அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட CGV தைப் பொங்கல் திருவிழா - பகுதி இரண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
என்ன கார்த்தி? - 17 ஜனவரி 2026:
பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு சிலரும், பெயர் தான் எல்லாமே என்று மற்றவர்களும் சொல்லக்கூடும். பெயர்கள் என்னை நிறைய யோசிக்கச் செய்யும். நடைப்பயணத்தில் பார்க்கும் பதாகைகள், போஸ்டர்கள் என அனைத்திலும் இருக்கும் பெயர்களை கவனிப்பது எனக்கு வழக்கம். ஒரு சில பெயர்கள் எதற்காக இந்தப் பெயர் என்று யோசிக்க வைக்கும் விதமாக இருக்கும். தில்லியில் இருந்தவரை போஸ்டர்கள் அத்தனை பார்க்க முடியாது - அதிலும் குறிப்பாக “இமயம் சரிந்தது” போன்ற பதாகைகள், போஸ்டர்கள் அங்கே யாரும் வைப்பதில்லை, சுவற்றில் ஒட்டுவதில்லை. இங்கேயோ அது ஒரு வித விளம்பரமாகவே இருக்கிறது. யார் இறந்தாலும், அந்தப் பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த நபர் இருந்த பகுதியில் தண்டோரா போட்டு, இன்னார் காலமானார் என்று அறிவிக்கும் பழக்கமும் இருக்கிறது என்றபோது இந்த போஸ்டர் விளம்பரங்கள் தேவையா என்ற எண்ணம் எனக்கு எப்போதும் ஏற்படும் ஒன்று.
அப்படியான எண்ணத்தினைக் குறித்து பிறிதொரு சமயம் பேசுவோம். இன்றைக்கு பேச வந்த பெயரில் என்ன இருக்கிறது என்ற தலைப்பினைக் கவனிப்போம். சமீபத்தில் அப்படியான போஸ்டரில் ஒரு நபர் இறந்தது குறித்த தகவலை வெளியிட்டு இருந்தார்கள். ஒரு மனிதரின் நிழற்படம் வெளியிட்டு, அதன் கீழே “பஜ்ஜி என்கிற முருகேசன்” காலமானார் என்ற தகவலை பகுதி முழுவதும் ஒட்டி வைத்திருந்தார்கள். முருகேசன் என அழகான பெயர் இருக்க, பஜ்ஜி என்கிற அடைமொழி அவருக்கு ஏன் வந்தது? அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்தித்தபடியே தான் நடந்து கொண்டிருந்தேன். தொடர்ந்து பல முறை அந்த போஸ்டர்களைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு முறையும் அந்தப் போஸ்டரும், அவரின் பெயருக்கான காரணம் என்ன என்ற சிந்தனையை மனதுக்குள் ஓடச் செய்யும். இறந்தவர் இமயமா இல்லையா என்பதே இல்லை - இறந்து விட்டால் அவர் இமயம் என்பதாகவே இங்கே ஒட்டப்படும் போஸ்டர்கள் இருக்கின்றன.
அதைப் போலவே இங்கே இருக்கும் வீதிகளில் உள்ள வீடுகளின் பெயர்களையும் கவனிப்பது எனக்கு வழக்கமாக இருக்கிறது. அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பெயர் வைப்பது வழக்கமான ஒன்று என்பதைப் போல தனி வீடுகளுக்கும் பெயர் வைத்து ஒரு மார்பிள் கல்லும் வைத்து விடுகிறார்கள். திருவரங்கத்தில் இருக்கும் பல வீடுகள் ஏதேனும் ஒரு விதத்தில் அரங்கனை, விஷ்ணுவை நினைவுபடுத்தும் விதத்தில் தான் இருக்கும். ரங்க பாதுகா என்ற பெயர் பார்க்கும்போதெல்லாம் அரங்கனின் பாதமலர்கள் கண்ணுக்குள் தோன்றும். அப்படி பல வீடுகளின் பெயர்களை கவனித்தபடியே நடப்பது வழக்கம் எனக்கு. சமீபத்தில் அப்படி ஒரு வீட்டின் பெயர் பார்த்ததும் மீண்டும் “எதற்காக இந்த வீட்டிற்கு இந்தப் பெயர் வைத்திருக்கிறார்கள்?” என்ற எண்ணம் தோன்றியது. அப்படி என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? “அநி” என்கிற குறும்பெயர் தான் அந்த வீட்டிற்கு பெயர்.
இத்தனை குறுகிய பெயரான “அநி” என்கிற பெயர் வைப்பதற்கான காரணம் என்ன, அந்தப் பெயருக்கு ஏதேனும் அர்த்தம் இருக்கக்கூடுமோ? என்றெல்லாம் சிந்தனை செய்தபடியே நடந்தேன். உடன் வந்த இல்லத்தரசியிடமும் இந்தப் பெயருக்கு என்ன காரணம் இருக்க முடியும்? அதன் அர்த்தம் என்னவாக இருக்கக்கூடும் என்றெல்லாம் அளவளாவியபடியே நடந்தோம். அப்படி நடந்தபடியே வந்தபோது மஹாராஷ்ட்ரா பதிவு கொண்ட ஒரு வாகனம் எதிரே வந்தது. வாகனத்தில் ஐயப்ப பக்தர்கள்… வாகனத்தின் முன்புறம் கண்ணாடியில் எழுதப்பட்டிருந்த பெயர் கண்களைக் கவர்ந்தது! அப்படி என்ன பெயர் எழுதியிருந்தது? அது பெயர் தானா? இல்லை ஒரு கேள்வியா? சிந்தனைகள் தொடர்ந்தன. அந்த வாகனத்தில் எழுதியிருந்தது இது தான் - “என்ன கார்த்தி”.
*******
பாரம்பரிய உடையில் - 18 ஜனவரி 2026:
பொங்கல் அன்று எங்கள் அலுவலகத்திற்கு விடுமுறை. தில்லியில் இருந்தவரை பொங்கல் அன்று அரசு விடுமுறை அல்ல! வேண்டியவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளும் விதமாக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே Restricted Holiday என்று அனுமதி தருவார்கள். நமக்கு வேண்டிய இரண்டே இரண்டு நாட்கள் மட்டும் இப்படி அனுமதிக்கப்பட்ட விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இங்கே தமிழகத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வந்த பிறகு முதல் முறையாக பொங்கல் விடுமுறை கிடைத்திருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் அலுவலகத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் வேஷ்டி - சட்டையில் பாரம்பரியமாக வரலாமே என்று இளைஞர் ஒருவர் குரல் கொடுக்க, 16-ஆம் தேதி அப்படியான உடையில் அலுவலகம் சென்று வந்தேன். அதற்கு முன்னர் வீட்டில், அந்த உடையில் ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்ல, இல்லத்தரசி மொட்டைமாடிக்குச் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மகளும் செல்ல, மகள் சில படங்கள் எடுத்துத் தந்தார். அலுவலகத்திலும் நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். படங்களைப் பார்த்த இல்லத்தரசி, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு வித கமெண்ட் அடித்தார்… உதாரணத்திற்கு ஒரு படமும் அதற்கான கமெண்ட் மட்டும் இங்கே….
தைரியம்! தலைவனோட லட்சணம்… 🙂
பொதுவாகவே வேஷ்டி நமது பாரம்பரிய உடை என்பதோடு, அதனை உடுத்திக் கொண்டால் இருக்கும் Comfort, Pant போன்றவை அணியும் போது வருவதில்லை என்பதை நாம் அனைவருமே நன்கு உணர்ந்து தான் இருக்கிறோம். ஆனாலும் இப்படி ஏதோ ஒரு நாள் மட்டுமே அலுவலகத்திற்கு வேஷ்டியில் செல்ல முடிகிறது என்பதும் நிதர்சனம். தில்லியில் இருந்த வரை, அலுவலகத்திற்கு இப்படி வேஷ்டி சட்டையில் சென்றதே இல்லை - அதுவும் பொங்கல் சமயத்தில் குளிர்காலம் என்பதால் நிச்சயம் அலுவலகத்திற்கு நிச்சயம் வேஷ்டி சட்டையில் சென்றிருக்க வாய்ப்பே இல்லை. வாசிக்கும் உங்களில் எவராவது வேஷ்டி சட்டையில் அலுவலகத்திற்குச் சென்றது உண்டா? அதிலும் குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளியே, வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் இப்படி அலுவலகத்திற்கு உடை அணிந்து சென்றதுண்டா? உங்கள் அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
23 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....