அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட புத்தாண்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
‘இதுவும் கடந்து போகும்’ என்ற இந்த வாசகம் துன்பத்தில் இருப்பவரை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரும் என்பதும் வாழ்வில் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பவரை மனதளவில் பக்குவப்படுத்தும்! என்பதும் எத்தனை உண்மை! இன்றைய நாளின் காலைப்பொழுதில் வானொலியில் கேட்ட செய்தியாக இருந்தது!
நேரா வாங்க! நேரத்துக்கு வாங்க!
இன்றைய நாட்களில் துணிக்கடைகளுக்கும் நகைக்கடைகளுக்கும் நிகராக மருத்துவமனைகளுக்கும் விளம்பரங்கள் வரத் துவங்கிவிட்டன! மற்றைய கடைகளில் தருவதைப் போல இதிலும் விசேஷ நாட்களில் ஆஃபர்களும், பேக்கேஜ்களும், டிஸ்கவுண்ட்டுகளும் கூட உண்டு! ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது அல்லவா! நம் வாழ்க்கை முறையும் அப்படிப்பட்டதாக இருக்கிறதே…:( என்ன செய்வது???
சரி! விஷயத்திற்கு வருகிறேன்! திருச்சியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் விளம்பரம் அது! அன்றாடம் வானொலி வழியே கேட்டது! மனதைத் தொட்ட விளம்பரம்!
‘புதுப் படம் ஒண்ணு ரிலீஸானால் நாலு மணிக்கு எழுந்து நண்பர்களுடன் பைக் எடுத்துட்டு போய், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் பண்ணி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தோட விசில் அடிச்சு பார்ப்பீங்க இல்லையா!!
ஹலோ! அதே அக்கறைய உங்க ஆரோக்கியத்திலும் காண்பிக்கணும்! ஸ்ட்ரோக் வரக்கூடாது! அப்படி வந்துட்டா! வில்லிடமிருந்து புறப்பட்ட அம்பு போல மருத்துவமனைக்கு கூட்டிட்டுப் வரணும்! நேரா வாங்க! நேரத்துக்கு வாங்க! உங்களின் அக்கறையில்…… மருத்துவமனை!’
விளம்பரத்தில் சொல்லியுள்ள விஷயம் நமக்கான விழிப்புணர்வு! பொதுவாக திரைப்படமாக உருவாக்குவதை விட சவாலான விஷயம் விளம்பரங்களை உருவாக்குவது என்று சொல்லணும்! அதுவும் ஒலி வடிவில் ஏற்ற, இறக்கங்களுடன், கற்பனைவளம் சேர்த்து தயாரிக்கப்பட்ட இதுபோன்ற விளம்பரங்கள் மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடும்! அவை சமூகத்துக்கான விழிப்புணர்வாக இருந்தால் இன்னும் சிறப்பு!
வராஹ புராணம்!
திங்கள் முதல் அடுத்த நிலைக்கான வகுப்புகளும் துவங்கிவிட்டது! என்னுடைய ஆசிரியரின் பெயர் திருமதி ஆர்த்தி ஆனந்த்! சென்னையிலிருந்து எங்களுக்கு சிறப்பான முறையில் கற்றுக் கொடுக்கிறார்!
முதல் பாடமாக பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான வராஹ புராணத்திலிருந்து பகவத்கீதையின் சிறப்பைப் பற்றி பகவானுக்கும் பூமாதேவிக்கும் இடையே நடைபெறும் உரையாடலாக ஸ்லோக வடிவில் தரப்பட்டுள்ளது!
பகவத்கீதையில் என்ன சொல்லப்பட்டுள்ளது? எதற்காக நாம் வாசிக்க வேண்டும்? என்று வகுப்பில் ஆசிரியர் எங்களிடம் கேள்வி கேட்ட போது, ‘நமக்கான தர்மங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளதாக சொன்னேன்! உண்மை அது தானே! பகவான் சொல்லியுள்ள தர்மங்களை பின்பற்றி நாம் தர்மவழியில் சென்றோம் என்றால் எளிதில் முக்தியை அடையலாம்!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
8 ஜனவரி 2026


கொஞ்சம் மாற்றிச் சொல்லவா?
பதிலளிநீக்குஎப்போதும்
சகித்துக் கொண்டே
கடக்க முடிவதில்லை
சிலசமயம்
ரசித்துக் கொண்டும்
கடக்க வேண்டி உள்ளது!!
வாழ்க்கை!
ஹா.. ஹா.. ஹா...
மருத்துவ விளம்பரத்தை நான் விழிப்புணர்வாகப் பார்க்கவில்லை. கார்ப்பரேட்காரர்களின் விளம்பர வலையாகத்தான் பார்க்கிறேன்!!
பதிலளிநீக்குஉங்கள் சம்ஸ்கிருத வகுப்புச் சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு"வராஹ நதிக்கரையோரம்..." என்று பாடிக் கொண்டே பின்னூட்டமிட்டு, இன்று விடைபெறுகிறேன்!!!
வாழ்வில் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருப்பவரை மனதளவில் பக்குவப்படுத்தும்! //
பதிலளிநீக்குஅவர்களாகவே மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டு இருந்தால் மட்டுமே ...இல்லை என்றால் அப்படி இல்லை என்று தோன்றுகிறது, ஆதி. அவர்களுக்கு மறுப்பக்க நிகழ்வுகள் பாதிக்காது...அல்லது கவனிக்க மாட்டார்கள். அல்லது கேட்டாலும் இப்படி எல்லாம் உண்டா என்றும் சொல்வதைப் பார்க்கலாம் தன்னைச் சுற்றி இவ்வளவு நடக்கிறதே என்ற புரிதல் இருக்காமலும் போகலாம்.
கீதா
மருத்துவமனைகள் ஆஃபர் ஆச்சரியப்படுத்தவில்லை அதிர்ச்சியும் இல்லை இப்பலாம். பழகிவிட்டது!!!
பதிலளிநீக்குவிளம்பர விஷயம் நல்ல விழிப்புணர்வு இப்போது சிறு வயதிலேயே வந்துவிடுகிறது என்பதால் இது நல்ல விழிப்புணர்வு விளம்பரம்.
கீதா
சான்றிதழ் கிடைத்து அடுத்த லெவலுக்குப் போவதற்கு மனமார்ந்த பாராட்டுகள் வாழ்த்துகள் ஆதி!
பதிலளிநீக்குகீதா