செவ்வாய், 20 ஜனவரி, 2026

கதம்பம் - தலைமுறையின் அடையாளம் - Patholi - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய இற்றைகளின் தொகுப்பு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட சிறப்பு எதிரி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தலைமுறையின் அடையாளம் - 19 ஜனவரி 2026 : 



எல்லோருக்கும் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்! எங்களுக்கு இந்த வருடம் பண்டிகை இல்லாததால் அன்புள்ளங்கள் பகிர்ந்து கொண்ட சர்க்கரைப் பொங்கலுடன் நேற்றைய நாள் இனிமையாகவே சென்றது! இன்று அதிகாலையில் எழுந்து மொட்டைமாடிக்குச் சென்று  உடன்பிறந்தோரின் நலனுக்காக வேண்டி கணுப்பிடி வைத்து விட்டு வந்தேன்! 'காக்காப்பிடி வெச்சேன்! கணுப்பிடி வெச்சேன்! உன் கூட்டம் மாதிரி எங்க கூட்டமும் எப்பவும் ஒத்துமையா இருக்கணும்! நல்லதே நடக்கணும்! என்று பிரார்த்தித்துக் கொண்டேன்! 



அன்பு சூழ் உலகில் இன்றைய தினத்தில் யாருக்காக வேண்டுமானாலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம்! டெல்லியில் எங்கள் ஏரியாவில் வசித்த நண்பர் ஒருவர் இத்தனை வருடங்களுக்குப் பின்னும் வருடம் தவறாமல் என்னை தன்னுடைய தங்கையாக பாவித்து பொங்கல் காசு அனுப்புகிறார்! இது அன்பு சூழ் உலகு தானே!


சரி! விஷயத்திற்கு வருகிறேன்!தலைமுறை இடைவெளி என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்! இந்த இடைவெளி என்பது அவரவர்களின் எண்ணத்தில், வார்த்தைகளில், குணதாசியத்தில் என மாறுபடலாம்! நாங்கள்லாம் எப்படி இருந்தோம்! தெரியுமா? இப்படியா உங்கள மாதிரி இருந்தோம்! என்றெல்லாம் சொல்லிக் கொள்வதும் கூட தலைமுறையின் இடைவெளி தான்!  


சமீபத்தில் மகளின் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பாரம்பரிய உடையான புடவையணிந்து சென்றிருந்தாள்! அங்கு அன்று நடைபெற்ற நிகழ்விற்காக மாணவிகள் எல்லோரும் ஒன்று கூடி பலதரப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்! கிராமிய சூழலில் பொங்கல், வளையல் கடை, அம்மன் அலங்காரம் என்று ஏற்பாடுகள் இருந்தன! இவர்களுடன் இவர்களின் துறைத் தலைவரும் சேர்ந்து விறகு அடுப்பில் பொங்கல் வைத்தார் என்று மகள் சொன்னாள்!


இந்த பொங்கல் நிகழ்வை மீடியாவிலிருந்து வந்தும் பதிவு செய்திருக்கிறார்கள்! அதில் மகளையும் கூட சில வார்த்தைகள் பேசச் சொல்லியிருக்கிறார்கள்! அவளும் அதற்குத் தயாராகிச் செல்ல, அங்கு பதிவு செய்ய வந்திருந்தவர், அவள் இந்த நிகழ்வில் நெற்றியில் வைத்திருந்த சந்தனத்தை பார்த்து விட்டு, “நான் மலையாளி! நான் கேரளாவிலிருந்து இங்கு வந்து படிக்கிறேன்!” என்று இவளை கேமிராவுக்கு முன் சொல்லச் சொன்னாராம்!


இவளுக்கு தன் அடையாளத்தை மாற்றிச் சொல்லணும் என்று அவர் சொன்னது பிடிக்காததால் பேச மறுத்து வந்துவிட்டாள்! “அது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்! நான் ஏன் என்னுடைய அடையாளத்தை மாத்திக்கணும்! நாம இப்பவும் டெல்லியில இருந்திருந்தாக் கூட நான் தமிழ்ப் பொண்ணு தான்! என்னோட ஊர் இது தான் இல்லையா! எங்க காலேஜ்ல எல்லாரும் சேர்ந்து தான் படிச்சிண்டு இருக்கோம்! அவர் அப்படிச் சொல்லுங்களேன்னு சொன்னது தாம்மா எனக்குப் பிடிக்கல! மாட்டேன்னு சொல்லிட்டு வந்திட்டேன்! என்று கம்பீரத்துடன் சொன்னாள்!


நானும் அடடா! டிவில வர சான்ஸை இவ விட்டுட்டாளேன்னு நினைக்கலை! இதைக் கேட்டதும் மிகவும் பெருமையாக தான் உணர்ந்தேன்! இதுவே இன்றைய தலைமுறையின் அடையாளம்! இந்த இடத்தில் நான் உள்பட நம்மில் பலரும் அவங்க என்ன சொல்லுவாங்க! அவங்க என்ன நினைப்பாங்களோ என்று அந்த யாரோ ஒருவருக்காகவோ கூட அன்றாட வாழ்வில் அனுசரித்துச் சென்று கொண்டிருக்கிறோம்! என்பது தான் நினைவுக்கு வந்து சென்றது! 


ஆனால்! இன்றைய தலைமுறையின் இந்த அடையாளம் என்பது எல்லா இடத்திலும் ஒத்து வருமா? என்ற எண்ணமும் வராமல் இல்லை! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??


******


Patholi - 19 ஜனவரி 2026:



கணுப்பிடி வைப்பதற்காக வாங்கிய மஞ்சள் கொத்தில் இலைகள் மிகவும் பெரிதாகவும் செழிப்பாகவும் அருமையாக இருந்தது! பண்டிகை இருக்கும் நாட்களில் கூட இவ்வளவு ஃப்ரெஷ்ஷாக கிடைத்ததில்லை...🙂 கணுப்பிடி வைத்தது போகவும் மீதி  நிறைய இருக்கும் என்று தோன்றியது! இதை வைத்து ஏதாவது செய்யலாமே என்று தோன்றவும், நேற்றே இணையத்தில் தேடி ரெசிபியும் எடுத்து விட்டேன்..🙂


Patholi!



கொங்கன் பகுதிகளில் இந்த மஞ்சள் இலைகளில் ஸ்பெஷலாக ஸ்வீட் செய்வார்களாம்! பிறகு என்ன! அதாங்க கேரளத்தில் வாழையிலையில் இலை அடை செய்வார்கள் என்றால், கர்நாடகத்தில் அதையே 'கடுபு' என்ற பெயரில் செய்வார்களாம்! எதுவானால் என்ன!  நமக்கு மஞ்சள் இலைகளை பயனுள்ளதாக செலவிடணும்..🙂 அவ்வளவு தான்!  கொங்கன் பகுதி ஸ்வீட்டாகவே செய்து விட்டேன்..🙂

கொங்கன் பகுதி என்றதும் டெல்லியில் எங்கள் வீட்டின் கீழே இருந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வசித்தது தான் நினைவுக்கு வந்தார்கள்! அங்கிள், ஆன்ட்டி மற்றும் அவர்களின் இரு மகள்களான Lonaவும் Laviயும்! அன்றாடம் அவர்களுக்கு dry fish இல்லாமல் உணவே இறங்காது..🙂 அவர்களுக்கு அருகில் பெங்காலீஸ்! கேட்கவே வேண்டாம்...🙂 


நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் மஞ்சள் இலைகளை வீணாக்காமல் இப்படிக் கூட செய்யலாம்! மஞ்சள் இலையின் மணத்தோடும், மருத்துவ பயனோடும் உடலுக்கு கெடுதல் விளைவிக்காத உணவாக மாறியது! 



******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

20 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....