ஞாயிறு, 28 ஜனவரி, 2024

கதம்பம் - போகிப் பண்டிகை - போளி - பொங்கலோ பொங்கல் - காக்காய் பிடி! கனுப்பிடி! - மார்கழி கோலங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

 

இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை  படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் கடந்த காலத்தை நினைவு கூர்ந்திட முடியும்; நிகழ்காலத்தை அனுபவித்துணர முடியும்; ஆனால் வருங்காலத்தை விரும்பும்படி உருவாக்கிடமுடியும் - சத்குரு.  

 

*******

 

போகிப் பண்டிகை - 14 ஜனவரி 2024:


 

பழையன கழிதலும் புதியன புகுதலும்! நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் கூடி எல்லாம் நல்லபடியாக நிகழட்டும் என பிரார்த்தித்துக் கொள்வோம்! நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!

 

இன்றைய ஸ்பெஷலாக சேமியா பாயசமும், முப்பருப்பு வடையும் செய்து நிவேதனம் செய்துள்ளேன். கடலைப்பருப்பு போளிக்கு மாவு பிசைந்து வைத்தாயிற்று! பூரணத்திற்கு பருப்பும் வேகவைத்து விட்டேன்! அரைத்துக் கிளறி போளி தட்டணும்! என்னமோ மாலை செய்யலாம் எனத் தோன்றி விட்டது! 

 

*******

 

போளி - 14 ஜனவரி 2024:


 

காலையில் செய்ய நேரமில்லாததால் மாலை தேநீர் நேரத்துக்கு செய்து ருசித்தோம்! என்னவருக்கு போளி என்றால் இஷ்டம்! சென்ற முறை வந்த போது தேங்காய் போளி செய்து தந்தேன்! இன்று கடலைப்பருப்பு போளி! வழக்கம் போல் பாராட்டெல்லாம் எதிர்பார்க்க கூடாது..🙂 ஓகேவா?? ம்ம்ம்! இது போதாதா..🙂

 

அம்மாவோடு வாழையிலையில் போளி தட்டிய நினைவுகளை அசைபோட்ட படியே செய்தேன்! நடுக்கூடத்தில் திரி ஸ்டவ்வை வைத்துக் கொண்டு அம்மாவும் நானும் தட்டி போட்டெடுப்போம்! அதெல்லாம் தான் இப்போது என்னை  செய்ய வைக்கிறது! 

 

இதை பார்த்தால்... இது போளியாடீ? மேல் மாவே தெரியக்கூடாது என்பாள்..🙂 

 

*******

 

பொங்கலோ பொங்கல் - 15 ஜனவரி 2024:





நல்ல நேரத்தில் பொங்கல் பானையை அலங்கரித்து பால் பொங்கியாச்சு! எங்கும் இன்பமும் சந்தோஷமும் பொங்கிப் பெருகணும்! புரிதலும் அன்பும் ஒற்றுமையும் பல்மடங்காக பெருகணும்! நாடும் வீடும் வளமாக இருக்கணும்!


பயிர்பச்சைகள் செழிப்பாக வளர்ந்து விவசாயிகளின் மனம் குளிரணும்! இயற்கை நமக்கு உற்ற துணையாக என்றும் இருக்கணும்! மக்கள் மனதில் திருப்தியும், நிதானமும், பக்குவமும் நிலைத்து இருக்கணும்! நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற மனநிலை நமக்குள் வளரணும்! எல்லாவற்றையும் தந்த இறைவனுக்கு என்றும் நன்றி சொல்வோம்!

 

*******

 

காக்காய் பிடி! கனுப்பிடி! - 16 ஜனவரி 2024:


 

இன்றைய தினம் அதாவது பொங்கலுக்கு மறுநாள் உடன்பிறந்த/உடன்பிறக்காத சகோதரர்களின் நலனுக்காகவும் என்றும் நம்முடன் அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியும் பிரார்த்தித்துக் கொள்ளும் நாள்! வடக்கில் ரக்ஷாபந்தன் போல இன்று நமக்கான நாள்!

 

அதிகாலையில் எழுந்து பசுமஞ்சளை வீட்டில் உள்ள பெரியவர்களிடமோ அல்லது கணவனிடமோ கொடுத்து மஞ்சள் கீற்றி விடச் சொல்லி அவர்களை நமஸ்கரித்துக் கொள்ளணும்! இம்முறை என்னவர் இங்கு இருந்ததால் அவரிடமே கொடுத்து மஞ்சள் கீற்றிக் கொண்டேன். மகளுக்கு நான் மஞ்சள் கீற்றி விட்டேன்!

 

பின்பு நேற்றைய பொங்கல் பானையில் கட்டிய மஞ்சள் கொத்திலிருந்து இலைகளை எடுத்து அதை கோலமிட்ட தரையில் இலை போல போட்டு அதில் சிவப்பு சாதம், மஞ்சள் சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை 'காக்காய் பிடி வெச்சேன்! கனுப்பிடி வெச்சேன்! உன் கூட்டம் போல எங்கள் கூட்டமும் என்னிக்கும் ஒத்துமையா இருக்கணும்! என்று சொல்லி வைத்து கற்பூரம் காண்பித்து நமஸ்கரிக்கணும்!

 

பொதுவாக இன்றைய தினத்தில் கலவை சாதங்களை தான் செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வர். நானும் அதையே தான் பின்பற்றி வருகிறேன் என்பதால் தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் என செய்த பின் இனிப்புக்காக கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து பால் பொங்கலும் செய்திருந்தேன்! 

 

எப்போதும் அம்மாவின் வழியை பின்பற்றி கல்கண்டு சாதம்/பொங்கல் தான் செய்வேன்! என்னவருக்கு அதில் பெரிதாக விருப்பமில்லை என்று தெரிந்ததால் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம் என எதுவும் இல்லாமல் இனிப்புக்காக கண்டன்ஸ்டு மில்க் மட்டும் சேர்த்து செய்து பார்த்தேன்! மிதமான இனிப்பில் க்ரீமியான பால் பொங்கல் ஜோராக இருந்தது! அவருக்கும் பிடித்திருந்தது!

 

எல்லோரும் நல்லபடியாக இருக்கணும்! நல்லதே நடக்கணும்!

 

*******

 

மார்கழி கோலங்கள் - 2023-24 - பகுதி 5

 

இந்த வருட மார்கழியில் வீட்டு வாசலில் போட்ட சில கோலங்களை இந்தப் பதிவிலும், இந்தப் பதிவிலும், இந்தப் பதிவிலும் மற்றும் இந்தப் பதிவிலும் வெளியிட்டு இருந்தேன். இந்த நாளில் இன்னும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு! 











 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

14 கருத்துகள்:

  1. படங்கள் யாவும் பண்டிகைகளின் உற்சாகத்தை அழகாகக் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் சார். பண்டிகைகள் நம்மை உற்சாகப்படுத்தத் தானே!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது. போளி, மற்றும் பொங்கல் படங்களும் நன்றாக இருக்கிறது. சிறப்பாக முறைப்படி போகிப் பண்டிகை, பொங்கல் பண்டிகை, கனுப்பிடி பொங்கல் என நீங்கள் கொண்டாடியிருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துகள். பொங்கல் பானையில் சுற்றியிருக்கும் மஞ்சள் குலைகள் பசுமையாக நன்றாக உள்ளது.

    மஞ்சள் குலைகள் இலைகள் நல்ல பெரிதாக அடியில் நிறைய மஞ்சள் கிழங்குகளுடன் இங்கு நாங்கள் சென்ற போது கடைகளில் கிடைக்கவில்லை. ஒரு வேளை அது வரும் நேரங்கள் தெரிந்து அவை நன்றாக உள்ளபோதே மக்கள் வாங்கிச் சென்று விட்டனரோ என்னவோ..! முன்பு சென்னையில், மதுரையில் இருக்கும் போது, பசுமையான இலைகளுடன், நிறைய மஞ்சள் கிழங்குகளுடன் வாங்கியுள்ளோம் . இப்போது எங்கள் ஏரியாவில் அரிதுதான்.

    மார்கழி கோலங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. ஒரு நாள் போல தினமும் பழைய கோலங்களை எடுத்து விட்டு கலர் கோலங்கள் இடுவது மிகவும் சிரமம். நானும் முன்பு மார்கழி தோறும் கலர், சாதாரண பெரியகோலம் என தினமும் இட்டிருக்கிறேன். இப்போது சில வருடங்களாக இயலவில்லை. உங்கள் பொறுமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அத்தனை பகிர்வும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து எல்லாம் இங்கு பசுமையாகவே கிடைக்கும். நிறைய இடங்களிலும் விற்பார்கள். விலை ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும் அவ்வளவு தான். ஒவ்வொரு வருடமும் அந்த பசுமஞ்சளை அரைத்து மஞ்சள்பொடியாக செய்து கொள்வேன். இல்லையென்றால் நேரடியாக சமையலில் சேர்ப்பேன் அல்லது ஊறுகாய் போடுவேன்.

      கடந்த மூன்று வருடங்களாக மார்கழிக் கோலம் மகள் தான் போடுகிறாள். அவளுக்கு வண்ணம் கொடுக்க நான் உதவுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலாஜி.

      நீக்கு
  3. கோலங்கள் அழகு. பண்டிகை கொண்டாடிய விவரம் சிறப்பு.

    //பாராட்டெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது//- அட... நம்மைப்போல் ஒருவரா?

    போளி நன்றாக வந்திருக்கிறது.

    பெங்களூரில் மஞ்சள் குலைகள் இரு நாட்கள்தாம் கிடைக்கும். இவங்களுக்கு குலையைவிட மஞ்சள்தாம் முக்கியம் போலிருக்கு. அதனால் நான் ஒரு முறை தவற விட்டமாதிரி இருக்காமல் மார்க்கெட்டுக்கு வந்த உடன் வாங்கிவிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு பொங்கல் சமயத்தில் மஞ்சள் கொத்துகளும், அதன் பின்பு மஞ்சளும் கிடைக்கும்! வீட்டு உபயோகத்துக்கு, கோவிலுக்கு குடுக்க என்று வருடத்துக்கும் வாங்கி காயவைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்வார்கள்!

      தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  4. கோலங்கள் அழகாக இருக்கிறது.

    கதம்பம் சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் அருமை. அனைத்தும் முகநூலில் படித்து இருந்தாலும் மீண்டும் படித்தேன், ரசித்தேன். சிறப்பான கதம்பம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. கோலம் படங்கள் எல்லாமே அழகு. பொங்கல் பலகாரங்கள் எல்லாமே அதுவும் வடை! என்னை இழுக்கிறது. போளி நம்ம வீட்டிலும் மேல் மாவு தெரியாமல் செய்யணும் என்பார்கள். பழக்கத்தில் இதுவரை ஒழுங்காக வந்து கொண்டிருக்கிறது. உங்க போளியும் நல்லாவே வந்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  7. பொங்கல் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக மகிழ்ச்சியுடன் இருந்திருக்கின்றன என்பதைப் படங்கள் சொல்கின்றன. கோலங்கள் மிக நன்றாக இருக்கின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....