திங்கள், 12 ஜனவரி, 2026

இரண்டாவது மலர் - லக்ஷ்மி - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******



வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய இரண்டாவது மலர் என்கிற நூல் குறித்து தான். புஸ்தகா வெளியீடு. புஸ்தகாவில் அச்சுப்புத்தகம் (ரூபாய் 382.50), மின்புத்தகம் இரண்டுமே கிடைக்கிறது, அமேசான் கிண்டில் பக்கத்திலும் அச்சுப்புத்தகம் (ரூபாய் 450/-), மின்புத்தகம் என இரண்டுமே கிடைக்கிறது. எழுத்தாளர் லக்ஷ்மி அவர்கள் குறித்த முன்னோட்டத்தில் புஸ்தகா பக்கத்தில் இப்படியான தகவல் தந்திருக்கிறார்கள் - “திருச்சி மாவட்டம் தொட்டியம் என்ற ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தையார் மருத்துவர் சீனிவாசன். தாயார் பட்டம்மாள். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் திரிபுரசுந்தரி. மருத்துவராகவும் தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்த இவர் தமிழகம் மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவிலும் பல ஆண்டுகள் வாழ்ந்தவர்.”


இரண்டாவது மலர் எனும் தலைப்பு உங்களுக்கு ஏதேனும் விஷயத்தைச் சொல்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் கதை குறித்த சில விஷயங்களை நான் முன்னோட்டமாகச் சொல்லி விடுகிறேன்.  மொத்தம் 45 அத்தியாயங்கள் கொண்ட ஒரு நெடுங்கதை இது.  வசுந்தரா எனும் பெண்மணி மற்றும் அவள் மகள் சம்யுக்தா என இருவரும் தான் கதையின் பிரதான பாத்திரங்கள்.  ஒரு பெரிய தொழிற்சாலையை தனியொருத்தியாக நிர்வகிக்கும் திறன் மிகுந்த வசுந்தரா, தனது வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் போல தனது மகளுக்கும் கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  அவரது ஒவ்வொரு செயலும் மகளையும் ஒரு மிகச் சிறந்த தொழிலதிபராக உருவாக்கிவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. தான், தனது அப்பாவின் தொழிற்சாலையில் பணிபுரிந்தவரையே காதலித்து, அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தது போலன்றி மகள் நல்லவிதமாக உருவாக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். ஆனால் நடந்தது என்ன என்பதை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார் எழுத்தாளர். 


எல்லா காதலர்கள் போலவே ஆரம்பத்தில் எல்லாம் நல்லதாகவே நடந்து கொண்டிருந்தாலும், வசுந்தராவின் திருமண வாழ்க்கையில் போகப் போக பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.  ஒரு கட்டத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது.  வீட்டில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என வசுந்தராவின் அப்பா சொல்வதோடு, தனது மாப்பிள்ளையின் மீதே சந்தேகம் கொள்கிறார்.  வசுந்தராவும் அதற்கு ஏற்றார் போலவே பேச, அவளது காதல் கணவர், கட்டிய மனைவியையும், பெற்ற மகளையும் விட்டு விட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.  அதன் பிறகு வசுந்தராவின் தந்தையும் காலமாகிவிட உள்ளூரில் இருந்த தொழிற்சாலையினை நிரந்தரமாக மூடிவிட்டு, சென்னையில் நலிந்த நிலையில் இருக்கும் ஒரு தொழிற்சாலையை வாங்கி அதனை தனியொருத்தியாக திறம்பட நடத்தி முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்கிறார்.  மகளும் வளர்ந்து கல்லூரிப் படிப்பை முடிக்க, தனது தொழிற்சாலை வரும்காலத்தில் மகளால் திறம்பட நடத்தப்பட வேண்டும் என்பதற்காக அவளையும் தொழிற்சாலைக்கு அழைத்துச் சென்று பயிற்சி தருகிறார். 


பயிற்சிக்குச் செல்லும் சம்யுக்தா, அங்கே அம்மாவினைப் போல கண்டிப்புடன் இல்லாது தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவளாக, அவர்களுடன் பேசுவதாகட்டும், அவர்களது சுக துங்கங்களில் பங்கு கொள்வதாகட்டும் சற்றே மாறுதலாகவே நடந்து கொள்கிறாள் - அம்மா வசுந்தராவின் எதிர்ப்பு தெரிந்தாலும்.  தவிர அவர்களது தொழிற்சாலையில் புதியதாகப் பணியில் சேர்ந்த அருணாச்சலம் என்கிற அருண் உடனும் பழகுகிறாள்.  அந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாகவும் மலர்கிறது - அம்மா வசுந்தராவின் எதிர்ப்பு நிச்சயமாக இருக்கும் என்று தெரிந்தும் தொடர்கிறது. வசுந்தரா எப்படி அவர்களது தொழிற்சாலையில் பணிபுரிந்த லோகநாதனை கல்யாணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்து போனார்களோ அது மாதிரி தனது மகளுக்கும் ஆகிவிடக்கூடாது என்ற சிந்தனை என்ன ஆனது, மகள் சம்யுக்தா - அருண் காதல் என்ன ஆனது என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் வேறு ஒரு விஷயத்தினையும் பார்க்க வேண்டுமே!


அப்படிப் பார்க்க வேண்டிய விஷயம் - வசுந்தராவைப் பிரிந்து சென்ற லோகநாதன் என்ன ஆனார்.  பிரிந்து போனவர் எங்கே எப்படி இருக்கிறார் என்பதெல்லாம் நமக்குத் தெரிய வேண்டுமே - கூடவே அப்பாவைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கும் மகள் சம்யுக்தாவிற்கும் தெரிய வேண்டுமே!  அதைப் பற்றியும் நடுநடுவே சொல்லிக் கொண்டு செல்கிறார் எழுத்தாளர்.  லோகநாதன் தான் செய்யாத தப்பிற்கு, திருடன் பட்டம் பெற்றபிறகு அங்கே இருக்கப் பிடிக்காமல் போட்டிருந்த உடையுடன் சென்று பட்ட கஷ்டங்கள், தில்லி, பம்பாய் என பல இடங்களில் வேலை செய்தது, அதே இடத்தில் இரண்டாவது மலர் என்ற தலைப்பிற்கேற்ப, இரண்டாவதாக தாரா எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு கார்த்திக் எனும் மகன் பிறப்பது என்றெல்லாம் கதையை நகர்த்திச் செல்கிறார்.  பம்பாயில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு கட்டத்தில் சென்னை திரும்ப வேண்டியிருக்கிறது. ஆனால் லோகநாதன் - முழுப்பெயர் லோகநாத பூபதி, முதல் பெயரை முற்றிலும் மறந்(மறைத்)து பூபதி என்கிற பெயரில் தான் வாழ்க்கை நடத்துகிறார்.  அது தவிர பூபதி தனது இரண்டாவது மனைவியான தாராவிடம் கூட தனது முந்தைய வாழ்க்கை குறித்து எதுவும் சொல்லிக் கொண்டதேயில்லை என்பது கொஞ்சம் உறுத்தத்தான் செய்கிறது. 


பூபதி - தாரா மற்றும் கார்த்திக் சென்னை வந்து சேர்கிறார்கள்.   அதன் பிறகு நடப்பதென்ன, பூபதி தனது முதல் மனைவியான வசுந்தராவினைச் சந்தித்தாரா, மகள் சம்யுக்தா அவரைத் தேடிக் கொண்டிருந்தாளே, அது நடந்ததா, சம்யுக்தா - அருண் திருமணம் நடந்ததா, என்பதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டு வருகிறார். கதையில் பிரதான பாத்திரங்களாக இவர்கள் இருந்தாலும், வேறு சில கதாபாத்திரங்களும் அதிகம் வருகிறார்கள் - உதாரணத்திற்கு வசுந்தரா வீட்டு சமையல்காரர் குப்புசாமி, வீட்டு வேலை செய்யும் ரத்னா, மேனேஜர், அருணின் அம்மா, பூபதி - தாரா வசிக்கும் வீட்டின் உரிமையாளர் என சில கதாபாத்திரங்களும் நிறைய வந்து போகிறார்கள்.  தேவையில்லாமல் இரண்டு கதாபாத்திரங்கள் - அருணின் உறவினர்கள் என வரும் இரண்டு கதாபாத்திரங்கள் எதற்கு என்கிற கேள்வி எனக்குள் வந்தது என்பதையும் சொல்லி விடுகிறேன். 


வசுந்தராவிற்கு லோகநாத பூபதியின் இரண்டாவது திருமணம் குறித்து தெரிந்ததா? தெரிந்த பிறகு என்ன குழப்பங்கள் ஏற்பட்டது போன்ற விஷயங்களையும், அருண் - சம்யுக்தா காதல் திருமணத்தில் முடிந்ததா என்பதையும் இந்த இரண்டாவது மலர் எனும் நூலை வாங்கி படித்துப் பாருங்களேன்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 ஜனவரி 2026


4 கருத்துகள்:

  1. லோகநாதனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியவாவது புத்தகம் படிக்கலாம் என்று டவுன்லோட் செய்ய போனேன்.  கடைசி வினாடியில் ஃபெயிலாகி விட்டது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் முயற்சித்து தரவிறக்கம் செய்து படிக்கலாம் ஶ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. லக்ஷ்மியின் இக்கதையை முன்பு எப்போதோ வாசித்த நினைவு வருகிறது. அவருடைய கதைகள் அதிகம் வாசித்ததில்லைதான். ஆனால் இக்கதை.

    வாசகம் புன்னகைக்க வைத்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....