வியாழன், 29 ஜனவரி, 2026

முகநூல் இற்றைகள் - பூபதித் திருநாள் - கருட வாகனம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட பூக்களும், இயற்கையின் கொடையும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


பூபதித் திருநாள் - 25 ஜனவரி 2026:


தைத் தேருக்கு (31.01.2026) இன்னும் ஆறு நாட்கள் (முகநூலில் எழுதியபோது) தான் இருக்கிறது...... இன்றைய மாலை "புறப்பாடு பார்த்துட்டு வாங்களேன்" என்று இல்லாள் சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் புறப்பட்டேன். உத்திர வீதிகளில் தான் இந்தத் திருவிழா புறப்பாடெல்லாம். நாம் அரங்கனின் ஆலயத்திற்குச் செல்ல முடியாவிட்டாலும் நம்மைத் தேடி அவனே வீதிகளில் எழுந்தருளி நமக்கு காட்சி தரும் கொடையாளன் அவன்...... சரி, இல்லாள் சொன்னால் அதற்கு மேல் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது, புறப்பட்டு விட்டேன் என் பச்சைக் கிளி வாகனத்தில்...... 






வாகனத்தை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தெற்கு வாசலின்  "ரங்கா ரங்கா" கோபுரம் அருகே சென்று காத்திருந்தேன். இன்றைக்கு மாலை, யாளி வாகனத்தில் புறப்பாடு. பார்க்கலாம் என்று காத்திருந்தபோது பக்தர்களின் கூட்டம், தனி வரிசையில் அழைத்துச் செல்லும் நபர்கள், விதம் விதமாய் மொழிகளில் காதில் கேட்ட சம்பாஷனைகள், அவர்களிடம் அவர்கள் மொழியிலேயே பேசும் உள்ளூர் வியாபாரிகள், தயாராகிக் கொண்டிருக்கும் தேர் என ஒவ்வொன்றாய் பார்த்துக் கொண்டிருந்தேன். தெரிந்த முகங்கள் கண்ணில் பட, அவர்களை நோக்கி ஒரு புன்னகை, சிறு விசாரிப்புகள் என நேரம் கடந்தது.



நன்றி: ஸ்ரீரங்க விலாசம் முகநூல் பக்கம்...


மழையாக வரட்டுமா என்று மேகக் கூட்டம் அரங்கனைக் கேட்டது, அவனின் அடியவர்களுக்கும் கேட்டுவிட்டது போலும்...... "மழையா? பெருமாளுக்கு ஆகாதே...... இன்னிக்கு வீதி புறப்பாடு வேண்டாம்... ஆலயத்திற்குள் மட்டும் புறப்பாடு போதும்" என்று முடிவெடுக்க, வெளியே காத்திருந்தவர்கள் அரங்கனுக்கு பதில் அரங்கனின் அடியவர்கள் புறப்பாடு கண்டு திரும்பினார்கள்... அரங்கனைக் கண்டவர்களை நான் கண்டதில் நிம்மதி பெற்றேன்...

  

இன்றைக்கு நமக்கு காட்சி தர அரங்கனுக்கு மனதில்லை...  "மனக்கண்ணில் மட்டும் கண்டு ரசி..." என்று சொன்னதாய் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன்... முடிந்தால் நாளை மாலை கருட வாகனத்தில் புறப்பாடு காண வேண்டும் - அவன் அருள் இருந்தால்...


*******


கருட வாகனத்தில் பெருமாள் - 26 ஜனவரி 2026:


காலையில் குடியரசு தின கொண்டாட்டங்கள் முடித்து விஸ்ராந்தியாக வீட்டில் இருந்த பிறகு மாலை இல்லாள் நினைவூட்டினார்.  இன்றைக்கு பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு - வீரேஸ்வரத்திலிருந்து தான் புறப்பாடு.  போய் பார்த்துட்டு வரலாம். தயாராகி வாகனத்தில் புறப்பட்டோம்.  வீரேஸ்வரம் பகுதியில் எங்கிருந்து புறப்பாடு என்பது தெரியாது என்பதால் அந்தப் பகுதி வரை ஒரு உலா.  அங்கே அப்படியான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்பதால் ஆலயம் நோக்கி வண்டியைத் திருப்பினேன்.  நேற்று போலவே மழை காரணமாக வீரேஸ்வரத்திலிருந்து புறப்பாடு இல்லை என்று தெரிந்து கொண்டோம்.  அதனால் இல்லாளை சித்திரை வீதியில் இறக்கி விட்டு, வண்டியை ஓரிடத்தில் விட்டு வருகிறேன் என்று சென்றேன்.  இடம் தேட வேண்டியிருந்தது.  நான் ஒரு புறம், இல்லாள் ஒரு புறம் என தனித்தனியாக பிரிந்தோம்.  





நான் தெற்கு உத்திர வீதியும், மேற்கு உத்திர வீதியும் சந்திக்கும் இடத்தில் நின்று நிதானமாக தரிசிக்க இல்லாள் வேறு பகுதியில் நின்று தரிசனம் செய்தாராம்.  இருந்தாலும் இருவருக்கும் திவ்யமான தரிசனம்.  யானைகள் முதலில் செல்ல, பின்னர் குதிரைகள், கோஷ்டி, தங்கக் கருட வாகனத்தில் பெருமாள் என வரிசையாக திருவீதி உலா.  மக்கள் காட்டாற்று வெள்ளமாக பெருமாளுடன் வந்து கொண்டிருந்தார்கள். எங்கே பார்த்தாலும் மனிதத் தலைகள்.  தீவட்டிகளின் ஒளியில் பெருமாளை நன்கு பார்க்க முடிந்தது.  கைகளை மேலே தூக்கியபிடி பிடித்து அலைபேசியில் சில காணொளிகளை எடுத்துக் கொண்டே மனதில் அவனை நினைத்து பிரார்த்தனை - எல்லோரையும் நல்லபடியாக வைத்துக்கொள்ளப்பா என்கிற பொதுப் பிரார்த்தனை.  

 







மனைவி காத்திருந்த இடத்திலிருந்து என்னை அழைக்க முடியாத விதமாக அவரது அலைபேசியும் என்னிடத்தில் இருந்தது.  அவர் இருந்த இடத்தில் பார்த்த, தெரிந்த நபரிடமிருந்து அலைபேசியை வாங்கி என்னை அழைத்தார்.  ஆனால் பெருமாளைப் பார்த்துவிட்டு திரும்பும் மக்களின் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டேன்.  அப்படி ஒரு கூட்டம்.  கோபுரங்கள் வழி வெளியே செல்லும் இடத்தில் தெருவெங்கும் மக்கள் கூட்டம்.  ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு இருந்தார்கள்.  போவோரும் வருவோரும் அவரவர் பக்கம் தள்ளிக்கொண்டு செல்ல முயற்சிக்க ஒரே களேபரம்.  அந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கொண்டு உத்திர வீதியிலிருந்து சித்திரை வீதிக்கு வந்தால் வாகனங்களின் நெரிசல்.  அனைத்திலும் சிக்கிக் கொண்டு, இல்லாள் இருந்த இடத்தினை அடையவே அரை மணிக்கும் மேலானது!  


அங்கேயிருந்து என் வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்குச் சென்றால், அந்த கோபுரம் பக்கமும் வாகன நெரிசலும் மக்கள் கூட்டமும்.  சரியான விதத்தில் வாகனங்களையும் மக்களையும் நெறிப்படுத்தாமல் காவல் துறை அங்கங்கே வாகனத்திற்கான தடைகளை அமைத்து ஓரமாக நின்று கொண்டது.  வாகன ஓட்டிகளும் பெருமாள் வரும் வீதி வரை, அவரது காலடி வரை வண்டியில் தான் வருவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  பெருமாளைப் பார்த்து விட்டு வந்தாலும், ஒரு நான்கு சக்கர வண்டியிலிருந்த பெண்மணியும், அவ்வாகனத்தின் பக்கத்தில் இருந்த இரு சக்கர வாகனத்திலிருந்த நபரும் அப்படி ஒரு சண்டை.  அதிலும் வெளிப்பட்ட வார்த்தைகள் வேதனை தந்தவை.  அப்போது தான் இறைவன் சன்னதிலிருந்து, இறைவனை தரிசித்து வந்திருந்தாலும், தான் எனும் அகம்பாவம் நீங்காமல் பேசிய வார்த்தைகள்.  இது போன்றவர்கள் குறித்து  எதுவுமே  பேசி பயனில்லை. 


ஒரு வழியாக மக்கள் வெள்ளத்திலும், வாகன நெரிசலிலும் மாட்டிக் கொண்டு, அதிலிருந்து விடுபட்டு இல்லாளையும் அழைத்துக் கொண்டு திங்கள் கிழமை சந்தையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பிய போது அப்பாடா என்றிருந்தது.  பெருமாளை இங்கேயிருந்தே மனதளவில் தரிசித்துக் கொண்டால் போதும் என்று தோன்றிவிட்டது என்றார் இல்லத்தரசி!  அதான் நல்லது என எனக்கும் தோன்றியது.  பெருமாள் புறப்பாடில் எடுத்த சில காணொளிகளை உங்கள் வசதிக்காக பதிவில் இணைத்திருக்கிறேன். 


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

29 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....