ஞாயிறு, 6 ஜூன், 2021

சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி ஐந்து - நெல்லைத் தமிழன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


புரியாத உறவில் எவ்வளவு அன்பு இருந்தாலும் நிலைப்பது இல்லை. புரிந்த உறவில் எத்தனை சண்டை வந்தாலும் பிரிவது இல்லை!


*****
செப்டம்பர் 2009-இல் ஆரம்பித்த எனது இந்த வலைப்பூ பயணம் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது!  இது வரை இந்தப் பக்கத்தில் 2500-க்கும் மேலான பதிவுகளை வெளியிட்டிருக்கிறேன்.  இந்தச் சமயத்தில் வலையுலகு தந்த நட்புகளில் சிலரையும், தில்லி நண்பர்கள் சிலரையும் எனது வலைப்பூ குறித்த அவர்களது எண்ணங்களை எழுதி அனுப்பச் சொல்லி கேட்டிருந்தேன்.  அப்படி எழுதி அனுப்பிய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. இது வரை இந்த வரிசையில் நான்கு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். ஐந்தாவதாக, நண்பர் நெல்லைத் தமிழன் அவர்கள் எனது வலைப்பூவினைப் பற்றியும் அதில் வெளியிடும் பதிவுகள் குறித்தும் எழுதி அனுப்பிய அவரது எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  அவரது வேலைகளுக்கு இடையே, எனக்காக தனது எண்ணங்களை எழுதி அனுப்பிய நெல்லைத் தமிழன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் - அவரது எண்ணங்களை படிக்கலாம்! 


அதற்கு முன்னர், இந்த வரிசையில் இது வரை வெளிவந்த அனைத்து பகுதிகளின் சுட்டியும் உங்கள் வசதிக்காக இங்கேயே…


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி ஒன்று - வல்லிம்மா


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி இரண்டு - சுப்ரமணியன்


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி மூன்று - எங்கள் பிளாக் ஸ்ரீராம்


சந்தித்ததும் சிந்தித்ததும் - நண்பர்களின் பார்வையில் - பகுதி நான்கு - Thillaiakathu Chronicles - துளசிதரன் மற்றும் கீதா


*****


எண்ணம் - 5 - நெல்லைத் தமிழன்:


தில்லி வெங்கட் - சந்தித்ததும் சிந்தித்ததும் தளம் - நெல்லைத்தமிழன் பார்வையில்

தில்லி வெங்கட் அவர்களின் "சந்தித்ததும் சிந்தித்ததும்" வலைப்பதிவை ஆறு வருடங்களாகத் தொடர்ந்து படித்து, பதிவைப்பற்றிய என் கருத்தையும் எழுதி வருகிறேன். (அதற்கு முந்தைய வருட இடுகைகளையும் அவ்வப்போது படித்துவிடுவேன்).  நான் முதலில் அவருடைய தளத்துக்கு வர ஆரம்பித்தது எங்கள் பிளாக்கின் மூலமாகத்தான்.  பிறகு தமிழ்மணம் மூலமாக எனக்குப் பிடித்த வலைத்தளங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு, அவைகளுக்கு தொடர்ந்து சென்று படிப்பேன். நான் கருத்து எழுதுவது சில வலைத்தளங்களில்தான்.  ஒரு வலைப்பதிவைப் படிக்க முக்கியக் காரணம், எழுத்தின் மீது கொண்டுள்ள ரசனைதான். பிறகு அந்தத் தளங்களுக்குப் போவது ஒரு வழக்கமாக ஆகிவிடுகிறது. ஆரம்ப காலத்தில், தமிழ்மண வாக்கு என்ற போதைக்காக பலரும் பல வலைத்தளங்களில் சென்று கருத்துரையிடுவதும், தமிழ்மண வாக்களித்துவிட்டேன் என்று சொல்வதும், நான் மொய் வைத்துவிட்டேன், நீயும் மொய் வைத்துவிடு என்பதைப்போன்ற போட்டிக்களமாக ஆகிவிட்டிருந்தது.  எப்போதுமே வெள்ளம் வரும்போது, நல்ல நீருடன், குப்பை கூளங்களையும் அடித்துவருவதைப்போல, வலைத்தள உலகமே கலவையாக இருந்த காலம் அது.  எனக்கு என்று தளம் இல்லாததால், எந்தவித கட்டாயமும் இல்லாமல், தேர்ந்தெடுத்து வாசிப்பது எனக்கு எப்போதுமே சுலபமாக இருந்திருக்கிறது.   தமிழ்மணம் இல்லாத காலத்தில் நிறைய தளங்களுக்குப் போகவோ தெரிந்துகொள்ளவோ முடியாத நிலைமை, அதே சமயம், அக்கப்போர் இல்லாத நம் ரசனைக்கு ஏற்றபடியான தளங்களுக்கு மட்டும் செல்லமுடிகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்போதும் நான் எங்கள் பிளாக் மூலமாகத்தான் சிலபல தளங்களுக்குச் செல்கிறேன். அதில் தில்லி வெங்கட்டின் தளமும் ஒன்று.


இணையத்தில் தொடர்ந்து எழுதுபவர்களைச் சந்திக்கும்போது, விட்ட இடத்திலிருந்து தொடர்வதுபோன்று அவர்களுடனான உரையாடல்கள் அமைந்துவிடும். நான் வெங்கட், ரஞ்சனி நாராயணன், கீதா சாம்பசிவம், கீதா ரங்கன், எபி ஸ்ரீராம் போன்றவர்களைச் சந்தித்தபோது, நெடுங்காலம் அவர்களை அருகிலிருந்து பார்த்ததுபோன்ற, பழகியது போன்ற உணர்வுதான் எனக்கு வந்தது. அவர்களுக்கும் அப்படியே இருந்திருக்கும்.  இதுதான் இணைய உலகத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.   


அரசியல் தளங்கள், திரைப்படங்களை மட்டும் அணுகும் தளங்கள், எழுத்தாளர்களின் தளங்கள், பல்வேறு ரசனைகளைக் கலந்துகட்டி வாரம் முழுதும் தரும் தளங்கள் என்று நிறைய வலைத்தளங்கள் இருந்தாலும், அதில் கையினால் எண்ணிவிடக்கூடிய தளங்களே என்னைக் கவர்ந்துள்ளன.  அவற்றில் முதன்மையானது தில்லி வெங்கட்டின் தளம்.


வெங்கட் நாகராஜின் எழுத்து நாம் அறிந்த சாதாரண நபர், தன்னுடைய அனுபவங்கள், பயணங்கள், தனக்குப் பிடித்தமானவைகள் என்று பலவற்றைக் கலந்து தரும்போது அது மிகவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. அவரது எழுத்து, யாரையும் காயப்படுத்தும் நோக்கத்துடன் கூடியது இல்லை. எதிலுமே ஒரு Stand எடுத்துக்கொண்டு, அது மட்டுமே சரியானது என்பதைப்போல மற்றவற்றை critisize பண்ணும் எழுத்தும் அல்ல.  வாசிப்பவர்களுக்கு ரசனையாகவும் இருக்கணும் ஏதேனும் புதிதாகத் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும் இருக்கணும் என்ற நோக்கத்துடன் கூடிய  எழுத்து, ஜனரஞ்சக பத்திரிகைகளைப் போல.


இந்தத் தளத்தில் இதுதான் பிடிக்கும் என்று சொல்வதைவிட, அனேகமாக எல்லா பதிவுகளுமே எனக்குப் பிடித்தமானதுதான்.  ஒவ்வொருவருக்கும் ரசனை என்பது வேறுபட்டது என்பதால், எல்லாருக்கும் பிடித்தமான தளமாகச் செயல்படுவது மிகக் கடினமான ஒன்று. சிலருக்கு சிலவகையான பதிவுகளில் ஆர்வம் இருக்காது, எனக்கு புதுக் கவிதைகளிலோ இல்லை குறும்படங்களிலோ ஆர்வம் இல்லாததைப் போல.  


வெங்கட் தளத்தில், ரொம்ப ஆர்வமாகப் படிப்பது, கதைமாந்தர் பகுதி,  ஃப்ரூட் சாலட், காஃபி வித் கிட்டு பகுதிகள் (இவற்றில் இருக்கும் கலந்த தலைப்புகளின் காரணமாக),  சாப்பிட வாங்க பகுதிகள் (அதில் இருக்கும் வித்தியாசமான வட இந்திய உணவு வகைகள் காரணமாக), Misc தலைப்புகளில் முன்பெல்லாம் எழுதிக்கொண்டிருந்தார், அவைகளும் மிகவும் பிடித்தமானவை  (உதாரணம் கரகரப்ரியா போன்று பல தலைப்புகள்), அவர் சென்ற functions/தில்லியில் உலா போன்றவையும் புதிய விஷயங்களை நமக்குத் தரும், இதற்குப் பிறகுதான் எனக்கு அவருடைய பயணக்கட்டுரைகள்.  தில்லி வெங்கட் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்து அதனை புகைப்படங்களோடு நம்மிடம் பகிர்ந்துகொள்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான். முன்பை விட (சிலவருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட) தற்போது அவர் பயணக்கட்டுரைகளை இன்னும் நிறைய தகவல்களோடு மெருகேற்றி எழுதுகிறார் என்பது என் அபிப்ராயம்.  புகைப்பட உலாக்களில் தான் சென்ற இடங்களில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வார். அவரது எழுத்தில் சமூகச் சிந்தனையும் அவ்வப்போது தெரியவரும்.  அவருடைய பதிவுகளில் நான் ஆர்வமாகப் பார்க்காதது விளம்பரங்களும் குறும்படங்களும்தான். அதற்கான நேரமும் பொறுமையும் எனக்கு இருப்பதில்லை.


அவரது எழுத்து, பதிவுகள் (பயணப் பதிவுகளைத் தவிர) அனேகமாக உடனுக்குடன் எழுதப்படுபவை. 2015ல், அவர்,  (https://venkatnagaraj.blogspot.com/2015/07/gh-900.html)  (GH)கேவர் இனிப்பு பற்றி எழுதியிருந்ததைப் படித்தேன். அந்த வாரத்திலேயே பஹ்ரைனிலிருந்து பெங்களூருக்கு அலுவலக விஷயமாக வந்து கோரமங்கலாவில் தங்கியிருந்தேன். வந்த அன்று மாலை நடந்துகொண்டிருந்தபோது, ஒரு தெருவில் இந்த இனிப்பைச் செய்வதைப் பார்த்தேன் (அவர் சொல்லியிருந்ததுபோல அந்த இனிப்பு செய்யும் பண்டிகையை ஒட்டிய வாரங்கள்). கடைகளில் கிடைத்த அந்த இனிப்பை வாங்கி என் மனைவிக்குக் கொண்டு சென்றேன. அவளுக்கு இந்த இனிப்பு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு அதுவரையில் தெரியாத ஒரு இனிப்பு, அது பெங்களூரில் செய்யப்படுவதை அந்த வாரத்திலேயே காண நேர்ந்தது, அந்தப் புது இனிப்பை என் மனைவிக்குக் கொண்டு சென்று பரிசளித்தது என்பது எனக்கு சந்தோஷமளித்தது. வெங்கட் தளம் பற்றி நினைக்கும்போது இதை என்னால் மறக்க முடியாது.


அவருடைய எழுத்துகளைத் தவிர, ஆதி வெங்கட்,  நண்பர் பத்மநாபன் அண்ணாச்சி, சமீபத்தில் நண்பர் சுப்பிரமணியம் அவர்களின் எழுத்தில் பயணப் பதிவுகள் ஆகியவைகளும் இந்தத் தளத்தில் உண்டு. ஆதி வெங்கட் எழுதும் கதம்பம், அனுபவங்கள் ரசிக்கக்கூடிவை.  பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்து ரொம்பவே நன்றாக இருக்கும்.  எத்தனையோ பதிவுகளை அவரிடமிருந்து வாங்கிப் போட்டிருக்கலாம் (உதாரணமா நாரோயில்காரனுக்கு தில்லி என்ன என்ன ஆச்சர்யத்தையும், அவஸ்தையையும் ஆரம்பகாலத்தில் தந்தது, அவரது அனுபவங்கள், அலுவலக நகைச்சுவைகள் போன்றவற்றையும் கேட்டு வாங்கிப் போட்டிருக்கலாம்).


தனிப்பட்ட முறையில் எனக்கு, வெங்கட்டின் மின்னூல் விமர்சனங்கள், அவரது தளத்தில் வருவது அவ்வளவு உவப்பாக இல்லை. பெரும்பாலும் இந்த மாதிரி விமர்சனங்கள், சரியாக அமைவதில்லை என்பதும் காரணமாக இருக்கும். இந்தப் பகுதியை புத்தக அறிமுகம் என்பதாக, தான் படித்த புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம் என்பது என் எண்ணம். ஆதி வெங்கட் அவர்கள் அவ்வப்போது அப்படி பகிர்ந்துகொள்கிறார் என்பதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது.


தில்லி வெங்கட்டின் இயல்பே controversial topicsகளுக்குச் செல்லாததா அல்லது இணையத்துக்காக இந்த டிஸிப்பிளினைக் கடைபிடிக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அரசியல், மதம் போன்றவைகளில் நுழையாமல், அக்கப்போர்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் இவ்வளவு வருடங்கள் எழுத்தைத் தொடர்வதே மிகவும் ஆச்சர்யமானது.  இன்னொன்று, நம்மைப் போன்ற சாதாரண பின்னணி கொண்ட நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருடன், அவரது பதிவுகளினூடே, அவர் குடும்ப நண்பராக, பதிவுகளைப் படிக்கும் ஒவ்வொருவரையும் நினைத்துக்கொள்ள வைப்பது, அவரது வாழ்க்கையுடனேயே நாமும் கூடவே சேர்ந்து பயணிப்பது போன்ற உணர்வைத் தருவது,  அவரது தளத்தின் வெற்றி. 


அவருடைய தளத்தில் முந்தைய வருடங்களின் (yester years) பதிவுகளும் திரும்பப் படிக்கும்போதும் சுவையாக இருக்கிறது. அவரே சில பகுதிகளில், அவற்றை மீண்டும் நமக்குப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறார். வருடத்துக்கு சராசரியாக 200 பதிவுகளுக்கும் மேல் எழுதியிருக்கிறார். 

 

ஒரு forced பேச்சிலருக்கு எப்படி இவ்வளவு நேரமும், பொறுமையும், ஆர்வமும் இருக்கிறது என்பதே எனக்கு ஆச்சர்யம் அளிக்கும். அனேகமாக தினமும் ஒரு பதிவு என்ற விகிதத்தில் எழுதுவதற்கும், கருத்துகளுக்கு மறுமொழி சொல்வதற்கும் எப்படி அவரால் முடிகிறது? 


இப்போது 2500 இடுகைகளைத் தாண்டியும் எழுதிக்கொண்டிருக்கிறார். பாராட்டுகள். நிறைய நல்ல பதிவர்கள், தொடர்ந்து எழுதுவதில்லை. ஏதோ ஒரு சலிப்போ இல்லை, எழுதி எழுதி என்னத்தைக் கண்டோம் என்ற வெறுப்போ. எழுதுவதை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் எழுத்தைத் தொடர்ந்து படித்துவந்த வாசகர்களை அம்போவென விட்டுவிடுகிறார்கள் என்றே நான் நினைப்பேன்.  அப்படி நினைக்காமல், தொடர்ந்து, எழுதுவதை சலிப்பில்லாமல் செய்யவேண்டும் என்பதே நான் அவரைக் கேட்டுக்கொள்வது. நிச்சயம் நிறையபேர்கள் வாசிப்பார்கள், அந்த எழுத்திலிருந்து பயனடைவார்கள்..


பயண எழுத்திலிருந்து மின்னூல்கள் வெளியிடுவது என்று அடுத்த கட்டத்துக்கு வெங்கட் சென்றார். இப்போது யூடியூப் உலகத்திலும் வெங்கட் நுழையப் போகிறார் என்பதைப் படிக்கும்போது அவரது வளர்ச்சி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரும், அவரது மனைவி, மகள் ஆகியோரும் மிகப் பயனுள்ளதாக தங்கள் நேரத்தைச் செலவழித்து வருவது, பெருமை கொள்ளக்கூடிய விஷயம். தில்லி வெங்கட் இன்னும் பெரிய வளர்ச்சியை அடையவேணும் என்று வாழ்த்துகிறேன்.


Note: இது என்ன சம்பந்தேமேயில்லாமல் ஒரு படம் என்று யோசிக்காதீர்கள். அவருடைய ஊரில் எடுத்த புகைப்படம். தில்லி வெங்கட்தான் இது என்ன என்று சொல்லணும்.


நெல்லைத்தமிழன்


******


இந்தப் பதிவினை முடிப்பதற்கு முன்னர், நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கேள்விக்கு (படத்தில் இருப்பது என்ன?) பதில் சொல்லி விடுகிறேன்.  இது வேறொன்றும் இல்லை - நம் தமிழகத்தில் கிடைக்கும் இலந்தை பழம் தான் - வடக்கே இப்படி பெரிது பெரிதாகக் கிடைக்கும் - அதிகம் பழுக்காது.  ஆனால் சுவையாக இருக்கும்! சீசனில் நிறையவே கிடைக்கும்.  


நண்பர்களே, இன்றைய பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். அத்துடன் இந்த வலைப்பூவில் வெளிவரும் பதிவுகள் குறித்த உங்கள் எண்ணங்களையும் நிறை குறைகளையும் சொல்லுங்கள்.  மீண்டும் வேறு ஒரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


28 கருத்துகள்:

 1. நெல்லைத்தமிழனின் கருத்து ஆழ்ந்தும், நேர்மையாகவும் இருக்கிறது.  அது அவர் இயல்பு.   வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழனின் கருத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. நானும் இலந்தைப் பழம் என்றே நினைத்தேன். சரியாகப் போச்சு. நெல்லைத் தமிழன் நன்கு அலசி ஆராய்ந்து சொல்லி இருப்பவை அனைத்தும் உண்மை. நல்லதொரு விமரிசனம். இதன் மூலம் உங்களுக்கும் தன்னைத் தானே அலசிக்கொள்ளவும் தவறுகள் (இருந்தால்) திருத்திக் கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பு. தொடர்ந்து ஆக்கபூர்வமான பதிவுகளைத் தொடர்ந்து தருவதற்கும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலந்தைப் பழம் - நீங்கள் நினைத்தது சரி தான் கீதாம்மா.

   தவறுகளை திருத்திக் கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பு - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வெட்ட வெளிச்சமான, உண்மையான விமர்சனம் பதிவர்களை ஆழ்ந்து கூர்ந்து கவனிக்கிறார் என்று தெரிகிறது.

  வாழ்த்துகள் தமிழரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் அவர்களின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நெல்லைத் தமிழனின் கருத்து சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழனின் கருத்து உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாசகம் அருமை.
  நெல்லைத் தமிழன் அவர்கள் நன்றாக சொல்லி இருக்கிறார்.
  அந்த படம் இலந்தைப்பழம் என்று நினைத்தேன் , கடைசியில் விடை சரிதான் என்று தெரிந்து கொண்டேன்.

  //யூடியூப் உலகத்திலும் வெங்கட் நுழையப் போகிறார் //

  நுழைந்து விட்டார், அதையும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

  நெல்லைத்தமிழனுக்கும், வெங்கட் உங்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   இலந்தைப் பழம் என நீங்களும் நினைத்திருப்பது நன்று.

   யூட்யூப் - முடிந்த வரை அங்கேயும் செயல்படுவேன் மா.

   வாழ்த்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. நல்ல, சுவையான, நேர்மையான விமர்சனம். தினசரி ஒரு பதிவு எழுதுவதும், தன்னுடைய 2500 பதிவை கொண்டாடும் விதமாக பதிவை படிப்பவர்களிடமிருந்து கருத்து வாங்கி பிரசுரிப்பதும் வரவேற்க்கத்தக்க முயர்ச்சி! தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழனின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானும்மா.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. நல்லதொரு விமர்சனம்...
  இருவருக்கும் வாழ்த்துகள் அண்ணா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழனின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி குமார்.

   வாழ்த்தியமைக்கும் மனம் நிறைந்த நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. விமர்சனம் எழுதினால், மனதில் உள்ளதை எழுதினால்தான் எனக்கு (குறைந்தபட்சம் எனக்காவது) நிறைவாக இருக்கும். இந்த விமர்சனம் மூலமாக தில்லி வெங்கட்டைக் கேட்டுக்கொள்வது, தொடர்ந்து எழுதுங்க. மற்ற தளங்களிலும் (முகநூலோ இல்லை யூடியூபோ மற்றவையோ) இயங்கினாலும், வலைத்தளத்தில் தொடருங்க.

  வாசிப்பவர்களிடம் அவர்களது கருத்தைக் கேட்டு, அதனை அப்படியே வெளியிடுவதும் நிச்சயம் வித்தியாசமான, வரவேற்கத்தக்க முயற்சி. இன்னும் பல உயரங்களை நீங்கள் அடைய ப்ரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் நினைத்ததை எழுத, அதை வெளியிட எனக்கு ஒரு வாய்ப்பு. உங்கள் பணிச்சுமைகளுக்கு இடையே, எனக்காக இப்படி சிறப்பான ஒரு பார்வையை எழுதி அனுப்பியமைக்கு மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன். மற்ற தளங்களில் அவ்வப்போது இயங்கினாலும், இங்கே நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அருமையாக விமர்சித்து உள்ளார்... வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் அவர்களின் விமர்சனம் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 10. மனதில் பட்டதை உணப்வுப்பூர்வமாகவும், நேர்மையாகவும் தந்திருக்கிறார் நெல்லைத் தமிழன் அவர்கள்.
  அவருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

   நீக்கு
 11. நெல்லையின் கருத்துகள் அவரது இயல்பான கருத்துகள். நன்றாகச் சொல்லியிருக்கிறார்.

  வாழ்த்துகள் நெல்லை மற்றும் வெங்கட்ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழனின் விமர்சனம் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  உங்கள் பதிவுகளை குறித்து சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களின் விமர்சனம் நன்றாக உள்ளது. ஒவ்வொரு வார்த்தைகளையும் அழகாக தொகுத்து விமர்சனத்தை படிக்க ரசனையாக தந்து உள்ளார். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,என் மனமார்ந்த வாழ்த்துகள். அழகாக விமர்சித்த சகோதரர் நெல்லைத் தமிழருக்கும் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   நெல்லைத் தமிழன் அவர்களின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. நெல்லை தமிழரின் ஒளிவு மறைவு இல்லாத நேரடியான விமர்சனம் பாராட்டுக்குரியது.

  "ஒரு forced பேச்சிலருக்கு எப்படி இவ்வளவு நேரமும், பொறுமையும், ஆர்வமும் இருக்கிறது என்பதே எனக்கு ஆச்சர்யம் அளிக்கும். அனேகமாக தினமும் ஒரு பதிவு என்ற விகிதத்தில் எழுதுவதற்கும், கருத்துகளுக்கு மறுமொழி சொல்வதற்கும் எப்படி அவரால் முடிகிறது?" - எனக்கும் இந்த சந்தேகமும் ஆச்சரியமும் எப்போதும் ஏற்படுவதுண்டு.
  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் அவர்களின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோயில்பிள்ளை.

   ஒரு ஃபோர்ஸ்ட் பேச்சிலருக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது! ஹாஹா. நல்ல சந்தேகம் தான் உங்களுக்கும் நெல்லைத் தமிழனுக்கும். எனக்கு வேறு எந்த வித பழக்கங்களும் கிடையாது. அலுவலகம், வீடு, வேலைகள், நடைப்பயிற்சி தவிர மீதி நேரம் இப்படி செலவிடுவது வழக்கம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பயனுள்ளதாகவே பயன்படுத்துவது வழக்கம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. விரிவான அருமையான விமர்சனம். அறிந்தேயிராத பல்வேறு இனிப்பு மற்றும் உணவு வகைகளை செய்முறையுடன் பகிரும் அக்கறை எனது பாராட்டுக்கும் உரியது. நெல்லைத் தமிழன் அவர்களுக்கு அது உதவிய சம்பவம் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், உங்களுக்கும் பிடித்த பகுதி குறித்த தகவலையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....