புதன், 24 ஜனவரி, 2024

திருவரங்கம் கோவில் - சேஷராயர் மண்டபம் - ஒரு தூண் சிற்பங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மற்றவர்களின் இயலாமையைப் பற்றி பேச வேண்டுமென்றால் பேசாமல் இருப்பதே நல்லது - நெப்போலியன் ஹில்.

 

*******



 

தமிழகம் வரும்போதெல்லாம் எங்கள் வீடு இருக்கும் திருவரங்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் சென்று பெரிய பெருமாளை பார்த்து வருவது என்பதை பொதுவாக நான் கடைபிடிப்பதில்லை. இங்கே எப்போதும் பக்தர்கள் கூட்டம் தான்.  அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் மகர ஜோதி பார்த்து விட்டு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும், மேல்மருவத்தூர் சென்று திரும்பும் அல்லது செல்லும் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.  இதைத் தவிர வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகம்.  எப்போதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. திருவரங்கம் முழுக்க இப்படியானவர்களை அதிகமாக பார்க்க முடியும்.  ஒவ்வொரு பயணத்திலும் இப்படியான சிலருடன் பேச வேண்டிய சந்தர்ப்பமும் ஏற்படுவது உண்டு - அவர்கள் வழிகேட்டுச் சொல்ல, ஹிந்தியில் பேசி தகவல்களை தெளிவாகச் சொல்ல என பல முறை பேசியிருக்கிறேன்.  கூட்டம் அதிகம் இருப்பதன் காரணமாகவே கோவிலுக்குச் செல்ல கொஞ்சம் யோசனை வரும். அப்படியே சென்றாலும், பெரிய பெருமாளை கவனிக்காமல், நேரடியாக தாயார் சன்னதி சென்று தாயாரை தரிசனம் செய்துவிட்டு, “நான் வந்து சென்ற தகவலை உங்களவரிடம் சொல்லி விடுங்கள் தாயே”, என்று சொல்லி விட்டு வருவதும், சக்கரத்தாழ்வாரை தரிசித்து திரும்புவதும் என்று தான் நடக்கும்.  

 

ஆனால் ஒவ்வொரு திருவரங்கம் பயணத்திலும் ஒன்றிரண்டு தினங்கள் கோவிலுக்குச் சென்று ஆயிரங்கால் மண்டபம் அருகிலேயோ, அல்லது மணல் வெளியிலேயோ அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என அமர்ந்து கொண்டிருந்து விட்டு வீடு திரும்புவது வழக்கம்.  சென்ற ஞாயிற்றுக் கிழமை அன்று கூட மாலை நேரம் வீட்டிலிருந்து பொடி நடையாக நடந்து வடக்கு வாசல் வழி கோயிலுக்குள் புகுந்து நேரடியாகச் சென்று அமர்ந்த இடம் ஆயிரங்கால் மண்டபம் எதிரே இருக்கும் சேஷராயர் மண்டபத்தின் ஒரு தூண் அருகே! சேஷராயர் மண்டபத்தில் இடது புற ஓரம் வரிசையாக இருக்கும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் உண்டு.  அந்த வரிசையில் கடைசியாக இருக்கும் தூண் அருகே அமர்ந்து கொண்டு அந்தத் தூணில் இருக்கும் சிற்பங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்.  நடுநடுவே நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்த சில பக்தர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்ல வேண்டியிருந்தது.  ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் கோவில் பற்றிக் கேட்க, நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொன்னேன்.  அவருக்குத் தெரிந்த பாஷையில் பேசியதும் அவருக்கு மகிழ்ச்சி.  

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எத்தனை அதி அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள்! அதுவும் ஒரே கல்லில் அமைந்த தூண், அந்தத் தூணில் பகுதி பகுதியாகச் சிற்பங்களை, பெரிதும், சிறிதுமாக அமைத்து இருப்பதை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு சிற்பமும் எத்தனை நேரம் எடுத்து செதுக்கி இருப்பார்கள், எத்தனை பேர் இந்த ஒரு தூணை செதுக்கி இருப்பார்கள், அல்லது ஒரே சிற்பியே பல நாட்கள் தனது உளியின் துணையோடு நகாசு வேலைகள் செய்து இந்த தூணை, தூணில் இருக்கும் சிற்பங்களை உருவாக்கி இருப்பார் என்ற எண்ணங்கள் மனதுக்குள் மோத சிற்பங்களை கவனித்துக் கொண்டிருந்தேன்.  அவ்வப்போது சில பக்தர்கள் செய்யும் செயல்கள் தொல்லைகளைத் தந்தாலும் - எனது கவனத்தினை சிற்பங்களிலிருந்து அகற்றி அவர்கள் செய்யும் விஷயங்களை (ஹிந்தியில் இப்படிச் செய்வதற்கு notanki नौटंकी என்று ஒரு வார்த்தை உண்டு) பார்க்க வைத்தாலும், அதிலிருந்து மீண்டு, மீண்டும் சிற்பங்களில் மூழ்கி இருந்தேன்.  ஒரே ஒரு தூணில் இத்தனை வேலைப்பாடுகள் என்றால், சேஷராயர் மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூணையும் உன்னித்து கவனித்தால் எத்தனை விஷயங்கள் பார்க்க முடியும்.  

 

அதிலும் ஒவ்வொரு சிற்பமும் ஏதோ ஒரு கதையையும் (நிகழ்வினையும்) சொல்லும் விதமாக அமைத்த அந்த சிற்பிகளின் திறனை நினைத்து பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.  உதாரணத்திற்கு இந்த ஒரு தூணில் இருந்த ஒரு காட்சி - முதலையின் வயிற்றுக்குள் இருக்கும் அனுமனின் சிற்பம் - அந்த சிற்பம் சொல்லும் கதை என மனதுக்குள் நிறைய விஷயங்கள் வந்து போனது.  அந்தக் கதை என்ன என்பது உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாதவர்களின் வசதிக்காக இங்கே சொல்லி வைப்போமே! 

 

மூர்ச்சையாகி விழுந்து கிடைக்கும் லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவினி மூலிகையை எடுத்துவரச் செல்லும் அனுமனை எப்படியேனும் தடுத்து நிறுத்தும்படி இராவணன் விடுத்த கட்டளையின் பேரில் காலநேமி எனும் அரக்கன் ஒரு முனிவர் வேடம் கொண்டு வழியில் ஹநுமனைப் பார்த்து அங்கே இருக்கும் குளத்தில் குளித்து வந்தால் தான் பல விஷயங்களை சொல்லுவதாக சொன்னாராம் (தண்ணீர் கேட்ட ஹநுமனுக்கு அந்தக் குளத்தில் நீர் அருந்தும் படிச் சொன்னதாகவும் சில கதைகள் உண்டு!) அந்தக் குளத்தில் சாபத்தினால் முதலையாக இருந்த இருந்த கந்தர்வ கன்னிகை ஹநுமனை விழுங்க, முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு தனக்கு எந்த வித சேதாரமும் இல்லாமல் வெளியே வந்தாராம்! சாபம் நீங்கப் பெற்ற அந்த கந்தர்வ கன்னிகையும் இந்தச் சிற்பத்தில் இருக்கிறார்.  சாபம் நீங்கிய அந்த கன்னிகை முனிவர் கபட வேடம் அணிந்தவர் என்பதையும் சொல்லிவிட, காலநேமி என்கிற அந்த அரக்கரையும் அழித்து பின்னர் சஞ்சீவினி மூலிகையை மலையுடன் கொண்டு வந்து இலக்குவனை காப்பாற்றினார் என்று போகிறது அந்தக் கதை. அந்தக் காட்சியை அப்படியே சிற்பத்தில் வடித்து இருக்கும் சிற்பியின் திறமையை என்னவென்று சொல்வது.  

 

வேதனையான விஷயம்:

 

இப்படி சிற்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த சமயம் கோவிலில் பார்த்த விஷயம் மனதுக்கு மிகவும் வேதனையைத் தந்தது.  பழமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதை அரசாங்கமும் பொதுமக்களும் எப்போது தான் புரிந்து கொள்ளப்போகிறார்கள் என்று புரியவில்லை. பல வெளிநாடுகளில் ஐம்பது நூறு ஆண்டுகள் பழமையான விஷயங்களைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்கும்போது, நம் நாட்டில் பல நூறு ஆண்டுகள் கடந்த விஷயங்களை பாதுகாக்க கொஞ்சம் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை என்பது வேதனையான உண்மை.  சேஷராயர் மண்டபம் அருகே ஒரு சரிவுப் பாதை அமைத்து அந்தப் பாதை வழி, அதாவது சேஷராயர் மண்டபத்தின் உள்ளேயே ட்ராக்டர் ட்ராலி போன்ற கன ரக வாகனங்களை அதிக எடையோடு செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.  ஒரே சமயத்தில் அப்படியான இரண்டு வாகனங்களை அங்கே நான் இருந்த சமயம் பார்க்க முடிந்தது. இத்தனை பழமையான ஒரு கட்டிடம் - பெரிய வாகனங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை எப்படித் தாங்கும் என்பதைக் கூட சிந்திக்க மாட்டார்களா சம்பந்தப்பட்டவர்கள்?  கொஞ்சம் அசந்தால் கூட அந்த வாகனம் தூண்களின் மீது இடித்து சிற்பங்கள் சிதிலப்படக் கூடும் என்பதைக் கூட சிந்திக்கவில்லையே! ஏற்கனவே காலத்தின் ஓட்டத்தில் எத்தனை சிற்பங்கள் பாழ்பட்டுவிட்டன…  இப்படியான நிறைய வேதனை தரும் விஷயங்களை கோவில் உள்ளே பார்க்கும்போது மனதில் வேதனையே அதிகம் மிஞ்சியது.   

 

சென்ற ஞாயிறில் பார்த்த ஒரு தூண் சிற்பங்கள் உங்கள் பார்வைக்கு - அலைபேசியில் எடுத்த படங்கள் தான். பாருங்களேன். 



















குதிரையின் உடம்பில் கூட கலைவண்ணம்…


இது என்னவென்று தெரிகிறதா? குதிரையின் வால்…






 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ் 

திருவரங்கத்திலிருந்து…

20 கருத்துகள்:

  1. சிற்பங்கள் அழகு.  சிந்தனை சுவாரஸ்யம்.  கோவில்களை பாதுகாக்க ஏதாவது செய்தால்தான் உண்டு.  அறநிலையத்துறை எல்லாம் வேஸ்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறநிலையத்துறை - வேஸ்ட். உண்மை தான். எத்தனை விதங்களில் கோவில் சொத்துக்களை வீணடிக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. பக்தர்களின் வசதிக்கு பல நல்ல விஷயங்கள் செய்யலாம் - ஆனால் செய்வதில்லை என்பதே வேதனையான உண்மை.

      பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிற்பங்கள் கொள்ளை அழகு. அதை நீங்கள் இங்கு எடுத்துப் பகிர்ந்திருப்பதும் அருமை. வழக்கம் போல் படங்கள் எல்லாம் தெளிவாக அழகாக இருக்கின்றன.

    ஒவ்வொரு சிற்பமுமே ஒவ்வொரு கதை சொல்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தூணில் இருக்கும் சிற்பங்கள் உங்களுக்கும் பிடித்து இருந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. முடிந்தவரை படங்கள் எடுக்க ஆசை உண்டு. ஒவ்வொரு முறை இங்கே செல்லும் போதும் இப்படி நின்று நிதானித்து, சிற்பங்களை ரசித்து, படங்கள் எடுக்க ஆசை உண்டு.

      நீக்கு
  3. குதிரையின் வால்!!! என்ன அழகு இல்லையா? முடி கோடுகளாக. மற்றச் சிற்பங்களிலும் நுணுக்கமான வேலைப்பாடுகள்! ரசித்துப் பார்த்தேன். எனக்கும் கூட்டம் கொஞ்சம் அலர்ஜிதான். எந்தக் கோயிலிலுமே கூட்டமாக இருந்தால் உள்ளே செல்ல முயல்வதில்லை.

    ரசித்துப் பார்த்தேன். நான் எங்கள் குடும்பத்தின் குழுவோடு நெருங்கிய உறவினர் கல்யாணத்திற்குச் சென்ற போது குழுவினருடன், கோபுரங்களைக் காண மேலே ஏறிப் பார்த்ததும், அதன் பின் சுற்றி வரப்ப ஆண்டாள் (நம்ம நாலுகால் குண்டுச்செல்லம்!!) ஆயிரங்கால் மண்டபம், சேஷராயர் மண்டபம் எல்லாம் (அங்கு பலரும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். சிலர் அங்கு கூடைகளும், குழந்தைகளுமாகவும் இருந்தாங்க. சாப்பிட்டுக் கொண்டும்!) எங்களுக்கான நேரம் மிகக் குறைவு. மொத்தமே 1 மணி நேரத்தில், எல்லோரும் முன்னே நடக்க, நான் ஆங்காங்கே படங்களும் காணொளிகளுமாகச் சும்மா மேலோட்டமாக எடுத்து வந்தேன். நெருங்கிச்சென்று அருகே கூர்ந்து நோக்கி எடுக்க முடியவில்லை. அவர்களை விட்டுவிட்டால் அப்புறம் அவர்கள் என்னைத் தேடுவாங்க, நான் அவங்களைத் தேடணும்...நேரத்திற்குக் கிளம்ப நேரமாகிவிடும் என்பதால் ஓடிக் கொண்டே எடுத்தேன். சுற்றிலும்....

    அவற்றை 3, 4 பதிவுகளாகப் போட்ட நினைவு. இப்படி நுணுக்கமாக எடுக்க முடியவில்லை.

    இப்ப எல்லாம் ரசித்துப் பார்த்தேன் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் - உண்மை. அதிலும் அந்த வாலில் இருக்கும் முடிகள் வரை துல்லியமாக தெரியும்படி சிற்பங்களில் செதுக்குவது என்பது மிகவும் சவாலான ஒரு வேலை. பதிவுகள் வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. நிர்மலா ரெங்கராஜன்24 ஜனவரி, 2024 அன்று AM 10:16

    சிந்தனையும் சிற்பங்களும்👍
    நாங்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்து இருந்த போது இவ்வளவு துல்லியமாக அந்த தூண்களில் இருந்த சிற்பங்களை கவனிக்கவில்லை.
    அதற்கு நேரமும் இல்லை.
    தங்களின் பதிவிற்கு நன்றி 🙏
    நியாயமான கவலை.
    இதை அங்கு இருப்பவர்கள் யோசிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு கிடைத்த நேரத்தில் இத்தனையும் பார்த்திருக்க முடியாது தான். நேரம் நிறையவே இருந்தால் இங்கே பார்த்து ரசிக்க நிறைய விஷயங்கள் உண்டு நிர்மலா ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. ஒரு தூண் சிற்பங்களே இவ்வளவு !!! பாருங்க.

    ஆமாம் நீங்கள் சொல்லியிருக்காப்ல கவனிக்க வேண்டும் கோயிலுக்குள் இப்படி! நீங்கள் சொல்லியிருக்கும் அந்த இடத்தில் பெரிய பெரிய மூட்டைஅள் ஏதோ சாமான்கள் எல்லாம் நான் அன்று இப்படிப் பார்த்தது கொஞ்சம் Vague memories ல வருகிறது.

    இன்றைய வாசகம் மிக நல்ல வாசகம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயில்களில் இப்படியான வேலைகளை (கனரக வாகனங்கள் இயக்குவது) நல்லதல்ல. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. பயணக் கட்டுரை எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை இன்று நிரூபித்து வருகிறீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணக் கட்டுரை எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆள் இல்லை இன்று நிரூபித்து வருகிறீர்கள்.// மகிழ்ச்சி குமார் ராஜசேகர் ஜி. இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். நானும் இங்கே இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. படங்கள் எல்லாமே மிக அருமை. சிற்பங்களைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. பாதுக்காக்கப்பட வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிற்பங்களின் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பாதுகாக்கப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் இன்னமும் பலருக்கு புரிபடவில்லை என்பது வேதனையான உண்மை.

      நீக்கு
  8. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. தூண் சிற்பங்கள் அவை சொல்லும் கதைகள் எல்லாம் அருமை.
    சிற்பங்கள் பாதுகாக்க பட வேண்டும்.
    நீங்கள் வட நாட்டினருக்கு உதவியாக வழி காட்டியது அவர்கள் மொழியில் பேசியவுடன் அவர்களுக்குகு ஏற்பட்ட மகிழ்ச்சி எல்லாம் படிக்க அருமையாக இருக்கிறது.

    //“நான் வந்து சென்ற தகவலை உங்களவரிடம் சொல்லி விடுங்கள் தாயே
    என்று சொல்லி விட்டு வருவதும்,//

    ரசித்தேன்.

    , //சக்கரத்தாழ்வாரை தரிசித்து திரும்புவதும் என்று தான் நடக்கும். //
    அங்கும் ஒரு முறை உள்ளே போக முடியாமல் அவ்வளவு பேர் வேக வேகமாய் சுற்றி கொண்டு இருந்தார்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. பாதுகாக்கவேண்டிய சிற்பங்கள் தான். இன்னும் எத்தனை காலம் இவர்கள் இப்படியே இருக்க விடுவார்கள் என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கிறது.

      இங்கே கூட்டம் அதிகம் தான் அம்மா. பல சமயங்களில் உள்ளே சென்று திரும்புவதற்குள் ஒரு வழியாகிவிடுவதுண்டு.

      நீக்கு
  10. சேஷராயர் மண்டபச் சிற்பங்கள் அனைத்தும் அற்புதம். அருமையாகப் படமாக்கிக் காணத் தந்துள்ளீர்கள். முதலை வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரும் அனுமன் சிற்பமும் அது குறித்தத் தகவல்களும் நன்று. கோயில் சிற்பங்களை அரசும் மக்களும் மனம் வைத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோயில் சிற்பங்களை அரசும் மக்களும் மனம் வைத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பது உண்மை.// - உண்மை தான். இருபாலாரும் சேர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம்.

      படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....