வெள்ளி, 2 ஜனவரி, 2026

வைகுண்ட ஏகாதசி - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   முகநூலில் எழுதிய பதிவு - அங்கே வாசிக்காதவர்களின் வசதிக்காகவும், எனது சேமிப்பிற்காகவும் இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.


இதற்கு முன்னர் வெளியிட்ட புத்தாண்டு (2026) வாழ்த்துகள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வைகுண்ட ஏகாதசி: 



விளக்கொளியில் வெள்ளை கோபுரம்....

பூலோக வைகுண்டம் திருவரங்கமே வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது! இங்கு வருடம் முழுவதுமே சுற்றுலாவாசிகளால் நிறைந்திருக்கும் என்றாலும் இந்த நாளில் சொர்க்கவாசல் படியை கடந்து வர லட்சக்கணக்கானோர் குழுமியிருப்பர்! இந்த வருடம் வந்த மக்கள்வெள்ளம் மட்டும் மூன்று லட்சம்!



தங்குமிடம் ஒன்றின் வெளிப்புறச் சுவற்றில் விஷ்ணு...

இந்த நாளில் தான் வருடத்தில் ஒருநாள் பிரத்யேகமாக ரங்கன் ரத்னங்கள் பதிக்கப்பட்ட  அங்கியில் காட்சித் தருவார்! அவரைக் காண ஆயிரங்கால் மண்டபத்தில் வரிசையில் நிற்போர், பெருமாளை தரிசித்து வந்துவிட்ட மக்கள் அங்கே மணல்வெளியில் அமர்ந்திருப்போர், மூலவரை தரிசிக்க வரிசையில் பல மணிநேரமாக நிற்போர் என எங்கெங்கு காணினும் மக்கள் வெள்ளம்!



விதம் விதமாய் இரும்பில் பொருட்கள்....


அலங்கார வாயில் தோரணங்கள் விற்பனைக்கு...

இந்தக் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க குமிக்கப்பட்டிருக்கும் காவல்துறை! இந்த விழாவையொட்டி சாலையெங்கும் புதிது புதிதாக முளைத்திருக்கும் கடைகள்! அங்கே நின்று பேரம் பேசிக் கொண்டிருப்போர் ஒருபுறம்! கோவிலுக்கு வருகை தருவோரின் வாகனங்கள்! அதற்கான பார்க்கிங் வசதிகள், உணவு, குளியலறை மற்றும் கழிவறை வசதிகள், மருத்துவ வசதிகள் என்று ஆங்காங்கே செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள்!



கோலத்தில் சொர்க்க வாசல் கதவுகள்...

அன்றைய தினமே சொர்க்கவாசல் படி மிதித்தால் தான் சொர்க்கம் என்று பல மணிநேரம் வெயிலில் வரிசையில் நின்று முண்டியடிப்போர் நிறையவே உண்டு! வருடாவருடம் இவர்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறைவதில்லை! நம்பிக்கை தானே நம் பலம்! 



கோலத்தில் சக்கராயுதம்...

இத்தனை வருட திருவரங்க வாசத்தில் வைகுண்ட ஏகாதசியன்றே சொர்க்கவாசல் படியைக் கடந்து வந்து நான் பெருமாளை தரிசித்தது அபூர்வம்! எப்போதும் போல் நேற்றும் வடக்கு வாசல் கோபுர வாயிலின் வழியே சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்த ரங்கனைக் கண்குளிர தூரத்தில் நின்றே தரிசித்து வந்தோம்! 



துவாதசி பாரணைக்கான விதம் விதமான காய்கறிகள் கலவை...

எங்கும் கட்டுக்கடங்காத கும்பல்! அப்படியே வெளியே வந்து அங்கே  போடப்பட்டிருக்கும் கடைகளையும் பார்த்தபடியே சற்று நடந்தோம்! மறுநாள் துவாதசி பாரணைக்காக 21 விதமான காய்கறிகளை நறுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள்! கால் கிலோ 20ரூ என்று சொல்லவே ஒரு பெண்ணிடம் வாங்கிக் கொண்டேன்! உடன் அகத்திக்கீரையும்! கட்டு 10ரூ!



குமுட்டி அடுப்புகள்...


கல்சட்டிகள், இரும்பு வாணலிகள்....

இந்த மாதிரி திருவிழா சமயங்களில் போடப்படும் பீங்கான் ஜாடிகள், விளையாட்டு சாமான்கள், காதணிகள், இரும்பு பொருட்கள், டெல்லி அப்பளம் என்று வரிசையாக சில கடைகள் போடப்பட்டிருந்தன! கல்சட்டி, குமுட்டி அடுப்பு கூட இருந்தது! குமுட்டி அடுப்பைப் பார்த்ததும் என் பாட்டியின் நினைவு தான் வந்தது!



ஆயிரம் கால் மண்டபம் அருகே பிரம்மாண்ட யானை சிற்பம்...


ஆயிரம் கால் மண்டபம் அருகேயுள்ள பாதையில் நாங்கள்...

இப்படியே கடைத்தெருவை சுற்றி வந்து நேரத்தை கடத்திய பின்னர் வீட்டினை அடைந்தோம்! இங்கு நிகழும் எல்லாவற்றையும் ஒரு புன்முறுவலுடன் ரங்கன் பார்த்துக் கொண்டு தான் இருப்பான்! எல்லோரையும் காத்து ரட்சிக்கணும்! நல்லதே நடக்கணும்! என்று பிரார்த்தித்துக் கொண்டேன்!


ரங்கா! ரங்கா!


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

2 ஜனவரி 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....