வெள்ளி, 19 ஜனவரி, 2024

கதம்பம் - புது வருஷ பதிவு - Hand Embroidery - திருவரங்கம் நகர்வலம் - மார்கழி கோலங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட சிதம்பர ரகசியம் - வாசிப்பனுபவம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தோல்விகளுக்கு இடையில் தான் வாய்ப்புகள் மறைந்திருக்கின்றன. அதனால் தோல்விகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.   

 

*******

 

புது வருஷ பதிவு - 1 ஜனவரி 2024:


 

காலை எழுந்தது முதல் புத்தாண்டு வாழ்த்து வாட்ஸப், முகப்புத்தகம் என எங்கும் வியாபித்திருக்க, என்  அலைபேசி வாழ்த்துகளால் நிறைந்திருந்தது! தினசரியை மாற்றி அடுத்த வருடத்தை துவக்கியாச்சு! உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் நல்லபடியாக வைத்திருக்க இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டு அன்றாட வேலைகளை கவனிக்கத் துவங்கினேன்!

 

புத்தாண்டு இனிப்புடன் துவங்கட்டுமே என்று பால் பாயசம் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்தேன்! இப்படி செய்ய வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை தான் என்றாலும் துவங்கும் நாள் இனிப்பாக இருக்கட்டுமே என நினைத்தேன்! எல்லாவற்றுக்கும் மனது தானே காரணம்! 

 

வருடத் துவக்கமே எனக்கு ஒரு அழகான பாடத்தை கற்றுக் கொடுத்தது என்று சொல்வேன்! எதையோ தேடி என் நேரத்தை அதில் செலவிட்ட பின் தான் உண்மை உரைத்தது! இன்று காலையில் பாத்திரங்களை சுத்தம் செய்து அலமாரியில் எடுத்து வைக்கும் போது தான் ஒரு பீங்கான் கிண்ணம் குறைவது தெரிய வந்தது! 

 

எங்கே வைத்தேன் என்று தெரியவில்லையே என அடுக்களை முழுவதும் தேடிய பின்பு தான் என்றோ அது உடைந்து போய் குப்பையில் போட்டது நினைவுக்கு வந்தது! ஒருபுறம் என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டாலும் மற்றொரு புறம் அதில் புதைந்துள்ள பெரிய உண்மை என்னை யோசிக்க வைத்தது!

 

இப்படித்தானே நம்மை விட்டு மறைந்த அல்லது நமக்கு கிடைக்காத  விஷயங்களை பற்றியே நினைத்து இருக்கும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறோம்! ஒவ்வொரு நாளிலும் வாழ்க்கை ஏதோ ஒரு பாடத்தை கற்றுத் தந்து கொண்டு தான் இருக்கிறது!

 

புது வருடத்துக்கென எந்த ஒரு குறிக்கோளும் நான் வைத்துக் கொள்ளவில்லை! இனி வரும் நாட்கள் இப்படித்தான் இருக்கணும் என்ற எதிர்பார்ப்பும் இல்லை! சில நாட்களாக கடைபிடித்து வரும் புத்தக வாசிப்பையும், தமிழ் திருமறையான தேவாரம் வாசித்தலையும் தொடர்ந்து செய்யணும்! நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் விடாமல் செய்யணும்! அவ்வளவு தான்!

 

புது வருடத்தில் எது செய்தாலும் பெருகுமாம்! அப்படி என் எழுத்தும் மெருகேறணும்! நிறைய எழுதணும்!

 

*******

 

ரோஷ்ணி கார்னர் - Hand Embroidery - 3 ஜனவரி 2024:


 

மகளுக்கு இந்த செமஸ்டரில் back stitch, running stitch, chain stitch என்று  34 Stitches இருக்காம்! ஒவ்வொரு stitchஇலும் ஒரு ப்ராஜெக்ட்டாக துணியில் வரைந்து கையால் எம்பிராய்டரி செய்து கொண்டிருக்கிறாள்! அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

 

*******

 

திருவரங்கம் நகர்வலம் - 5 ஜனவரி 2024:


 

Bபையா! Bபுகார், kகாசி கேலியே  Dhதவாய் தீஜியே??

 

மருந்துக் கடைக்காரர் சற்று யோசிக்கவே...

 

அண்ணே! இவரு காய்ச்சலுக்கும் இருமலுக்கும் மருந்து கேட்கறாரு! என்றேன்.

 

அந்த நபரிடம் 'எங்கிருந்து வருகிறார்' என்று கேட்டதும், குஜராத் என்றார்.

 

உங்களுக்கு எப்படி புரிந்தது என்று என்னிடம் கேட்டார். தில்லியில் இருந்திருக்கிறேன் என்றதும்  அச்சா! என்று முகம் மலர்ந்தார்!

 

கடைத்தெருவில் இன்று வடக்கிலிருந்து வந்த நிறைய யாத்திரீகர்களை பார்க்க முடிந்தது! புதிதாக முளைத்திருக்கும் பல கடைகளும், சபரிமலைக்கு செல்வோர் என எங்கும் கும்பல் தான்!

 

அவ்வளவு கும்பலிலும் 'நாங்க எல்லாரும் இப்படி நிக்கறோம்! கொஞ்சம் இந்த கோபுரமும் தெரியற மாதிரி ஃபோட்டோ எடுத்துக் குடுக்கறீங்களா!' தேங்க்ஸ்!

 

நெரிசலான இடத்தில்.... 

 

இந்த கொய்யாபழத்தில உப்பும் மிளகாய்தூளும் போட்டு சாப்பிட்டா தான் நல்லாருக்கும்னு அந்தாளுட்ட கேட்டு வாங்கியாந்தேன்! எடுத்துக்கோடீ! 

 

பழ வியாபாரியிடம் கமலா ஆரஞ்சும், அதன் தங்கை போலவே இருக்கும் கின்னுவும் இருந்தது! டெல்லியில் கின்னுவை நிறைய பார்த்திருக்கிறேன்! இங்கு கின்னுவுக்கு என்ன பெயரென்று தெரிந்து கொள்ள வியாபாரியிடம் கேட்டதில் 'மால்ட் ஆரஞ்சு' என்று சொன்னார்...🙂 

 

ஒரு இடத்தில் அசல் ரோஜாவைப் போலவே துணியால் செய்யப்பட்ட ரோஜாப்பூ இருந்தது! ஒன்று 20ரூபாயாம்! மகள் கல்லூரிக்கு வைத்துச் செல்லட்டும் என வாங்கிக் கொண்டேன்! நாள் முழுவதும் வாடாமல் இருக்குமல்லவா..🙂

 

*******

 

மார்கழி கோலங்கள் - 2023-24 - பகுதி 3

 

இந்த வருட மார்கழியில் வீட்டு வாசலில் போட்ட சில கோலங்களை இந்தப் பதிவிலும், இந்தப் பதிவிலும் வெளியிட்டு இருந்தேன். இந்த நாளில் இன்னும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு! 








 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

17 கருத்துகள்:

  1. நகர்வலம் சுவாரஸ்யம்.  கோலங்கள் அருமை.  புத்தாண்டு வாழ்த்துகள்..  (ஜனவரி பூரா சொல்லலாமில்லே?!  :)) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளை மகிழ்வுடன் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. நகர்வலம் நன்று. எம்ப்ராய்டரி, கோலங்கள் அனைத்தும் அழகு.

    பீங்கான் கிண்ணம் பற்றிப் படித்தபோது, வீட்டில் எங்கோ ஒளிந்துகொண்டிருக்கும் என் நீல டீ ஷர்ட் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பீங்கான் கிண்ணத்தை பற்றி வாசித்ததும் டி சர்ட் நினைவுக்கு வந்ததா! கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  3. நிர்மலா ரெங்கராஜன்19 ஜனவரி, 2024 அன்று AM 9:00

    தங்களின் எழுத்து மேலும் மெருகேறவும் எண்ணங்கள் நிறைவேறவும் வாழ்த்துக்கள் 💐
    கோலங்கள் அருமை👍
    மகளின் எம்ப்ராய்டரி ஒர்க் 👏

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளையும் ரசித்ததற்கு நன்றி.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நிர்மலா ஜி!

      நீக்கு
  4. //இப்படித்தானே நம்மை விட்டு மறைந்த அல்லது நமக்கு கிடைக்காத விஷயங்களை பற்றியே நினைத்து இருக்கும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறோம்! ஒவ்வொரு நாளிலும் வாழ்க்கை ஏதோ ஒரு பாடத்தை கற்றுத் தந்து கொண்டு தான் இருக்கிறது!//

    உண்மைதான் வாழ்க்கை நாள் தோறும் பாடம் கற்றுக் கொடுக்கிறது.

    ரோஷிணியின் back stitch, running stitch, chain stitch அனைத்தும் அருமை. அம்மா சொல்லி கொடுத்த பின்னல்வேலைகள் நினைவுக்கு வருகிறது.
    கோலங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நினைவுகளை மீட்டுக் கொண்டதில் மகிழ்ச்சிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  5. ஆதி நானும் எந்தவித குறிக்கோளும் வைத்துக் கொள்வதில்லை. அன்றன்று கடப்பதை நல்லமுறையில் கடந்தாலே போதுமே என்று.

    நம்மை விட்டுப் பிரிந்த, நமக்குக் கிடைக்காத - ஆமாம் அப்பப்ப வந்து கொஞ்சம் மனதை பின்னோக்கித் தள்ளும்தான். சில வருத்தங்கள் எட்டிப் பார்க்கும் ஆனால் உடனே அதிலிருந்து வெளி வர நினைப்பதுண்டு. ஒவ்வொரு நொடியும் கூடப் பாடம்தான். அதை நாம் கூர்ந்து நோக்கினால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நாளும் ஒரு பாடம்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  6. ரோஷிணியின் எம்ப்ராய்டரி வேலை நன்று. எனக்கு நான் செய்த வேலைக்ள் நினைவுக்கு வந்துவிட்டன, இந்த தையல்கலை வைத்து அடைத்துப் போட்டவை, herringbone stitch - எனக்கு மிகவும் பிடித்த தையல் அது வைத்து பார்டர் போட்டது, honey comb Smocking நிறைய செய்ததுண்டு. ரொம்பப் பிடிக்கும் இதுவும். நிறைய நினைவுகள்.

    கோலங்கள் செம...

    இதுவும் அப்படித்தான் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் பரிசு பெற்ற நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வரும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையத்தில் பல வகை எம்ப்ராய்டரி தையல்கள் வெகு எளிதாகக் கற்றுக் கொடுக்கும் காணொளிகள் இருக்கின்றன. நான் அப்படித்தான் முன்பு கற்றுக் கொண்டேன் இப்போது இன்னும் நிறைய வந்திருக்கும். ஆர்மீனியன், ஆரி வேலைப்பாடு (இதுக்குத் தனி ஊசி கிட்டத்தட்ட செருப்பு தைக்கற ஊசி மாதிரி) சிக்கன்காரி (கோழிக்கால் தையல் ஒரு கோடு தையல் கோழிக்கால் போலப் போடுவது) எனக்கு இன்னொன்று ரொம்பப் பிடித்தது ஃப்ரெஞ்ச் நாட். ரோஸ் பூ போடுவதற்கு இதுவும், Woven wheel, இத்ல்லாம் ப்யன்படும். ரிப்பன் எம்ப்ராய்டரி ரொம்ப அழகா இருக்கும். ...இவை எல்லாம் Fashion designing ரொம்ப உதவியா இருக்கும். back stich!!!! chain Stitich!!!! என்னையும் பின்னோக்கி ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இழுத்துச் சென்றது!!!!

      கீதா

      நீக்கு
    2. அருமை. உங்களிடம் எண்ணற்ற திறமைகள் உள்ளன! மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது! எதைப் பற்றி சொன்னாலும் அவற்றை குறித்த ஞானம் தங்களை டம் கொட்டி கிடக்கிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. கடை உலா - நெரிசல் கூட்டம் ...மற்றும் காய்ச்சல் இருமலுக்கு மருந்து - பயமாக இருக்கு இப்ப பரவுகிறதே...என்னென்னவோ பெயர் சொல்கிறார்கள். மாஸ்க் போட்டுக் கொண்டு போவது நல்லது என்றும் இடையில் மருத்துவர்கள் சொன்னாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். உண்மை தான். மீண்டும் பரவல் என்கிறார்கள்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  8. மகளின் பூவேலைப்பாடுகள் (கோலம், தையல்) எல்லாமே அழகாக இருக்கின்றன. மகள் நிறைய கற்றுக் கொள்கிறார்.

    உங்கள் படைப்புகள் இந்தப் புத்தாண்டிலும் வரும் ஆண்டுகளிலும் பெருகிட வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....