எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, July 13, 2015

தள்ளாடும் தமிழகம் – சென்னை 200 ரூபாய் மட்டும்சமீபத்தில் சில வேலைகளுக்காக தமிழகம் வந்திருந்தேன். தில்லியிலிருந்து நேரடியாக திருச்சிக்குச் செல்லும் திருக்குறள் விரைவு வண்டியில் பயணம்.  அதில் கிடைத்த அனுபவங்கள் பிறிதொரு சமயத்தில் பதிவாக வெளி வரலாம்! இப்போதைக்கு திருச்சியிலிருந்து தில்லி திரும்பும்போது, சென்னை வரை பேருந்தில் பயணம் செய்ததில் கிடைத்த சில அனுபவங்கள் இங்கே பதிவாக! 

Neat-ஆ வீட்டுக்குப் போங்க:

சென்னையிலிருந்து காலையில் புறப்பட வேண்டும் என்பதால் திருச்சியிலிருந்து இரவுப் பேருந்தில் பயணம் செய்ய முடிவு செய்தேன். திருவரங்கத்திலிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் அமர்ந்து கொள்ள, புறப்பட்ட சற்று நேரத்திலேயே சத்திரம் பேருந்து நிலையம் வந்துவிட்டது. இரவு நேரம் என்பதால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. எனது பக்கத்து ஜன்னலோர இருக்கை காலியாக இருக்க, சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு மனிதர் அதில் அமர்ந்தார். ஜன்னல் வழியே வெளியே பார்த்து அவரை வழியனுப்ப வந்திருந்த இருவரிடம் “தம்பிகளா, Neat-ஆ வீட்டுக்கு போயிடணும்... எதுவும் ரவுசு பண்ணக்கூடாது! சொல்லிட்டேன்என்றார். பேருந்து புறப்பட, அடித்த காற்றில் அவர் சொன்ன Neat-இன் அர்த்தம் எனக்குப் புலப்பட்டது! ஒவ்வொரு முறையும் காற்றடிக்கும் போதெல்லாம் எனது நாசிகளிலும் டாஸ்மாக் வாசம் ஏற மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது எனது நடையிலும் தள்ளாட்டம்!

மருத்துவக் குறிப்பு புத்தகம்:

பேருந்துகளில் புத்தகம் விற்பவர்களைப் பார்த்திருப்பீர்கள். இரவு பத்து மணிக்கு மேல் புத்தகம் விற்கும் ஒருவரை திருச்சி நகரப் பேருந்தில் பார்த்தேன். சூரியத் தொலைக்காட்சியில் மூலிகை மருத்துவக் குறிப்புகள் சொல்பவர் எழுதிய புத்தகம் என்று சொல்லி பத்து ரூபாய்க்கு புத்தகம் விற்றார் ஒரு இளைஞர்.  எந்தப் புத்தகம் விற்கிறதோ இல்லையோ, மருந்துகள் பற்றிய புத்தகம் விற்பனையாகிறது! இரவு பத்து மணிக்கு மேலும் புத்தகம் விற்ற அந்த இளைஞரிடமிருந்து ஆறு – ஏழு பேர் புத்தகம் வாங்கினார்கள். புத்தகம் விற்ற இளைஞரிடமிருந்து பேருந்தின் நடத்துனரும் ஒரு புத்தகம் எடுத்துக் கொண்டு [காசு கொடுத்தாரா?] அதை என்னிடம் கொடுத்து படிச்சுட்டு வாங்க, வாங்கிக்கிறேன்என்றார்! ஒரு வேளை புத்தகம் படிப்பது எனக்குப் பிடிக்கும் என அவருக்கும் தெரிந்து விட்டதோ! இல்லை இப்படியும் இருக்கலாம் – “மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு அவசியம் தேவைஎன அவருக்குத் தோன்றியிருக்கலாம்! Neat-ஆக இருந்தவரின் பக்கத்தில் இருந்ததால் என்னையும் அப்படி நினைத்திருக்கலாம்! புத்தகத்தில் போட்டிருந்த விலை – ரூபாய் 50/-.  பத்து ரூபாய்க்கு எப்படி கட்டுப்படி ஆகிறது? இல்லை அடக்க விலையே ஐந்து ரூபாய் தானா? கடைகளில் விற்கும்போது ரூபாய் 50/- பத்து சதவீத தள்ளுபடி போக 45/- என நாமும் சந்தோஷமாக வாங்குவோம்.....

200 ரூபாய்க்கு சென்னை!

மத்தியப் பேருந்து நிலையத்தில் உள்ளே நுழைந்ததும் தனியார் பேருந்துகளுக்கு ஆள் பிடிக்கும் கும்பல்கள் உங்களைச் சூழ்ந்து கொள்வது வழக்கம். AC Bus, Sleeper Bus என்று பலரும் உங்களைச் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள் – அதிலும் இரவு நேரங்களில் இவர்களது நடமாட்டம் அதிகம்! சென்னைக்குப் போக இவர்கள் சொல்லும் கட்டணத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை – வாய்க்கு வந்த கட்டணம் தான் – எவ்வளவு அதிகம் கேட்கிறார்களோ, அவ்வளவு அதிக Commission யாருக்கோ போகிறது! இவர்களைக் கடந்து அரசுப் பேருந்துப் பக்கம் வந்தால் 200 ரூபாய்க்கு சென்னை, 200 ரூபாய்க்கு சென்னைஎன்று கூவிக் கூவி சென்னையை திருச்சியில் விற்றுக் கொண்டிருந்தார் ஒரு அரசுப் பேருந்து நடத்துனர்! நானும் 200 ரூபாய் கொடுத்து சென்னையை வாங்கி விட்டேன்!

கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும்:

எனது இருக்கைக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு இளைஞர் – முகத்தில் ஒரு மாத தாடி! அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசியது பேருந்தில் இருந்த அனைவருக்கும் கேட்டது! இரவு பதினோறு மணிக்கு, யாரையோ கொஞ்சிக் கொண்டிருந்தார். “அப்படி என்ன நேரமாச்சு, தூங்க இன்னும் நேரம் இருக்கே, பேசு, பேசு செல்லம்!அதற்குப் பிறகு பேசிய பலவும் இங்கே எழுத முடியாத அளவு இருந்தது! “நாராயணா, இந்தக் கொசு தொல்லை தாங்க முடியலையேMoment பேருந்தில் இருந்த பலருக்கும்!

அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதே!:

திருச்சியிலிருந்து பெரம்பலூர் வரை வந்தாயிற்று. பெரம்பலூரில் ஒரு இளைஞர் பேருந்தில் ஏறினார். எனக்கு முன்னால் இருந்த இருக்கையில், ஜன்னலோர இருக்கையில் ஒரு இளைஞர் இருக்க, பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பெரம்பலூரில் ஏறியவர், நேராக வந்து, ஜன்னலோர இருக்கை தனக்கு வேண்டுமெனக் கேட்க, அதில் அமர்ந்திருந்தவர் தரமுடியாது எனச் சொல்ல, “இவர் தனக்கு வாந்தி வருமெனச் சொன்னதோடு கொஞ்சம் சத்தமும் எழுப்பினார்!ரொம்ப பழைய Technique என்றாலும் Effective Technique! இரவு முழுவதும் வாந்தி எடுக்கவே இல்லை என்பதை உங்களுக்குச் சொல்லணுமா என்ன... 

அவர் செய்த இன்னுமொரு Atrocity.  பக்கத்து இளைஞர் நன்கு உறங்க, அவர் வைத்திருந்த அம்மா குடிநீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இவர் குடித்துக் கொண்டே இருந்தார் – அதுவும் வாயினுள் பாதி பாட்டில் போகும்படி வைத்து! இறங்கும்போது இது எதுவும் தெரியாமல் மீதி இருந்த தண்ணீரோடு அம்மா குடிநீர் பாட்டில் முதல் இளைஞரின் Back-pack ஓரத்தில் தஞ்சம் புகுந்தது!

சிங்கம் ஒன்று புறப்பட்டதே!:

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தின் சத்தத்தினை மிஞ்சுகிற அளவிற்கு பின்னாலிருந்து ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தார். கூடவே என்னை யாருன்னு நினைச்சே....  பொலி போட்டுடுவேன்....கூடவே சில வசவுகள்.  அவ்வப்போது கர்ஜனை....  திரும்பிப் பார்க்க, அவர் பேருந்தில் அமர்ந்திருந்தாலும் ஆடிக்கொண்டிருந்தார் – பேருந்து தரும் அதிர்வுகள் காரணமல்ல என்று சொல்லவும் வேண்டுமோ?  இரவு முழுவதுமே கர்ஜனை கேட்ட படியே இருந்தது! சிங்கம் எங்கே இறங்கப்போகுதோ என நினைத்துக் கொண்டிருக்க, நடத்துனரின் குரல் வந்தது! சிங்கம் தள்ளாடியபடியே கையில் பையோடு முன்னேறியது! இறங்கிய இடம் எவ்வளவு Apt-ஆ இருக்கு பாருங்க! – சிங்கம் இறங்கிய இடம் – சிங்கபெருமாள்கோவில்!

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்:

இரவு நேரப் பேருந்து பயணம் எனில் பேருந்தில் இருக்கும் பலரும் உறங்குவது வழக்கம். பாவம் – ஓட்டுனரும் நடத்துனரும் தான். நடத்துனராவது சில சமயங்களில் உறங்கிவிடுகிறார்.  ஓட்டுனர் உறங்கிவிட்டால், பேருந்தில் உள்ள பலரும் நீங்காத்துயிலில் ஆழ்ந்துவிட வாய்ப்பு அதிகம்! அதனால் தானோ என்னவோ, நான் சென்ற பேருந்தின் ஓட்டுனர் பாடல் கேட்டபடியே வந்தார். தூக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு தராத அளவு குறைந்த ஒலியில் தான் பாடல்கள் ஒலித்தது.  இளையராஜா பாடல்கள் பலவும் கேட்டபடியே வந்தார். நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்! அவருக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்று இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று முறை வந்தது அப்பாடல்....  என்ன பாடல்?  கொஞ்சம் பழைய பாடல்.  Situation Song போல! பாடல் என்னன்னு தானே கேட்கறீங்க! இதோ கேளு[பாரு]ங்களேன்!
இப்படியாக நானும் சென்னை வந்து சேர்ந்த போது காலை மணி 05.00.  சென்னை கொஞ்சம் கொஞ்சமாக விழித்துக் கொண்டிருக்க, நான் உறங்கத் தயாரானேன்! தில்லி செல்ல, கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அதுவரை உறக்கம்! 

மீண்டும் சந்திப்போம்.....

56 comments:

 1. ஆமாம், தமிழகமே தள்ளாடத்தான் செய்யுது! :( அரசாங்கம் துணையோட! இம்முறை உங்கள் ஶ்ரீரங்கம் வருகையின் போது எங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. மற்றப் பதிவுகளை மெதுவாப் பார்க்கணும். அரியர்ஸ் நிறைய! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   அரியர்ஸ் ஒன்றும் அதிகமில்லை. சமீபத்தில் எழுதிய பதிவுகள் குறைவே! :) முடிந்த போது படிச்சுடுங்க!

   உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

   Delete
 2. ஆஹா! சில மணிநேரப் பயணத்தைக் கூட சுவாரசியாமாக சொல்கிறீர்கள். பயணக் கட்டுரை மன்னர் நீங்கள்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப புகழாதீங்க முரளிதரன். :)))

   பயணக் கட்டுரை எழுதுவதில் நான் ஒரு கத்துக்குட்டி மட்டுமே... என்னை விட மிகச் சிறப்பாக எழுதும் பலர் உண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete

  2. முரளி மன்னர் என்று அழைக்காதீங்க அதற்கு பதிலாக கிங் என்று அழையுங்கள் அப்படி அழைப்பதில் ஒரு கம்பீரம் இருக்கிறது

   Delete
  3. ஆஹா.... அடுத்து நீங்களா மதுரைத் தமிழன்? நான் மன்னரும் இல்லை ராஜாவும் இல்லை! என்னை விட சிறப்பாக பயணக்கட்டுரைகள் எழுதுபவர்கள் இங்கே நிறைய உண்டு. அவங்கள்ல ஒருத்தர் இதே பதிவில் கருத்து கூட போட்டு இருக்காங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. பயணங்கள் தரும் பதிவுகள்! சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. ஆஹா.... நல்ல சிரிப்பான பயணமா இருக்கே! சிங்கமும் சிங்கப்பெருமாள் கோவிலும் சூப்பர்:-))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 5. உண்மைதான் ஐயா
  தமிழகம் தள்ளாடிக் கொண்டதான் இருக்கிறது
  நாளுக்கு நாள் ஆட்டம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது
  நன்றி
  தம =1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. சுவாரஸ்யமான பயணம்.... பாடல்கள் ஒன்றே சிறிது நிம்மதியும் திருப்தியும் தந்துள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. எப்பிடிப்பா இப்படி சலைக்காமல் டிராவல் பண்ணுறீங்க

  ReplyDelete
  Replies
  1. சில சமயங்களில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம்! பல சமயங்களில் எனக்குப் பிடித்ததால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 8. தங்களின் திருச்சி‌ -- சென்னை பயணம் பற்றிய பதிவில் ‘பார்த்தது பார்த்தபடி கேட்டபடி’ மிகவும் இரசித்து எழுதியுள்ளீர்கள். பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. திருச்சி – சென்னை , உங்களுடன் நானும் பஸ்சில் பயணம் வந்தது போன்ற உணர்வு; காரணம், உங்களது எழுத்து நடை, அவ்வளவு இயல்பாக இருந்தது.
  முன்பெல்லாம் வெளிப்படையாகக் குடிப்பதற்கு அச்சமும் வெட்கமும் அடைவார்கள்; இப்போது அப்படி எல்லாம் கிடையாது. குடிகாரர்களைக் கண்டு நாம்தான் வெட்கப்படவும் அச்சப்படவும் வேண்டி இருக்கிறது.
  டிரைவருக்கு பிடித்த பாடல் உங்களுக்கும் பிடிக்கும் எனத் தெரிகிறது.. எனக்கும் தான். “ தென்னைய வச்சா இளநீரு. பிள்ளைய பெத்தா கண்ணீரு.”
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. குடிகாரர்களைக் கண்டால் விலகிவிடுவதே நல்லது.எதுக்கு வீண் வம்பு!

   அன்றைக்கு அவர் கேட்ட பாடல்களில் பலவும் எனக்கும் பிடித்தவை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 10. நானும் திருச்சிதான் . .பிரைவேட் பஸ்கள் திருச்சி பஸ் நிலையத்தையே ஒரு பத்து முறை சுத்திச் சுத்தி வரும் ஒரு கொடுமையான விஷயம் உங்களுக்கு நடக்கலியா?அப்படிஎன்றால் கொடுத்து வைத்தவர்தான்

  ReplyDelete
  Replies
  1. ஓ.... நீங்களும் திருச்சி தானா....

   பெரும்பாலும் இந்த தனியார் பேருந்துகளை தவிர்த்துவிடுவேன். சில சமயங்களில் இணையம் வழியாக முன்பதிவு செய்து சென்றதுண்டு. நல்ல வேளை அச்சமயங்களில் பேருந்து நிலையத்தினை சுற்றிக் காண்பிக்கவில்லை

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 11. சந்து முனை பேச்சு எல்லாம்
  பேருந்தில் வந்து விழும் விந்தையை
  பயணக் கட்டுரையாக்கி பகிர்ந்த விதம்
  படு அழகு தலை நகரத்து நண்பரே! நன்றி
  த ம 6
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 12. உண்மையில் உடன் பயணித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது தங்கள் நடை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. பிரயாணம் பெரிதில்லை. வந்து விழும் வாய்ப்புகள் இருக்கிரதே அது அபாரம் அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா....

   Delete
 14. உங்கள் பயண அனுபவம் எங்களையும் அனுபவிக்கச் செய்தது மட்டுமல்ல அந்த நிகழ்வுகள் கண் முன் அப்படியே விரிந்தது. உங்கள் அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டதுண்டு...அதான் டாஸ்மாக்...

  அது ஏன் பேருந்தில் பயணம் செய்பவர்கள் குடித்துவிட்டு ஏறுகின்றார்கள்? இது ரொம்ப நாளாக எங்கள் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கின்றது...

  //மத்தியப் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து கீழே இறங்கும்போது எனது நடையிலும் தள்ளாட்டம்!// அஹஹஹஹ் செகண்டரி ஸ்மோக்கிங்க் போல இதை என்னவென்று சொல்லுவது?!!

  (கீதா: எனக்கு குமட்டிக் கொண்டு வந்துவிடும் வெங்கட் ஜி! நான் சீட்டை மாற்றித் தரச் சொல்லி விடுவேன். வேறு வழி....அதனாலேயே பேருந்து பயணத்தைத் தவிர்த்து விடுகின்றேன்...என்ன செய்ய..இப்போதெல்லாம் பேருந்துப் பயணம் அப்படி ஆகிவிட்டது....தனியார் டிக்கெட் மிகவும் அதிகமாக இருக்கின்றது...உங்களைப் போல பயணக் கட்டுரைகள் எழுத ஆசைதான். இதைப் போன்று சின்னச் சின்ன நிகழ்வுகளைக்க் கூட சுவாரஸ்யமாகச் சொல்லுகின்றீர்கள் அதைப் போன்றும்....உங்களிடமிருந்து கற்று வருகின்றேன்....!!!)

  பாடல் எங்களுக்கும் பிடித்த பாடல்...

  ReplyDelete
  Replies
  1. பேருந்து மட்டுமல்ல.... ரயில்களில் கூட குடித்துவிட்டு வருபவர்கள் நிறைய உண்டு. அதுவும் தில்லியிலிருந்து வரும்போது ரயிலிலேயே குடிப்பவர்கள் பார்த்திருக்கிறேன். சொன்னால் சண்டைக்கு வருவார்கள் - சண்டையும் போட்டு இருக்கிறேன்! :(

   பயணங்கள் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பாடம் கற்றுக் கொடுக்கிறது.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 15. வணக்கம்,
  தலைப்பு அருமை, அதனுள் அனைத்தும் அருமை,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 16. நடப்புலக நிகழ்வுகளை மறக்க நிழலுலகில் தள்ளாடும் பலர்.. பாவம் அவர்களை நம்பிக் கழுத்தை நீட்டிய (இப்போது அதுவும் சொல்லக்கூடாது. சரி..தாலியல்ல..மணமாலை) பெண்களும், இவர்கள் பெற்ற மகவுகளும்...

  ஆங்கில நாவல்களை உள்ளூர் பிரிண்ட் போட்டு குறைந்த விலையில் (பைரசி) விற்கிற மாதிரி, தமிழ்ப்புத்தகங்களும் ஆகிவிட்டதோ!

  நீங்கள் பதிவுக்காக உறங்கவில்லையா... அல்லது விஷய தானம் பண்ணும் ஆசாமிகள் உறங்கவிடவில்லையா?

  ReplyDelete
  Replies
  1. தமிழ் புத்தகங்களில் பைரசி - இருப்பதாக தெரியவில்லை.

   பெரும்பாலான இரவு நேர பயணங்களில் தூங்குவதில்லை - அப்படியே உறங்கினாலும் காக்காய் தூக்கம் தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 17. நீங்கள் பயணம் புறப்படுகையில் எல்லாம் எப்படி இத்தனை சுவையான அனுபவங்கள் கிடைக்கின்றதோ தெரியவில்லை! இந்த முறை நானும் கொஞ்சம் காதைத் தீற்றி வைத்துக்கொள்ள வேண்டும். ரயில்பயண அனுபவம் கேட்க ஆவலாக காத்திருக்கின்றேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரயில் பயண அனுபவம் - எழுத வேண்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 18. இப்போதெல்லாம் - இரவு நேர பயண அனுபவங்கள் இப்படித்தான் அமைகின்றன..

  பேருந்தில் - அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை - நடத்துனர் கூட ஏனென்று கேட்பதில்லை..

  கலகலப்பான பதிவு.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தினம் தினம் இது போன்று பார்த்து நடத்துனருக்கு பழகி விட்டது போலும். அதனால் தான் கேட்பதில்லையோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 19. அப்பாடா.... பேரூந்தில் பயணம் செய்து எவ்வளவு நாளாகி விட்டது. சில இனிமையான பாடல்கள் தூங்கச் செய்யாதோ. ?

  ReplyDelete
  Replies
  1. பயணங்களில் பெரும்பாலும் நான் தூங்குவதில்லை - அப்படியே தூங்கினாலும் ரொம்ப நேரம் தூங்குவதில்லை. இனிய பாடல்கள் கேட்கும்போது அதைக் கேட்க இன்னும் அதிக ஆவல் வந்து விடுகிறது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 20. சுவாரசிய பயணம் இல்லையெனிலும் எழுத்து சுவாரசியம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 21. தோழர்
  ஒருமுறை சென்னையில் தங்கையைப்பார்த்துவிட்டு ஷேர் ஆட்டோவில் வந்தபோது வெகு இயல்பாய் என்னிடம் பேசினார் ஒருவர்
  சரியாக கோயம்பேடில் நான் இறங்கும் பொழுது சார் ஒரு தோசை ஒரு பீர் அடிச்சுட்டுப் போ நறுக்குன்னு இருக்கும் என்றார்!
  தேநீர் அருந்துவது போல ...
  நேரம்டா என்று நினைத்துக்கொண்டேன்

  ReplyDelete
  Replies
  1. ஒரு தோசை ஒரு பீர்! - அட என்ன ஒரு கலவை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 22. Replies
  1. தமிழ் மணம் வாக்கிற்கு நன்றி மது.

   Delete
 23. கலக்கலான பேருந்துப் பயண அனுபவப் பகிர்வு.கூடவே பயணித்தது போல இருந்தது
  த ம 13

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 24. சுவாரசியமான பயண அனுபவங்கள். நேரம் போனதே தெரியாமல் இருந்திருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 25. பயண அனுபவத்தை மிகவும் நேர்த்தியாகப் பகிர்ந்துள்ளீர்கள். நன்கு ரசித்து எழுதியுள்ளதை நாங்கள் படிக்கும்போது உணரமுடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 26. சுவையாக எழுதினீர்! நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 27. இப்ப தமிழகமே தள்ளாடிக் கொண்டிருக்கிறது அண்ணா...
  சுவையாய் எழுதியிருக்கிறீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....