புதன், 17 ஜனவரி, 2024

கதம்பம் - ஒரு வீடு இரு வாசல் - சிந்தனைத் துளிகள் - ஆதிரையின் ஆலவாயழகன் - மார்கழி கோலங்கள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்துகள் பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம்; எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம்; இந்தத் தருணத்தை மனதில் கவனித்து இருங்கள் - கௌதம புத்தர்.  

 

*******

 

ஒரு வீடு இரு வாசல் - 22 டிசம்பர் 2023:


 

பாலசந்தர் சாரின் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளிவந்துள்ள இந்த திரைப்படத்தில் இரு வேறு கதைகள் உள்ளன! இந்த இரண்டு கதைகளும் ஒன்றுக்கொன்று ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன! ஆண்களின் மறுபக்கமாக வித்தியாசமான கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளது!

 

முதல் கதையில் கதாநாயகனால் இரு வேறு பெண்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது! கல்வியறிவு இல்லாத முதலாமவள்  ஒருகட்டத்தில் தன்னையே அழித்துக் கொள்வதாகவும், மற்றொருவள் கணவனாக இருந்தாலும் அவனை உதறி விட்டு வாழும் சூழலுக்கு தள்ளப்படுவதாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது!

 

இரண்டாவது கதையில் துணை நடிகர்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு, அனுபவங்கள், ஏமாற்றங்கள், வலிகள், வேதனைகள் எனச் சொல்லிச் செல்கிறது! இந்தக் கதையில் துணை நடிகையாக இருக்கும் பெண் ஒருவள் எழுத்தாளர் ஒருவனை திருமணம் செய்து கொள்வதாகவும், சில நாட்களுக்குப் பின் அவனுக்கு ஏற்படும் சந்தேகத்தால் அவனை விட்டு விலகி படித்து முன்னேறி வழக்கறிஞராக வாழ்க்கையை நடத்துகிறாள் என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது!

 

இரண்டு பெண்களுமே தனக்கு பிடிக்காத விஷயத்திற்காக தங்களை அழித்துக் கொள்ளாமல் விலகி இந்த சமுதாயத்தை துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள் என்பதாக சொல்லப்பட்டுள்ளது! அவர்கள் எதற்கும் துவண்டு விடவில்லை!

 

ஒவ்வொரு நாளும் செய்திகளில் எத்தனையோ விஷயங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்! இன்னமும் எத்தனையோ பெண்கள் தகப்பன், கணவன் போன்ற உறவுகளால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று வாசிக்கிறோம்! அவர்கள் எல்லோரும் எதற்காகவும் சோர்ந்து போய்விடாமல் தன்னம்பிக்கையுடன் போராடத் தான் வேண்டும் என்ற சமூகநீதி இதில் பேசப்பட்டிருக்கிறது!

 

முதல் கதை எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்களின் ‘மீண்டும் மீண்டும்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது! இரண்டாவது கதையை அனந்து அவர்கள் எழுதியுள்ளார்கள்! இந்தத் திரைப்படத்தில் வயலினிஸ்ட்டான கணேஷ் குமரேஷ்  சகோதரர்கள்  தான் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்! கூடுதல் தகவலாக இந்த படத்தில் பாடல்களே இல்லை என்பது ஆச்சர்யம்!

 

சமூக பிரச்சனைகளுக்கான தேசிய விருதை வென்றுள்ளது இந்தத் திரைப்படம்! நான் பார்த்து ரசித்த இந்த படத்தை வாய்ப்பு கிடைத்தால் பாருங்களேன்!

 

*******

 

சிந்தனைத் துளிகள் - 24 டிசம்பர் 2023:


 

சின்னஞ்சிறு பிராயத்தில் பார்க்கும் அல்லது கேட்கும் அனைத்து விஷயங்களும் மனதில் பதிந்து போய்விடுகிறது! நமது மனதும் மூளையும் ஒருங்கே செயல்படும் போல! இல்லையா! அதனால் தான் அப்போதிலிருந்தே குழந்தைகளிடம் நற்சிந்தனைகளை வளர்க்கும் விதமாகவும், அறிவுப்பூர்வமாகவும் சொல்லித் தந்து வளர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு!

 

நாம் வளர வளர நம் மூளையும், மனதும் தன் இஷ்டத்துக்கு செயல்பட்டு விடுகிறதோ என்று தோன்றுகிறது!! ஏனென்றால் மறதி என்ற ஒன்று நம்மை பிடித்துக் கொண்டு விடுகிறது பாருங்கள்! பள்ளி கல்லூரியில் படித்த போது பாடத்தில் உள்ள keywords நினைவில் வைத்துக் கொண்டுவிட்டால் எழுதி விடலாம் என்று நினைப்பேன். மகளுக்கும் அப்படித்தான் சொல்லித் தந்திருக்கிறேன்!

 

முன்பெல்லாம் எத்தனை தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருந்தோம்! இப்போது இந்த  மூளையில் செல்ஃபோன் என்னும் விஞ்ஞான படைப்பால் ஓரிரு எண்களை நினைவில் வைத்திருந்தாலே பெரிது என்னும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பது உண்மை தானே!

 

இப்படியிருக்க ஒவ்வொரு நாளிலும்  கடமைகளும் வேலைகளும் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளையும் இத்தனை சவால்களுடன் கடப்பதே பெரிய விஷயம் என்று சொல்லலாம்! ஒவ்வொரு விதமான உணர்வுகளால் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம். அன்றாடம் செய்யும் வேலைகளுக்கு ஒரு திட்டமிடல் மிகவும் அவசியம்!

 

முதல் நாளே நாளை செய்ய இருக்கும் வேலைகளுக்கான திட்டமிடலும் நினைவூட்டலும் இருந்து விட்டால் பதட்டப்படாமல் சற்று நிதானத்துடன் எல்லாவற்றையும் திறம்பட செய்து விடலாம்! முடிந்தவரை நம்முடைய வேலைகளை யாரையும்  சார்ந்திருக்காமல் நாமே செய்து கொள்வது உத்தமம்!

 

தொடர்ந்து பேசுவோம்….!

 

*******

 

ஆதிரையின் ஆலவாயழகன் - 27 டிசம்பர் 2023:


 

இன்றைய திருவாதிரை நன்னாளில் களியும், எழுகறி கூட்டும் நிவேதனம் செய்து பிரார்த்தித்துக் கொண்டேன். 🙏 🙏

 

நல்லதே நடக்கட்டும்!

நலமே சூழட்டும்!

 

*******

 

மார்கழி கோலங்கள் - 2023-24 - பகுதி 2

 

இந்த வருட மார்கழியில் வீட்டு வாசலில் போட்ட மூன்று கோலங்களை முந்தைய பதிவொன்றில் வெளியிட்டு இருந்தேன். இந்த நாளில் இன்னும் ஐந்து கோலங்கள் உங்கள் பார்வைக்கு! 






 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

22 கருத்துகள்:

  1. இத்தனை வருடங்களுக்குப் பிறகு அந்த பாலச்சந்தர் படத்தைப் பார்க்க வேண்டும் என்கிற சந்தர்ப்பம் எப்படி வந்தது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதோ ஒருமுறை பார்த்த படம் தான் இது! சில நாட்களுக்கு முன் எதேச்சையாக யூட்டியூபில் ஸ்க்ரோல் செய்த போது வந்தது! நேரமும் இருக்கவே மதியப் பொழுதில் பார்த்தேன் சார்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. மூளையின் நினைவு வைத்துக் கொள்ளும் செயல்திறன் பற்றி நன்றாக அலசி இருக்கிறீர்கள்.  நானும் அதே வழியில் யோசிக்கிறேன்.  சமீப காலமாக ரொம்பப் பழகிய சொற்களே மறந்து போய் தடுமாறும் நிலை வருகிறது.  மனதை ஒருங்கிணைக்க முடியாத பிரச்னை போல என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். மனதை ஒருங்கிணைக்க முடியாத நிலை தான். மறதியோடு தடுமாற்றமும் இருக்கிறது! இதற்கு தீர்வாக நிதானமாக அவ்வப்போது ஒரு திட்டமிடலும் அவசியமாக இருக்கிறது!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. கோலங்கள் அருமை. திருவாதிரைக் களியை விட அந்தக் கூட்டு ரொம்பப் பிடிக்கும்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் காய்கறிகளையும் போட்டு செய்வதால் நன்றாகவே இருக்கும்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  4. கடைசி கோலம் மிக அழகு. திருவாதிரை களி சாப்பிட்டிருக்கேன். கூட்டு சாப்பிட்டதே இல்லை. நல்ல காம்பினேஷனா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. களி திகட்டாமல் இருக்க அதோடு கூட்டு சேர்த்து சாப்பிடுவார்கள். பலவித காய்கறிகளுடன் வறுத்து அரைத்த பொருட்களும் சேரும் போது சுவை ஜோராக இருக்கும்! சாதம், இட்லி, தோசை, அடை என்றும் எல்லாவற்றுடனும் ஒத்துப் போகும்! மறுநாள் அதை கொதிக்க வைத்து சாப்பிட்டாலும் ஆன்றாக இருக்கும் சார். பொங்கலன்றும் எல்லாக் காய்கறிகளையும் போட்டு இந்தக் கூட்டு தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  5. கோலங்கள் அருமை..

    பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  6. பாலச்சந்தர் அவர்களின் இந்தப் படம் பார்த்ததில்லை.

    மூளையின் செயல்திறன், திட்டமிட்டுச் செய்தல் எல்லாமே நல்ல கருத்துகள் எனக்கும் இப்படித் தோன்றுவதுண்டு. பல வேலைகள் அழுத்தும் போது சில பின்னில் தள்ளப்பட்டு விடுகின்றன. அழுத்தத்தின் காரணமாகவும் மறதி வருவதுண்டு. திட்டமிடும் போது மிக முக்கிய வேலைகளை முன்னிறுத்தி எழுதி வைத்துக் கொண்டு prioritize செய்து டிக் செய்தோ நம்பர் போட்டோ கூட வைத்துக் கொள்வதுண்டு நான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். நெருக்கடியான நிலையில் தடுமாற்றம் ஏற்படும்! முக்கியமான வேலைகளை முதன்மைப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. கோலங்கள் எல்லாமே மிக அழகு கடைசிக் கோலம் கலர் கோம்போ டிசைன் எல்லாமே சூப்பர்.

    திருவாதிரைக் களி கூட்டு சூப்பரா இருக்கு.

    ரொம்பப் பிடிக்கும். வீட்டில் செய்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகளை ரசித்து கருத்திடுவது குறித்து மிக்க மகிழ்ச்சி கீதா சேச்சி.

      நீக்கு
  8. வண்ணக் கோலங்கள் மிக அழகு.

    மறதி பற்றிய கருத்துகள் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
  9. வாசகம் பட விமர்சனம், மற்றும் கோலங்கள், திருவாதிரை களி எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    இன்றைய பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. மார்கழி கோலங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. பாலசந்தர் படம் எனக்கும் பிடிக்கும். தங்கள் விமர்சனத்தை படித்ததும் படம் பார்க்க ஆசை வருகிறது. ஆலவாயழகன், களி, கூட்டு படங்கள் நன்றாக உள்ளது. திருவாதிரை சிறப்பாக கொண்டாடியமைக்கு மகிழ்ச்சி பதிவு நன்றாக உள்ளது. படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளையும் வாசித்து அவை குறித்தான கருத்துகளை தெரிவித்ததற்கு மிக்க நன்றி கமலாஜி!

      நீக்கு
  11. திரைப்பட விமர்சனம் சிறப்பாக இருக்கிறது

    கோலப் படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....