனைவருக்கும் நன்றி. ஒரு கேள்வி எத்தனை பதில் கேள்விகளை, யோசனைகளை உருவாக்கி இருக்கிறது! சரி கேள்விக்கான பதிலுக்கு வருவோம்!

நாங்கள் தேநீர் குடித்த [kh]குர்பாதால் அருகிலேயே இன்னுமொரு மேடை. அதில் இன்னுமொரு கடை உண்டு. அந்த கடைக்கு உதவும் பொருட்டே இந்த குப்பிகள் கட்டி வைக்கப் பட்டு இருக்கின்றன. கடற்கரையிலும், பொருட்காட்சிகளிலும் காற்று நிரப்பிய பலூன்களை ஒரு பெரிய திரையிலோ/அட்டையிலோ வைத்து துப்பாக்கி மூலம் சுடுவதைப் பார்த்திருப்பீர்கள் தானே. அது போலவே இந்த நெகிழி குப்பிகளும் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தும் ஒரு விளையாட்டு. சுற்றுலா வந்திருக்கும் நபர்கள் துப்பாக்கி மூலம் குப்பிகளைச் சுட்டு விளையாடலாம். மூன்று குண்டுகள் சுட பத்து ரூபாய்! காற்றில் அசைந்து கொண்டிருக்கும் அந்த குப்பிகளை குறிபார்த்து சுடுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்!

தேநீர் அருந்திய பின் எங்கள் பயணம் தொடர்ந்தது. மீண்டும் மலைப்பாதையில் பயணித்த நாங்கள் மால் ரோடிற்கு திரும்பினோம். மால் ரோடில் இருக்கும் Aerial Ropeway. மல்லிதால் எனும் இடத்திலிருந்து Snow View Point வரை அமைக்கப்பட்டுள்ள Ropeway மூலம் பயணிக்க வேண்டும். எங்கள் ஓட்டுனர் மத்லூப் அந்த இடத்திற்கு அருகில் எங்களை இறக்கி விட்டு அவருக்கு பேசிய வாடகையை வாங்கிக் கொண்டு தனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு எப்போது வந்தாலும் அழைக்கும்படிச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தார்.

சாலையிலிருந்து இந்த Ropeway இருக்கும் இடத்திற்கு சாலையிலிருந்து மேல் நோக்கி கொஞ்சம் நடக்க வேண்டும். செல்லும் வழியெங்கும் சில கடைகள் இருக்க, அங்கே வந்து அவர்கள் விற்கும் பொருட்களை வாங்கிக் கொள்ள அவர்களிடமிருந்து அழைப்பு வந்தபடி இருக்க, Ropeway அலுவலகத்திற்குச் சென்றோம். சிலர் மேலே சென்று கொண்டிருக்கும் அந்த சிறிய பெட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க நானும் இன்னுமொரு நண்பரும் நுழைவுச்சீட்டு வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.


 படம்: இணையத்திலிருந்து.... 
[ இங்கே நாங்கள் படங்கள் எடுக்கவில்லை! :( ]

அதற்குள் அந்த பெட்டியைப் பார்த்து விடுவோம்! மொத்தம் பதினோறு பேர் பயணிக்கும் வசதி உண்டு. அந்த பெட்டி தாங்கக்கூடிய அதிக பட்ச எடை 800 கிலோ மட்டுமே! மேலிருந்து மலைகளின் காட்சி மிகவும் அருமையானதாக இருக்கும் என்பதால் நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் அதில் செல்ல போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள். எங்கள் முறையும் வந்தது. பெரியவர்களுக்கு 100 ரூபாய் சிறுவர்களுக்கு 60 ரூபாய். நாங்கள் நான்கு நுழைவுச் சீட்டு கேட்க, உங்களுக்கு கொடுக்கப்படும் நேரம் மாலை 04.00 மணிக்கு தான். பரவாயில்லையா? என்று கேட்டார்.

நாங்கள் அந்த இடத்தில் இருந்தபோது மணி இரண்டே கால்! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டும். நண்பர்களுடன் பேசி, கூட்டிக் கழித்துப் பார்த்ததில் இங்கே காத்திருப்பதனால் மற்ற இடங்களைப் பார்ப்பது கடினம் ஆகி விடும் என அதில் பயணிப்பதை ஒதுக்கினோம். காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும் இந்த Ropeway-ல் பயணிப்பதும் ஒரு சுகமான அனுபவம் தான். நீங்கள் செல்வதாக இருந்தால் இதற்கான நேரத்தினை முன்னரே முடிவு செய்து பயணிப்பது நல்லது.

போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணத்தோடஎன்பது போல அங்கிருந்து புறப்பட்டு மால் ரோடினை அடைந்தோம். நைனா ஆற்றின் பக்கத்திலேயே ஒரு கோவில் எதிரே ஒரு மசூதி, நிறைய கடைகள் என ஆற்றங்கரையில் சில சுவாரசியங்கள் இருக்க அவற்றினைப் பார்த்துவிட்டு மதிய உணவு உட்கொள்ள வேண்டும். அடுத்த பதிவில் இந்த விஷயங்களைப் பார்க்கலாம்!

தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

36 கருத்துகள்:

 1. பாட்டில்கள் எப்படியோ மற்றவர்களுக்கு உதவுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. குப்பிகளை சுடுவதற்கு பதிலாக மொத்தமாக சேர்த்து கயிறை சுட்டுவிட்டால் என்ன செய்வது !

  தொடர்கிறோம் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நல்ல கேள்வி! எனக்குத் தோன்றாததால் நான் அங்கே கேட்கவில்லை! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 3. வித்யாசமான விளையாட்டாய் இருக்கே இந்த பாட்டில் சுடுதல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசமான விளையாட்டு தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   நீக்கு
 4. அந்தப் பெட்டியில் பயணம் செய்யும் வாய்ப்பை நானே இழந்தது போல இருக்கிறது! திகில் நிமிடங்களை மிஸ் பண்ணி விட்டீர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறை அங்கே சென்றபோது இந்த திகில் நிமிடங்களை உணர்ந்திருக்கிறேன். சண்டிகர் பக்கத்தில் timber trail எனும் இடத்திலும் இந்த ரோப்வே பயணம் செய்ததுண்டு..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. கேள்விக்கு நான் சொன்ன பதில் சரிதான் போல! சுட்டு வீழ்த்தப்பட்ட பாட்டில் கீழ் நோக்கி பயணம் செய்யும்தானே...? ஹிஹிஹி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட அட என்னமா யோசனை பண்றீங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. துப்பாக்கி மூலம் குப்பிகளைச் சுட்டு விளையாடலாம். மூன்று குண்டுகள் சுட பத்து ரூபாய்! காற்றில் அசைந்து கொண்டிருக்கும் அந்த குப்பிகளை குறிபார்த்து சுடுவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான்

  சுட்டு சுட்டு விளையாடும் விளையாட்டு
  சுவாரஷ்யம் தான்..1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. ரோப்கார் வழியே ரசிப்பதும் சுகமே ...மானஸா கோவிலுக்கும் .சிக்கிம் காங் டாக் கிலும் ரோப்காரில் சென்றது நினைவுக்கு வருகிறது !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹரித்வார் மான்சா தேவி கோவில் தானே நீங்கள் சொல்வது? அதில் பயணம் செய்வதும் இனிமையான அனுபவம் தான். பலமுறை சென்றதுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 8. சின்ன வயசுல ரோப் வேல போனதுண்டு. அதுக்கப்புறம் இன்னும் வாய்ப்பு கிட்டல. அப்ப பயத்துல அலறுனது இன்னும் நினைவுல இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி....

   நீக்கு
 9. ரோப் காரை தமிழில் எப்படி சொல்லுவோம்.. "கயிருந்து" ன்னா?? #டவுட்டு ;-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி...

   கயிருந்து.... நல்லாத்தான் இருக்கு! எனக்கு தெரியாததால் தான் ஆங்கிலத்தில் எழுதிவிட்டேன்! :)

   நீக்கு
 10. குப்பிகளின் கதை முடிவு எதிர்பாராதது. அடடே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   சற்று வித்தியாசமாக இருந்ததால் தான் அதை இங்கே பகிர்ந்து கொண்டேன்...

   நீக்கு
 11. பகவான் ஜி சொன்னாப்போல் தான் நானும் நினைச்சேன். ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலுக்கும், சண்டி தேவி கோயிலுக்கும் இப்படி ரோப் காரில் போயிருக்கோம். இதைத் தவிரவும் யுஎஸ்ஸில் டெனிசி அருகே ஸ்மோகி மவுன்டன் என்னும் இடத்தில் இன்க்ளைன்ட் ரயில் எனப்படும் செங்குத்தான பயணமும் போயிருக்கோம். பழனி மலையிலும் மலை மீது ஏறும் ரயிலில் போனோம். எல்லாமே நல்ல அனுபவங்கள் தான். பழனி போகும்போது மட்டும் படங்கள் எடுத்தோம். மற்ற பயணத்தின் போது காமிரா இல்லை என்பதால் எடுக்கலை. டெனிசியில் பெண் எடுத்தவை அவளிடம் இருக்கின்றன. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் ஒரு சில இடங்களில் இப்படி சென்ற அனுபவம் உண்டு. அந்நாட்களில் காமெரா இல்லாத காரணத்தினால் புகைப்படங்கள் எடுக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 12. நானும் எதற்கு பாட்டிலை இப்படி தொங்க விட்டிருக்கிறார்கள் என்று யோசித்தேன்! விடை கிடைக்கவில்லை! வித்தியாசமான ஒரு விளையாட்டுக்கு என்று அறிந்து மகிழ்ந்தேன்! சுவையான பயணப்பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   வித்தியாசமான விளையாட்டு என்பதால் தானே இங்கே பகிர்ந்து கொண்டேன்!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 14. பாட்டில் சுடுதலா? கேள்விப்பட்டதே இல்லை! புதிய தகவலாக இருக்கிறது! டோப்கார் பயணம் ஆஹா! செம திரில்லிங்கா இருக்கும்! இருந்திருக்குமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

   இப்பயணத்தில் ரோப் கார் பயணம் செய்ய நேரம் இல்லை. முந்தைய பயணங்களில் சென்றதுண்டு....

   நீக்கு
 15. வித்தியாசமான விளையாட்டா இருக்கே...
  பயணப் பகிர்வு அருமையா இருக்கு அண்ணா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 16. நீங்கள் ரோப் காரில் பயணம் செய்திருந்தால் எங்களுக்கு நல்ல படங்கள் கிடைத்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 17. ஆமாம், நீங்கள் அந்த விளையாட்டை விளையாடவில்லையா???

  அடடா, அந்த ரோப்காரில் பயணம் செய்யவில்லையா??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இம்முறை அந்த ரோப் காரில் பயணம் செய்யவில்லை.

   துப்பாக்கி சுட்டு விளையாட வில்லை. நாங்கள் சென்றபோது அந்த கடைக்காரர் வந்து சேரவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 18. பாட்டில்கள் குறித்த கேள்விக்கு எதிர்பாரா பதில் கிடைத்தது! பயணம் குறித்த பதிவு அருமை நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....