அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் ரசித்த கதை : மௌனத்தின் சுமை
சொல்வனம் தளத்தில் படித்த ஒரு சிறுகதை - மௌனத்தின் சுமை. வட்டார வழக்கில் எழுதப்பட்ட ஒரு கதை. மகளின் இழப்பும் அதன் பின்னான வேதனைகளும் என அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் ஸ்ரீரஞ்சனி. கதையிலிருந்து சில வரிகள் உங்களுக்காக கீழே…
அங்கிருந்து விலகுவதைத் தவிர, வேறெந்த வழியும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பலதையும் பத்தையும் ஓயாமல் கதைத்துக்கொண்டிருக்கும் நிலா, வீட்டைக் கலகலப்பாக வைத்திருக்கும் நிலா எதுவும் பேசாமல் ஒதுங்கிப் போயிருந்தது என் மனதைப் பிசைந்தது. கண்களை நனைத்தது. நிலைமையை மாற்றமுடியாமலிருக்கும் என் இயலாமை என்னைக் கொன்றது.
தன் வேலைகளில் அவளுக்கு இலேசில் திருப்தி வருவதில்லை. எதையும் மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்படுவாள். ஆனாலும், கடைசி நேரம்வரை தள்ளிப்போட்டுக் கொண்டேயிருப்பாள். என்றாலும்கூட, அவளின் அந்தப் பழக்கம் அவள் பாடசாலையில் இருந்தபோது எந்தப் பிரச்சினையையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. எப்படியோ நிறையப் புள்ளிகளும் பாராட்டுகளும் வாங்கிவிடுவாள். பல்கலைக்கழகத்துக்குப் போனபின் அது எப்படிப் பிரச்சினையானதென்று எனக்கு விளங்கவேயில்லை. இரண்டு, மூன்று assignmentகளைச் செய்து கொடுக்கவில்லை என்பது கிறிஸ்மஸ் லீவுக்காக வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் தெரியவந்திருந்தது.
கடைசியில் மனச்சோர்வுதான் அதற்கெல்லாம் காரணமென்றார் டொக்டர். பிள்ளை எல்லாவற்றிலும் முன்னுக்கு நிற்கிறாள். அவளை அன்பினால் குளிப்பாட்டி, விரும்பியதெல்லாம் செய்துகொடுத்து நாங்கள் வளர்க்கிறோம். அவளுக்கு எப்படி மனச்சோர்வு வந்ததென்று எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. 90 கிமீ தூரத்திலிருக்கும் Mcmaster பல்கலைக்கழகத்துக்கு அவளை அனுப்பியிருக்கக்கூடாது. வீட்டுக்குக் கிட்டவுள்ள பல்கலைக்கழகத்தில், அவள் என் மேற்பார்வையில் படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டுமென மகேன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.
முடிவில், கவுன்சலிங், மருந்துகளென அவளின் வாழ்க்கை நிறைந்துபோனபோது, அவளுக்கிருக்கும் பிரச்சினையை அவளே கையாளவேண்டும். நாங்கள் அதில் தலையிட முடியாதென்றார் உளவியலாளர். என் நிலைமையின் மீதும், என் கையாலாகத்தனத்தின் மீதும் எனக்கு வெறுப்பாக இருந்தது.
கதை எனக்குள்ளும் தாக்கத்தினை உண்டாக்கியிருந்தது. இன்றைய இளைஞர்கள் பலரும் இப்படித்தான் இருக்கிறார்கள். குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இருக்கும் இடைவெளி மிகவும் அதிகமாகிவிட்டதோ என்கிற எண்ணமும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கிறது. தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் அதிகம் இருக்கிறதோ என்றும் யோசிக்க வைக்கிறது. சிறுகதையை படித்து, அது உங்களுக்கு ஏற்படுத்திய எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
******
இந்த வாரத்தின் ரசித்த இசை : Khusugtun
இந்த வாரத்தின் ரசித்த இசையாக, மங்கோலியாவிலிருந்து Khusugtun எனும் இசைக்குழு ஒன்றின் பாடல். புதிய விதமான இசைக்கருவிகள், Metal என்று போற்றப்படும் குரல், பாடகர்களின் ஆக்ருதி என அனைத்தும் உங்களை ஈர்க்கக்கூடும். கேட்டுப் பாருங்களேன்.
******
பழைய நினைப்புடா பேராண்டி : [G]கூமர் நடனம்
2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - [G]கூமர் நடனம் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது! [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா?” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!]
”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும்.
எந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம்! சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் பகிர்வு : இன்பமும் துன்பமும்
முகநூலில் எப்போதாவது சில பகிர்வுகள் மனதுக்கு உகந்ததாக அமையும். WhatsApp வழி வரும் சில பகிர்வுகளும் அப்படியே. பெரும்பாலானவை - கிட்டத்தட்ட 75 சதவீதத்திற்கும் மேல் தேவையற்றதாகவே இருக்கின்றன. ஆனாலும் மீதி உள்ள 25 சதவீத விஷயங்கள் நமக்கு உகந்ததாக இருக்கும். அப்படியான சில விஷயங்களைப் பார்ப்பதற்காகவே முகநூலிலும் WhatsApp வழியிலும் வரும் செய்திகளை அவ்வப்போது கவனிப்பது உண்டு. அப்படிப் பார்த்த ஒரு பகிர்வு - இன்பமும் துன்பமும் குறித்த ஒரு பகிர்வு. அது உங்கள் பார்வைக்கு!
“ஒரு கட்டுமான எஞ்சினியர் 13வது மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார். ஒரு முக்கியமான வேலை, கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும். செல்போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர். கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார். போனை எடுக்கவில்லை.. என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார். அப்பொழுதும் கொத்தனார் மேலே பார்க்கவில்லை. இவ்வளவுக்கும் கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து அவரால் என்ஜினியரை நன்றாகப் பார்க்க முடியும்.
எஞ்சினியர் என்ன செய்வதென்று யோசித்தார். ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, மேலே இருந்து, கொத்தனார் அருகில் போட்டார். ரூபாயைப் பார்த்த கொத்தனார், அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டார். ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை. என்ஜினியருக்கு ஒரே கோபம், இருந்தாலும் பொறுத்துக் கொண்டு ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார். அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு கொத்தனார் மும்முரமாக இருந்தார். எஞ்சினியர் பொறுமை இழந்து ஒரு சின்ன கல்லை எடுத்து, கொத்தனார் மீது போட்டார். அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, மேலே பார்த்தார். அப்பொழுது தான் எஞ்சினியர் தன்னை அழைத்தார் என்பதை உணர்ந்தார்.
மனிதனும் அப்படித்தான்….
மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை. உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான். இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான். அப்பொழுதும் அவன் இறைவனை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுது தான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான். துன்பங்கள் வரும் நேரம் இறைவன் உன்னைத் தேடி அழைக்கும் நேரம் என்று பொருள்.”
******
இந்த வாரத்தின் தகவல் : சுப்புத் தாத்தாவுடன் ஒரு சந்திப்பு
சென்ற செவ்வாய் அன்று மாலை வேலைகளை முடித்து வீடு திரும்பியபோது இல்லாள் சொன்னார் - ”சுப்புத் தாத்தா ஸ்ரீரங்கம் வந்துருக்காராம். ரிஷபன் சார் பார்த்துட்டு வந்து Facebook-ல “இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே” ன்னு ஃபோட்டோவோட தகவல் போட்டுருக்கார்”. உடனடடியாக ரிஷபன் ஜியை அலைபேசி வழி பிடித்தேன் - தொல்லை கொடுத்தேன். பெருமாள் புறப்பாடு காண இருந்தவரை தொந்தரவு செய்து தகவல்கள் கேட்டுக் கொண்டவுடன், நேரடியாக சுப்புத் தாத்தா வந்திருக்கும் திருமண மண்டபத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அவரை முதல் முறையாக நேரடியாகச் சந்தித்தது சென்னையில் 2013-ஆம் வருடம் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் தான். நீண்ட நேரம் இந்த இளைஞருடன் அளவளாவிக் கொண்டிருந்தேன். இதோ இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நேரடி சந்திப்பு.
அந்த நாட்களின் பதிவுலகம் குறித்தும், அப்போதைய பதிவர்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். இந்தப் பயணத்தில் அவருக்குக் கிடைத்த அவரது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். சில மணித் துளிகள் பேசிக் கொண்டிருந்த பிறகு, அவருடன் சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டேன். படம் எடுத்துத் தந்த அவரது மகளுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. சில செல்ஃபிகளும் எனது அலைபேசியில் எடுத்துக் கொண்டோம். உற்சாகமான பதிவரை, என்றும் இளமையாக இருக்கக் கூடிய பதிவரை, ஒரு Multi-talented personality-ஐ மீண்டும் நேரில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
******
இந்த வாரத்தின் கொண்டாட்டம் - குடியரசு தினம் :
கடந்த 35 வருடங்களாக குடியரசு தினம் சமயங்களில் தலைநகர் தில்லியில் தான் பெரும்பாலும் இருந்திருக்கிறேன். அங்கே இருந்தவரை எங்கள் அலுவலகங்களில் தனிப்பட்ட முறையில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் இருந்ததில்லை. எல்லோருக்கும் பொதுவாக தற்போதைய கர்த்தவ்ய பத் (முந்தைய ராஜ்பத்) பகுதியில் தான் அனைத்து கொண்டாட்டங்களும் இருக்கும். கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இந்தக் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள், பயிற்சிகள் நடக்கும். அவற்றைப் பார்க்கும்போது நம் நாடு குறித்த ஒருவித பெருமிதமும், நம் நாட்டின் வளர்ச்சி குறித்தும் நிச்சயம் மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த ஆண்டு, முதல் முறையாக இந்தச் சமயத்தில் தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகத்தில் இருப்பதால் அலுவலகத்தில் நடந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். ஏற்பாடுகளும் நான் தான் செய்ய வேண்டியிருந்தது. அலுவலகத்தில் உள்ள உயரதிகாரி கொடியேற்ற, அனைவரும் கலந்து கொண்டு குடியரசு தினத்தின் சிறப்பு குறித்தும் பேசினோம்.
இந்த அலுவலகத்திற்கு வந்ததிலிருந்தே ஒவ்வொரு நிகழ்விலும் என்னையும் பேசுவதற்கு அழைக்கிறார்கள். நானும் சக அதிகாரிகள்/ஊழியர்களுடன் விழாவினை கொண்டாடுவது வழக்கமாகி இருக்கிறது. சில அனுபவங்களும் கிடைக்கின்றன. அவற்றை தற்போது எழுதுவது சரியாக இருக்காது என்பதால் பிறிதொரு சமயம் எழுதுகிறேன். ஒவ்வொரு விழாவினையும் அனைவரும் சேர்ந்து கொண்டாடும்போது மனதில் ஒரு வித மகிழ்ச்சி உண்டாகத்தான் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை.
******
இந்த வாரத்தின் சிந்திப்போம் - தேவை :
அலைபேசியின் பயன்பாடு அதீதமாகக் கொண்டிருக்கிறது என்பதை நாம் எல்லோருமே உணர்ந்திருக்கிறோம். அதில்லாமல் இருக்கவே முடியாதோ என்று தோன்றுகிறது நம்மில் பலருக்கும். இப்படியே போனால், மேலேயுள்ள படம் போல விளம்பரங்கள் வந்தாலும் வரலாம். இது குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன, சொல்லுங்களேன்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
31 ஜனவரி 2026




கதை ஓரளவுக்கு இலங்கை வட்டார வழக்கில் இருக்கும் போல... உளவியலான கதை என்றால் கீதா ரெங்கனுக்கு அல்வா சாப்பிடுவது போல..
பதிலளிநீக்குமங்கோலிய இசை துள்ளுகிறது. பாடுபவர் டாக்டர் கிரப்பின் தம்பியாக இருப்பார் போலும்... அப்படி ஒரு குரல்! கொஞ்சம் போனி எம் வகையை நினைவு படுத்துகிறது.
பழைய நெனப்பு பதிவும் இசை, குத்துப்பாட்டு - சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறதே....
பதிலளிநீக்குஇன்பமும் துன்பமும் கதை சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கிறது.
சுப்பு தாத்தாவை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. மோகன் ஜி அண்ணா அவரை சுதா என்று செல்லமாக அழைப்பார்! முன்னர் ஒருமுறை பிளாக்கில் நான் எழுதியிருந்த ஒரு கவிதை வடிவத்தை பாடி அனுப்பி இருந்தார்.
பதிலளிநீக்குடெல்லி ரிட்டர்ன் பெருமை உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும். விழா ஏற்பாடுகளை நீங்கள் செய்யா விட்டால் அப்படியே விட்டிருப்பார்களோ.. சில சமயங்களில் சில அலுவலகங்களில் அப்படி நடப்பதுண்டு
பதிலளிநீக்குஅறுபது வயசுக்காரர்கள்தான் அதிகம் செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வுச் செய்தி!.