வெள்ளி, 16 ஜனவரி, 2026

நடை நல்லது - கோலங்கள் - சாக்லேட் மாமா - உனக்கு இதே வேலை… - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பொங்கல் நல்வாழ்த்துகள் 2026 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சற்றே இடைவெளிக்குப் பிறகு காலை நேரத்தில் நடை வாய்த்தது.  பொங்கல் அன்று அலுவலகம் விடுமுறை. ஆனாலும் காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாராகி, மாதப்பிறப்பிற்கான புண்யகால தர்ப்பணம் முடித்து, சரி ஒரு நடை நடந்து விட்டு வரலாம் என புறப்பட்டு விட்டேன்.  பொங்கல் என்பதால் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் அழகழகாக வண்ணங்கள் சேர்த்து கோலங்கள் போட்டிருந்தார்கள் அல்லது போட்டுக் கொண்டிருந்தார்கள்.  எத்தனை கலைநயம்.  பெரும்பாலான வீடுகளில் பொங்கல் பானை கோலங்கள் தான் என்றாலும் சில வீடுகளில் மாற்றாக வேறு சில கோலங்களும் இருந்தன.  சில கோலங்களை மட்டும் நிழற்படங்களாக அலைபேசி கேமரா வழி சிறைப்பிடித்தேன் - வீட்டினருக்குக் காண்பிக்கவும், உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் தான்! 
































ஒரு வீட்டில் மிக அழகாக ஒரு கோலம் இருக்க, அதனை படம் எடுத்த போது, அங்கே இருந்த ஒரு அம்மா வெட்கத்துடன் சொன்னது - “நான் போடலங்க! பாப்பா போட்டுச்சு!”. சிரித்தபடியே, நன்றாக இருக்கிறது என்று சொல்லி நகர்ந்தேன்.  சில வீட்டு வாசலில் இருந்த கோலங்களை படம் எடுத்தபோது அங்கே இருந்த பெண்கள் புன்னகை சிந்த நானும் புன்னகையை பதிலுக்கு அளித்து வைத்தேன்.  சாதாரண நாட்களில் போடப்படும் கோலங்களை விட இன்றைய சிறப்பு நாளில் போடப்படும் கோலங்களுக்கு எத்தனை தயாரிப்பு, எத்தனை நேரம், எத்தனை ஈடுபாடு இருக்க வேண்டும் என்பதை கோலங்களை பார்த்து ரசித்தபோது தோன்றியது.  அதிலும் ஒரு சில வீடுகளில் இருந்த கோலங்கள் தொகுப்பு போட்டு முடிக்க குறைந்த பட்சம் ஒன்று, ஒன்றரை மணி நேரமாவது ஆகியிருக்கும் என்று தோன்றியது. 


நெடுந்தெரு, உத்தர வீதி, அடையவளைந்தான், சாத்தார வீதி என மாற்றி மாற்றி சுற்றி வந்ததில் நிறைய கோலங்களை பார்க்க முடிந்ததோடு, கரும்பு, மஞ்சள் கொத்து, பழங்கள், விதம் விதமாய் பூக்கள் என கடைசி நேர விற்பனை களைகட்டிக் கொண்டிருந்த காட்சிகளையும் பார்க்க முடிந்தது. “மஞ்சள் கொத்து அநியாய விலை விக்குது - 80 ரூபாயாம்!” என்று புலம்பினார்  ஒரு பெண்மணி.  இன்றைக்கு மட்டும் தானே மஞ்சள் கொத்து வியாபாரம் செய்ய முடியும் என்று அந்த வியாபாரி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.  சாத்தார வீதி, திருவரங்கத்திற்கு மட்டுமல்லாது, திருச்சியின் பல பகுதிகளுக்கும் பூக்களை அள்ளி அள்ளித்தரும் ஒரு வீதி.  இங்கே தான் மொத்த விலையில் பூக்களை வாங்கிச் செல்வார்கள் சில்லறை வியாபாரிகள்.  அந்த வீதியில் நடந்து வந்த போது ஒரு சிறு காணொளியும் எடுத்தேன் - காணொளியை கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்!



அப்படியே நடந்து வந்த போது ராஜா காதிற்கும் கொஞ்சம் விஷயங்கள் கிடைத்தது. இரு சக்கர வாகனத்தில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார் ஒரு இளைஞர்.  முன் பெட்ரோல் டாங்க் மீது அவரது சிறு பெண். பின்னால் மனைவி.  சரியாக என்னைக் கடக்கும்போது அந்த இளைஞர் சோகமாகச் சொன்னார் - “என்னை அசிங்கப் படுத்தறதே உனக்கு வேலையாப் போச்சு!”  அந்த இளைஞரின் மனைவி நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தார்.  “விட்றா விட்றா, இது என்ன நமக்கு புதுசா?” என்று முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தலாம் என்றால் வண்டி என்னைக் கடந்து இருந்தது!  வீட்டுக்கு வீடு வாசப்படி! ஹாஹா….


எனக்கு முன்னர் சென்று கொண்டிருத ஒரு பெரியவர் சட்டென நின்றார்.  அவரைக் கடக்கும் போது பார்த்தால், கைப்பையிலிருந்து சாக்லேட் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  சர்க்கரை குறைந்து விட்டதோ என்று பார்த்தால், “கடையில சில்லறை இல்லைன்னு சாக்லேட் தந்தான்…  வீட்டுக்குப் போனா, சாப்பிட விட மாட்டாளே! அதான் இங்கேயே சாப்பிடறேன்!” என்று சொல்லி சிரிக்கிறார்! சிரித்தபடியே கடந்தேன்.  அவரவருக்கு அவரவர் கவலை! 


கரும்பு, பூக்கள், மஞ்சள் கொத்து விற்பனையோடு இன்னுமொரு விஷயமும் அதிகம் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.  வேப்பிலை, ஆவாரம்பூ மற்றும் பூளைப்பூ ஆகிய மூன்றையும் ஒரு கட்டாகக் கட்டி விற்பனை செய்வார்கள்.  அவற்றை வீடுகளின் வாசலில் கட்டி வைப்பது இந்தப் பக்கத்தில் வழக்கம். “காப்பு கட்டுவது” என்று சொல்வார்கள்.  இந்தச் சமயத்தில் எல்லா வீடுகளிலும் இவை மூன்றும் நிச்சயம் கட்டி வைப்பார்கள்.  ஒரு சில வீடுகளில் கோலங்களுக்கு நடுவே சாணி வைத்து, அதில் இந்த மூன்றையும் சேர்த்து ஒரு கொத்தாகவும் வைப்பது வழக்கம்.  ஒரு பண்டிகை எத்தனை பேருக்கு சம்பாதிக்கும் வழியாக இருக்கிறது என்று நினைக்கும்போது இந்தப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவமும் நமக்குப் புரியும்.  ஆனால் இன்றைக்கு பல வீடுகளில் கொண்டாட்டங்கள் கொண்டாட்டமாக இல்லாமல் சினிமா கொட்டகை அல்லது டிவி நிகழ்ச்சிகள் என்ற நிலையில் தான் இருக்கிறது என்பதையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.  


மீண்டும் வேறொரு நடை நல்லது பதிவுடன் உங்களனைவரையும் சந்திக்கும் வரை….


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

16 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....