சனி, 17 ஜனவரி, 2026

காஃபி வித் கிட்டு - 222 - யாருமில்லை… - மொழி அவசியமல்ல - பனிமழை - சிநேகம் - என்ன செய்வீர்கள்? - Celebration of Hope - பத்மநாபன் அண்ணாச்சி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் நிழற்படமும் எண்ணங்களும் : யாருமில்லை…



சமீபத்தில் ஒரு மாலை நேர நடையில் எடுத்த படம் இது.  சாலையோரத்தில் ஒரு முருங்கை மரம். அதில் காய்த்து, அதிலேயே காய்ந்து போய்க்கொண்டிருக்கும் முருங்கைக்காய்கள்….  பார்த்த உடன் தோன்றியது… இப்படித்தான் சில முதியவர்களும் யாருடைய கவனிப்பும் இன்றி இருக்கிறார்கள் என…  பல வீடுகளில் இப்படித்தானே இன்றைய நிலை. இந்தப் படம் பார்த்த போது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்ன? சொல்லுங்களேன்.


******



இந்த வாரத்தின் ரசித்த இசை :  மொழி அவசியமல்ல!


சமீபத்தில் இன்ஸ்டாவில் பார்த்த ஒரு காணொளி… என்ன மொழியில் பாடுகிறார் என்பது அவசியமற்ற விஷயமாக இருந்தது.  என்ன ஒரு துள்ளல் இந்த இசையில். பாடுபவர், இசை பக்கவாத்தியங்கள் என அனைவருடைய ஈடுபாடு, அவர்களின் முகபாவனைகள் என பார்க்கும் அனைத்தும் பிடித்தது. கேட்கவும் நன்றாகவே இருந்தது. கேட்டுப் பாருங்களேன். யூட்யூபிலும் இருக்கிறது.  அந்த காணொளி கீழே!


******

 

பழைய நினைப்புடா பேராண்டி : எங்கும் பனிமழை பொழிகிறது


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - எங்கும் பனிமழை பொழிகிறது - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


பொதுவாக காஷ்மீர் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்றாலும் ஜம்மு பகுதிகளில் அத்தனை பனிப்பொழிவு இருப்பதில்லை. ஜம்முவின் கட்ரா மாநிலத்தில் இருக்கும் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலைப்பகுதியில் இந்த நாட்களில் குளிர் அதிகம் இருக்கும் என்றாலும், பெரும்பாலும் பனிப்பொழிவு இருப்பதில்லை. ஆனால் இந்த வருடம் வைஷ்ணவ் தேவி கோவில் இருக்கும் மலையிலும் அத்தனை பனிப்பொழிவு – பனி மூடிய மலைகளைப் பார்க்க முடிகிறது.


சரி எங்கோ ஷிம்லாவிலும், ஜம்முவிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், காஷ்மீரிலும் பனிப்பொழிவு என்றால் தில்லியில் இருக்கும் உனக்கென்ன கவலை – தில்லியிலா பனிப்பொழிவு என்று நீங்கள் கேட்கலாம்….  தலைநகர் தில்லியை நம்பித் தானே நாட்டின் எல்லா மாநிலங்களும் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்! ஆனால் தலைநகர் தில்லி எல்லாவற்றிற்கும் பக்கத்து மாநிலங்களை நம்பித்தானே இருக்கிறது! சொந்தமாய் எதுவுமே கிடையாது! பக்கத்து மாநிலமான ராஜஸ்தானின் பாலைவனங்களில் சூடு அதிகமானால் தில்லி கொதிக்கும்.  பக்கத்து மாநிலங்களில் பனிப்பொழிவு என்றால் இங்கே குளிர் அதிகரித்து விடும்!


இப்போது கூட தலைநகர் தில்லியில் அடிக்கும் குளிர் காற்று உடலை உறைய வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இப்போது அடிக்கும் காற்றினை இங்குள்ளவர்கள் Barfeeli hawa என்று அழைக்கிறார்கள் – ஏதோ தேங்காய் பர்ஃபி என நினைத்துவிடாதீர்கள். ஹிந்தியில் Barf என்றால் ஐஸ்கட்டி! ஐஸ்கட்டி போன்ற காற்று என்பதைத் தான் இப்படி Barfeeli hawa என அழைக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் சொல்வதானால் Icy Wind!  இந்தக் குளிர் காற்று அடிக்கும்போது நம் எலும்புகளை ஊடுருவிச் செல்வது போன்ற ஒரு உணர்வு!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் கவிதை  : சிநேகம்


இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக சொல்வனம் தளத்திலிருந்து வேலாயுத முத்துக்குமார் என்பவர் எழுதிய கவிதை ஒன்று - செல்லங்கள் குறித்த கவிதை!



எங்கள் தெரு நாய்கள்

இப்போது என்னைப் பார்த்து குரைப்பதில்லை.

இந்தத் தெருவில் இந்த வீட்டிற்கு

குடிவந்த புதிதில்

தெருமுனையிலிருந்து வீடுவரை

அவைகள் சதா குரைத்துக் கொண்டே

பின் தொடர்ந்து வரும்.

எனது பிஸ்கட்களை அவைகள் நுகரக்கூட இல்லை.

ஆரம்பத்தில் அந்நியமாய் இருந்த

எனது அலுவலகச் சீருடையின் நிறம்

இப்போது அவைகளால்

அடையாளம் கொள்ளப்பட்டுவிட்டன.

எனது வாசனையை

அவைகள் மோப்பம் கொண்டுவிட்டன.

இன்று வீடு திரும்பலில் தெருவோரக் கூட்டத்தில்

கல்திண்டில் அமர்ந்திருந்த நாய் ஒன்று

என்னைப் பார்த்து முறைத்தது.

பார்த்த மாத்திரத்தில் வாலாட்டிச் சிநேகம் கொள்ள

நாய்களுக்கு சிலகாலம் பிடிக்கும் போலும்.


******


இந்த வாரத்தின் கேள்வி :  என்ன செய்வீர்கள்?


உங்கள் வீட்டில் ஒரு கடிகாரம் இருக்கிறது. பொதுவாக கடிகாரங்களில் ஒரே ஒரு பேட்டரி போடுவது தானே வழக்கம்.  சில கடிகாரங்களில் இரண்டு அல்லது மூன்று பேட்டரிகள் கூட இருப்பது வழக்கம்.  அப்படியான கடிகாரங்களில் அல்லது டார்ச் போன்றவை பேட்டரி தீர்ந்து போகும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?  மூன்று பேட்டரிகளையும் மாற்றுவீர்களா அல்லது ஒரே ஒரு பேட்டரியை மட்டும் மாற்றினால் வேலை செய்யுமா என்று பார்ப்பீர்களா?  ஒரு பேட்டரி மட்டுமே மாற்றினாலும் சில காலத்திற்கு வேலை செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?  அப்படி எடுக்கப்பட்ட ஒற்றை பேட்டரியை வேறு ஏதேனும் சாதனங்களில் பயன்படுத்துவீர்களா?  சொல்லுங்களேன்! சமீபத்தில் ஒரு இடத்தில் அப்படிச் செய்ததை பார்க்க நேர்ந்தது.  எனக்கெல்லாம் இப்படிச் செய்து பழக்கமில்லை! பேட்டரி மாற்றுவது தான் ஒரே வழி. பழைய பேட்டரியை தூர எறிவது தான் எனது வழக்கம்! 


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் - Celebration of Hope :


இரண்டொரு நாட்கள் முன்னர் தான் பஞ்சாப் பகுதிகளில் கொண்டாடப்படும் லோரி(டி) பண்டிகை குறித்து இங்கே சில செய்திகள் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அந்தப் பண்டிகை சமயத்தில் சரியாக வெளியிடப்பட்டிருக்கும் பார்லே ஜி பிஸ்கெட் விளம்பரம் ஒன்று - மிகச் சிறப்பாக இருக்கிறது. பாருங்களேன்.  பஞ்சாபி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கிறது என்பதால் மொழி தெரியாதவர்களுக்கும் கவலை இல்லை.

******


இந்த வாரத்தின் எண்ணங்கள் - பத்மநாபன் அண்ணாச்சி :


முன்பெல்லாம் இங்கே சில நண்பர்களின் பதிவுகளை வாங்கி வெளியிடுவது வழக்கமாக இருந்தது.  குறிப்பாக பத்மநாபன் அண்ணாச்சியிடமிருந்து அவ்வப்போது பதிவுகள் வாங்கி வெளியிட்டு இருக்கிறேன்.  ஆனால் சமீப காலமாக அவர் ஒன்றுமே எழுதித் தருவதில்லை.  அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் அவரிடம் பதிவுகள் எழுதி அனுப்புங்கள் என்றால் ஏதேதோ சொல்லி சமாளித்து விடுகிறார்.  பணியிலிருந்து ஓய்வு பெற்று தென் தமிழகத்தில் வந்து சேர்ந்த பிறகு எழுதுவதற்கு விஷயங்கள் நிறையவே இருந்தாலும் ஏனோ எழுத முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.  போதாதற்கு வீட்டில் இப்போது இரண்டு பூனைகள் வேறு!  அதனுடன் செல்விடும் நேரம் குறித்து அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் விஷயங்களையேனும் எழுதி அனுப்புங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் - ஆனால் எழுத மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் - என்ன செய்ய?  அவரது பதிவுகளுக்கு எனது பக்கத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்தும் எழுதி அனுப்பவதில்லை! ம்ம்ம்ம்.  

  

******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

17 ஜனவரி 2026



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....