புதன், 16 ஜூன், 2021

கடந்து வந்த பாதை - பகுதி இரண்டு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


புன்னகையே அன்பின் சின்னம்! அதுவே நாம் பிறருக்குக் கொடுக்கும் அழகிய பரிசு.


******
தில்லி நண்பர் சுப்ரமணியன் அவர்களது எழுத்தில் கடந்து வந்த பாதை தொடரின் முதல் பகுதியைச் சென்ற ஞாயிறு படித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.  படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படித்து விடுங்களேன்!  வாருங்கள் நண்பர் கடந்து வந்த பாதையை, தொடர்ந்து அவரது வார்த்தைகளில் படிப்போம் - நட்புடன் - வெங்கட் நாகராஜ்.


******


கடந்து வந்த பாதை - சுப்ரமணியன்

அன்பிற்கினிய நண்பர்களே, தீநுண்மி இன்னும் இந்தியாவைத் தீண்டிக் கொண்டிருப்பதால், எச்சரிக்கையாக இருப்போம்.  வருமுன் காப்போம்… வளமாய் வாழ்வோம்.  MASK FIRST SHOE NEXT!  


கடந்த வந்த பாதை முதல் பகுதியைப் படித்து கருத்துகளை பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. சென்ற பகுதியில் நான் எடுத்த மூன்று சபதங்கள் குறித்துச் சொன்னேன்!  அந்த மூன்று சபதங்கள் என்ன? இந்தச் சபதங்கள் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம் வாருங்கள்!  


நான் எடுத்த அந்த மூன்று சபதங்கள் - (1) இனி குட்டை கால்சராய்கள் அணிவதில்லை; (2) அரைக்கை சட்டை அணிவதில்லை (அப்போது என்னிடம் இருந்த ஒரு சில அரைக்கை சட்டைகளையே மீண்டும் அணிந்து சென்றதால், சக மாணவர்கள், ”இந்த ஜாக்கெட்ல நீ கும்முன்னு இருக்கடா சுப்புன்னு” சொன்னதால்!) [அன்று முதல் இன்று வரை என்னை ஜனரஞ்சகமாக நண்பர்கள் சுப்பு என்றும், உறவினர்கள் மணி என்றும் அழைத்து வருகிறார்கள்] (3) எப்பாடு பட்டாவது ஆங்கிலத்தைக் கற்றே தீருவது என அந்நாளில் மிகப் பிரபலமான WREN & MARTIN புத்தகத்தை (ஆங்கில இலக்கணத்தின் தந்தை இப்புத்தகம்) வெறி பிடித்தவன் போல படித்தேன்.  இதனால் மட்டுமே என்னால் PUC என்னும் பிரம்மாண்ட தடுப்பணையைத் தாண்ட முடிந்தது. 


PUC ஆங்கிலம் (ஹிஹி!), தமிழ் (ஆஹா!), பௌதீகம் (இவ்வளவு பிரித்து மேய்ந்த பௌதீகம் படித்ததே கிடையாது!),  இரசாயனம் (இது ஒன்றே புரிந்து படித்ததில் பிடித்தது), இயற்கை அறிவியல் (Natural Science) என பாடங்கள் இருந்தது.  அதுவரை தாவரவியலில், தாவர வகைகள், மலர்/காய்/கனி மகரந்தம் (தன்/அயல்) எனப் படித்து விட்டு, Family-ங்கராங்கோ, Calyx-ங்கராங்கோ, Corolla-ங்கராங்கோ, Petals-ங்கராங்கோ - ஒரு கை ஓசை பாக்யராஜ் போல, ஞேபே ஞேபே ஞேபேபே தான்.  தட்டுத் தடுமாறி, அர்த்தம் புரியாமலும், அகராதி தெரியாமலும் சொல் வழக்கான உரு போடுவது ஒன்றே (MUG UP) வழி என முட்டி மோதி, 60% மதிப்பெண்களுடன் வெளியேறினேன்! 


PUC படிக்கும் நாட்களில் உறவினர் வீட்டின் கொடுமைகளைச் சொல்ல விழையவில்லை.  அனைவரும் கடைகளில் ஏதேதோ வாங்கித் திங்க, ஜொள் வழிய வேடிக்கைப் பார்த்தே வாழ்ந்தது சற்று கசப்பு.  இருப்பினும் தினசரி 60 பைசா கிடைக்கும் - பேருந்துக் கட்டணமாக.  தடம் எண் 59 - வினாயகா மெயின்கார்ட் கேட் -வளவந்தான் கோட்டை (அந்நாளில் சத்திரம் பேருந்து நிலையம் கிடையாது!). இப்பேருந்து மட்டுமே கல்லூரி நுழைவாயில் வரை செல்லும். காலையில் அதில் செல்வேன். அந்நாளில் கல்லூரிகள் மிக அரிதாக இருந்ததால், தஞ்சாவூர், திட்டை, பூதலூர், பண்டாரவாடை, பசுபதி கோவில், அய்யம்பேட்டை, அம்மா பேட்டை  பகுதிகளிலிருந்து நிறைய மாணவர்கள் எங்கள் கல்லூரியில் படித்தார்கள். அவர்கள் புகைவண்டி மூலம் (அந்நாளில் நீராவி எஞ்சின் தான்) வருவார்கள்.  


மிகப் புகழ்பெற்ற 109/110 - இதை கிராமம் முதல் நகரம் வரை அனைவரும் ஒன் நாட் நைன்/ஒன் டென் என்றே அழைப்பர் - ஆங்கிலத்தின் மீது அவ்வளவு மோகம்.  சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே செல்லும் ஃபாஸ்ட் பாசஞ்சர்.  அந்நாளில் சென்னை எழும்பூர் சேரும் முதல் இரயிலும் (0350) இதுதான். அங்கிருந்து கிளம்பும் கடைசி இரயிலும் (2240) இது தான். கல்லூரி 4 மணிக்கு விட, திருவெறும்பூரில் இந்த இரயில் மாலை 04.40-க்கு. பேருந்துகள் மிகக் குறைவு.  எனவே இரயிலில் செல்லும் மாணவர்களுடன் நானும் ஓட்டமாய் ஓடுவேன். என்னடா என்னென்னவோ சொல்றானேன்னு பார்க்கறீங்களா? அப்படி ஓடி மிச்சம் பண்ண முப்பது பைசாவை எனது அல்ப ஆசை தின்பண்டங்களை, திருடாமல் (உறவினர்களின் பார்வையில் திருடி) வாங்கித் தின்பேன். 


இப்படியாக கல்லூரியின் முதலடி, பல்வேறு பாடங்களாய் எனக்குக் கற்பிக்க, இறுதி பரிக்ஷையான இராசயன ஆய்வகத் தேர்வு (Chemistry Practicals) எழுதி முடிந்ததும், வீடு வந்து இருந்த அனைத்து உடைமைகளையும், எனது படுக்கைக்குள் திணித்து, பேருந்தில் அரியமங்கலம் சென்று, மாலை 06.48-க்கு விருத்தாசலம் பாசஞ்சரில் ஏறி, இனி உறவினர் வீட்டில் தங்கிப் படிப்பதில்லை என்ற முடிவுடன் ஜன்னலோரம் உட்கார்ந்து சில சங்கடமான நினைவலைகள் கண்ணீர் துளிகளாய் மாற, சுதாரித்து இரவு 10.20-க்கு விருத்தாசலம் சந்திப்பு வந்து சேர்ந்தேன்.  இரவு முழுவதும் நடை மேடையிலேயே இருந்து விட்டு, காலை 03.40-க்கு, பாசஞ்சரில் முகாசா பரூர் சென்று ஒரு கட்டை வண்டியில் கிராமம் வந்து சேர்ந்தேன்.  அப்போது தெரியாது மீண்டும் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் உறவினர் வீட்டு வாசம் தான் என்று!  


தொடர்ந்து கடந்து வந்த பாதையில் பயணிப்போம்…


நட்புடன்


சுப்ரமணியன்

புது தில்லி


******


நண்பர்களே, இந்த நாளில் வெளியிட்ட, நண்பரின் கடந்து வந்த பாதை பதிவு குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...


18 கருத்துகள்:

 1. பிறர் வீட்டில், என்னதான் உறவினராக இருந்தாலும், தங்கிப் படிப்பது என்பது பல்வேறு சங்கடங்களைத் தரக்கூடியது.

  பிற்காலத்தில், இன்னைக்கு இவ்ளோபெரிய நிலையில் இருந்தாலும் அன்னக்கு எங்க வீட்டுலதான் தங்கிப் படிச்சாரு, நாங்க இல்லைனா.. ... என்பதையெல்லாம் காலம் முழுவதும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உறவினர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்று வந்த போதே எனக்கு மோசமான, சங்கடமான அனுபவங்களைத் தந்தது நெல்லைத் தமிழன். அப்படி இருக்கையில், தங்கிப் படிப்பது கடினமான விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. அடடா...   விருப்பமில்லாத திருப்பங்கள்!   தஞ்சைக்கு அருகே பூண்டி புட்பம் கல்லூரி வேறு இருந்தததே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூண்டி கல்லூரி - இப்பொதும் இருக்கிறது என்றே நினைக்கிறேன் ஸ்ரீராம். நண்பரிடம் இதற்கான பதில் கேட்டு பகிர்ந்து கொள்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  உறவினர் வீட்டில் தங்கி படிக்கும் காலகட்டத்தில் மனதை வருத்தும் நிகழ்வுகள் தங்கள் நண்பருக்கு கிடைத்திருப்பதை படிக்கும் போது மனதில் பாரமாகி என் கண்களும் கசிந்தன. அந்நேரம் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும், மனதிலும் ஏதேதோ போராட்டங்கள் என்ற ஒரு நிலையை என்னால் உணர முடிகிறது. கஸ்டந்தான்... அவ்வளவு கடினமான நிலைகளையும் தாண்டி வந்திருக்கும் தங்கள் நண்பர், வாழ்க்கை பாடங்களை அனுபவ ரீதியாக நன்கு கற்று தேர்ந்திருப்பார். அத்தனையும் பொறுமையாக கடந்து வந்திருக்கும் அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். (என் மகனின் உயர் கல்வியின் போது நேர்ந்த இவ்வகையான அனுபவத்தில், அப்போது நான் எதுவும் சொல்ல இயலாது பெற்ற வேதனையில், அது இப்போது நினைவுக்கு வரவே இதைச் சொன்னேன். தவறாக நினைக்க வேண்டாம்.) பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   உங்கள் மகனும் இப்படி உறவினர் வீட்டில் தங்கிப் படித்ததால் அவருக்கும், உங்களுக்கும் இதில் இருக்கும் சங்கடங்கள் புரிந்திருக்கும். கடினமான காலங்கள் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. படித்த சிரமங்களை நகைச்சுவையாக சொல்லி உள்ளார்... தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரமமாக இருந்தாலும் அதனைக் கடந்து வந்திருப்பது நல்ல விஷயம் தான் தனபாலன். தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 5. இளம் வயது கஷ்டங்களை நகைச்சுவையோடு சொல்லிருக்கீங்க ஆனால் அதன் பின்னான அந்தக்கறுமையை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட உங்கள் அனுபவமே எனதும் என்பதால் புரிகிறது...

  ஆனால் மீண்டும் உங்களுக்கு பழைய குருடி கதவை திறடி என்பது போல் ஆகிடுச்சு போல...அதை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதன் பின்னான அந்தக் கறுமை - உண்மை தான். உங்களுக்கும் அதே போல அனுபவம் - வேதனை தான்.

   எப்படிக் கடந்து வந்தீர்கள்? - அடுத்த பதிவுகளில் வரும் என எதிர்பார்ப்புடன் நானும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இளமைக்கால நினைவலைகள்
  தொடரட்டும்
  தஞ்சை பூண்டி கல்லூரி 1956 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது
  கரந்தைப் புலவர் கல்லூரி 1938
  திருவையாறு அரசர் கல்லூரி 1929

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளமைக்கால நினைவலைகள் - தொடரும் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தஞ்சை பூண்டி கல்லூரி மற்றும் மற்ற கல்லூரிகள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. கடந்து வந்த பாதை மிகவும் கடினமாக இருந்து இருக்கிறது. அதை மீண்டும் நினைத்துப்பார்ப்பது மேலும் வேதனையான விஷயம்.
  மீண்டும் பயணம் தொடர்ந்தை படிக்க தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனையான விஷயம் - இருக்கலாம் கோமதிம்மா. இப்படி பகிர்ந்து கொள்வது வேதனையைக் குறைக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. அன்பின் வெங்கட்,அன்பின் சுப்பு அவர்களின் பதிவு சுவையாக இருந்தாலும் கலங்க வைத்தது் என் தம்பிகள் இருவரும் வேலை பொருட்டும்,படிப்பு காரணமாகவும். இதே போல சந்திக்க நேர்நதது. அறியா பருவம். கசிந்து வருகிறது மனம். நாங்கள் இருந்த ஊர்களில் தொழில் நுட்ப கல்லூரிகள் இருக்க வில்லை. திரு சுப்பு அவர்கள் இப்போது நலமுடன் இருக்க இளமையில் வருத்தப் பட்டிருக்கிறார் . எழுதுவது நல்ல பயன் தரும். வாழ்த்துகள் மா.

   நீக்கு
  3. நண்பரின் பதிவு குறித்த உங்கள் கருத்துரைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிம்மா. உங்கள் தம்பிகளும் இது போல அனுபவங்களைப் பெற்றிருந்தார்கள் என்பதால் உங்களுக்கும் இதன் கஷ்டம் புரியும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. 'கடந்து வந்த பாதை' பலபடிப்பினைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....