செவ்வாய், 6 ஜனவரி, 2026

இரண்டு நாட்கள் - எட்டு ஆலயங்கள் - பிரபலத்துடன் ஒரு உலா - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஆசை முகம் மறந்தாயோ? பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


பொதுவாக ஆலயங்களுக்குச் செல்லும் போது நின்று நிதானித்து, ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு சிற்பமாகப் பார்த்து, அவற்றின் நுணுக்கங்களை ரசித்து, படம் எடுத்து என முழுமையாகப் பார்ப்பதில் தான் அதிக ஆர்வம் எனக்கு இருக்கும்.  மூலவர் விக்ரகத்தின் அருகே நிறைய நேரம் இருக்க எப்படியும் விடமாட்டார்கள் - அதுவும் திருவரங்கம் போன்ற ஆலயங்களில் மூலவர் அருகே இருக்க விடும் நேரம் நொடிகளில் தான்! மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு நிமிடங்கள் தான் இருக்க முடியும்.  ஆனால் வெளியே ஆலயம் திறந்திருக்கும் வரை இருக்க முடியும் என்பதாலேயே வெளி இடங்களில் தான் நான் அதிகம் இருக்க ஆசைப்படுவேன். ஆனால் ஒரு சில சமயங்களில் இப்படியான ஆலயங்களில் பிரதான மூலவர் அருகே நின்று நிதானித்து தரிசிக்க வாய்ப்பு கிடைப்பதுண்டு.  அப்படி சமீபத்தில், சென்ற வருடத்தின் கடைசி நாட்களில்  எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  


இரண்டு நாட்களில் எட்டு ஆலயங்களில் சிறப்பான தரிசனம் கிடைத்தால் கசக்குமா என்ன?  திருவானைக்கா, திருவரங்கம், மாணிக்க விநாயகர், தாயுமானவர், உச்சிப்பிள்ளையார், தாராசுரம், ஸ்வாமிமலை மற்றும் கங்கைகொண்டசோழபுரம் ஆகிய ஆலயங்களில் மிகச் சிறப்பாக தரிசனம் செய்ய முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.  அது ஒரு புறம் இருந்தாலும், முதன் முறையாகச் செல்லும் தாராசுரம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆலயங்களில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள முடியாததால் மனதில் ஒரு வருத்தமும் உண்டு எனக்கு.  பல வருடங்களாகச் சென்று வர வேண்டும் என்று நினைத்திருந்த ஆலயங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம்.  அருகே சென்று பார்க்க முடிந்தாலும், சிற்பங்களை ரசித்துப் பார்க்கவும், படங்கள் எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை என்பதில் ஒரு வருத்தம் உண்டு.  விரைவில் இந்த இரண்டு இடங்களுக்கும் சென்று வரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அப்படிச் சென்றால் விரிவான பதிவுகளாக எழுதி, படங்களும் சேர்க்க வேண்டும்!


தில்லியிலிருந்து ஒரு பிரபலம் வருகிறார் - அவருடன் அலுவலகம் சார்பாக நீங்களும் கூடவே பயணிக்க வேண்டும் என்ற உத்தரவு வந்ததும் அதற்கான ஏற்பாடுகளில் பங்கு கொண்டேன்.  இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தங்குமிட ஏற்பாடு சம்பந்தமாக ஸ்வாமிமலைக்கும் சென்று வந்தேன்.  விடுமுறை என்றெல்லாம் இல்லாமல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வேலை இருந்தது.  ஓட்டமோ ஓட்டமாக இருந்தாலும் இந்த ஆலயங்களில் சென்று சிறப்பான தரிசனம் பெற முடிந்ததில் ஒரு விதத்தில் மகிழ்ச்சியே.  ஒவ்வொரு ஆலயங்களிலும் அந்த ஆலயம் குறித்த விளக்கங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.  சிற்பங்களில் இருக்கும் நுணுக்கமான செய்திகள், அதன் வேலைப்பாடு குறித்த தகவல்கள், சிற்பங்கள் சொல்ல வரும் செய்தி என அனைத்தையும் விளக்கமாகச் சொல்லியதால் நமது முன்னோர்களின் திறமை மீது வந்த வியப்பினை தவிர்க்க முடியவில்லை. 




படங்கள் இணையத்திலிருந்து....

குறிப்பாக, தாராசுரம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் தலங்களில் இருக்கும் சிறப்பான சிற்பங்கள், அதன் பிரம்மாண்டம் குறித்த சிந்தனைகளிலிருந்து இன்னும் என்னால் மீளவே முடியவில்லை என்பது தான் உண்மை.  எத்தனை பிரம்மாண்டமான நந்தி தேவன் சிலை.  அதைப் போலவே பிரம்மாண்டமான சிவன் சிலை.  ஆலயங்களில் இருக்கும் சிற்பங்கள் பிரமிக்க வைத்தன.  அங்கே பார்த்த மிகச் சிறிய சிற்பங்கள் - Miniature வகைகளைச் சார்ந்தவையாக இருந்தாலும் அவற்றின் நுணுக்கம் - ஆஹா என்ன சொல்ல?  ஒரு பெண்மணி பிரசவிப்பதைக் காட்சியாகச் சொல்லும் சிற்பம், மூன்று பெண்களின் நடன முத்திரைகளைச் சொல்லும் சிற்பம் என பார்க்கும்போதே எத்தனை நுணுக்கமாகச் செதுக்கி இருக்கிறார்கள் அந்தக் காலச் சிற்பிகள் என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை. 


ஆலயங்களில் இருந்த கல்வெட்டுகள், அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்கள் என அனைத்தையும் படித்துக் காட்டி விவரமாகச் சொன்ன Archaeological Survey of India ஊழியர்கள்…  அவர்கள் சொன்ன விஷயங்களை கேட்கும்போதே என்னவெல்லாம் செய்து சென்றிருக்கிறார்கள் என்று எண்ணாமல் இருக்கமுடியவில்லை.  அப்போதைக்கு மட்டுமல்லாது வரப்போகும் யுகங்களுக்கும் சேர்த்து அப்போதே யோசித்திருக்கிறார்களே அந்நாளில் ஆட்சி செய்த அரசர்களும் அவர்களது அமைச்சர்களும் என்ற வியப்பு வராமல் இல்லை.  அரசர்கள், அமைச்சர்கள் அவர்களது குடும்பத்தினர் ஆலயங்களுக்காக்ச் செய்த நிவந்தங்கள் குறித்த கல்வெட்டுகளை படித்துக் காண்பித்தபோது,  இன்றைக்கும் அந்த நபர்களை நினைத்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.  எத்தனை சீரிய சிந்தனையுடன் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது Goosebumps உண்டாகிறது.  


பிரபலங்களுடனான பயணங்களில் சில சிக்கல்களும் உண்டு என்றாலும், எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அவரது பயணத்தினை முடித்து வைத்ததில் மனதில் நிம்மதி.  பொதுவாகவே பிரபலங்கள் வரும்போது மிஸ்டர் பொதுஜனத்திற்கு உண்டாகும் தொல்லைகள் குறித்து எல்லோருக்கும் சிந்தனைகள் வருவதுண்டு.  ஆனால் சில சமயங்களில் தவிர்க்க முடியாதவையாகவே இந்த செயல்கள் இருக்கின்றன.  பிரபலமாக இருப்பதில் உள்ள சிக்கல்களையும் அருகில் இருந்து பார்க்கும்போது, “என்னடா வாழ்க்கை இது! நிம்மதியாக ஊரில் உலா வரமுடியாமல், நினைத்த இடத்திற்குச் செல்ல முடியாமல் என்ன வாழ்க்கை இது?” என்று தோன்றாமல் இல்லை.  அதிலும் பொதுமக்களை விட, பத்திரிகையாளர்கள் அவர்களிடம் எதிர்பார்க்கும் பதில்கள், அதற்காக கேட்கும் கேள்விகள், அவற்றை சாதுரியமாகச் சமாளிக்க வேண்டிய சூழல் என்றெல்லாம் பார்க்கும்போது கொஞ்சம் பிரபலங்கள் மீது பரிதாபமும் வரத்தான் செய்கிறது. 


அதெல்லாம் சரி, பிரபலம், பிரபலம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்களே? இதுவரை அந்தப் பிரபலம் யாரென்றே சொல்லவில்லையே என்று நீங்கள் நினைக்கலாம்!  பதிவின் இறுதிக்கு வந்தாயிற்றே… இப்போதாவது சொல்லி விடுவது தானே நல்லது.  சொல்கிறேன்.  இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்கள் தான் அந்தப் பிரபலம். 



இரண்டு நாட்கள் அவருடன் பயணித்து, மேலே சொன்னபடி சிறப்பான ஆலய தரிசனங்கள் எனக்கும் கிடைக்க வழி கிடைத்தது. இந்தச் சமயத்தில் எடுக்கப்பட்ட படங்கள், காணொளிகள் என நிறையவே முகநூலிலும், இன்ஸ்டாவிலும், யூட்யூபிலும் இருக்கின்றன.  அந்த படங்கள், காணொளிகளில் நானும் இருப்பதை உங்களால் பார்க்கமுடியும்!  காணொளி ஒன்று மட்டும் உங்கள் பார்வைக்கு - கீழேயுள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


தமிழகம் வந்த ஜெய்சங்கர் சொந்த ஊரில் சாமி தரிசனம் #dinamalar #jaishankar #Trichy #Srirangam - YouTube


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 ஜனவரி 2026


9 கருத்துகள்:

  1. முதலில் இருந்த எண்ணம் மாற்றி பதிவை நாள் மாற்றி வெளியிட்டீர்களோ...   அல்லது அந்தப் பகுதியை அபப்டியே காபி செய்து பதிவின் பெயர் மட்டும் மாற்ற மறந்தீர்களோ...  புத்தக விமர்சனம் பதிவுக்கு வந்தவர்களுக்கு நன்றி சொல்வதற்கு பதில், படங்களுக்கான வரிகள் பதிவுக்கு நன்றி என்று இருக்கிறதே...!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா..  ஜெய்சங்கர் அவர்களளுடன் பயணித்தீர்களா..   என்ன ஒரு கொடுப்பினை..  அவருடன் என்ன பேசினீர்கள் என்று சொல்வீர்களா பதிவுகளில்?  ஏற்கனவே டெல்லியில் பரிச்சயம் உண்டா?  சிறந்த மனிதர்.  புத்திசாலி, தேசபக்தர்.

    பதிலளிநீக்கு
  3. குருங்காணொளி பார்த்தேன்.  நீங்கள் நன்றாக பின்னால் தள்ளியே வருகிறீர்களே...   ப்ரோட்டாகால்?  உங்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடினாரா?  

    அந்த பட்டரா, குருக்களா...   அவர் சந்தர்ப்பத்தை உபயோகித்துக்கொண்டு மாஞ்சு மாஞ்சு அவருக்கு விளக்கும்போது 'அவருக்குத் தெரியாததையா இவர் சொல்லி விடப் போகிறார்' என்றும் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  4. தாராசுரமும் சரி, கங்கை கொண்ட சோழபுரமும் சரி, ஒவ்வொன்றுக்கும் ஓரிரு நாட்கள் செலவு செய்து இன்ச் இன்ச்சாய் பார்க்க / ரசிக்க வேண்டிய இடங்கள்!

    பதிலளிநீக்கு
  5. சின்ன கா ணொளி பார்த்தேன் வெங்கட்ஜி.

    ப்ரோட்டகால் தெரிகிறது.

    ரொம்ப யதார்த்தமான வாசகம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆஹா நம் வெளியுறவுத்துறை அமைச்சரோடு பயணம்!! கோவில் பயணங்கள்! சூப்பர்ஜி!

    கங்கை கொண்ட சோழபுரம் தாராசுரம் எல்லாம் நின்று நிதானமாகப் பார்க்க வேண்டியவை நீங்கள் சொல்லியிருப்பது போல்...விரைவில் உங்கள் தனிப்பட்ட பயணம் அமையட்டும் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உங்களை விஐபி லவுஞ்சில் பூங்கொத்துடன் பார்க்கையிலேயே தோன்றியது உ.து. அமைச்சருக்கோ என. ஆனால் வெ.து. அமைச்சர் என்பதைப் பதிவைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். வாழ்த்துகளும். மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருகில் இருந்தும் கங்கை கொண்ட சோழபுரத்துக்குப் போகவே எங்களுக்கு வாய்ப்பு அமையவில்லை. இனிமேல் எல்லாம் என்னால் எங்குமே போக முடியாது. பயணமே சிரமமான ஒன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. விஜயலஷ்மி சென்னை6 ஜனவரி, 2026 அன்று 4:24 PM

    அருமை ஜெய்சங்கர் சார் உடனா பயணம் செய்திர்கள் அவருடன் பேசினீர்களா கங்கை கொண்ட சோழபுரம் அழகான கோவில் நான் மூன்று முறை சென்றுள்ளேன்

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....