சனி, 24 ஜனவரி, 2026

காஃபி வித் கிட்டு - 223 - என்ன தோன்றுகிறது? - பண்டு பாடவரம்பத்திலோடே - வாங்கியவன் திண்டாட - Nothing - மஞ்சள் நிறத் திருவிழா - பூனைகளின் குளியலறை - House Arrest


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முகநூல் இற்றைகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் நிழற்படமும் எண்ணங்களும் : என்ன தோன்றுகிறது?



அவ்வப்போது முகநூல் வழியோ, அல்லது WhatsApp வழியோ ஏதோ படங்கள் நமக்கு வந்து சேரும்போது, பார்த்த மாத்திரத்தில் அந்த நிழற்படங்கள் நமக்குள் வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுவதுண்டு.  அந்தப் படம் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், அந்தப் படம் நமக்கு உண்டாக்கிய அதிர்வுகள் என சில நாட்களேனும் தொடர்வதுண்டு.  அப்படியான ஒரு படம் தான் மேலே இருக்கும் படம்.  நண்பர் ராஜேஷ் சங்கரபிள்ளை அவர்கள் முகநூல் பக்கத்தில் தான் இந்தப் படத்தினை நான் முதன் முதலாக பார்த்தேன்.  இந்தப் படம் பார்த்ததும் எத்தனை எத்தனை சிந்தனைகள்.  தனது வயிற்றையும் கவனிக்க வேண்டும், தனது குட்டிக்கும் பாலூட்ட வேண்டும், அதற்கு நானும் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருக்குமோ, அந்த ஆடு - அதற்கு நினைக்கும் சக்தியிருந்திருந்தால்….  இந்தப் படம் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது…  கவிதையா, கதையா அல்லது ஏதேனும் சிந்தனைகளா?  எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொள்ளுங்களேன் - பின்னூட்டமாகவோ, அல்லது எனக்கு அனுப்பினால், இங்கே ஒரு பதிவாக கூட வெளியிட நான் ரெடி…. எழுதுங்களேன். 


******


இந்த வாரத்தின் ரசித்த இசை :  பண்டு பாடவரம்பத்திலோடே


அவ்வப்போது ஏதேனும் ஒரு பாடலை கேட்கத் தொடங்கி, மொழிப் பாகுபாடே இல்லாமல் ஏதேதோ மொழியில், ஏதேதோ நாட்டின் இசையில் மயங்கியதுண்டு.  சமீபத்தில் கூட ஒரு பெங்காலி பெண்ணின் வாத்திய இசையில் மயங்கினேன்.  அப்படி பார்க்கும்/கேட்கும் சமயங்களில் சில பாடல்கள் பிடித்துப் போகும்.  அப்படி கேட்ட ஒரு பாடல் ஜோசப் என்கிற மலையாள சினிமாவில் வரும் டைட்டில் சாங்க்….  “பண்டு பாடவரம்பத்திலோடே..” என்கிற பாடல்.  மலைப்பகுதியில் காரில் சென்ற படி தண்ணி அடிப்பதும், பீடி பிடிப்பதும் கொஞ்சம் பதற்றம் தந்தது என்றாலும், பாடல் பிடித்திருந்தது.  கூடவே அந்தப் பாடல் காட்சியமைக்கப்பட்ட விதமும்.  கேட்டுப் பாருங்களேன்.


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : வாங்கியவன் திண்டாட


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வாங்கியவன் திண்டாட - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் தேனீர் போலவே தேனீர் கிடைத்தது. கடன் அன்பை முறிக்கும் என்று பல கடைகளில் எழுதி இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.  இங்கே வித்தியாசமாய் கவிதையாய் எழுதி இருந்தார்கள்.


கான மயிலாட

கடன் வந்து மேலாட

வாங்கியவன் கொண்டாட

நான் இங்கு திண்டாட

தயவு செய்து கடன்

கேட்காதீர்!


நான் சனிக் கிழமை அன்று புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப் பாடல்கள் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். முதலில் பிள்ளையார் பாட்டில் ஆரம்பித்து, இரண்டாவதாய் தை மகளை வரவேற்று, மூன்றாவதாக அவரது மிகப் பிரபலமான பாடலான “தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒண்ணு” பாடலைப் பாடினார்.  பிறகு விறுவிறுப்பான கும்மிப் பாட்டு, மாடு பாட்டு, கோழிப் பாட்டு, ஜல்லிக்கட்டுப் பாட்டு, குழந்தைகளுக்கான பாட்டு என்று எல்லா மக்களும் ரசிக்கும்படி பல பாடல்களை பாடினார்கள்.


நடுநடுவே நல்ல நகைச்சுவை உணர்வோடு பேசவும் செய்தார்.  கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் பாடலான ”விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி” பாடலையும் பாடினார்.  மொத்தத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களைப் பாடி தில்லி தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல இசைவிருந்தினை நல்கினர் புஷ்பவனம் குப்புசாமி தம்பதிகள். அவர்களும், குழுவில் இருந்த மற்ற கலைஞர்களும் தில்லியின் கடும் குளிரிலும் இங்கே வந்திருந்து, அதுவும் ஒரு திறந்த வெளி அரங்கிலிருந்து மக்களை மகிழ்வித்ததற்காகவே பாராட்டலாம்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் நகைச்சுவை  : Nothing


சில விஷயங்கள் அதிகம் விளக்கமே தேவையற்றதாக இருக்கும் - படிக்கும்போதே புன்னகைக்க வைக்கும் விஷயமாக இருக்கும் - அப்படியான ஒரு நகைச்சுவை…  ஆங்கிலத்தில் - உங்கள் பார்வைக்கு - பாருங்களேன்!



******


இந்த வாரத்தின் வேதனை :  மஞ்சள் நிறத் திருவிழா…



Bபசந்த்/வசந்த பஞ்சமி - தமிழகத்தில் அத்தனை கொண்டாடப்படுகிறதோ இல்லையோ வடக்கில் இந்த வசந்த பஞ்சமி மிகவும் சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.  அதிலும் கிராமப் பகுதிகளில் இந்த வசந்த பஞ்சமி நாளில் கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். வசந்தத்தினை வரவேற்கும் விழாவாகவும், வசந்த நவராத்திரியின் ஐந்தாம் நாளை சரஸ்வதி பூஜையாகவும் கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது.  நாம்தாரி எனும் பெயர் கொண்ட சீக்கியர்களின் ஒரு பிரிவினர் கூட இந்த விழாவினைக் கொண்டாடுவதுண்டு.  மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள் நிறப் பூக்கள் என மஞ்சளை பிரதானமாக வைத்து விழாவினை கொண்டாடுவதோடு, பெண்கள் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் கடுகுச் செடிகள் இருக்கும் வயலில் வசந்தத்தை வரவேற்று கொண்டாடுவார்கள்.  ஆனால் இந்த வருடம் இங்கே பார்த்தால் அதனை அப்படியே மாற்றி தங்கம் வாங்கச் சொல்கிறார்கள். 


மஞ்சள் நிறத் திருவிழாவில் தங்கம் வாங்குங்கள் என புதிதாக (?) ஆரம்பித்து இருக்கிறார்கள்.  எப்படி அக்ஷய திருதியை சமயத்தில் தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி மக்களை மடைமாற்றிவிட்டார்களோ அதே போல இந்த வசந்த பஞ்சமி சமயத்திலும் மஞ்சள் நிறத் தங்கத்தினை வாங்க வேண்டும் என்று பாட்டுக்கு இடையே பல முறை விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.  தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே இருக்க, அதன் மீதான மோகமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - குறைவதாகத் தெரியவில்லை! விலை எத்தனை அதிகமானாலும் எங்களுக்குக் கவலையில்லை - வாங்கிக் கொண்டே தான் இருப்போம் என்று வாங்கும்போது இப்படி நொடிக்கொரு நகை விளம்பரம் வருவதைப் பார்த்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. 


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - பூனைகளின் குளியலறை :


என்னப்பா, போன சனிக்கிழமை தான் பத்மநாபன் அண்ணாச்சி பத்தி எழுதினப்போ பூனைகள் பத்தியும் சொல்லி இருந்த… இந்த வாரம் என்னடான்னா பூனைகளின் குளியலறை என்று தலைப்பில் எழுதப் போகிறாயா என்று கேட்காமல் கீழே இருக்கும் விளம்பரத்தினைப் பாருங்கள்! பூனைகளுக்காகவே ஒரு குளியலறை! எப்படியெல்லாம் விளம்பரத்திற்காக யோசிக்கிறார்கள்! இது ஒரு தாய்லாந்து விளம்பரம் - ஆங்கில சப்டைட்டில் உடன்!


******


இந்த வாரத்தின் தகவல் - House Arrest :



கொஞ்சம் பழைய செய்தி தான் - அதுவும் ஒன்பது வருஷ பழசு…. இருந்தாலும் ஸ்வாரஸ்யமான செய்தி தான்.  ஆங்கிலத்தில் இருக்கும் செய்தி - படித்துப் பாருங்களேன்!


In 2016, a 70-year-old man named Lawrence Ripple walked into a bank in Kansas City and handed the teller a note that said "I have a gun, give me money."


The teller was terrified and handed him nearly $3,000 in cash.


But instead of running to a getaway car, Lawrence simply took the cash, walked into the lobby, and sat down in a comfortable chair. He waited patiently for the police to arrive and arrest him.


When they arrived, Lawrence just looked up and said, "I'm the guy you're looking for."


When asked why he didn't run, he told them the brutal truth.


He had just had a massive argument with his wife. He had written the robbery note right in front of her and told her "I would rather be in jail than at home."


He pleaded guilty and was fully prepared to spend his final years in a peaceful prison cell. But the judge had a different sense of humor.


Since Lawrence had no prior criminal record and the gun wasn't real, the judge decided that prison was too harsh.


Instead, he sentenced Lawrence to six months of house arrest.

  

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

24 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....