எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 20, 2015

கதவைத் தட்டிய பேய்....மனச் சுரங்கத்திலிருந்து...

பேய்க்கதைகள் கேட்பது ரொம்பவே ஸ்வாரஸ்யமான விஷயம் தான். நெய்வேலியில் இருந்த வரை இப்படி நிறைய பேய்க்கதைகள் கேட்டதுண்டு. அதில் ஒன்று எனது பக்கத்தில் பகிர்ந்தும் இருக்கிறேன். படிக்காதவர்களின் வசதிக்காக இங்கேயும் அதன் சுட்டி!


சரி.. சரி... ஊஞ்சலாடிய பேய் கதையை படிச்சீங்களா? இன்றைய கதைக்கு போகலாம் வாங்க!

கதைக்கு போறதுக்கு முன்னாடி நெய்வேலி வீடு பற்றி கொஞ்சம் சொல்லிடறேன். கதை சொல்லும்போது அது உதவும். திருச்சி சாலை [இப்போதைய சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் சாலை]யில் தான் எங்கள் வீடு. வாசலில் ஒரு பக்கம் கல்யாணமுருங்கை மரம், மற்றொரு பக்கத்தில் புளியமரம். 20-30 அடி நடந்தால் படிக்கட்டு. மூன்று படிக்கட்டுகள் ஏறினால், ஒரு சின்ன தாழ்வாரம் – அதில் பக்கவாட்டில் ஒரு திண்ணை. திறந்தே இருக்கும் கதவுகள் வழியே நுழைந்தால் வரவேற்பறை/ஹால். இடது பக்கத்தில் ஒரு படுக்கையறை. 

வரவேற்பறை/ஹால் தாண்டியதும், அடுப்பறை. அடுப்பறை/ஹால் வழியே வெளியே செல்ல இரண்டு கதவுகள். அவற்றின் வழி சென்றால் முற்றம், குளியலறை/கழிப்பறை. முற்றத்தில் ஒரு கதவு – அதன் வழியே தோட்டத்திற்குச் செல்ல முடியும்.  ஆக வீட்டிற்கு இரண்டு கதவுகள் – முன் வாயில் ஒன்று, தோட்ட வாயில் ஒன்று! ஒவ்வொரு அறையிலும் ஜன்னல்கள். பேய் கதைக்கு வரும்போது இந்த விளக்கத்திற்கான அவசியம் தெரியும்.

பெரும்பாலான இரவுகளில் வீட்டினுள் தான் படுக்கை. விருந்தாளிகளின் வருகை அதிகரிக்கும் நாட்களில் நாங்கள் வெளியே திண்ணையிலும்/தாழ்வாரத்திலும் படுத்துக் கொள்வதுண்டு.  அப்படி ஒரு நாள், வெளியே படுத்துக் கொண்டிருந்தபோது நடந்த கதை தான் இப்போது கேட்கப் போறோம். இந்தக் கதை நடந்த போது எனக்கு ரொம்ப சின்ன வயசு! அதுனால இது நடந்தது எல்லாம் எனக்கு நினைவில்லை என்றாலும் அவ்வப்போது அம்மா/பெரியம்மா ஆகியோர் சொன்னது நினைவில் இருக்கிறது.

ஏற்கனவே சொன்னது போல வீட்டு வாசலில் இருந்த புளியமரத்திலிருந்தோ, வேறு மரத்திலிருந்தோ ஒரு பேய் இறங்கி வந்திருக்கிறது. நானோ நல்ல தூக்கத்தில். பக்கத்தில் பெரியம்மா படுத்திருக்க, அவர்களுக்கு ஏதோ சலசலப்பு கேட்டு இருக்கிறது. பார்த்தால் மங்கலாக ஒரு உருவம் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் நின்று கொண்டிருப்பது போல தெரிந்திருக்கிறது.  கூடவே ஒரு சத்தமும்.....

 படம்: இணையத்திலிருந்து.....

“டக்...டக்...டக்......  கதவைத் தட்டும் ஓசை......

உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லை.  அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்திருப்பார்கள் போலும்!

மீண்டும்  “டக்...டக்...டக்...... 

கூடவே ஒரு குரலும்..... “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  உள்ளே இருக்கும் அம்மாவிற்குக் குரல் கேட்டு “யாரது எனக் கேட்க, இங்கே நிசப்தம்...

மீண்டும் சிறிது நேரம் கழித்து “மல்லிகாம்மா.. கதவைத் திற.....   மல்லிகாம்மா.... கதவைத் திற.....  என்ற குரல் கேட்க, பெரியம்மா சத்தமாக அம்மாவிடம் கதவைத் திறக்காதே என்று சொன்னதோடு, தாழ்வாரத்தில் கிடந்த ஒரு துடப்பம் எடுத்து தரையில் அடி அடி என அடிக்க, குரலும் உருவமும் நகர்ந்து விட்டதாம்.

வாசல் கதவை விட்டு அகன்ற பேய் அடுத்ததாக ஜன்னல் வழியாக வந்துவிடுமோ என அவசரம் அவசரமாக எல்லா ஜன்னல் கதவுகளையும் மூடிவிட [பொதுவாகவே நெய்வேலியில் எல்லா ஜன்னல்களும் காற்றோட்டத்திற்காக, திறந்தே தான் இருக்கும்], ஜன்னல்களிலும் “டக்....டக்....டக்....  ஓசை. அதற்கும் உள்ளே இருந்து பதில் வராது போக, தோட்டக்கதவிற்கு தாவியது கதவைத் தட்டிய பேய்.

தோட்டக் கதவில் தட்டியும் மீண்டும் மீண்டும் குரல் கேட்டுக்கொண்டே இருக்க, வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்களாம். தொடர்ந்து ஒரு குரல் மட்டும் வந்து கொண்டு இருக்க, உள்ளே இருந்து பேயோடு பேச்சு வார்த்தை நடத்த முயற்சி நடந்திருக்கிறது! இவர்கள் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பதிலில்லை! சற்றே நிசப்தமாக இருந்தால், மீண்டும் கதவைத் தட்டும் ஓசையும், “மல்லிகாம்மா.... கதவைத் திற.....குரலும் கேட்க, அனைவரும் திகிலில் உறைந்திருக்கிறார்கள்.... இப்போது படிக்கும் போது சிரிப்பாக இருந்தாலும், அந்த நேரத்தில் நிச்சயம் பயமாக இருந்திருக்கும்! வீட்டில் உள்ள எல்லா விளக்குகளையும் போட்டு விட்டாலும், கதவை மட்டும் திறக்கவே இல்லையாம்.

அதற்குள் வாசலில் இருந்த பெரியம்மாவிற்கு அப்படி ஒரு வேகம் வந்து வாயில் கதவுக்கருகில் வந்து நின்றுகொண்டு “இனிமே இங்கே வருவியா, வருவியா.... ஓடிப்போயிடு... இல்லைன்னா நடக்கறதே வேற....என்று மிரட்டியபடி துடப்பத்தினால் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறார்களாம். பேயை அவர் தான் அடித்து விரட்டிவிட்டதாகச் சொல்வார்கள். இத்தனை களேபரங்களில் நானும் எழுந்து விட, கண்ணில் கண்டது பெரியம்மா துடப்பத்தினால் அடித்துக் கொண்டிருந்ததை போலும்!

பயத்தில் நான் உளர ஆரம்பிக்க, வீட்டில் ஒரே களேபரமும் குழப்பமும்.  எங்கள் வீட்டில் கேட்ட சப்தங்களினால் அடுத்த வீட்டில் இருந்த ட்ரைவரூட்டம்மா குடும்பத்தினரும் எழுந்து விட அன்று இரவு முழுவதும் விளக்குகளை போட்டுக்கொண்டே தூங்காமல் கழித்திருக்கிறார்கள்.  கதவைத் தட்டிய பேயை பெரியம்மா ஓட்டி விட்டார்கள் என்று சொன்னாலும், எனக்கு தான் அந்த வயதில் அதிர்ச்சி விலகவில்லை போலும். அடுத்த நாள் காலையில் எனக்கு பயங்கர ஜூரம். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் ஜுரம் இறங்கவே இல்லை.

பூஜாரிகளிடம் மந்திரித்துப் பார்த்தும் ஜுரம் அவ்வப்போது வந்துகொண்டே இருக்க, பெரியம்மாவும், பெரியப்பாவும் அவர்கள் ஊரான விஜயவாடா செல்லும்போது என்னையும் அழைத்துக் கொண்டு போனார்களாம். அங்கே என்னை ஒரு தர்காவிற்கு அழைத்துச் சென்று மந்திரித்து தாயத்து கூட வாங்கிக் கட்டி விட்டிருக்கிறார்கள். சில நாட்கள் விஜயவாடாவில் தங்கியிருந்து பிறகுதான் நெய்வேலி அழைத்து வந்தார்களாம்.

நான் வளர்ந்த பிறகும், எனக்கு என்னமோ ஒவ்வொரு முறை பெரியம்மா/பெரியப்பா, அல்லது அம்மா அன்றைக்கு நடந்ததைச் சொல்லும் போதும் அந்தப் பேய் மீண்டும் வந்து கதவைத் தட்டுமோ என்று தோன்றும்! எனக்கு நினைவு தெரிந்து அந்தப் பேய் கதவைத் தட்டியதில்லை.  “அடப் போங்கய்யா.... எவ்வளவு தட்டினாலும், மல்லிகாம்மாவுக்கு காது கேட்கல போல...என்று அந்தப் பேய் அங்கிருந்து டேராவை கிளப்பி விட்டது என நினைக்கிறேன்.

இந்தப் புளிய மரம் இல்லாட்டி வேற ஒரு புளியமரம்என்று புறப்பட்டு விட்டதோ என்னமோ....  பேய்க்கே வெளிச்சம்!

எதுக்கும் இன்னிக்கு ராத்திரி தூங்கும்போது கதவை நல்லா மூடிட்டு தூங்கணும்!நு நான் முடிவு பண்ணிட்டேன்.... நீங்க!

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

62 comments:

 1. பயங்கரமான அனுபவம். இப்போது சிரிப்பு வருகிறதுதான். அப்போது எப்படியிருந்திருக்கும்? பயங்கரமான பேய்க்கதையின் இறுதியில் 'மல்லிகாம்மாவுக்கு காது கேட்கல, இந்தப் புளிய மரம் இல்லாட்டி இன்னொன்று' என்று பேய் புறப்பட்டுப்போயிருக்கும்' போன்ற வரிகள் வாசித்து இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் கீதமஞ்சரி. இப்போது கூட அம்மாவோ/பெரியம்மாவோ இந்த அனுபவத்தினைச் சொல்லும் போது மனதிற்குள் ஒரு ஓரத்தில் பேய் தானோ என்று நினைப்பேன். ஆனாலும் சிரித்து விடுவேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 2. Replies
  1. நிஜமா தான்! :) இன்னும் விவரங்களோடு கதை கேட்கணும்னா, பெரியம்மா கிட்ட கேட்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete

 4. இந்தமாதிரி பேய் பற்றிய கதைகள் சிற்றூர்களில் அநேகம் உண்டு. அவை இப்போது கதைகள் போல் தோன்றினாலும் சிறுவர்களாக இருக்கும்போது அவைகளைக் கேட்டதும் இருட்டைக் கண்டதும் பயம் வந்ததென்னவோ உண்மை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. பேய்க்கே வெளிச்சம்... சரி தான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. ஹஹ்ஹ்ஹ்ஹ் ரசித்து சிரித்தாலும்...உண்மையா பேய் வந்தது போல சொல்லியிருக்கீங்க...சிறியவயதில் இது போன்ற பேய் கதைகள் எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் மிகவும் பிராபல்யம்....கேட்டு பயந்து நடுங்கிய நாட்கள் பல. பின்னர் ஹஹஹ்ஹ் தான்

  .நண்பர் ஸ்ரீராம் ஓய்ஜோ - பேயை வரவழைத்துப் பேசுவது பற்றிய ஒரு பதிவு இட்டது நினைவுக்கு வந்தது. ...

  ReplyDelete
  Replies
  1. ஓய்ஜோ..... அதைப் படித்த போது நாங்கள் ஓய்ஜோ பயன்படுத்தியதும் நினைவுக்கு வந்தது. அதையும் ஒரு நாள் எழுதுவேன்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 7. இன்றைய ராஜ் செய்தியில் மகன் ஆவி அம்மாவிடம் வந்து எனக்கு ஊற்றிக் கொடுத்து தண்ணீரில் அமுக்கி கொன்றார்கள் என்று. சொல்லியதாம். இப்படி எல்லா பேயும் வந்து தங்களை கொன்றவர்கள் யார் என்று சொல்லிவிட்டால் நல்லா இருக்கும் என்று நினைத்தேன், நீங்களும் பேய் பற்றி பதிவு போட்டு பேய் இருப்பதை சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //இப்படி எல்லா பேயும் வந்து தங்களை கொன்றவர்கள் யார் என்று சொல்லிவிட்டால் நல்லா இருக்கும் //

   பல கொலையாளிகள் பிடிபட்டு விடுவார்கள்.... :)0

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 8. ம்ம்ம்ம்...ஒய்ஜா போர்டில் தான் ஆவி வந்து(??????) பார்த்திருக்கேன். அதோட ஜோசியம் எதுவுமே பலிக்கலை என்பது வேறே விஷயம். ஆனால் இங்கிலீஷில் தான் பேசும். தமிழ் வராது! :) இத்தனைக்கும் சொந்தக்கார ஆவி தான்! ஹிஹிஹி, உங்க பேயும் சொந்தம்னு நினைச்சுக் கதவைத் தட்டிச்சோ என்னமோ! மதுரையில் மேலாவணி மூல வீதி வீட்டில் அநேக முறைகள் தன்னந்தனியாக இருந்திருக்கேன். அதுவும் மாடி அறையில்! ஆனால் பயப்பட்டதில்லை. ஆனாலும்.............. :)

  ReplyDelete
  Replies
  1. ஓய்ஜா போர்டில் தமிழ் எழுதி சோதித்துப் பார்க்க நினைத்தோம். ஆனால், கூடாது.... ABCD....Z, 0, 1, 2....9, Yes, No மட்டும் தான் எழுதணும்னு சொல்லிட்டாங்க! அது தந்த அனுபவங்கள் தனிக்கதை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 9. ஒருமுறை என்ன ஆச்சுனு தெரியலை! மாடி அறைக்கு அருகே உள்ள வெட்டவெளியில் நான், என் அம்மா, அண்ணா, தம்பி ஆகியோர் படுத்திருந்தோம். திடீர்னு நானும், தம்பியும் மட்டும் ஒருவர் கழுத்தை இன்னொருவர் பிடித்த வண்ணம் கத்தி இருக்கோம். அக்கம்பக்கம் வீட்டுக்காரங்க எல்லாம் மாடிச் சுவர் வழியா ஏறிக்குதிச்சு வந்துட்டாங்க! ஏதோ கொலை நடந்துடுச்சு போலனு! ஆனால் கத்தின நாங்க கண்களையே திறக்கலையாம். தூங்கிட்டு இருந்திருக்கோம். எழுப்பித் தண்ணீர் கொடுத்து விபூதி பூசிப் படுக்க வைத்திருக்காங்க. இப்போவும் ஒரு சில நாட்கள் ராத்திரி தூக்கத்தில் கத்துகிறேன் என எங்கள் குடும்பமே சொல்லிட்டு இருக்கு! :) எனக்குத் தெரியறதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஒரு சிலருக்கு இப்படி ராத்திரி தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது! எங்கப்பா கூட இப்படி பேசுவார்! :) பல சமயங்களில் தூக்கத்தில் கூட என்னைத் திட்டுவார்! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 10. சினிமா தான் பேய் சீசனா இருக்குனு பார்த்தாப் பதிவுலகிலும் பேய் சீசனா இருக்கு! :)))) என்றாலும் படிப்பதற்கு அலுக்காது!

  ReplyDelete
  Replies
  1. பதிவுலகிலும் பேய் வாரம்.... :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 12. ஹஹ தங்கள் ரசித்து சிரிக்க வைத்த தங்கள் அனுபவம் போன்று சிறு வயது அனுபவங்கள் எல்லோருக்கும் இருந்தாலும் தங்களுடைய அனுபவம் சுவார்யஸ்மே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா....

   Delete
 13. பேய் என்றாலே சுவாரஸ்யம்தான்
  நீங்கள் சொல்லிச் சென்றவிதம்
  இன்னும் சுவாரஸ்யம் கூட்டிப் போகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 15. வணக்கம்
  ஐயா
  கதை அருமையாக உள்ளது இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 16. கிராமங்களில் இவ்வகைப் பேய் கதைகள் இன்றும் சொல்லப்படுவது உண்மை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 17. ஹா..ஹா...
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 18. நல்ல வேளை உங்க பெரியம்மா பேய்க்கு பயப்படலை! சிலரின் கண்களுக்கு மட்டுமே இப்படி பேய் உருவங்கள் குரல்கள் கேட்கும் என்று நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்! என்னுடைய அமானுஷ்ய அனுபவங்கள் பகிர்வுகளில் இதுமாதிரி சில எழுதி இருக்கிறேன். என் அப்பா நிறைய சொல்லுவார் பேய் பதிவிலும் தங்களின் நகைச்சுவை உணர்வை உணர முடிந்தது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 19. இன்னிக்குத் தூக்கம் போச்சு!
  த ம 19

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 20. அந்தப்பேய் வேற வீட்டுக்குக் கதவைத்தட்டப் போயிருக்கும். :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 21. தீ ஜூவாலை ரூபத்தில் வரும் கொல்லிவாய் பிச்சை 'சீ,தூரப் போ'என்று தைரியமாய் விரட்டியதாக என் அம்மாவும் அடிக்கடி சொல்வார்கள் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 22. பயமுறுத்திய பதிவு. கனவில் பேய் வந்தால் நீங்களே பொறுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 23. சிறுவயதில் எனக்கு பேய் அனுபவங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அப்ப இப்ப உங்களுக்கு அந்தமாதிரி அனுபவங்கள் இல்லையான்னு கேட்கபடாது. உண்மையை சொல்லி பூரிக்கட்டையால் என்னால் அடிவாங்க முடியாது.... சரி நான் வரேன் எங்க வீட்டுல பேய் கூப்பிடுகிற மாதிரி இரூக்குது

  ReplyDelete
  Replies
  1. இன்னிக்கு பூரிக்கட்டை அடி Confirmed! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை.

   Delete
  2. இலக்கணப்படி பேய் என்பது ஆண்பால் தெரியுமோ? பிசாசு என்பதே பெண்பால்.

   Delete
  3. அதனால் தான் பேய் பிசாசு! என்று சொல்கிறார்களோ..... அதிலும் ஆணாதிக்கம் - பேயை முதலில் சொல்லிட்டாங்க போல! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 24. ஆமாம், அந்த மல்லிக்காம்மா யாரு? அவங்களைப் பார்க்கத்தான் பேய் வந்ததோ என்னமோ?
  நல்ல தமாஷ் போங்க!

  ReplyDelete
  Replies
  1. எங்கம்மா தான் மல்லிகாம்மா! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 25. சினிமால தான் பேய் சீசன்னு சொன்னாங்க, இங்கயுமா? அவ்வ்வ்வ்வ்வ்......good narration. I can understand how it would've felt when u experienced it

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் பேய் வாரம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   Delete
 26. திகிலாய்...சுவாரஸ்யமான பதிவு. இப்போ சிரிப்பு வந்தாலும் சிறுவயதில் மிகவும் பயமாக இருக்கும் ஒவ்வொரு இரவிலும்....இது போல் நிறைய கேட்டு பயந்து இருக்கிறேன் சிறுவயதில் ஹஹஹா...
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 27. மலிகாம்மா வீட்டு புளியமரத்தை விட்டு விட்டு ரோஜாம்மா வீட்டுப் புளியமரத்தைத் தேடிப் போயிருக்கும். அதுக்கு பூ வாஸனை பெயர்கள்தான் பிடிக்குமாம். ஸரோஜாம்மாவைக் கண்டு பிடித்து விட்டதாம். நெய்வேலியில் தெரிந்தவர்கள் சொன்னார்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. பூ வாசனை பிடிக்கும்.... உண்மை தான். இரவு நேரங்களில் பூ வைத்துக் கொண்டு வெளியே போகக் கூடாது என அத்தைப்பாட்டி சொல்வார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   Delete
 28. சுவாரசியத்துடன் பேய்ப் பதிவு அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 29. அண்ணா... பய அனுபவம் கலக்கலுங்க...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....